TNPSC Thervupettagam

உடல் மொழி கூறும் உண்மைகள்

January 25 , 2024 215 days 218 0
  • மனிதன் ஒரு சமூக விலங்கு என அழைக்கப்படுகிறான். அவனுக்கு மற்றவர்களுடன் அன்றாடம் தொடர்பில் இருக்க வேண்டிய  தேவை உள்ளது. ஆதிகாலத்தில் சைகைகளின் வழியே தகவல்களை மனிதன் பரிமாறிக் கொண்டான். மனித நாகரிகம் வளர்ந்த நிலையில் உடல் மொழியுடன் தானறிந்த மொழியையும் தகவல் தொடர்புக்கு அவன் பயன்படுத்தத் தொடங்கினான். எனவேதான்,உடல்மொழி நமது  அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது.  
  • குழந்தைகள் பேசத் தொடங்கும் முன்னரே உடல் மொழியைப் புரிந்துகொள்கின்றன. பிறந்து சில மாதமே ஆன குழந்தை நாம் கொஞ்சினால் சிரிப்பது, கடிந்துகொண்டால் அழுவது எல்லாம் உடல் மொழியின் தூண்டல்-துலங்கல் உணர்வுகளே. கொஞ்சம் வளர்ந்த குழந்தை தன்
  • தந்தையிடம் ஏதாவது வாங்கித்தரச் சொல்லி கேட்கவேண்டும் என்றால் அப்பாவின் முகத்தைப் படிக்கிறது.நல்ல மன நிலையில் இருப்பதை உறுதி செய்துகொண்ட பின்னர்தான், தன் விழைவுகளைக் கேட்கிறது.        
  • உடல் மொழியில் சொற்களுடன் உடல் அசைவுகள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள பயன்படுகின்றன. இத்தகைய நடத்தையில் முக பாவங்கள், உடல் தோரணை, சைகைகள், கண் இயக்கம்,கால்,கை அசைவுகள் ஆகியவை அடங்கும். சில நேரங்களில் மொழிகளைப் பயன்படுத்தாமல் உடல் மொழியை மட்டுமே பயன்படுத்தி நாம் வெற்றிகரமாக தகவல்
  • களைப் பரிமாறிக் கொள்ள முடியும். தேர்வறையில் குழப்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கு  அதிகம் உதவிக்கு வருவது  அவர்களின் நண்பர்களின் உடல்மொழியே ஆகும்.
  • எதுவும் பேசாமல் இருக்கும்போது கூட நம் மனதில் என்ன ஓடுகிறது என்பதை நம் முகபாவங்கள் காட்டிக் கொடுத்துவிடும். அதாவது,   நம்முடைய உணர்ச்சிகளை, மகிழ்ச்சி, சோகம், கோபம், வருத்தம்  போன்றவற்றின் வழியே நம் முகம் காட்டிக் கொடுத்துவிடும்.
  • கண்களைப் பார்த்து பேசும்போது  பல விஷயங்களை நாம் மேலும் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். நம் கண்களைப் பார்த்து பேசும் மனிதர்கள் உண்மையை மட்டும்தான் பேச முடியும். நம் கண்களை பார்த்துப் பேசும்போது, நம்முடன்  விருப்பத்துடன் பேசுகிறாரா, கடமைக்குப் பேசுகிறாரா என்பதையும் தெரிந்து கொள்ளலாம். குற்றம் செய்த ஒருவரின் கண்ணே அவரைக் காட்டிக் கொடுத்து விடும்.
  • ஒரு நபர் எவ்வாறு அமர்ந்திருக்கிறார், கை, கால்களை நேராக வைத்திருக்கிறாரா, கால் மேல் கால் போட்டு அமர்ந்துள்ளாரா என்ற அடிப்படையில் அவருடைய உடல் மொழியை நாம் நன்கு புரிந்துகொள்ள முடியும். நேராக அமர்ந்திருந்தால், அவர் அதிக தன்னம்பிக்கை கொண்டவர். லேசாக கூன் விழுந்தவாறு, சாய்ந்தவாறு அமர்ந்திருந்தால் அவரிடம் தன்னம்பிக்கை  குறைவாக இருக்கிறது. அவர் இருக்கும்  இடத்தில் அவர் தனக்கு செல்வாக்கு  இருப்பதாக உணரவில்லை என்றும் பொருள்.
  • கை,கால்களை கோணலாக வைத்துக் கொண்டாலோ, அல்லது குறுக்கு வாட்டாக வைத்துக் கொண்டாலோ நாம் சொல்வதை கேட்பதில் அவருக்கு விருப்பமில்லை என்று பொருள். அந்த நபர் வெளிப்படையாக எதுவும் பேச மாட்டார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்
  • ஒருவர் வீட்டுக்குச் செல்கையில் நமது வருகை அவர்களுக்குப் பிடிக்கவில்லையென்றால், அவர்கள் வெளிப்படையாக சொல்லத் தேவையில்லை. அவர்களின் உடல்மொழியே அவர்களின்  மனத்தின் நிலைமையை நமக்கு அறிவித்து விடும்.
  • கண்காணிப்பு கேமராவின் முன்பு, மற்றவர்களுடைய கண்காணிப்பில் உள்ளபோது மனிதர்களின் நடத்தை ஒழுங்காக இருக்கும். மனிதர்கள் தங்களுக்கு விருப்பமான செயல்களை நியாயத்துக்குப் புறம்பாக இருந்தால்கூட செய்வது இயல்பு. எப்படியிருப்பினும் பெரும்பாலானோர் அவர்களுக்கு வேண்டியவர்கள் முன்னிலையில் ஒருமாதிரியும், அவர்கள் இல்லாதபோது வேறு மாதிரியும் நடந்து கொள்வதை பார்க்கும்போது நம்மால் சிரிக்காமல் இருக்க முடியாது.
  • ஒருவர் தொடர்ந்து   பொய் சொல்வது என்பது  ஒரு கலை. அவர்கள் தம் நினைவாற்றலை அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும்மூளைக்கு நிறைய வேலை கொடுக்க வேண்டும். ஒரே நேரத்தில் சொன்ன பொய்களைக் காப்பாற்றுவதற்கான வார்த்தைகளையும் உருவாக்க வேண்டும். பொய்யை உண்மைபோல் பேச வேண்டும். அதே சமயத்தில் உண்மையை மறைக்கவும் வேண்டும். அவர்கள் தாம் எப்போது அகப்பட்டுக் கொள்ளப் போகிறோமோ என்ற பதற்றத்திலேயே இருப்பார்கள். நடித்துக் கொண்டே வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு வாழ்வதால்,இயல்பான வாழ்க்கையை வாழமாட்டார்கள். ஒரு நாள் அவர்களின் உடல் மொழியே அவர்களின் உண்மை உருவத்தை வெளிக்கொணர்ந்து விடும். பொது வெளியில் அவமானத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
  • ஒருவருடைய நடத்தையைப் பொருத்தே அவருடைய உடல் மொழிகள் இருக்கும். பொய் சொல்லுதல், ஏமாற்றுதல் அல்லது ஏதாவது கொடுமைகள் செய்து பழகிவிட்டவருக்கு  கெட்ட செயலும் நல்லதாகவே தெரியும். அவர்களுக்கு வாழ்க்கை குறித்த கண்ணோட்டம் முற்றிலும்  மாறுபட்டதாக இருக்கும்.அதற்கேற்ப உடல் மொழிகளும் தகவமைப்பு கொண்டதாக மாறிவிடும். அவ்வாறான மனிதர்களிடம் நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • அவ்வாறான மனிதர்களின் கவர்ந்திழுக்கும் தோற்றமும், தேனொழுகும் பேச்சும் பெரும்பாலான நேரங்களில் நம்மை ஏமாற்றத்தில் தள்ளி விடும். நாம் நேர்மையாளரைவிட வெளித்தோற்றத்தையே  அதிகமாக நம்புகிறோம். அதனால், ஒருவரை ஆய்ந்தறிந்து அவரின்  உண்மைத் தன்மையை உணர்ந்த பின்னரே நட்பு பாராட்ட வேண்டும்.
  • நேர்மையான மனிதனுக்கு உடல் மொழிக்கும், வாய்மொழிக்கும் இடையே முரண்பாடு இருக்காது. வார்த்தைகள்  குழப்பினாலும்பொய் சொன்னாலும், உடல் மொழி  மனதில் இருப்பதை காட்டிக் கொடுத்துவிடும். அந்த அளவுக்கு உடல் மொழி மிகவும் சக்தி  வாய்ந்தது. நம்மைச் சுற்றி இருப்பவர்களின்  உடல்மொழி கூறும் உண்மைகளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்முடைய உறவு மற்றவர்களுடன்  சிறப்பாக இருக்கும்.

நன்றி: தினமணி (25 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories