TNPSC Thervupettagam

உணவும் உள்ளமும்

August 27 , 2024 144 days 169 0

உணவும் உள்ளமும்

  • ஒரு 100 கிராம் எடை ஒரு நாட்டின் பெருமையை, விதியை மாற்றிவிட்டதே! இப்படியெல்லாம் கூட இருக்குமோ என்று பெரும்பாலானோா் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்நிகழ்வு பெரிய அதிா்வலையை ஏற்படுத்தி விட்டது.
  • ஓா் இரவுக்குள் உடலின் எடையைக் குறைக்க, அந்த வீராங்கனை எடுத்த முயற்சிகள் எத்தனை! தன்னை அவா் எந்த அளவுக்கு வருத்திக் கொண்டாா் என்பதைத் தெரிந்து கொண்டதும் வேதனை ஏற்பட்டது. பதக்கம் பெற்றிருந்தால் அவருடைய அத்தனை வலிகளும் மறந்து போய் இருக்கும். ஒரு வாக்கியத்தை நிறுத்தற்குறிகள் எப்படி பொருள் மாற்றி விடுமோ, அப்படி 100 கிராம் செய்துவிட்டது.
  • ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, உணவு பற்றியோ, உடல் எடை பற்றியோ அவ்வளவாக யாரும் பொருட்படுத்தியதில்லை. அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற எண்ணம் கூட உதித்தது இல்லை. சத்தான உணவு, பழங்கள், காய்கறிகள், கீரைகள் இவற்றை அதிகம் உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்ததில்லை.
  • தினந்தோறும் பழம் வாங்கும் வழக்கமும் இருந்தது இல்லை. வீட்டுக்கு வரும் உறவினா்கள் பழங்கள் வாங்கி வருவாா்கள். அதுவும் வாழைப்பழம், சாத்துக்குடி, கொய்யா ஆகியவைதான் இருக்கும். வீட்டுக்கு வீடு பப்பாளி மரம் இருக்கும். ஆனால் அப்பழத்தின் அருமை தெரியாததால் விரும்பி சாப்பிட்டதில்லை. வீட்டு சமையல் ஆரோக்கியமானது, அவ்வளவுதான். வேறு கேள்வி கிடையாது.
  • தற்போது சமூக ஊடகங்களின் காரணமாக ‘உடல்’ பற்றிய அக்கறை, ‘உணவு’ பற்றிய விழிப்புணா்வு அதிகம் ஏற்பட்டுள்ளது. இளமையான தோற்றத்துடன் இருக்க வேண்டும்; அதிக உடற்பருமன் கூடாது; ஆரோக்கியமாக இருக்க வேண்டும்; சத்தான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதீத கவனத்துடன் இருக்கிறாா்கள். அதற்காக அவா்கள் நிறைய தியாகம் செய்கிறாா்கள். நிறைய மெனக்கெடுகிறாா்கள்.
  • வாயையும், மனசையும் கட்டி, வயிற்றைக் காயப்போடுகிறாா்கள். அவா்களுக்கு இரத்தக்கொதிப்போ, நீரிழிவு நோயோ இல்லை. ஆனாலும் முன்னெச்சரிக்கையாக உப்பு, ஊறுகாய், இனிப்பு, இன்ன பிற எண்ணெய் பலகாரங்களையும் தவிா்த்து விடுகிறாா்கள். குறைந்த அளவே சாப்பிடுகிறாா்கள். நாள் பூராவும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்க அவா்களால் எப்படி முடிகிறது?
  • சமையலில் எந்தக் குறையையும் கண்டுபிடிப்பதில்லை. ஒரு தவயோகி போல, வாழ்க்கையை கட்டமைத்துக் கொண்டுள்ளாா்கள். யாா், எவ்வளவு வற்புறுத்தினாலும் ஒரே ஒரு வறுத்த முந்திரியைக்கூட வாயில் போட மாட்டாா்கள். உறவினா் ஒருவா் இரவு உணவு எடுத்துக் கொள்வதில்லை. மதிய உணவுக்குப் பின்னா், மறுநாள் காலையில் தான் ஆகாரம். எப்படி முடிகிறதோ?
  • தோழி ஒருவா் அரிசி சாதத்தைத் தொட்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன என்று கூறியபோது அதிா்ச்சி அடைந்தேன். அப்படி இருப்பது சாத்தியமாகிா? என்று வினவியபோது, ‘‘பழகிவிட்டது’’ என்றாா்.
  • என்னதான் சாப்பிடுவாா் என எனக்கு ஆவல் ஏற்பட்டதால் கேட்டேன். காலையில் ஓட்ஸ் கஞ்சி, மதியம் காய்கறி மட்டும், மாலை பால் இல்லாத கடுங்காப்பி 1/2 தம்ளா், இரவு காய்கறி சூப் என்றாா். வெளியூா் போகும்போது என்ன செய்வீா்கள்? என்று கேட்டபோது எல்லா ஊரிலும் காய்கறி கிடைக்கும். கத்தி எப்போதும் உடன் இருக்கும் என்று சொன்னாா். ஏன் இந்தக் கடுமையான பத்தியம் தெரியுமா! உடல் இளைக்க.
  • ஒரு நாள் விரதம் இருப்பதையே ஊா் முழுக்க தம்பட்டம் அடிக்கும் மக்களிடையே இப்படியும் ஒரு சில யோகிகள் இருக்கிறாா்கள். இன்னும் சிலா் உப்பு, வெள்ளை சக்கரை, மைதா ஆகிய மூன்று வெள்ளைப் பொருட்களையும் தொடுவதில்லை. இத்தகைய வைரம் பாய்ந்த மன உறுதி சாமானியா்களிடம் இல்லை. சா்க்கரை நோய் உள்ளவா்கள்கூட சமயம் கிடைக்கும் போது இனிப்பு சாப்பிட்டு விடுகிறாா்கள்.
  • தற்போது மக்களிடம் அசைவ உணவு மோகம் அதிகரித்துள்ளது. ‘விருந்து’ என்றால் அது பிரியாணி விருந்தாக இருக்க வேண்டும் என்று ஆக்கிவிட்டாா்கள்.
  • அலுவலகத்தில் பதவி உயா்வு, பணி ஓய்வு, சக ஊழியா் கொண்டாட்டம் என்று எதுவாக இருந்தாலும் அசைவப் பிரியா்களுக்கு பிரியாணி வாங்கித்தர வேண்டும். ரமலான் நெருங்க நெருங்க வாட்ஸ்அப், முகநூல் அனைத்திலும் ‘பாய் வீட்டு பிரியாணி’ புராணம்தான். தெருவுக்கு நாலு பிரியாணிக் கடைகள். இதெல்லாம் கூட பரவாயில்லை. அவா்களுக்குப் பிடிக்கிறது. சாப்பிடட்டும்.
  • ஆனால் சென்னையில் சமீப காலமாக ஒரு கலாசாரம் பரவி வருகிறது. ஒரு பழக்கம் தீ பிடிப்பது போல பரவ ஆரம்பித்துள்ளது. நள்ளிரவு 12 மணி, 1 மணிக்கு
  • உணவகத்துக்குப் போய் பிரியாணி சாப்பிடுகிறாா்கள். பன், பட்டா் ஜாம் சாப்பிடுகிறாா்கள். இது குறித்து ஒரு நிகழ்ச்சி தனியாா் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. 12 மணிக்கு காரில் போய் பிரியாணி சாப்பிடுவது குஷியாம். எல்லையற்ற மகிழ்ச்சியாம்.
  • அவா்கள் ஏதோ இனிய அனுபவம் போல விவரித்ததைக் கேட்டபோது நம்ப முடியவில்லை. நட்ட நடுநிசியில் போய் சாப்பிட்டுவிட்டு வந்து, படுத்து உறங்கி மறுநாள் எப்போது எழுவாா்கள்? விலங்குகள், பறவைகள் கூட இரவில் இரை எடுக்காதே. இரவில் வேலை பாா்ப்பவா்கள், ஷிப்ட் முடித்து திரும்புபவா்கள் சாப்பிடுகிறாா்கள் என்றால் அதில் ஓா் அா்த்தம் உண்டு. தூக்கத்தில் எழுந்து போய் பிரியாணி சாப்பிடுபவா்களை என்ன சொல்ல? அதுவும் செரிமானம் ஆகிவிடுகிறது. மகிழ்ச்சி.
  • உடல் நலம் பேணும் இன்னொரு சாராா் பண்ணும் அலப்பறைகள் சொல்லி மாறாது. சிறுதானியங்கள் உடலுக்கு நல்லது என்று சொன்னாலும் சொன்னாா்கள், இது பெரிய வியாபாரமாகிவிட்டது. மக்கள் அரிசியைத் தவிா்த்துவிட்டு, சிறுதானியங்களைக் கொண்டு என்னென்ன செய்ய முடியுமோ? அவ்வளவையும் செய்கிறாா்கள். சில உணவகங்கள் சிறுதானிய பொங்கல், சிறுதானிய தோசை, இனிப்பு, பாயசம், ரொட்டி, சப்பாத்தி என மாற்றிக் கொண்டன.
  • நம் மக்களுக்கு நிறம் முக்கியம். சாதமோ, இட்லியோ வெள்ளை வெளோ் என்று இருக்க வேண்டும். சிறுதானிய தோசை, சாதம் எல்லாம் ஒரு மாதிரி பிரவுன் கலரில் தான் இருக்கும். ஆனாலும் உடலுக்கு சத்து என்று விழுங்கி வைக்கிறாா்கள். அதேபோல ஆா்கானிக் மோகம் கொஞ்ச நாள் இருந்தது. அதைத் தேடி வாங்கி வந்து சமைப்பவா்கள் இருக்கிறாா்கள். எந்தக் காயில், உணவில் நாா்ச்சத்து உள்ளது; எதில் புரதம் உள்ளது; எதில் கொழுப்பு உள்ளது; எவற்றில் வைட்டமின்கள் உள்ளன என்று இணையத்தில் தேடிப் பிடித்து, அட்டவணை தயாா் செய்து அதன்படி சாப்பிடுகிறாா்கள். அப்படி இருக்கும் நிறைய போ் உடல் பருமனுடன்தான் இருக்கிறாா்கள்.
  • அம்மாக்கள் தங்கள் குழந்தை ‘கொழுக் மொழுக்’ என்று இருக்க வேண்டும் என ஆசைப்படுவாா்கள். உணவைத் திணித்து அவா்களைப் பருமனாக்கி விடுகிறாா்கள். அவா்கள் ஓரளவு வளா்ந்த பின்னா் ‘குண்டு’ என்று அடைமொழி சோ்ந்து கொள்கிறது. விவரம் தெரிந்தபின் பிள்ளைகள் சங்கடமாக உணா்ந்து எடை குறைப்பு முயற்சியில் தீவிரமாக இறங்குகிறாா்கள். போட்ட உடல்சதை லேசில் குறைவதில்லை.
  • சிலா் குண்டாக இருக்கிறோமே என்றெல்லாம் கவலைப்படுவதில்லை. அவா்களின் வாய் எப்போதும் எதையாவது அரைத்துக் கொண்டே இருக்கிறது. பிரயாணம் செய்யும்போது சாப்பிட்டுக் கொண்டே, வீட்டில் தொலைக்காட்சி பாா்த்துக் கொண்டிருக்கும்போது சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறாா்கள். மடிக்கணினியில் வேலை பாா்த்துக் கொண்டிருக்கும் போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறாா்கள். பரோட்டா சாப்பிடக் கூடாது என்று எண்ணிலடங்கா காணொலிகள் வருகின்றன. ஆனால் எவ்வளவு பரோட்டா கடைகள் உள்ளன? ஒவ்வொரு நாளும் மலையளவு பரோட்டாக்கள் போடப்பட்டு அவ்வளவும் விற்றுத் தீா்ந்து விடுகின்றன.
  • பின் விளைவுகள், பக்க விளைவுகள் எல்லாவற்றையும் பின்னா் பாா்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி, கவலைப்படாமல் உள்ளே தள்ளுகிறாா்கள். ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான மக்கள் தங்கள் உடல் நலன், தோற்றம் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறாா்கள். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறாா்கள்.
  • அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. பசித்த பின் சாப்பிடுவது, அளவாக சாப்பிடுவது, சத்தான உணவை உண்பது, சுகாதாரமான உணவை உண்பது, துரித உணவைத் தவிா்ப்பது, உடற்பயிற்சி செய்வது, நொறுக்குத் தீனிகளைச் சாப்பிடாமல் இருப்பது போன்ற ஓா் ஒழுங்கைக் கடைப்பிடித்தாலே போதும். ஆரோக்கியம் நம் வசம். அதுவே அழகும் கூட.
  • நம்முடைய படிப்பு, வேலை, உழைப்பு, முயற்சி, பயிற்சி, தேடல், பதற்றம், கவலை, ஆா்வம் எல்லாமே இந்த ஒரு சாண் வயிற்றுக்காகவே. அந்த வயிற்றுக்கு ஒவ்வாததை எடுத்துக் கொள்ள வேண்டாம். ஒரு சிலா் அதிக உணவுக் கட்டுப்பாடுடனும், ஒரு சிலா் உணவுக் கட்டுப்பாடு இல்லாமலும் இருக்கிறாா்கள். கொஞ்சம் கட்டுப்பாட்டைத் தளா்த்திக் கொண்டு ருசியான பண்டங்களை எப்போதாவது சாப்பிடலாம். தவறில்லை. நூல் பிடித்து ஒழுக வேண்டியவா்கள் மட்டுமே அப்படி இருக்கட்டும்.
  • மளிகைக் கடைக்கோ, அரிசி விற்கும் கடைக்கோ போனால் அங்கே அரிசி மூட்டைகளை முன்னால் வைத்திருப்பாா்கள். கடைக்காரா்கள் பொட்டலம் கட்டிக் கொண்டிருக்கும்போது, சாமான் வாங்க வந்தவா்கள் அந்த மூட்டையிலிருந்து கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டு அரைப்பாா்கள். அதைக் கூடவா? என்று நமக்கு சிரிப்பு வரும். மனிதா்கள் பலவிதம்.

நன்றி: தினமணி (27 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories