- மனித உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புகளின் பங்களிப்பு அவசியமானது. கொழுப்பை எடுத்துக்கொள்ளும் அளவு அவரவர் தேவைகளுக்கேற்ப மாறுபடுகிறது. தேவைக்கு அதிகமான கொழுப்பை எடுத்துக்கொள்வது உடலுக்குக் கேடு விளைவிக்கும். அதனால், கொழுப்பின் தேவையறிந்து அதை உணவில் சேர்ப்பது நன்மை தரும். அதற்கு நாம் முதலில் கொழுப்பைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
- கொழுப்பு உடலுக்கு அதிக அளவு ஆற்றலைத் தரும் உணவு. மாவுச்சத்து, புரதத்துடன் ஒப்பிடுகையில் கொழுப்புள்ள உணவே உடலுக்குக் கூடுதல் ஆற்றலைத் தருகிறது. அந்த வகையில் ஒரு நாளுக்கு 20 மி.லி. எண்ணெயை ஒருவர் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
உடலே உற்பத்தி செய்யும்:
- ஒருவர் தன் வாழ்நாளில் கொழுப்பு சார்ந்த உணவை உண் ணாமல் இருந்தால்கூட அவர் உட்கொள்ளும் மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), புரதம் (புரோட்டின்) ஆகிய வற்றிலிருந்து கொழுப்பைக் கல்லீரல் உற்பத்தி செய்து, அதைச் சேமித்து வைத்துக்கொள்ளும். அப்படிச் சேமிக்கும் கொழுப்பானது நிறைவுற்ற கொழுப்பு, நிறைவுறாக் கொழுப்பு என வகைப்படுத்தப்படுகிறது. இவ்வகையான கொழுப்புகள் சந்தைகளில் விற்கும் அனைத்து எண்ணெய்களிலும் உள்ளன. இத்தகைய எண்ணெய்களை உணவில் சேர்க்கும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
நிறைவுற்ற கொழுப்பு (Saturated Fat)
- இவ்வகைக் கொழுப்புகள் திட நிலையில் இருப்பவை. இவையே உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தும் கொலஸ்ட்ராலுக்கு முழுப் பொறுப்பு. இதய நோய், ரத்தக் குழாய்கள் அடைப்பு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் கூடுதல், கல்லீரல் பாதிப்பு, இன்சுலின் திறன் குறைபாடு ஏற்பட இக்கொழுப்பே காரணம்.
- சிலவகை புற்றுநோய்களைத் தோற்றுவிக்கவும் இவ்வகை கொழுப்புகள் துணைபுரியும். பால், பாலாடைக் கட்டி, நெய், தேங்காய் எண்ணெய், பாமாயில், வனஸ்பதி, ஆடு, மாடு, பன்றி இறைச்சிகளில் நிறைவுற்ற கொழுப்பு மிக அதிக அளவில் காணப்படும். குறிப்பாக, அசைவ உணவில் மூளை, கல்லீரல் போன்ற பாகங்களில் இக்கொழுப்பு கூடுதலாக உள்ளது.
நிறைவுறாக் கொழுப்பு (Unsaturated Fat)
- தேங்காய் எண்ணெய், பாமாயில் தவிர்த்து மற்ற அனைத்துத் தாவர வகை எண்ணெய்களில் நிறைவுறாக் கொழுப்புகள் உள்ளன. உடலில் கொழுப்பின் அளவைக் குறைக்க, நிறைவுற்ற கொழுப்புகளுக்கு மாற்றாக நிறைவுறாக் கொழுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணம் வேர்க்கடலை, எள், சூரியகாந்தி, ஆலிவ், கடுகு, சோயா, சோளம் போன்றவற்றிலிருந்து பெறப்படும் எண்ணெய்கள், பருத்தி விதை, திராட்சை, குங்குமப்பூ, மெக்கடேமியா கொட்டைகள் (Macadamia nuts), பாதாம், அவகேடோ, வால்நட், பிஸ்தா, மீன் போன்றவற்றில் இவ்வகைக் கொழுப்புகள் உள்ளன. மீன்களில் கெளுத்தி, மத்தி, கவலைமீன், கானாங்கெளுத்தி, சால்மன், முட்டை ஆகியவற்றில் நிறைவுறாக் கொழுப்புகள் சற்றுக் கூடுதலாக உள்ளன. கோழி முட்டையில் 46% நிறைவுறாக் கொழுப்பும், 28% நிறைவுற்ற கொழுப்பும் உள்ளன.
மாறுபட்ட கொழுப்பு (Transfatty Acid)
- திரவ நிலையில் உள்ள தாவர எண்ணெய்கள் நீண்டகாலம் கெடாமல் இருக்கத் திட நிலைக்கு மாற்றப்பட்டதால் இவை மாறுபட்ட கொழுப்பென்று அழைக்கப்படுகின்றன. இவை உடலுக்கு ஆபத்தான, தீங்கு விளைவிக்கும் கொழுப்பாகும். இவ்வகைக் கொழுப்பு ரத்தத்தில் அதிகரித்து, இதய நோய்களுக்குக் காரணமாகிறது.
- டால்டா, வனஸ்பதி ஆகியவை மாறுபட்ட கொழுப்பாகும். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் மாரடைப்பு போன்ற இதய நோய்களுக்குக் காரணமாகின்றன. சில வகை இறைச்சிகள், வெண்ணெய், ஐஸ்கிரீம், கேக், பிஸ்கட் போன்றவற்றில் இவ்வகைக் கொழுப்புகள் கலந்துள்ளன.
அத்தியாவசியக் கொழுப்பு (Essential Fatty Acid)
- இவை நன்மை பயக்கும் கொழுப்புகள். இவற்றை மனித உடலில் உற்பத்தி செய்ய இயலாது. மனித உடல் உறுப்புகள் செயல்பட இவ்வகைக் கொழுப்பு அவசியம் என்பதால் இவை அத்தியாவசியக் கொழுப்பு எனப்படுகின்றன.
- இந்த அத்தியாவசியக் கொழுப்பு இரு வகைப்படும். ஒன்று ஒமேகா 3 வகையைச் சார்ந்த ஆல்பா லினோலெணிக் அமிலக் கொழுப்பு, மற்றொன்று ஒமேகா 6 வகையைச் சேர்ந்த லினோலீயிக் அமிலக் கொழுப்பு. இவ்விரண்டில் ஆல்பா லினோலெணிக் அமிலக் கொழுப்பு மூளையும் இதயமும் ஆரோக்கியமாகச் செயல்பட உதவுகிறது. இவை ஆளி விதை, பூசணி விதை, வெள்ளரி விதை, சோயா, பெரில்லா (Perilla) விதை, வால்நட், பச்சைக் கீரை வகைகள், பனீர், முட்டை ஆகியவற்றில் உள்ளன. முட்டையில் நிறைவுறாக் கொழுப்பும் அத்தியாவசியக் கொழுப்பும் உள்ளதால் அது சிறந்த உணவாகும்.
ஒமேகா கொழுப்பின் நன்மைகள்:
- மனித உடலின் தோல், மூளை, நரம்புகள், திசுக்கள், இதயம் அனைத் துக்கும் பாதுகாப்பை வழங்குவதோடு அவற்றின் செயல்திறனைச் சிறப்பித்து உயிர் அணுக்களை அவ்வப்போது புதுப்பிக்கும் பணியை ஒமேகா அத்தியாவசியக் கொழுப்புகள் செய்கின்றன.
- ஒமேகா, உடலில் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நன்மை செய்யும் கொழுப்பை அதிகரித்து உடலைக் காக்கிறது. மேலும், தோலில் உற்பத்தியாகும் சீபம் என்னும் எண்ணெய்ச் சுரப்பியைச் சீர்படுத்தித் தோலைக் காக்கும். ஒமேகா அமிலம் இல்லையேல் தோல் வறண்டு, தடித்து நோய் ஏற்படும். உடலில் ஏற்படும் முதுமைத் தோற்றத்தையும் ஒமேகா கொழுப்பு கட்டுப்படுத்தும்.
ஹார்மோன்கள், விட்டமின்கள்:
- ஆண், பெண் இருபாலினத்த வரிடமும் பாலின ஹார்மோன்களின் உற்பத்திக்குக் கொழுப்பின் தேவை அவசியம். கொழுப்பில்லாமல் ஈஸ்ட்ரோஜன், ஆண்ட்ரோஜன் ஹார் மோன்கள் உடலில் உருவாவதில்லை. ஏ, டி, இ, கே போன்ற விட்டமின்கள் உடலில் செயல்படவும் கொழுப்பு அவசியமாகிறது.
- மனித உடலின் ஆற்றலுக்குக் கொழுப்பு இன்றியமை யாததாக இருந்தாலும் எந்த உணவுப் பொருளையும் அளவுக்கு அதிகமாக உண்ணக் கூடாது என்பதைக் கவனத்தில் கொண்டு கொழுப்பு அடங்கிய உணவுப் பயன்பாட்டில் உரிய கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதுவே உடலை ஆரோக்கியமாகப் பேணுவதுடன் இதயம் தொடர்பான நோய்களையும் விலக்கி வைக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 09 – 2024)