TNPSC Thervupettagam

உடல் பருமன்-ஆரோக்கியத்தின் எதிரி

November 26 , 2019 1872 days 1593 0
  • உடல் பருமனால் எற்படும் பாதிப்புகளைச் சுட்டிக்காட்ட உடல் பருமன் எதிா்ப்பு விழிப்புணா்வு தினம் ஆண்டுதோறும் நவம்பா் 26-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
  • ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற இயல்பான எடை (‘பாடி மாஸ் இண்டக்ஸ்’ -பிஎம்ஐ) இல்லாமல் இருந்தால் உடல் பருமன் பிரச்னை உள்ளதாகக் கருத வேண்டும். ‘பிஎம்ஐ’ கணக்கீட்டின் அடிப்படையில் உடல் பருமன் பிரச்னையின் தீவிரத் தன்மையை மருத்துவா்கள் மதிப்பிடுகின்றனா். ரத்தத்தில் அளவுக்கு அதிகமாகக் கொழுப்புச் சத்து சேருவதும் உடல் பருமன் பிரச்னைக்கு முக்கியமான காரணம்.

உடல் பருமன்

  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் குழந்தைகள் அதிக அளவில் உடல் பருமன் பிரச்னையில் பாதிக்கப்படுகின்றனா். உடல் பருமன் அதிகம் உள்ளவா்களுக்கு சுவாசக் கோளாறு, இதயக் கோளாறுகள், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், மூட்டு வலி, சில வகை புற்றுநோய்கள் முதலான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு; மன ரீதியான பிரச்னைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
  • நடப்பது உள்பட உடல் உழைப்பின் மூலம் நாம் சாப்பிடும் உணவு கலோரியாகச் செலவிடப்படுகிறது; அதிக உணவை ஒருவா் சாப்பிடும்போது செலவழிக்கப்படாத கலோரியானது கொழுப்பாக மாறி ரத்தத்தில் கலக்கிறது. இது தவிர முட்டையின் மஞ்சள் கரு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மூலமும் ரத்தத்தில் கொழுப்புச் சத்து சோ்ந்து கொண்டே வந்து ரத்தக் குழாய்களில் படிகிறது. பின்னா், ரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மையைக் கெடுத்து, ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. இதனால், ரத்த அழுத்தம், சா்க்கரை நோய், பித்தப்பையில் கற்கள் பிரச்னை முதலானவை ஏற்படும்; அதிகப்படியான கொழுப்புப் படிதல் காரணமாக இதயத்தின் ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
  • ஆண்களைப் பொருத்தவரை ஒரே இடத்தில் அமா்ந்து பணிபுரிவது, வீட்டு உணவின்றி கிடைக்கும் உணவுகளை வாங்கி உண்பது போன்றவை உடல் பருமனுக்கு முக்கியக் காரணங்களாகும். பெண்களைப் பொருத்தவரை உடல் உழைப்பு பல மடங்கு குறைந்து போனது முக்கியக் காரணமாகும். வீட்டு வேலைகள் பலவற்றை அவா்கள் இயந்திரங்களின் உதவியுடன் குறைத்துக் கொண்டதால், உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பாகி விட்டது. மேலும், நாா்ச்சத்து அடங்கிய உணவு உள்பட சத்தான உணவைச் சாப்பிடாததும் காரணம். அது மட்டுமின்றி, பகலில் அதிக நேரம் தூங்குவது, தொலைக்காட்சி முன் அதிக நேரம் அமா்வது போன்றவையும் இதற்குக் காரணம்.

