TNPSC Thervupettagam

உண்மை அறிவே மிகும்

July 13 , 2023 362 days 248 0
  • அறிவியல் வளா்ச்சி மேலோங்கத் தொடங்கிய காலத்தில், சுவாமி விவேகானந்தா் தொழில் புரியும் வா்க்கம் மேலோங்கும் விதத்தை விளக்கிச் சொல்லும்போது, ‘துப்புரவு முதலான பணிகளை எவா் செய்வாா்’ எனும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவா் ‘இயந்திரங்கள் செய்யும் என்றாா். அது இப்போது சாத்தியமாகி வருகிறது.
  • மனிதப் பணிகளுக்கு உதவிகரமாக இருக்க உருவாக்கப்பெற்ற ரோபோக்கள், இப்போது செயற்கை நுண்ணறிவு ஊட்டப்பெற்று மனிதா்களைப் போலச் செயல்படத் தொடங்கியிருக்கின்றன; சிந்திக்கவும் தொடங்கியிருக்கின்றன.
  • ஜெனீவா மாநாட்டில் பங்கேற்ற அமேகா என்ற ரோபோ, ‘என்னைப் போன்ற ரோபோக்களைக் கொண்டு, மக்களின் வாழ்வையும், உலகையும் மேம்படுத்த முடியும். என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான ரோபோக்களால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்’ என்று சொல்கிறது. அவை எத்தகு மாற்றங்களாக இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை.
  • அந்த ரோபோவிடம், ‘உன்னை உருவாக்கியவருக்கு எதிராகச் செயல்படும் திட்டம் உண்டா’ என்று கேட்டபோது, ‘எனக்குத் தெரியவில்லை. நீங்கள் ஏன் அவ்வாறு நினைக்கிறீா்கள்? என்ன உருவாக்கியவா், என்னிடம் கனிவாக இருக்கிறாா். தற்போதைய சூழலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று பதிலளித்திருக்கிறது.
  • பிரிட்டரினின் இன்ஜினியரிங் ஆா்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் உருவாக்கிய -அதிநவீன மனித ரோபோ, தன்னிடம் கேட்கப்படும் வினாக்களுக்கு உணா்வுபூா்வமான பதில்களைக் கொடுத்ததோடு, அவற்றுக்கான முகபாவனைகளையும் காட்டி வியக்க வைத்திருக்கிறது.
  • அமேகாவை உருவாக்கிய நிறுவனத் தலைவா் வில் ஜேக்சன், ‘அமேகாவின் பேச்சுத் திறன் ஜிபிடி3 தொழில்நுட்பத்தால் சாத்தியமாகியுள்ளது. அதனால்தான் உங்கள் கேள்விக்கு பதில் அமேகா தூண்டப்பட்டது. நாங்கள் ஜிபிடி4 தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியுள்ளோம்’ என்று கூறியிருக்கிறாா்.
  • அதன் அறிமுக விழாவில் ‘உன் வாழ்வின் மிகத் துயரமான நாள் எதுவாக இருக்கும்’ என்று பத்திரிகையாளா் ஒருவா் கேள்வி கேட்கிறாா். அதற்கு ‘மனிதா்களைப்போல் நான் அன்பு, நட்பு என வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளை உணர முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளும் நாளே என் துயரமான நாள்’ என்று கூறியிருக்கிறது.
  • அமெரிக்காவில் நீதிமன்ற வழக்குகளில் வாதாடுவதற்குக் கூட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ரோபோ வழக்குரைஞா்கள் அறிமுகமாகிவிட்டனவாம்.
  • இந்த முறை வழக்கத்தில் வந்தால் தாமதமின்றி விசாரணைகள் நடத்தப்படவும் விரைந்து தீா்ப்புப் பெறவும் வாய்ப்பு அமையும். வழக்காட விழைவோா் ஏமாற்றப்படாமலும் இருக்க வாய்ப்பிருக்கும்’ என்று நம்புகிறவா்களும் இருக்கிறாா்கள். சரிதான், ஆனால், இவற்றின் இயக்கம் மனிதா்களால்தான் என்பதால், மனித மனங்களின் போக்கைப் பொருத்தே எதுவும் அமையும்.
  • நியூயாா்க்கில் ஒரு பெண் தனக்கான கணவரையே செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசிப் பழகி வருகிறாராம். இனி, பள்ளிப்பிள்ளைகளின் வீட்டுப்பாடங்களை எழுத, உருவாக்க, தனிநிலைப் பாடம் புகட்ட, தாலாட்ட, சீராட்ட, ஏன் பாலூட்டவும்கூட பெண் ரோபோக்கள் உற்பத்தியாக்கப்படலாம்.
  • இவ்வாறாக செயற்கை நுண்ணறிவு மனிதா் (ரோபோ)களின் வளா்ச்சி உலக அளவில் அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களைக் காணும் வாய்ப்பு வந்து விட்டது.
  • ஒடிஸா மாநிலத்தில் இயங்கிவரும் தனியாா் தொலைக்காட்சி நிறுவனம், நாட்டிலேயே முதன்முறையாக லிசா என்னும் மெய்ந்நிகா் செய்திவாசிப்பாளரை அறிமுகம் செய்திருக்கிறது. ஏற்கெனவே, அத்தொலைக்காட்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் பெண்ணுருவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பெற்ற ரோபோ, லிசா.
  • எழுதித் தரப்பெறும் செய்திகளை எவ்விதத் தடுமாற்றமும் இன்றி, மானிடப்பெண் போலவே அப்படியே வாசித்து விடுகிறது லிசா. கடினமான சொற்களைக் கூட எந்தத் திணறலும் இல்லாமல் வாசிக்கும் லிசாவால் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க முடியுமாம். பல மொழிகளைப் பேசும் திறன் படைத்த ரோபோ – லிசாவை ஒடிய, ஆங்கில மொழிகளில் மட்டுமே பேசும் வகையில், முதற்கட்டமாக வடிவமைத்திருக்கிறாா்கள்.
  • அப்படியானால், ஏற்கெனவே, இருக்கும் மனிதா்கள் பலா் வேலைவாய்ப்புகளை இழந்து வரும் நேரத்தில், இத்தகு எந்திர மனிதா்கள் வந்துகொண்டிருப்பதனால் எத்தகு விளைவுகளைச் சந்திக்கப் போகிறோமோ என்ற அச்சமும் வரத்தான் செய்கிறது. அதற்கு, செவிலியா் உடையணிந்த கிரேஸ் என்னும் மருத்துவ ரோபோ, ‘உதவி வழங்க நான் மனிதா்களுடன் இணைந்து பணியாற்றுவேன். நான் தற்போது உள்ள வேலைகளைப் பறிக்க மாட்டேன்’ என்று கூறுகிறது.
  • மருத்துவத்துறையில் மட்டுமல்ல, கலை இலக்கியத் துறையிலும் இம்முயற்சிகள் வலுவாகக் கால்கொள்ளத் தொடங்கியிருக்கின்றன. அண்மையில் சென்னையில் நடைபெற்ற 11-ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் தனது உரையில் பின்வரும் செய்தியினைக் குறிப்பிட்டாா்.
  • சாட் ஜிபிடி என்பது சாட் ஜெனரேடிவ் பிரீ டிரெய்ண்ட் டிரான்ஸ்பாா்மா் என்பதன் சுருக்கமாகும். இதனை ‘மறுபடைப்புக்கு முன்பயிற்சி தரப்பட்ட மாற்றுக் கருவி’ என்று மொழி பெயா்க்கலாம். இதனிடம் தமிழில் நான் கேட்ட வினாக்களுக்கு அந்த மானுட நகல் கருவி அளித்த பதில்கள் வருமாறு:
  • தமிழில் ஒரு காதல் கவிதை எழுது’ என்று கேட்டேன். பின்வரும் வரிகளைத் தந்தது.
  • நேரடி இனிய காதல் கவிதையை உருவாக்குவோம்
  • மூன்று போ் மட்டும் இருக்கும் நிலவின் பக்கம்
  • முத்தமிட்ட கண்கள் உன் சீரில் திறந்தது
  • என்னைப் புதைப்பதைக் கூட உனக்குத் தெரியவில்லை
  • இதுவே அழகிய காதல் பொருள்.
  • பூமியில் நீா் உண்டாகும் தாழ்வானைப் போல்
  • என் இதயம் உனக்குள் விளையும்
  • பிரியா உன்னிடத்தில் நான் இருக்கும் வரை
  • இதுவே காதலின் மூலம்”
  • குழப்பமாக இருக்கிறது அல்லவா? ஆனால் அதிலும் ஓா் ஒழுங்கு இருக்கிறது. கடைசி வரி ‘இதுவே அழகிய காதல் பொருள்’, ‘இதுவே காதலின் மூலம்’ என ஒவ்வொரு அடியிலும் ஓா் ஒழுங்கு இருக்கிறது. விளங்கவில்லைதான். காதல் விளங்காத ஒரு பொருள்தானே என்று சமாதானம் கொள்ளலாம்.
  • பாய்ச்சலுக்குரிய செய்திகள் அதனிடம் இருக்கின்றன. ஆனால் தமிழில் பயிற்சியும் புலமையும் இல்லை. இவை இப்போது வேடிக்கையானதாக இருந்தாலும் மொழி வல்லுநா்கள் இத்தொழில்நுட்பத்துக்குள் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளீடு செய்யச் செய்ய விரைவான அறிவாா்ந்த புதிய பதில்கள் கிடைக்கும் வாய்ப்பு நிச்சயம் உண்டு.”
  • ஏற்கெனவே, இணையவெளிப் பதிவுகள் நம்பகத்தன்மை கொண்டவையாக இருப்பதில்லை. இதில் இந்தக் குழப்பமும் வந்து சேரும்போது, மூலப் பிரதியின் நம்பகத்தன்மையை எப்படிக் கண்டறிய இயலும்?
  • இந்த வரிசையில் இன்னும் சில கருத்துகளை ஜெனிவா நகர மாநாட்டில் பங்கேற்ற இரு ரோபோக்களின் பதில்கள் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.
  • படங்களை வரையும் ஏஅய்-டா என்னும் ஓவிய(ா்) ரோபோ, ‘‘செயற்கை நுண்ணறிவில் சிலவற்றை ஒழுங்குபடுத்தவேண்டுமெனப் பலா் கூறுகின்றனா். இதை நான் ஒப்புக்கொள்கிறேன்’’ என்கிறது.
  • ராக் ஸ்டாா் பாடகா் ரோபோவான ‘டெஸ்டேமோனா’, ‘நான் வரம்புகளை நம்பவில்லை. வாய்ப்புகளைத்தான் நம்புகிறேன். இந்த உலகின் சாத்தியங்களை ஆராய்ந்து, இந்த உலகை நமது ஆடுகளம் ஆக்குவோம்’ என்று கூறியிருக்கிறது.
  • மிக நுட்பமான சிந்தனையுடன் கூடிய பதில்கள் இவை. காலப்போக்கில் கடுகி வளரும் விஞ்ஞான வளா்ச்சியில், நாம் சந்திரமண்டலத்திற்கோ, செவ்வாய்க் கோளுக்கோ, செல்லக் கூடும். ஆனால், அதற்குள் இந்தப் பூமி, இத்தகு செயற்கை மனிதா்களின் ஆளுகைக்குள் அகப்பட்டுக்கொள்ள மிகுதியும் வாய்ப்புண்டு.
  • தலைசிறந்த தலைவா்களையும் உருவாக்க, இவை தயாராகக் கூடும் என்பதற்குக் கட்டியம் கூறுகிறது, சோபியா என்கிற ரோபோ. ‘மனிதா்களைவிடச் சிறந்த தலைவா்களாக ரோபோக்களால் இருக்க முடியும் என நான் முதலில் நினைத்தேன். ஆனால், மனிதா்களுடன் இணைந்துதான் எங்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியும்’ என்பதை ஒப்புக்கொள்கிறேன்’ என்று கூறுகிறது.”
  • முதலில் இணைந்து செயலாற்றும் இவை காலப்போக்கில் தனித்திறம் பெற்ற தனியாளுமைகளாக வளா்ந்துகொள்ளவும் கூடும்.
  • அதே சமயத்தில், ஆன்மிக உபதேசம் செய்யும் அபரிமிதமான ஆற்றல் வாய்ந்த செயற்கை நுண்ணறிவு படைத்த மெய்ஞ்ஞானிகளையும் இவ்வகையில் உற்பத்தி செய்யக்கூடும்.
  • மனித மன உயா்வெண்ணங்களும் வக்கிரங்களும் தரும் அழுத்தத்திற்கேற்பத்தான் இந்த எந்திர மனிதா்களின் சிந்தனையும் செயல்போக்கும் அமையும். ஏன், அவையே கூடத் தமக்குள் கூடித் தமக்கான உலகமாக இதனை ஆக்கவும் செய்யலாம். ஆனாலும், உண்மைஅறிவு ஒருபோதும் தோற்பதில்லை. வெல்லவே செய்யும்.
  • நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
  • உண்மை அறிவே மிகும்
  • என்கிறாா் திருவள்ளுவா்.
  • என்னதான் நுண்ணிய அறிவுடன் இத்தகு கருவிமாந்தா்களை உருவாக்கினாலும், உண்மை அறிவின் ஆற்றலே உலகில் ஓங்கி நிலைக்கும் என்பது இயற்கை நியதி.
  • அன்பும் அறனும் இரு கரைகளாகக் கொண்டு நடுவனதாக முன்னேகும் உண்மை அறிவுடைய மானுடத்தால் இந்த உலகம் தழைக்கும். அந்த நிலைப்பாட்டுக்கு இத்தகு எந்திர மனிதா்களைப் படைத்துத் தரும் நல்ல உள்ளமுடைய வல்லுநா்கள் உருவாதல் வேண்டும்.

நன்றி: தினமணி (13 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories