- நம் மக்களுக்கு எதையாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டும், அதை செல்ஃபி எடுக்க வேண்டும், அதன் பிறகு அதைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டுக் கவனம் பெற வேண்டும் என்கிற எண்ணம் இன்று மேலோங்கிவிட்டது. இவ்வாறான செய்கைகள் உணவுப் பழக்கத்தின் பக்கம் திரும்பும்போது அவை சில நேரம் நம் உடல் நலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியதாகின்றன.
- சமீப நாள்களில் வாயில் புகைவிட்ட படி உணவுப் பண்டத்தைச் சாப்பிடும் கலாச்சாரம் பெருகிவிட்டது. இதில் பெரும்பாலும் சிக்கியிருப்பவர்கள் குழந்தைகளே. இந்த நிலையில் தமிழகத்தில் பிஸ்கட், ஐஸ்கிரீம், வேபர் பிஸ்கட் போன்ற உணவு பொருள்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாகக் கலந்து விற்பனை செய்யும் உணவு வணிகர் கள் மீது உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது கவனம் பெற்றுள்ளது.
திரவ நைட்ரஜன்:
- நைட்ரஜன் என்பது நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற வாயு. நமது பூமியின் வளிமண்டலத்தில் ஐந்தில் நான்கு பங்கு நைட்ரஜன்தான் நிரம்பி இருக்கிறது. அதாவது நாம் தினந்தோறும் ஆக்ஸிஜனோடு நைட்ரஜனையும் சுவாசித்துக் கொண்டி ருக்கிறோம்.
- இதில் மைனஸ்196 டிகிரி செல்சியஸ் என்கிற மிகக் குறைந்த வெப்பநிலைக்கு மாற்றப்பட்ட நைட்ரஜன்தான் ‘திரவ நைட்ரஜன்' என அழைக்கப்படுகிறது. இந்தக் குறைந்த வெப்பநிலையில் வாயு நிலையில் இருந்து திரவ நிலையை அது அடையும். 1883இல் போலந்து இயற்பியலாளர் கள் ஜிக்மண்ட் வ்ரோப்லெவ்ஸ்கி, கரோல் ஓல்ஸ் வெஸ்கி இருவரும் முதன்முத லாகத் திரவ நைட்ரஜனை உருவாக்கினார்கள்.
பயன்கள்:
- பொதுவாக, திரவ நைட்ரஜன் உணவுப் பதப்படுத்துதலுக்கு உதவுகிறது. குறிப்பாக, இறைச்சி, மீன் வகைகளைப் பதப்படுத்த இது பயன்படுகிறது. பழங்கள், பழச்சாறுகள், பானங்கள், தயிர் போன்ற உணவுப் பொருள்களைக் குளிரூட்டுவதற்கும் உறைய வைப்பதற்கும் சேமிப்பதற்கும் இது பயன்படுகிறது.
- உணவுப் பொருள்களை பேக்கிங் செய்வதற்கும் இது உதவுகிறது. முட்டை, விந்து, விலங்குகளின் மரபணு மாதிரிகள் போன்ற உயிரியல் மாதிரிகளைக் ‘கிரையோ பிரிசர்வேஷன்’ (மாதிரிகளைக் கடுங்குளிர் நிலையில் பாதுகாப்பாக வைத்திருத்தல்) செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது. குளிரூட்டியாக விண்வெளி ஆராய்ச்சி தொடங்கிச் சுரங்கப் பாதை கட்டுமானம் வரை பல இடங்களிலும் திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது.
ஏன் புகை?
- கடுங்குளிர் நிலையிலுள்ள திரவ நைட்ரஜன் சேர்த்த உணவைச் சாப்பிடும் போது நமது வாய்ப்பகுதியிலுள்ள திசுக்களின் சாதாரண வெப்பநிலையால் அது ஆவியாகும். இந்த ஆவிதான், சாப்பிடுகிறவர்களின் வாய், மூக்குப் பகுதிகளில் இருந்து புகையாக வெளிப்படுகிறது.
யாருக்குப் பாதிப்பு?
- திரவ நைட்ரஜனை உணவுடன் எடுத்துக்கொள்ளும்போது பாதிப்பு ஏற்படும் என்றாலும் சிறுவர்கள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்பாற்றல் குன்றியவர்கள், ஜீரண மண்டலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும்.
உடல் நலப் பாதிப்புகள்:
- திரவ நைட்ரஜன் உணவில் ஆவியாகி, புகையாக வெளிப்படும் போது அதைச் சுவாசிப்பவர்களுக்கு மூச்சுத் திணறலும் சுவாசக் கோளாறு களும் ஏற்படுகின்றன. தோலும் கண்களும் பாதிக்கப்படலாம். நாம் சாப்பிடும் உணவோடு திரவ நைட்ரஜனும் கலந்து குடலுக்குள் செல்கிறபோது அங்குள்ள குடல் திசுக்களை அது உறைய வைத்துவிடும்.
- ஆகவே, இதைச் சாப்பிட்டவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப் பகுதியில் வீக்கம் எனப் பல்வேறு தொந்தரவுகளும் ஏற்பட்டுவிடும். இரைப்பை, குடல் பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், உதடுகள், நாக்கு, தொண்டை ஆகிய பகுதிகளில் வலி, புண்கள், ரத்தக்கசிவு ஏற்பட்டுப் பேச முடி யாமல் போகலாம். சிலருக்குச் சுவாசமும் இதயத் துடிப்பும் அதிகரித்து மயக்கம் ஏற்பட்டு அது மரணத்திலும் முடியலாம்.
சிகிச்சை முறைகள்:
- பாதிக்கப்பட்டவரைத் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். சுவாசம், இதயத் துடிப்பு தொடங்கி உடலின் முக்கிய இயக்கங்களைக் கண்காணித்து அதற்குரிய சிகிச்சையை அளிக்க வேண்டும். கண், தோல், வாய்ப்பகுதி பாதிப்புகளுக்குச் சிகிச்சைகள் தர வேண்டும். மேல் உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல் பாதிப்புகளைத் துரிதமாகக் கண்டறிய வேண்டும்.
- குடல் பகுதியில் துளை ஏற்பட்டிருந்தாலோ கிழிந்திருந்தாலோ உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும். சிலநேரம் மிகவும் மோசமாகப் பாதிக்கப் பட்ட இரைப்பை, குடல் பகுதிகளை அகற்ற வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம்.
விழிப்புணர்வு தேவை:
- ஏதேனும் அசம்பாவிதம் நடந்த பிறகு உணவுப் பொருள்களில் சேர்க்கப்படும் இது போன்றவற்றைத் தடை செய்தால் மட்டும் போதாது; முன்கூட்டியே ஆய்வு நடத்தி உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள்களை உணவுத் தயாரிப்பில் சேர்க்கத் தடை விதிக்க வேண்டும்.
- உணவுப் பாதுகாப்புச் சட்டங்கள் மேலும் கடுமையாக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்பட வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறை முன்னெச்சரிக்கையுடன் ‘ஸ்மோக் பிஸ்கட்’, ‘ஸ்மோக் பீடா’ உள்ளிட்ட புகையும் அல்லது எரியும் உணவுப் பொருள்களைத் தடைசெய்ய வேண்டும். கண்காட்சி, திருவிழா, திருமணம் போன்று மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கண்காணிப்பு அவசியம்.
- நாம் உண்ணும் உணவில் என்ன சத்து உள்ளது என்பது மட்டும் தெரிந்தால் போதாது; வெளியில் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களில் என்ன சேர்க்கப்படுகிறது என்பதை அறிந்து வைத்திருக்க வேண்டும். இறுதியாக, ‘புகை’ புகையிலையால் வந்தாலும் ‘திரவ நைட்ரஜன் பிஸ்கட்’டால் வந்தாலும் அது மனிதர்களின் நலத்துக்குப் பகைதான் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மருத்துவப் பயன்கள்:
- ரத்தம், ரத்தக் கூறுகள், பல்வேறு வகையான செல்கள், உடல் திரவங்கள் அல்லது திசு மாதிரிகளைப் பாதுகாக்க திரவ நைட்ரஜன் பயன்படுகிறது. ‘கிரையோ தெரபி’க்குத் திரவ நைட்ரஜனைப் பயன்படுத்துகிறார்கள். தோலில் வைரஸ்களின் தொற்றால் ஏற்படக்கூடிய மருக்களையும் பால் மருக்களையும் தொங்கும் சிறு சிறு தோல் முடிச்சுகளையும் அறுவை சிகிச்சையின்றி அகற்ற இது உதவுகிறது. மேலும் ஆரம்ப நிலையில் உள்ள சில புற்றுநோய்களின் சிகிச்சைகளுக்கும் இது பயன்படுகிறது. அறுவை சிகிச்சை லேசர்களைக் குளிர்விக்கப் பயன்படுகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (04 – 05 – 2024)