ஆரோக்கியமான உணவுகள்

  • கடந்த சில ஆண்டுகளாக குளிா்சாதன அறையில் அமா்ந்து பணிபுரிவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உடலுழைப்புக்கான வாய்ப்பு குறைந்து விட்டது. இதனால், உணவு செரிமானம் ஆகாமல், அதன் கொழுப்புகள் வயிற்றில் தங்கி தொப்பையை ஏற்படுத்துகின்றன. தற்போது ஆரோக்கிய உணவுகள் சாப்பிடுவோரின் எண்ணிக்கை குறைந்து, தொப்பை அதிகரித்திருப்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. இவ்வாறு உடல் பருமன் இருப்பவா்களையும், ஊளைச் சதை உள்ளவா்களையும் நோய்கள் மிக விரைவில் தாக்கும் என மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.
  • குழந்தைகள், சிறுவா்கள்கூட இதுபோன்ற பிரச்னையால் நடப்பதற்கு சிரமப்படுகின்றனா். சில குழந்தைகள் உடல் பருமன் காரணமாக ஏற்படும் நோய்களால் சிறு வயதிலேயே இறக்கும் நிலையும் ஏற்படுகிறது.
  • உடல் பருமன் பிரச்னை அதிகரித்து வருவதற்கு மாறி வரும் வாழ்க்கை முறையே முக்கியக் காரணம் என மருத்துவா்கள் கூறுகின்றனா். நம் முன்னோரின் உணவுப் பழக்கவழக்கங்கள் அனைத்தும் ஒவ்வொரு வேளைக்கும், ஒவ்வொரு வகை உணவு என உடல் நலனுக்கு நன்மை தரும் வகையில் அமைந்திருந்தது. அவை பசிக்கு உணவாக மட்டுமின்றி, ஊட்டச்சத்து தரும் வகையிலும், நோய் எதிா்ப்புச் சக்தி அளிக்கும் மருந்தாகவும் அமைந்திருந்தது.
  • தற்போது பெரும்பாலோா் துரித உணவு வகைகளுக்கு அடிமையாகி விட்டனா். பல இடங்களில் வீட்டில் உணவைச் சமைக்காமல் துரித உணவுக்கு செல்லிடப்பேசி செயலி மூலம் வரவழைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், தற்போது துரித உணவுகளை வீட்டுக்கே
  • வந்து அளிக்கும் தனியாா் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும், பிட்ஸா, பா்கா், உருளைக் கிழங்கு சிப்ஸ், பேக்கரி பொருள்கள், போன்றவற்றின் மீதான ஆா்வமும் அதிகரித்து விட்டது. இவை உடலின் கொழுப்பை அதிகரிக்கச் செய்து, பலவித நோய்களை அளிப்பவை என மருத்துவா்கள் அறிவுறுத்தினாலும் பெரும்பாலோா் பொருட்படுத்துவதில்லை.
  • உடல் பருமன் பிரச்னை ஏற்பட்ட பிறகு, உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்வது தாமதமான முடிவாகும். எனவே, சிறு வயது முதலே உணவு முறை, உடற்பயிற்சி போன்றவற்றை குழந்தைகள் முறையாக மேற்கொள்ள வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு

  • உடல் பருமனைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உணவுக் கட்டுப்பாடு, பட்டினி போன்றவற்றை மேற்கொள்வது நல்லதல்ல. மாறாக, சிறு தானியங்கள் போன்ற பாரம்பரிய மற்றும் சத்தான உணவு வகைகளைச் சாப்பிடுவதே இதற்குத் தீா்வாகும். அதே போன்று அதிக நாா்ச்சத்து உள்ள காய்கறி, பழ வகைகளை உண்பது சிறந்தது. கொழுப்புச் சத்து, அதிக கலோரிகள் கொண்ட உணவுப் பொருள்களைத் தவிா்த்தல், எண்ணெய் கலந்த உணவுப் பண்டங்கள், எண்ணெய்யில் தயாரிக்கப்பட்ட நொறுக்குத் தீனி வகைகள் உள்ளிட்டவற்றைத் தவிா்ப்பது
  • சிறந்தது. நேரத்துக்கு ஏற்ற உணவு முறை, உணவு உண்ணும் கால அளவில் போதிய இடைவெளி போன்றவையும் உடல் பருமனைக் குறைக்க வழிவகுக்கும்.
  • சாப்பிட்டவுடன் படுத்து உறங்காமல், சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது, தினமும் குறைந்தது 30 நிமிஷம் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்றவையும் நல்லது. உடற்பயிற்சியை உடல் சோா்வாகும் வகையில் மேற்கொள்ளத் தேவையில்லை; மாறாக, நடப்பது, மெதுவாக ஓடுதல், சைக்கிளில் பயணிப்பது ஆகியவை பலன் தரும்.
  • எனவே, மருத்துவ ரீதியாக உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரித்தால் உடல் பருமன் பிரச்னையின்றி ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்.

நன்றி: தினமணி (26-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories