TNPSC Thervupettagam

உணவு விரயம் : களையப்பட வேண்டிய சமூக அநீதி!

April 3 , 2024 281 days 348 0
  • உணவுப் பாதுகாப்பு என்கிற நிலையை உலகம் இன்னும் முழுமையாக எட்டியிருக்காத நிலையில், ஒவ்வோர் ஆண்டும் விரயமாக்கப்படும் உணவின் அளவு மிகுந்து வருவது வேதனையளிக்கிறது. குறிப்பாக, உலகெங்கும் 78 கோடிக் குழந்தைகள் பட்டினியில் வாடும் நிலைக்குத் தள்ளப்படலாம் என சர்வதேசத் தொண்டு நிறுவனமான ‘சேவ் தி சில்ரன்’ எச்சரித்திருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.
  • 2030ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய தனிநபர் உணவு விரயத்தின் அளவைப் பாதியாகக் குறைக்க வேண்டும் என்பது ஐ.நா. முன்மொழிந்துள்ள நிலைத்த வளர்ச்சி இலக்குகளில் (SDGs) ஒன்று. அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்பதையே ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள ‘உணவு விரயக் குறியீடு 2024’ ஆய்வறிக்கை காட்டுகிறது.
  • உலக பூஜ்ய விரய நாளை (மார்ச் 30) முன்னிட்டு வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டு மட்டும் சுமார் 105 கோடி டன் (ஒரு டன் = 1,000 கிலோ) உணவு விரயமாக்கப்பட்டுள்ளது. இது வீட்டில் தயாரிக்கப்படும் உணவு, உணவுச் சேவை, சில்லறை வியாபாரம் என அனைத்து நிலைகளிலும் தயாரிக்கப்பட்ட உணவில் சுமார் 19% ஆகும். விரயமாக்கப்பட்ட உணவு வகைகளில் சுமார் 63 கோடி டன் (60%) வீடுகளில் இருந்தே வந்திருக்கின்றன. ஒருவர் சராசரியாக ஆண்டொன்றில் 79 கிலோ உணவை விரயமாக்குகிறார்.
  • உணவு விரயத்தை மிகப் பெரிய சமூகக் குற்றமாகப் பொருளாதார அறிவியல் முன்வைக்கிறது. நிலத்திலிருந்து உணவுப் பொருள்கள் உற்பத்தியாகி, எரிபொருள் மூலம் உணவாக உருவெடுத்து, தகுந்த பாதுகாப்பு, பகிர்வு எனப் பல கட்டங்களைக் கடந்து, உணவுத் தட்டுக்கு வருவதற்கு ஆகும் செலவானது, விரயமாக்குதல் வழியாகப் பல மடங்கு அதிகரிக்கிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கிறது.
  • அறுவடைக்குப் பிந்தைய காலத்தில் உற்பத்திச் சங்கிலியில் சுமார் 13% அளவுக்கு உணவு விரயம் ஏற்படுவதாக உணவு-வேளாண்மை நிறுவனம் (FAO) மதிப்பிடுகிறது. இப்பிரச்சினை சுற்றுச்சூழலுடனும் பின்னிப் பிணைந்துள்ளது. மிச்சமான உணவு, கெட்டுப்போன உணவு எனப் பல வழிகளில் விரயமாகும் உணவு மீண்டும் மண்ணுக்குத்தான் வருகிறது.
  • புவி வெப்பமாதலுக்குக் காரணமான பசுங்குடில் வாயுக்களில் ஒன்றான மீத்தேன், விரயமாகும் உணவுக் கழிவிலிருந்து அபரிமிதமாக வெளியாகிறது. ஒட்டுமொத்தப் பசுங்குடில் வாயுவின் அளவில் 8-10% வரை பங்களிப்பதன் மூலம், காலநிலை மாற்றத்துக்கு விமானத் துறையைவிட உணவு விரயம் அதிகமாகப் பங்களிக்கிறது.
  • மீதமாகும் உணவு வகைகளை மறுசுழற்சி செய்ய நிறைய வழிமுறைகள் உண்டு. விரயம் செய்யப்படும் காய்கறி - பழங்களில் ‘பிஎஸ்எஃப்’ (Black Soldier Fly – BSF) ஈக்களின் லார்வாக்கள் வளர்கின்றன. இவை அந்த உணவுக் கழிவுகளில் வினைபுரிந்து, அவற்றைப் புரதம் நிறைந்த உணவாக மாற்றியமைத்துவிடுகின்றன. இந்தப் புதிய உணவு கோழி வளர்ப்புக்கும் மீன் வளர்ப்புக்கும் பயன்படுகிறது. இத்தகைய முறைகளைப் பின்பற்றி உணவு விரயத்தைத் தவிர்க்கலாம்.
  • சமூக ஊடகங்களின் மட்டுமீறிய பயன்பாடு, நுகர்வுக் கலாச்சாரத்தின் எல்லையை நாளுக்கு நாள் விரித்துக்கொண்டே செல்கிறது. அது முதன்மையாக உணவுப் பழக்கத்தில் எதிரொலிக்கிறது. சமூக ஊடகப் பதிவுகளுக்காக அல்லாமல், பசிக்காக உண்ணும்போது உணவு விரயம் மட்டுப்படும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியது தனிமனிதரின் கடமையாகும்.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories