TNPSC Thervupettagam

உண்மையான சுயராஜ்ஜியம் இந்தியாவில் என்று மலரும்?

October 3 , 2019 1935 days 1057 0
  • காமன்வெல்த் மாநாட்டு நிமித்தம் பிரிட்டன் சென்றிருந்தபோது, ‘நவ்ரூ’ எனக்கு அறிமுகமானது.
  • காமன்வெல்த் உறுப்பினர்களிலேயே சிறியதான நவ்ரூ உலகின் சின்ன தீவு நாடுகளில் ஒன்று. “நீங்கள் நவ்ரூ வந்தால், ஒரே நாளில் தீவை நடந்தே சுற்றிவந்து, ஒரு நாட்டையே சுற்றிப் பார்த்த திருப்தியுடன் நாடு திரும்பலாம். எங்கள் நாட்டின் கடற்கரை நீந்துவதற்கும் மீன் பிடிப்பதற்கும் மிகவும் ஏற்றது.
  • அப்புறம், ‘புவாடா லகூன் கடல் ஏரி’. அது நீந்துவதற்குத் தகுதியானது அல்ல என்றாலும், அதன் கரையில் உட்கார்ந்து நாளெல்லாம் அதன் அழகை ரசிக்கலாம்” என்று நவ்ரூவிலிருந்து வந்திருந்த நண்பர் சொன்னார்.
  • ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரிட்டனால் கூட்டாக நிர்வகிக்கப்பட்ட நவ்ரூவுக்கு 1968-ல் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பெரிய செல்வ வளம் இல்லை. சுற்றுலாதான் பெரும் ஆதாரம். ராணுவப் பாதுகாப்பு உள்பட பெரும்பாலான தேவைகளுக்கு ஆஸ்திரேலியாவையே நம்பியிருக்கின்றனர்.
  • நாட்டின் பரப்பளவு 21 சதுர கி.மீ. மொத்த மக்கள்தொகை 11,000 சொச்சம். மூன்றாண்டுகள் பதவிக் காலத்தோடு 19 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒருவர் அதிபராகிறார். அவரே நாட்டுக்கும் அரசுக்கும் தலைவர். ஐந்து அல்லது ஆறு பேர் அமைச்சர்கள்.
பருவ நிலை மாற்றம்
  • பருவநிலை மாற்றத்தால் நாடே மூழ்கிவிடும் அபாயத்தை நவ்ரூ எதிர்கொள்கிறது. “அப்படி ஒருக்கால் கடல் சூழும் ஆபத்தால் இங்கிருந்து வெளியேறும் ஆபத்தை நாங்கள் எதிர்கொண்டாலும், எங்கள் மனங்களில் நவ்ரூ வாழும்.
  • சின்ன தீவு என்பதாலேயே பெரும் கலாச்சாரச் சூறாவளியை எப்போதும் எதிர்கொண்டுவருகிறோம். கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு எங்களுக்கு உண்டு.
  • பலபல நூற்றாண்டுகளுக்கு முன் பசிபிக் தீவுக்கூட்டங்களிலிருந்து இங்கு வந்து குடியேறிய பாலினேசியர்கள், மைக்ரோனேசியர்களின் வம்சாவழியாக வாழும் 12 தனித்தனி இனக் குழுவினர் இங்குண்டு.
  • எங்கள் நாட்டுக் கொடியில் உள்ள 12 நட்சத்திரங்களும் அவர்களைக் குறிப்பதுதான். நவ்ரூவின் தனித்துவமான வரலாற்றையும் கலாச்சாரத்தையும் எங்கள் கல்வியின் வழி குழந்தைகளுக்குக் கடத்துகிறோம்; எங்கள் நாட்டில் கல்வி அனைவருக்கும் கட்டாயம். எங்கள் குழந்தைகளின் நினைவுகளின் வழி காலாகாலத்துக்கும் நவ்ரூ வாழும்.”
  • அவர் பேசிக்கொண்டேயிருந்தபோது இந்தியாவில் எத்தனை நவ்ரூகள் இருக்கின்றன என்று யோசித்துப் பார்த்தேன். பரப்பளவு எனக் கொண்டால், 32.87 லட்சம் ச.கி.மீ-க்கு விரிந்திருக்கும் இந்தியாவில் 1.56 லட்சம் சொச்சம் நவ்ரூகள் இருக்கின்றன;
மக்கள் தொகை
  • 130 கோடியைத் தாண்டிவிட்டிருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால், 1.18 லட்சம் சொச்ச நவ்ரூகள் இந்தியாவில் இருக்கின்றன.
  • பரப்பளவில் பாதி நவ்ரூவுக்குச் சமமான நான் பிறந்த ஊரான மன்னார்குடி நகரத்தின் இன்றைய மக்கள்தொகை 66,000 சொச்சம் என்கிறார்கள்; ஆக, ஆறு நவ்ரூகளுக்கு சமம் அது.
  • இந்தியக் குடியரசை ஏன் கிராமங்களின் குடியரசாக காந்தி கற்பனைசெய்தார் என்பது இப்போது புரியும் என்று எண்ணுகிறேன்.
  • சமத்துவம் என்பது கடைசி மனிதனுக்குமான சம உரிமை, சம வாய்ப்பு, சம போட்டிச் சூழல், சம அதிகாரம் மூலம் தொடங்குவது என்பதில் நமக்குச் சந்தேகம் இல்லை என்றால், அதிகாரப் பரவலாக்கல் வழியே மட்டுமே அது சாத்தியம்.
