- ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ என்ற உயர்ந்த சிந்தனையுடன் செயல்பட்டுவந்த தமிழ்ச் சமூகம், இன்றைக்கு அந்தச் சிந்தனையிலிருந்து பிறழ்ந்து தள்ளாடிக்கொண்டிருக்கிறது. அதற்குக் கால மாற்றம், நவீன வாழ்க்கை முறை எனப் பல்வேறு காரணங்களைச் சுட்டினாலும் மனிதனின் கட்டுக்கடங்காத பேராசையும், பிற உயிர்கள் - சக மனிதர்கள் மீதான நேசம் இல்லாமல் போனதும், உணவுப்பொருள் சார்ந்த தொழிலை வெறும் லாபம் ஈட்டும் தொழிலாகவும் வியாபாரமாகவும் மட்டுமே நினைக்க ஆரம்பித்ததும் கூட முதன்மைக் காரணங்கள்.
- சமீப காலத்தில் உணவுப்பொருள்கள் தொடர்பாக வெளியான பல்வேறு செய்திகள் துணுக்குற வைப்பவையாக இருந்தன. பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு குழந்தைகள் இணை உணவில் அளவுக்கு அதிகமான சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்த செய்தியைத் தொடர்ந்து, மருத்துவர்களின் எச்சரிக்கைகளும் வெளியாயின.
- குழந்தைகள் உணவில் சர்க்கரையின் அளவு கூடுதலாகும்போது அது நீரிழிவு நோயை மட்டும் ஏற்படுத்துவதில்லை, ஆட்டிசக் குறைபாடு, ஹைப்பர் ஆக்டிவிட்டி எனும் அதீத உடலியக்க நோய் போன்றவை ஏற்படக்கூடும் என்கிற தகவல்கள் அச்சமடைய வைக்கின்றன.
பளு குறைக்கும் ரெடிமேட் மசாலாக்கள்:
- பெண்களும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்த பின், சமையலறைப் பணி நேரத்தைக் குறைப்பதற்காக மசாலாப் பொருள்கள் தொடங்கி இட்லி மாவு வரை வெளியிலிருந்து வாங்கியே குடும்பம் நடத்த வேண்டிய நிலை. அதனால், இத்தகைய பொருள்களின் விற்பனையும் பல மடங்கு பெருகியே இருக்கிறது.
- முன்புபோல் மிளகாய், மல்லி, பிற பொருள்களை வாங்கிக் காயவைத்து அரைத்துப் பாதுகாத்து வைப்பதற்கு இப்போது இடமும் இல்லை; நேரமும் இல்லை. எனவே, பெரும்பாலான பெண்கள் இப்போது ரெடிமேட் மசாலா பொருள்களை வாங்க வேண்டிய தேவை இருக்கிறது. அத்தியாவசியத் தேவை கருதிப் பெறப்படும் இத்தகைய உணவுப் பொருள்களில் கலப்படம் நிகழ்ந்தால், அந்தக் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுமே பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
- இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற இரண்டு தயாரிப்பு நிறுவனங்களின் சாம்பார் மசாலா பொடி, கறி மசாலா பொடி, மீன்குழம்பு மசாலா பொடி போன்றவற்றில் எத்திலீன்ஆக்சைடு என்கிற பூச்சிக்கொல்லி கலந்திருப்பதாகஹாங்காங் உணவுப் பாதுகாப்புத் துறை கண்டறிந்திருப்பதுடன், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அண்மையில் கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
- சிங்கப்பூர் அரசு இந்த மீன் குழம்பு மசாலா விற்பனையைத் தடை செய்திருக்கிறது. மேலும் சில நாடுகளும் தடை விதிக்கலாம் எனத் தெரிகிறது. மீன் மசாலாவில்எத்திலீன் ஆக்சைடு அளவு அதிகமாக இருப்பதால், புற்றுநோயை உண்டாக்கும் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்தியாவில் புற்றுநோயின் சதவீதம் அதிகமாக இருப்பதால், இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
- இந்த இரண்டு நிறுவனங்களும் விற்பனையில் சக்கைப்போடு போடும் முன்னணி நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் எவ்வளவு விளக்கங்கள் அளித்தாலும் கொடிய நோய்க் கூறுகளை உள்ளடக்கியிருக்கும் இத்தகைய மசாலா பொருள்களின் தரம் குறித்த கேள்விகள் நிச்சயம் மக்கள் மத்தியிலும் எழத்தான் செய்யும். தங்கள் ஆரோக்கியத்தைப் பணயம் வைக்க யார்தான் விரும்புவர்? எனவே, இத்தகைய பொருள்களின் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் அவசியமும் இருக்கிறது.
எங்கும் எதிலும் கலப்படம்:
- நிலம், நீர் என அனைத்தும் நஞ்சாகிக்கொண்டிருக்கும் நிலையில் பால், இறைச்சி, தேன், பழச்சாறுகள், தாவர எண்ணெய்கள், தானியங்கள், அரிசி, பருப்பு, ஆயத்த உணவுகள், சிப்ஸ், ஜாம், ஊறுகாய், மதுபானங்கள் வரையிலும் எவ்விதக் கூச்சமும் இல்லாமல் கலப்படம் நிகழ்கிறது.
- ஆயத்த உணவுப் பொருள்களின் நீண்ட காலப் பாதுகாப்புக்காகக் குறிப்பிட்ட அளவு வேதியியல் பதப்படுத்திகளைச் சேர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அளவு அதிகமாகும் நிலையில் அதுவே நஞ்சாகவும் மாறுகிறது.
- முன்பெல்லாம் கேக் வகைகளில் பயன்படுத்தப்பட்ட வண்ணங்கள் இளஞ்சிவப்பு, இளம் மஞ்சள் என்பதாக இருந்தநிலை மாறி, பல அடர் வண்ணங்களில் இப்போது கேக் வகைகள் தயாராகின்றன. பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு வாங்கப்பட்ட கேக்கில் சர்க்கரைக்கு மாற்றாகச் செயற்கை இனிப்பூட்டி அதிக அளவில் சேர்க்கப்பட்டிருந்ததால், அதைச் சாப்பிட்ட சிறுமி மரணமடைந்திருக்கிறார்.
- இந்த அசம்பாவிதம் பஞ்சாபில் நிகழ்ந்துள்ளது. போத்தல்களிலும் புட்டிகளிலும் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களில் ஆரஞ்சு, கறுப்பு திராட்சையின் வண்ணங்கள் என இருந்த நிலை இப்போது மாறி, பேனா மசியைத் தண்ணீரில் கரைத்தாற்போல அடர் சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் குளிர்பானங்கள் கையடக்க போத்தல்களில் விற்கப்படுகின்றன. அதற்கு ஓயாத விளம்பரங்கள் வேறு. இந்த பானங்களை வாங்கி அருந்துபவர்களின் உடல்நலன் குறித்த அக்கறை யாருக்கு இருக்கிறது?
- வெப்ப அலை எச்சரிக்கையினூடே உடலைக் குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மோர், இளநீர், பதநீர், நுங்கு, பழச்சாறுகளை அருந்த வேண்டும் என்ற ஆலோசனைகள் அக்கறையின்பாற்பட்டுச் சொல்லப்படுகின்றன.
- ஆனால், இங்கு பெரும்பான்மையாக இருக்கும் எளிய மக்களால் வானத்தில் ஏறி நிற்கும் விலைவாசியில் பழச்சாற்றினை வாங்கி அருந்த முடியுமா? மீறி வாங்கினாலும் ஓர் அச்ச உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. எலி கடித்த, அழுகிப்போன பழங்களும் பழச்சாறாக மாறும் சூழல் அல்லவா நிலவுகிறது. எப்படி நம்பி வாங்குவது?
- உணவு சார்ந்து தயாரிக்கப்படும் எந்தப் பொருளானாலும் அதன் தயாரிப்பிலும் தரத்திலும் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்கிற எண்ணம் முதலில் வர வேண்டும். விற்பனை எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவு தரமும் முக்கியம். வீட்டிலிருந்தவாறே அவசரத்துக்கு உணவை ‘ஆர்டர்’ செய்து வாங்கி உண்பவர்களின் நிலை பெரும்பாடாகத்தான் இருக்கிறது.
- அந்த உணவில் சில நேரம் கரப்பான்பூச்சி, பல்லி, புழு, பூச்சி என சகல ஜீவராசிகளுடன், இரும்புக்கம்பி, மரக்கட்டைத் துண்டுகள் என உயிரற்றவையும் ஆபத்தை விளைவிப்பவையும் கலந்தே வருவது குறித்தும் செய்திகள் வெளியாகின்றன. எதிலும் கவனமும் அக்கறையும் தேவை; அத்துடன் அறமும் தேவை!
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 05 – 2024)