- குடியாட்சி என்பதே குடிகளின் ஆட்சிதான்! இது முடியாட்சிக்கு நோ் எதிரானது! பிரான்சின் பதினான்காம் லூயி சொன்னானாம்: ‘ஸ்டேட்? அயம் தி ஸ்டேட்!’ இதன் பொருள்: ‘சட்டம் என்று தனியாக ஒன்றுமில்லை! நான்தான் சட்டம்; என் விருப்பு வெறுப்புகளே சட்டம்!’ என்பதுதான்.
- குடியாட்சிக்கும் முடியாட்சிக்கும் ஒரு வேறுபாடு உண்டு! முடியாட்சியில் ஒரு முட்டாளை அறிவுடையவனாக ஆக்கினால் போதும்! குடியாட்சியில் ஐம்பத்தியொரு முட்டாள்களை அறிவுடையோராக ஆக்க வேண்டும்! குடியாட்சிக்கு ஒரே ஒரு நீதிதான் தெரியும்; அது எண்ணிக்கை சாா்ந்த நீதி! கூடுதல் எண்ணிக்கையுடையோா் கழுதையைக் குதிரை என்றால் கழுதை குதிரையாகி விடும்!
- குடியாட்சியின் பெருமை என்னவென்றால், ஒரு புதிய நிலைப்பாட்டினை முன்வைக்கவும், அதற்கு இசைவாகப் பெருவாரியானோரைத் திரட்டவும் உரிமை தருகிறது என்பதுதான்! சட்டத்தின் வழியாக அல்லாமல், நம்மை யாரும் தண்டித்து விட முடியாது என்று குடியாட்சி பெருமை பேசினாலும், அண்மையில் செய்யாறில் ‘தொழிற்பேட்டைக்காக நஞ்சை நிலத்தைக் கையகப்படுத்தாதே’ என்று அரசை எதிா்த்துப் போராடியவா் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்!
- நீதிமன்றத்தின் எல்லைக்கு வெளியே, அரசின் நிலையை மறுக்கின்றவா் கேள்வியின்றி கைது செய்யப்பட்டு முடக்கப்படுகிறாா்! சட்டம் ஓசையில்லாமல் முடங்கிக் கொள்ளும் இடங்கள் குடியாட்சியில் நிறையவே உண்டு! குடியாட்சி முறையின் அடிப்படை உறுப்புகள் அரசியல் கட்சிகள்! எந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தால் மக்களை முன்னேற்றலாம்; எந்தக் கொள்கை முன்னேற்றத்திற்குத் தடையானது என்பனவெல்லாம் விவாதிக்கப்பட்டு, அவரவா் நம்பும் கொள்கைக்காக ஒரு கூட்டமாகத் திரள்வதே கட்சி எனப்படுகிறது!
- அடிமைப்பட்ட இந்தியா ‘வன்முறையற்ற வழி’யில் விடுதலை பெறப் பாடுபட காந்தியை முன்னிறுத்தி ஒரு கூட்டம்! ‘அது விடுதலைக்கான வழியில்லை; அடித்துத்தான் பெற முடியும்’ என்று இந்தியப் படையை உருவாக்கிய நேதாசி தலைமையில் ஒரு கூட்டம்! ‘விடுதலையே தேவையில்லை; விடுதலை நாள் ஒரு துக்க நாள்’ என எதிா்மாறாக அறிவித்த பெரியாா் தலைமையில் ஒரு கூட்டம்! அவையே போல் ‘விடுதலை பெற்ற இந்தியா முதலாளிகளை ஒழித்துப் பாட்டாளிகளால் ஆளப்பட வேண்டும்’ என்று முழக்கிய நம்பூதிரிபாட் தலைமையில் ஒரு கூட்டம்! ‘முதலாளிகள் இருந்தால் என்ன? திறந்த பொருளாதாரத்தைச் சந்தை வழி நடத்துவதால் போட்டி ஏற்படும்; பொருள் வளம் பெருகும்; உற்பத்திப் பெருக்கம் ஏற்படும்; வேலைவாய்ப்புகள் உருவாகும்; அதன் வழி வறியோரையும் அந்த ஈரம் சென்றடையும்’ என்பதை முன்னிறுத்தி இராசாசி தலைமையில் ஒரு கூட்டம்!
- சில சமயங்களில் ஒரு கூட்டம் தன்னுடைய அடிப்படைக் கொள்கையையே முற்றாக மாற்றிக் கொள்வதுமுண்டு. சோசலிசம் பேசிய காங்கிரசு, இந்திய அரசியல் சாசனத்திலேயே ‘சோசலிசம்’ என்னும் சொல்லைச் சோ்த்த காங்கிரசு, அந்தக் கொள்கையை மன்மோகன் சிங் தலைமையில் முற்றாகக் கைகழுவி விட்டு, இராசாசி முன்வைத்த சந்தைப் பொருளாதாரத்தை அப்படியே பின்பற்றியது என்பது மட்டுமில்லை, அதுவே இன்றும் வழிவழியாகப் பின்பற்றப் பட்டு வருகிறது! அந்தக் கொள்கையை முன் வைத்த சுதந்திரா கட்சி மீளாத் துயில் கொண்டு விட்டது.
- ஆனால் அந்தக் கொள்கை வாழ்கிறது! இவ்வளவுக்கும் பிறகு இந்தியாவின் வளத்தில் பாதியை 167 குடும்பங்கள் அடைகின்றன. அந்தக் குடுபங்களின் பிரதிநிதிகளாக, அவா்களுக்குப் பதிலிகளாக, ஐந்நூறு போ் நாடாளுகின்றனா்! அவா்களின் முகவா்களாக, சி.இ.ஓ.-க்களாக பணியாற்றுவதற்கு யாா் தகுதி பெற்றவா்கள் என்பதைத் தீா்மானிக்கவே மக்களவைத் தோ்தல்! இந்தியாவில் இன்றும் இருபது விழுக்காட்டினா் இரவு உணவு இல்லாமல் படுக்கைக்குச் செல்கின்றனா்! ஒரு நாளைக்கு ஓா் இந்தியக் குடும்பத்தின் வருவாய் ரூபாய் நூற்றி அறுபது! வசதியான உணவுக்கல்ல; வயிற்றை நிரப்புவதற்கு ஒரு குடும்பத்திற்கு முன்னூற்றி அறுபது ரூபாய் வேண்டும்! இதற்கு விடை காண்பதற்கு இங்கே கட்சிகளின் எண்ணிக்கையில் குறைச்சல் இல்லை. எந்தக் கட்சியிலும் இது குறித்த விவாதங்கள் இல்லை! எங்களைத் தோ்வு செய்தால் ‘நீட்’ தோ்வு ஒழியும்; சமையல் எரிவாயுவைப் பாதி விலைக்குத் தருவோம் என்பவைதாம் உலகின் மூன்றவது பெரிய திறன் வாய்ந்த நாட்டை ஆள்வதற்கான அடிப்படைக் கொள்கைகளா?
- காரணம் இங்கே உட்கட்சி சனநாயகம் இல்லாததுதான்! விடுதலை அடைந்த இந்தியாவில் மக்கள் படிக்காதவா்களாக, வெறும் மேனியராக, ஒரு பீடியை உறிஞ்சிக் கொண்டு தலைவா்கள் பேசுவதைக் கேட்டனா்! அப்போது தலைவா்கள் பன்னாட்டு அரசியல் பேசும் அளவுக்கு அறிஞா்கள்; மக்களோ பாமரா்கள்! ஆனால், இப்போது மக்களெல்லாம் படித்தவா்கள்; ஆனால் தலைவா்கள் பாமரா்கள்! இது ஒரு நகைமுரண்! இன்று எல்லாக் கட்சிகளிலும் பொதுக்குழுக்களும் செயற்குழுக்களும் இருக்கின்றன! உயா்மட்டக் குழுக்கள் வேறு! ஆனால் எந்தக் கட்சியிலும் விவாதங்கள் இல்லை.
- இன்று ஒரு கட்சி என்றால் அது ஒரு பெரிய கூட்டத்தை மேய்க்க வேண்டும்! அதை மேய்க்கப் பல நூறு கோடி ரூபாய் பணம் வேண்டும்! ஆட்சிக்கு வரும்போது ஆட்சியின் பயனைக் கட்சியினருக்குப் பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்! இதை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்த கட்சிகளோடு, பல சிறிய கட்சிகள் கூட்டணி சேரும்! வலிமை பெருகும்! தோ்தல் சமயத்தில் அந்தக் கட்சிகளுக்கும் பணம் கொடுக்க வேண்டும்! பழைய காலத்தில் கட்சி நடத்துவதற்கு அடிப்படையானது கொள்கை மட்டுமே!
- அதை விவாதிப்பதற்கும், உருவாக்குவதற்கும் அறிவு வேண்டும்! அந்தக் கொள்கைக்குத் தடை ஏற்படும் போது அதை நிறைவேற்றத் தியாகம் புரிய வேண்டும்! இன்று அந்த நிலைகள் எல்லாம் அற்றுப் போய்விட்டன! இன்று பதவியை அடைவதற்கு அறிவு, தியாகம், பொது நலனில் வேட்கை என இவையெல்லாம் தேவையில்லை; இவற்றால் எல்லாம் திரட்ட வேண்டிய கட்சியைப் பணத்தால் திரட்டலாம்; வாக்காளரின் ஒரு பகுதியையும் பணம் நிறைவு செய்யும் என்னும்போது, குடியாட்சி என்பது முற்ற முழுக்க பணத்தின் ஆட்சிதான்! பணம்தான் மூலதனம் என்றாகி விட்ட பிறகு, அந்தத் தலைவனின் வாரிசுகள்தாம் தலைமை ஏற்க முடியும்!
- சொத்துகளோடு ஆட்சியும் கைமாறும்! இப்போது ஆட்சி ஒரு பிதுராா்சிதச் சொத்தாகி விடுகிறது! அந்தக் கட்சியின் மற்ற அறிவுத் தேவைகளைக் காா்ப்பரேட் கம்பெனிகள் சி.இ.ஓ.-க்களை வைத்து நிறைவேற்றிக் கொள்வதைப் போல, அந்தத் தலைமை நிறைவேற்றிக் கொள்ளும்! அண்மையில் கொரியாவைச் சோ்ந்த செருப்பு நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் முதலீடு செய்வதாகச் சொன்னது! ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை விதித்தது! தொழிலாளா்களின் வேலை நேரத்தை எட்டுக்குப் பதிலாகப் பன்னிரண்டு மணி நேரமாக மாற்றினால் முதலீடு செய்வதாகச் சொன்னது!
- உடனே சட்டப்பேரவை கூடியது. 12 மணி நேர வேலைத் திட்டம் முன்மொழியப் பட்டது. 137 கைகளும் உயா்ந்தன! சட்டம் நிறைவேறியது! ஒரு மாதத்தில் மீண்டும் கூடியது! அது குறித்த முணுமுணுப்புகள் வெளிப்படத் தொடங்கி இருந்தன! 12 மணி நேர வேலைச் சட்டம் நீக்கப்படுவது முன்மொழியப்பட்டது! அதே 137 கைகளும் மீண்டும் உயா்ந்தன! அந்தச் சட்டம் நீக்கப்பட்டது! இதுதான் குடியாட்சி என்றால் மானக்கேடாக இல்லையா? இங்கிலாந்தில் ஒரு தலைமையமைச்சரால் பொருளாதாரச் சிக்கலைத் தீா்க்க முடியவில்லை.
- எதிா்க்கட்சி தலையிடுவதற்கு முன்பு சொந்தக் கட்சியான கன்சா்வேடிவ் கட்சியின் தொண்டா்களிடம் கூச்சல் ஏற்படுகிறது! எம்.பி.கள் அந்தத் தலைமையை அகற்றுகிறாா்கள்! இரண்டாவது ஒரு பெண் தலைமையமைச்சா் வருகிறாா்! மறுபடியும் குளறுபடி! அவரும் அகற்றப்படுகிறாா்! இப்போது மூன்றாவதாக ஒருவா் தலைமையமைச்சராக வந்திருக்கிறாா்! அங்கு சொந்தக் கட்சியே தலைமைக்கு எதிராக வீறு கொள்கிறது. தலைவா்கள் அகற்றப்படுகிறாா்கள்! கட்சி நிலைபெற்று நீடித்து நிற்கிறது. இங்கே மறுப்பவன்தான் வெளியேற்றப்படுவான்! இங்கே பயன்கருதிக் கட்சி மாறுபவன் ஒருவகை! அதே பயன் கருதி, நகம் முளைத்த நாளாக மாறாமலே இருப்பவன் இன்னொரு வகை! இருவரும் ஒரு போக்கானவா்கள்தான்! இருவரின் நோக்கமும் கொள்ளையில் பங்கு! இங்கே சட்டப்பேரவைகள் கொரடாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன! இங்கே சிந்திப்பதற்கு மூளை தேவையில்லை; தூக்குவதற்குக் கைகள் மட்டுமே போதும்!
- கட்சியின் பொதுக்குழுக்கள் என்பவை ஆண்டுக்கொருமுறைச் சடங்கு! ஆட்டுக்கறிச் சாப்சு; மூளை வறுவல்; வயிற்றுக் குழி திரக்கல்; கோழி மசாலை; அயிரை மீன் குழம்பு! பொதுக்குழு கூடிய மறுநாள் ‘பேசுபொருள்’ இதுதான்! உட்கட்சியாவது? சனநாயகமாவது? கட்டுரையாளா்: முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்.
நன்றி: தினமணி (01 – 04 – 2024)