  • அரசியல் சொற்களில் கூறுவது என்றால், அதிகாரங்களின் பீடமாக டெல்லி இருப்பதல்ல; ஒவ்வொரு கிராமமும் இங்கே டெல்லியாக இருக்க வேண்டும். அதிகாரப் பகிர்வு என்பது வெறும் அதிகாரப் பகிர்வு மட்டும் அல்ல;
  • அது இறையாண்மைப் பகிர்வும் ஆகும். கூட்டாட்சியை இறையாண்மைப் பகிர்வாக நாம் கருதினோம் என்றால், காஷ்மீர் என்ற மாநிலம் எப்படி அங்குள்ள மக்களின் கருத்துக்கே இடமில்லாமல் ஒரே நாளில் இந்திய வரைபடத்திலிருந்து காணாமல்போகும்; துண்டுதுண்டான ஒன்றியப் பிரதேசங்கள் ஆகும்?
  • காந்தியின் இந்தியா இன்றைய இந்தியா அல்ல. இன்று நாம் ஆகிக்கொண்டிருக்கும் ‘வல்லரசு இந்தியா’வைப் பற்றிய தன்னுடைய அபிப்ராயத்தை 1909-ல் எழுதிய ‘இந்திய சுயராஜ்ஜியம்’ நூலிலேயே காந்தி தெரிவித்துவிட்டார்: “அது ஆங்கிலேயர் அல்லாத ஆங்கிலேய ஆட்சிதான்.
  • அதாவது, புலி இருக்கக் கூடாது; ஆனால், புலியின் பண்புடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்… நான் விரும்பும் சுயராஜ்ஜியம் இதுவல்ல.”
சுயராஜ்ஜியம்
  • அப்படியென்றால் உண்மையான சுயராஜ்ஜியம் என்பது என்ன? அது தன்னையே ஆள்தல். அஹிம்சையே அதற்கான வழி. அதுவே ஆன்ம பலம். அன்பின் சக்தி. ஆன்ம விடுதலை அதன் உச்சம். “அந்த ஆன்ம விடுதலைக்கு நம்முடைய உடல் தடையாக இருக்குமேயானால், அதையும்கூட நிராகரித்துவிட வேண்டியதுதான்” என்கிறார் காந்தி. அப்படியென்றால், ஜனநாயகப் பயணம் ஆன்மாவிலிருந்து தொடங்குகிறது.
  • உடல் அதற்கேற்ற கருவியாகிறது. குடும்பம் அதன் முதல் களமாகிறது. ஆக, உண்மையான சுயராஜ்ஜியத்தை அடைவதற்கு ஒவ்வொரு நிலையிலும் சுதேசி நிலை வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் சுதேசி நிலை என்பது சமூகத் தளத்தில் எதைக் குறிக்கிறது? ஒரு கிராமம் பரிபூரணமாகத் தன்னுடைய எல்லாத் தேவைகளையும் தானே நிறைவேற்றிக்கொள்ளும் சூழலை அடைவதைக் குறிக்கிறது.
தனிப்பட்ட முடிவுகள்
  • ஒரு குடிநபரின் தனிப்பட்ட முடிவுகளில் அமைப்பின் தலையீட்டை மறுக்கிறது. ஆக, காந்தியின் சுதேசி என்பது வெறும் உடை சம்பந்தப்பட்டது அல்ல;
  • பொருள் சம்பந்தப்பட்டது அல்ல; தேசியக் கூப்பாடு சம்பந்தப்பட்டது அல்ல. நீங்கள் கதர் உடுத்திக்கொண்டு, இந்திய மக்களுக்கு ஈரானிலிருந்து கிடைக்கும் மலிவு விலை கச்சா எண்ணெய்யை அமெரிக்காவின் நிபந்தனைக்குக் கட்டுப்பட்டு ‘வேண்டாம்’ என்று மறுக்கும்போது இந்தியாவின் கிராமங்கள் மட்டும் அல்ல; உங்களுடைய தர்பாரும் டெல்லியின் சுயாட்சியும்கூட கேலிக்கூத்தாகிவிடுகிறது.
  • உலகில் எந்த நாட்டுக்கும் முழுமையான சுதந்திரமும், முழுமையான குடியாட்சியும் ஒருசேர முழு நிறைவாகக் கொடுக்கப்பட்டதில்லை; அவை எப்படிப் போராடிப் பெற வேண்டியவையோ அப்படியே போராடிப் பாதுகாக்கப்பட வேண்டியவை;
  • போராடி வளர்த்தெடுக்கப்பட வேண்டியவை. சுதந்திரமும் குடியாட்சியும் எந்த நிலையிலும் மரங்கள் ஆவதில்லை. காலம் முழுமைக்கும் அவை செடிகள்தான்; காலம் முழுமைக்கும் அவை மக்களின் அக்கறையை எதிர்நோக்கியிருப்பவை.
  • சுதந்திர நாளன்று டெல்லியிலிருந்து விலகி அன்றைக்கு இந்து – முஸ்லிம் வன்முறை நிலமாகவிருந்த வங்கத்தில் காந்தி நின்றது ஒரு மகத்தான செய்தி. இந்த நாட்டின் உண்மையான சுயராஜ்ஜியம் ஒவ்வொரு இந்தியக் குடிநபரின் இடையறாத ஜனநாயகப் பயணத்தின் வழியே மட்டுமே சாத்தியம் என்பதே அது!

நன்றி: இந்து தமிழ் திசை (03-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories