TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தை மேலும் விஸ்தரிக்கும் அரசின் முயற்சிகள் தொடரட்டும்

August 8 , 2019 1982 days 964 0
  • நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் எந்த நடவடிக்கையும் வரவேற்கப்பட வேண்டியதே. புதிய வழக்குகள் பதியப்படும் எண்ணிக்கைக்கேற்ப நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதில்லை என்பது நிரந்தர முறையீடாகத் தொடர்கிறது. இந்தப் பின்னணியில் உச்ச நீதிமன்றத்தின் மொத்த நீதிபதி பதவியிடங்களின் எண்ணிக்கையை 31-லிருந்து 34 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை எடுத்துள்ள முடிவானது தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும். இது வரவேற்கத்தக்கது. ஜூலை 11 வரை இந்த எண்ணிக்கை 59,331 ஆக இருந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி பணியிடங்களின் எண்ணிக்கை கடைசியாக 2009-ல் 26-லிருந்து 31 ஆக உயர்த்தப்பட்டது. உச்ச நீதிமன்ற விஸ்தரிப்பு தொடர்பில் அரசு மேலும் சிந்திக்கலாம்.

பணிச் சுமை

  • உச்ச நீதிமன்றத்தின் பணிச் சுமையைப் பற்றிய பேச்சு வரும்போது, ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் வழங்கும் முக்கியமான தீர்ப்புகள் சரியா என்று கேட்டு யாராவது மனு செய்தால், உச்ச நீதிமன்றம் அதை ஆராய வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. உச்ச நீதிமன்றம் தன்னிடம் உள்ள நீதிபதிகளைத் தக்க விதத்தில் வழக்குகள் தேங்காமலிருக்கப் பயன்படுத்துகிறதா என்றும் கேட்போர் உண்டு. உச்ச நீதிமன்றத்தின் முக்கியப் பணி அரசியல் சட்ட விவகாரங்களில் எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதும், சட்டங்கள் தொடர்பாக எழுப்பப்படும் பொதுவான கேள்விகளுக்கு விடை அளிப்பதும்தான். ஆனால், உச்ச நீதிமன்றம் கிட்டத்தட்ட மேல்முறையீட்டு மன்றம்போல உரிமையியல், தண்டனையியல் வழக்குகளில் தலையிட நேர்கிறது. பொதுநலன் கருதி மனுதாரர்கள் அணுகும்போதெல்லாம் பெரும்பாலும் அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது.

நீதிபதிகளின் எண்ணிக்கை

  • நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தினால் மட்டும் தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிடாது. நீதிமன்ற நேரம் வீணாகாத வகையில் நடைமுறைகளைத் திருத்த வேண்டும். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் வாய்மொழியாகப் பேசுவதற்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கலாம். வழக்கு விசாரணை தேதிகளை ஒத்திவைக்காதபடிக்கு அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களும் தத்தமது வழக்குகளின்போது நீதிமன்றத்தில் இருக்க வேண்டும். அரசமைப்புச் சட்டம் தொடர்பான வழக்குகள், சட்ட விளக்க வழக்குகள் ஆகியவற்றை மட்டும் உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். உரிமையியல் வழக்குகளின் மேல் விசாரணை உள்ளிட்டவை வேறு நீதிமன்றங்களில் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும் என்ற முறைக்கும் மாறலாம்.
  • முக்கியமாக, நாட்டின் நான்கு திசைகளிலும் வெவ்வேறு மேல்முறையீட்டு நீதிமன்றங்களை நிறுவலாம் என்ற சட்ட ஆணையத்தின் 229-வது அறிக்கை பரிந்துரையை நீதித் துறை கையில் எடுக்கலாம். உச்ச நீதிமன்றக் கிளைகளை நான்கு திசைகளிலும் அமைப்பது தொடர்பாகக்கூட யோசிக்கலாம். இதனால் நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்கள் வழக்குக்காக டெல்லிக்கு அலைவதும் குறையும்; உச்ச நீதிமன்றத்தின் பணியும் மேலும் செழுமை பெறும்.

நன்றி: இந்து தமிழ் திசை (08-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories