- ஆண்ட்ரியாஸ் ஷாச்சுனர் 1986இல் ஜெர்மனியில் படித்துக்கொண்டிருந்த போது, அவர் படித்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மாணவர்களைத் துருக்கியில் உள்ள ஹட்டுசா தொல்லியல் களத்துக்கு அழைத்துச் சென்று காண்பித்தனர். அப்போது அதில் ஈர்க்கப்பட்டு ஆர்வமான ஷாச்சுனர் தன்னிச்சையாக அதே இடங்களுக்கு மீண்டும் வந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். அங்குவாழ்ந்த அனடோலி சமூகம் என்பது உலகின் அரிதான செழுமையான நாகரிகம் என்பது அவரது அசைக்க முடியாத கருத்தாக இருந்தது. தொடர்ந்து அதே இடங்களில்நடக்கும் ஆய்வுப் பணிகளில் தானும் இடம்பெற நினைத்தார். அதற்குத் துருக்கியின் வரலாறு, பூகோள அமைப்புகள் பற்றி அறிந்துகொள்ள அது தொடர்பான கல்வி நிறுவனங்களில் படித்தார்.
மீட்கப்படும் வரலாறு
- துருக்கியின் மொழிகளான அக்காடியன், அசிரியன் ஆகியவற்றையும் கற்றார். பின்னர், ஜெர்மன் தொல்லியல் துறையில் பணிக்குச் சேர்ந்தார். 2006 முதல் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் துருக்கியில் ஆய்வுப் பணிகளில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய ஆய்வுப் பணிகளுக்குத் துணையாக இருக்க இன்னொரு தொல்லியல் ஆய்வாளரான செனாய் என்பவரையே மணந்துகொண்டார். அவரது தொடர்ச்சியான ஆய்வில் எழுத்துருக்கள் தாங்கிய களிமண் பலகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் கண்டுபிடித்த அந்த இடம் அக்காலத்திய நூலகமாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. அந்த எழுத்துருக்கள் அழிந்துபோன மொழி ஒன்றின் எழுத்துகள் என்றும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்றும் மொழியியல் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
- அந்த மொழியில் எழுதப்பட்டவற்றின் அர்த்தங்களைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அது துருக்கியின்ஹிட்டைட் நிலப்பகுதியில் பேசப்பட்ட அனடோலியன் மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது என்று உறுதியாக நம்புகிறார்கள். எனவே, அந்த எழுத்துருக்களின் பொருளைக் கண்டுபிடித்துவிட முடியும் என்றும் நம்புகிறார்கள். ஒரு மொழி மீட்கப்படும்போது அதனைப் பயன்படுத்திய சமூகத்தின் வரலாறு கிடைக்கிறது. அச்சமூகத்தின் வாழ்வியல், அறிவியல் மற்றும் கலை இலக்கியங்கள் ஆகியவையும் மீட்கப்படும் வாய்ப்பு இருக்கிறது. அதுவரை நம்பப்பட்ட வரலாறு மாறவும் வாய்ப்பு இருக்கிறது. தொல்லியல் ஆய்வு என்பது ஒரு வகையில் உண்மையை நோக்கிப் பயணித்தல்.
- உலகம் முழுக்க எல்லா தேசங்களிலும் இம்மாதிரியானதொல்லியல் தேடல்கள் மிகத் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. அவை அனைத்துமே அறிவியல்பூர்வமாக நடத்தப்படுகின்றன. தமிழ்நாட்டிலும் ஆதிச்சநல்லூர், சிவகளை, பொருந்தில், கீழடி, வெம்பக்கோட்டை எனப் பல்வேறு இடங்களில்அகழ்வாய்வுகள் நடைபெறுகின்றன. அந்த அகழ்வாய்வுகள் தொடரும்போது தொல் பழங்காலம், பழைய கற்காலம், நுண்கற்காலம், இரும்புக் காலம் எனத் தமிழ்நாட்டின் வரலாற்றைவரையறை செய்ய முடியும் என்று தொல்லியல் துறைஅறிஞர்கள் கருதுகிறார்கள். மயிலாடும்பாறை அகழ்வாய்வின்வழியே தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திலிருந்து இருக்கலாம் என்றும்சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட நெல் உமி 3,200 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் கண்டறிந்துள்ளார்கள்.கீழடி அகழ்வாய்வு நமது நகர நாகரிகத்தின் காலத்தை பொ.ஆ.மு.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதை நிரூபிக்கிறது.
சாதனைகளின் நிரூபணங்கள்
- நாம் இன்றைக்கு அறிந்திடாத பல்துறை நுண்ணறிவுச் செயல்பாடுகள் ஆதிகுடிகளிடம் இருந்திருக்கலாம். நவீனத் தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்தில் மனித அறிவு நிகழ்த்திய மகத்தான சாதனைகளுக்கான நிரூபணங்கள் நம் கண்ணெதிரே இருக்கின்றன. ஆலயங்கள், அணைகள், குகை ஓவியங்கள் சிற்பங்கள் மருத்துவச் சிகிச்சை முறைகள் எனப் பலவற்றைச் சொல்லிச் சொல்லி வியக்கின்றோம். உலகம் முழுக்க எல்லா தேசங்களும் தங்களின் தொலைந்து போன அறிவுலகத்தை, வரலாற்றின் ஆச்சரியங்களைத் தேடித்தான் தொல்லியல் களங்களில் பயணிக்கின்றனர். ஆனால், இன்றைய நவீன உலகினர் பலர் இம்மாதிரியான தொல்லியல் ஆய்வுகளைக் கேலிசெய்து அப்பணிகளைச் செய்பவர்களின் உழைப்பை, பேரறிவைப் புறந்தள்ளி, எலும்புகளையும் பானை ஓடுகளையும் தோண்டி எடுப்பது வீண்வேலை என்பது போன்ற பிற்போக்கான கருத்துகளைப் பரப்புகின்றனர். இதற்கு அரசியல் பின்னணியும் இருக்கிறது எனலாம்.
- எல்லா நாட்டு மக்களுக்கும் தங்களின் தொன்மை குறித்த பெருமிதங்கள் உண்டு. எல்லாத் துறைகள் குறித்தும் வெகுஜன மக்களின் மிகைப்படுத்தல் என்னும் வழக்கம் இருக்கத்தான் செய்யும். அதுபோலத்தான் ஒரு சிலரின் அதீத உணர்வுப் பெருக்கின் காரணமாகத் தமிழர்களின் தொன்மை பற்றி வெளிப்படும் பெருமிதங்களை முன்வைத்து, அறிவியல்பூர்வமான தமிழர்களின் தொல்லியல் ஆய்வுகளைக் குறைவாக மதிப்பிடுவது முறையானது அல்ல. கீழடியில் அருங்காட்சியகம் அமைத்த பிறகு தமிழ்நாட்டு மக்களுக்கு வரலாற்றை அறிவது குறித்த ஆர்வம் அதிகரித்திருக்கிறது. வரலாறு குறித்த உணர்வு இல்லாமல் இருந்தால் தமிழர்களுக்கு வரலாற்று அறிவே இல்லை என்று புகார் படிப்பதும், வரலாற்றை நோக்கிப் பயணித்தால், பைத்தியக்காரர்கள் என்று இழிவு செய்வதும் நவீன அறிவுலகப் புரிதல் போலும்.
நன்றி: தி இந்து (10 – 12 – 2023)