TNPSC Thervupettagam

உணவு சுற்றுலா: பூம்பாறை மலைப் பூண்டு

February 20 , 2025 3 days 21 0

உணவு சுற்றுலா: பூம்பாறை மலைப் பூண்டு

  • கொடைக்கானல் மலைப் பகுதியில் உள்ள அழகான கிராமம் பூம்பாறை. இயற்கையை அதன் தன்மை மாறாமல் ரசிக்க விரும்புபவர்கள் கொடைக்கானலில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள பூம்பாறை கிராமத்தை நாடலாம்.
  • கிராமத்தின் கட்டமைப்பை ஒளிப்படம் எடுப்பதற்காகவே சமீபமாக அதிகளவில் பயணிகள் அங்கு கூடுவதைப் பார்க்க முடிகிறது. மாதுளை முத்துகள் போல வரிசைக்கிரமமாக வீடுகள். அருகருகே விவசாய நிலங்கள். காரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி என பூமியிலிருந்து எட்டிப்பார்க்கும் காய் ரகங்கள். சில்லெனும் தூய்மையான காற்று... இப்படிக் கவித்துவமாக இருக்கிறது கிராமம்!
  • கிராமத்தின் மையமாக அங்கிருக்கும் பழமையான பூம்பாறை முருகன் கோயிலைக் குறிப்பிடுகின்றனர் கிராமவாசிகள். கோயில் திருவிழாவின் சிறப்புகளை அங்கிருக்கும் மக்கள் எடுத்துரைக்கத் தவறவில்லை. விவசாயம் சார்ந்த கிராமம் என்பதால் விளைபொருள்களுக்கு அங்கு பஞ்சமில்லை. அதிலும் குறிப்பாக, அங்கு பயிரிடப்படும் பூண்டு உலகப் புகழ்பெற்றது. பூம்பாறை பூண்டு புவிசார் குறியீடு பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பூம்பாறை முருகன் கோயிலைச் சுற்றியே பூண்டுக்கான அன்றாட சந்தை நடைபெறுகிறது. வெவ்வேறு ரக மலைப்பூண்டுகளை வரிசை பரப்பி விற்பனை செய்கின்றனர்.
  • நாங்கள் பயணம் மேற்கொண்டது செப்டம்பர் மாதம் என்பதால் பூண்டு அறுவடையைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. பூம்பாறையின் மையப் பகுதியிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பூண்டு அறுவடை நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதிக்குச் சென்றோம். வழியிலேயே அறுவடையான பூண்டு மூட்டைகளைச் சுமந்துகொண்டு குதிரைகள் நடைபோட்டுக் கொண்டிருந்தன.
  • அறுவடைக் களமே தனித்துவமாகக் காட்சி அளித்தது. களத்துக்குப் பின் மேற்கு மலைத் தொடர்கள் பசுமை பரப்பி இருந்தன. கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் வெண்சங்கைப் பரப்பி வைத்திருப்பதைப் போல பூண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. செடியிலிருந்து பூண்டை வெட்டுக்கத்தி போன்ற அமைப்பைக் கொண்டு நயமாக நறுக்கிக்கொண்டிருந்தனர். பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காகப் பூண்டு மூட்டைகள் ஒருபுறம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஒரு பல் பூண்டு:

  • ஒரு பல் பூண்டு அங்கு ஸ்பெஷல். ஒரே ஒரு பல்லைக் கொண்டிருப்பினும் கொஞ்சம் கடித்துப் பார்த்தால் நாவைத் தாண்டி உடல் முழுவதும் நெடி ஏறுகிறது. நாவின் படர்ந்த காரமோ அகல மறுக்கிறது. வழக்கமான பூண்டு ரகத்தைவிட ஒரு பல் பூண்டின் விலை அதிகம்.

பூம்பாறைப் பூண்டு:

  • ஜடையோடு சேர்த்துப் பூண்டுகளை வாங்கிப் பயன்படுத்தினால், கிட்டத்தட்ட ஒரு வருடம் வரை இந்தப் பூண்டுகளில் முளை வருவதில்லை! முளைவிடும் பூண்டுகளில் கூடுதல் கசப்புத் தன்மை இருப்பதால் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என்பது குறிப்பிடத்தக்கது. அறுவடை செய்யும் போதே விதைப் பூண்டுகளையும் விவசாயிகள் சேகரித்து வைத்துக்கொள்கின்றனர்.
  • மற்ற பூண்டு வகைகளைவிட பூம்பாறைப் பூண்டுக்கு நெடியும் காரமும் அதிகம் என்பதை நேரடியாக உணரலாம். மருத்துவக் குணங்களும் அந்த வகைப் பூண்டுகளுக்கு அதிகம். பூண்டுகளின் மருத்துவக் குணத்துக்கு முக்கியக் காரணமான ’அல்லிசின்’ எனும் வேதிப்பொருளின் அளவீடுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் வித்தியாசங்கள் தெரியலாம். சாதாரண பூண்டுகளைப் பயன்படுத்தும் அளவைக் காட்டிலும் பூம்பாறைப் பூண்டுகளைக் குறைவாகப் பயன்படுத்தினாலே நிறைவான பலன்களைப் பெறலாம்.
  • ரத்தக் குழாய்களில் உண்டாக வாய்ப்பிருக்கும் கொழுப்புப் படிமங்களைத் தடுப்பதில் பூண்டுக்கு முக்கியப் பங்கு உண்டு. கொழுப்புச் சத்தின் அளவுகளைக் குறைப்பதிலும், செரிமானச் சுரப்பிகளைத் தூண்டுவதிலும் பூண்டின் பங்கு முக்கியமானது! நுண்ணுயிர்க்கொல்லி செய்கை இருப்பதால் கிருமிநாசினியாகவும் செயல்படக்கூடியது. மேலும் சித்த மருந்துகளின் தயாரிப்பிலும் பூண்டின் பங்கு அதிகம்.
  • மருந்து தயாரிப்புக்காகப் பூம்பாறைப் பூண்டுகளைத் தேடி வரும் நபர்கள் அதிகம்! மலைப் பூண்டுகளைப் பயன்படுத்தி மருந்துகளைத் தயாரித்தால் அவற்றின் வீரியம் அதிகரிக்கும் என்பது சித்த மருத்துவ அனுபவக் குறிப்பு.
  • பூண்டை அடிப்படையாக வைத்து உலகம் முழுவதும் பல்வேறு ரக உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
  • பூம்பாறைப் பூண்டோ பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. நமது அன்றாடச் சமையலிலும் ஒரு முறை பூம்பாறைப் பூண்டைப் பயன்படுத்திப் பார்த்தால், மறுமுறை பூம்பாறைப் பூண்டின் நெடியை நாசித் துளைகளும், அதன் சுவையை சுவை மொட்டுகளும் தேடத் தொடங்கிவிடும்.
  • அறுவடை செய்யும் இடத்துக்கே சென்று பூண்டை வாங்கினால் ஒரு கிலோ ரூ.250-300 அளவில் கிடைக்கிறது. சந்தையில் விலை சற்று அதிகம்.
  • பூம்பாறைப் பூண்டு தனித்துவமானது.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories