- தமிழ்நாட்டின் நாங்குநேரியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பள்ளிக்கூட மாணவனும் அவனுடைய சகோதரியும், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த அவனுடைய ஆறு வகுப்புத் தோழர்களால் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் ஆகஸ்ட் 9ஆம் நாள் நிகழ்ந்தது.
வன்மத் தாக்குதல்
- இந்தத் தாக்குதலுக்கு முன்னதாகவே அந்த மாணவனுக்குத் தொடர்ந்து பல்வேறு வகையில் அவர்கள் தொல்லைகள் அளித்தார்கள் என்பதால் பள்ளிக்கூடத்தைவிட்டு நின்றுவிடலாமா என்று கூட அவன் நினைத்திருக்கிறான். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தான் என்பதாலும் அவனைத் தொல்லைப்படுத்தியிருக்கிறார்கள் என்பது வெளிப்படை. அவனுடைய மனச் சோர்வைக் கண்டு காரணம் புரியாமல் தாயார் மிகவும் வற்புறுத்திக் கேட்ட பிறகே, பள்ளிக் கூடத்தில் தனக்கு இழைக்கப்படும் தொல்லைகளைத் தெரிவித்திருக்கிறான். உடனே அவனுடைய தாயார் பள்ளிக்கூடம் சென்று புகார் செய்திருக்கிறார். அதன் விளைவாகத் தான் அவனை அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள்.
- படுபாதகமான இந்தச் செயல் தமிழ்நாட்டு மக்களுடைய நெஞ்சங்களை உலுக்கிவிட்டது. ஆனால், இது என்ன புதிய சம்பவமா வியப்படைவதற்கு? தமிழ்நாட்டில் 2022 நவம்பர் முல் 2023 ஜனவரி வரையில் வன்கொடுமைத் தடைச் சட்டத்தின் கீழ் சுமார் 450 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன என்கிறார் ‘எவிடென்ஸ்’ தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் கதிர். சில மாவட்டங்களிலிருந்து இந்தத் தரவுகளும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. ‘கௌரவக் கொலைகள்’ என்ற பெயரில் ‘சாதி ஆணவக் கொலைகளும்’ தமிழ்நாட்டுக்குப் புதிதல்ல. ஆனால் நாங்குனேரி நிகழ்வு, இதுவரை நடந்திராதவகையிலான தாக்குதல் - காரணம் இதை நிகழ்த்தியவர்கள் பள்ளிக்கூடத்தில் உடன் படிக்கும் பதின் பருவர்கள்.
- சமூக வளர்ச்சியிலும் சிந்தனையிலும் நல்வாழ்வு நடவடிக்கைகளிலும் முற்போக்கான மாநிலம் என்று தமிழ்நாடு பெருமை பேசுகிறது; தமிழ்நாட்டில்தான் சமூக சமத்துவம் நிலவுகிறது, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கிறது என்று கூறி, இதற்குக் காரணம் ‘திராவிட மாதிரி’ என்றும் பெருமை கொள்ளப்படுகிறது. ‘பெரியார் மண்’ என்ற வகையில் இங்கே பாலினச் சமத்துவமும் சாதிய சமத்துவமும் சிந்தனை அளவில் என்றோ எட்டப் பட்டு விட்டன. இருந்தும் சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவு மக்கள் மீது இவ்வளவு வன்மத்துடன் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிப்பதில் நாம் தவறிவிட்டோம் என்பதை மாநில அரசும் மாநில மக்களும் ஒப்புக்கொண்டாக வேண்டும்.
நாம் எதைத் தவறிவிட்டோம்?
- திராவிட இயக்கக் கொள்கைகள் ஏராளமானோர் முன்னேற்றம் காண உதவிவருகிறது என்பதை இந்த ஒரு நிகழ்வை வைத்து மறுத்தும் விடக் கூடாது. கலாச்சாரமாகவே, சமூகத்தின் அனைத்துத் தரப்பிலும் வல்லுணர்வுகள் ஆழப் புதைந்து புரையோடியிருந்தாலும் இந்த வெற்றிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
- அரசின் கொள்கைகள், இடஒதுக்கீட்டு ஏற்பாடுகள், சட்டங்கள் போன்றவை விளிம்புநிலை மக்களின் சமூக – பொருளாதார முன்னேற்றத்துக்கு ஆதரவு தரவும் கைதூக்கிவிடவும் பாதுகாப்பு அளிக்கவும் வலுவான கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ளன. அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்தத் தொலைநோக்கில் முழு நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால்தான் பழைய சாதியக் கண்ணோட்டக் கலாச்சாரம் மாறும். சுயநலம் கொண்ட அரசியல் தேவைகள் இருக்கும்வரை இந்த நம்பிக்கைக்கு நல்ல தூண்டுகோல் இருக்காது.
- மெய்யியல், சமூகவியல், உணர்வியல் தளங்களிலும் ‘சமத்துவம்’ என்பது வலுப்பட வேண்டும். வல்லாதிக்கம் மிக்க சாதிகள் இதைப் பற்றி ஆழ சிந்தித்து மாபெரும் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். இதை நிகழ்த்த நாம் தவறிவிட்டோம். அரசியலர்கள், அரசு ஊழியர்கள், காவல் துறையினர், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் சாதியச் சிந்தனைகளிலும் நடைமுறைகளிலும் ஆழ்ந்த பிடிப்புள்ளவர்களாகவே இருக்கின்றனர்.
- இதன் காரணமாகவே பள்ளி்க்கூடங்களிலும் சாதியப் பாகுபாடு இயல்பாகத் தொடர்கிறது. ‘விதிவிலக்’கான சில நல்ல தனிநபர்களைத் தவிர்த்து, ஆசிரியர்கள், பள்ளிக்கூட நிர்வாகிகளும் சாதியப் பற்றோடுதான் இருக்கின்றனர். இது மாணவர்களுக்குக் கற்றுத் தருவதிலும், அவர்களுடனான உரையாடலிலும், விளிம்புநிலை மாணவர்கள் பயில்வதற்கு அளிக்கப்படும் அக வாய்ப்புகளிலும்கூட வெளிப்படுகின்றது.
எப்படித் திகழ வேண்டும் பள்ளிக்கூடங்கள்?
- தலித் இன மாணவர்களுடைய தனிக் கலாச்சாரம், வாழ்க்கை முறை, புரிதல்கள், அவர்களுடைய கலை, சமூகக் கொண்டாட்டங்கள் கல்வியின் ஒரு பகுதியாக இல்லை. எனவே, ‘பட்டியல் இன மாணவர்கள் நமக்குச் சமமானவர்கள் அல்ல, அவர்களை நாம் கண்ணியத்துடன் நடத்த வேண்டியதில்லை’ என்பதே பிற மாணவர்களுக்கு இவற்றின் மூலம் உணர்த்தப்படுகிறது. மற்றவர்களை அடக்கியாள வேண்டும் என்ற உணர்வுகள் தோன்றாத வண்ணம் அவர்களை நல்வழிப்படுத்தும் இடங்களாக பள்ளிக்கூடங்கள் திகழ வேண்டும், அவற்றைத் தொடர்ந்து விசிறிவிடும் மையங்களாக மாறிவிடக் கூடாது.
- தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் சமத்துவம் குறித்துப் பேசும்போதெல்லாம் பெரியாரின் துணையோடு, அவருடைய பேச்சுகளிலிருந்தே மேற்கோள்களை எடுத்துக்காட்டுகிறார்கள். அரசியல் அமைப்பிலும் அதிகாரத்திலும் அனைவருக்கும் சம உரிமை வேண்டும், அதற்கான மாறுதல்கள் அவசியம் என்று மட்டும் பெரியார் போதிக்கவில்லை. ஒவ்வொரு தனிமனிதனும் அவன் சார்ந்த சமூகமும் சிந்தனையில் மாற்றம் அடைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
- அனைத்துத் தரப்பு மக்களையும் நோக்கி பெரியார் பேசினார். சாதியக் கட்டமைப்புகளைப் பலமாகத் தாக்கினார், அவருடைய பிரச்சாரங்களால் அரசியல் சமூகத்தவர் வெகுவாக சங்கடங்களில் நெளிந்தனர். இதுவரை கண்மூடித்தனமாக பலவற்றைப் பின்பற்றிவந்ததைக் கூறி, அவை பகுத்தறிவற்ற செயலால் நிகழ்ந்தவை என்று மக்களையே ஒப்புக்கொள்ள வைத்தார். பலர் அவரைப் போற்றுகின்றனர், பலர் அவரைத் தூற்றுகின்றனர், எல்லோரையும் சிந்திக்க வைத்தவர் அவர் என்பதை எவராலும் மறுக்க முடியாது. கோபமடைய வைக்கும் வார்த்தைகளாலும், தீவிரமான செயல்களாலும் சமூக – கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டார்.
- பெரியாரின் சிந்தனைகளை மெய்யுலக மாற்றங்களுக்கேற்ப அமல்படுத்தும் அரசியல் நடவடிக்கைகள் போதுமான அளவில் எடுக்கப்படவில்லை. அரசின் கொள்கைகள் பெரும்பாலும் இயந்திரத்தனமானவை, ஆனால் செயல்படுத்தக்கூடியவை.
அறிவார்ந்தவர்களுடைய தோல்வி
- மக்கள் எதை உணர்கிறார்களோ, எதைப் பார்க்கிறார்களோ, எதைக் கடைப்பிடிக்கிறார்களோ அவற்றில் சமத்துவமான தன்மையை ஏற்படுத்த ஏதுமே செய்யப்படவில்லை; வாழ்வதற்கு மட்டுமில்லை, இறந்த பிறகு உடலைப் புதைப்பதற்கு - எரிப்பதற்குக்கூட இங்கே போராட வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட மனநிலையுடன் எதிர்காலத் தலைமுறை தொடர வேண்டும் என்று பெரியார் ஒருபோதும் விரும்பியிருக்கமாட்டார். ஆனால், நடப்பதென்னவோ அதுதான்.
- பெரியாரின் சிந்தனைகள் குறித்துப் பேசியதைத் தவிர அவருடைய கருத்துகள் அடிப்படையில் மேற்கொண்டு செயல்பட்டு புதிய முன்னுதாரணங்களை ஏற்படுத்த தமிழ்நாட்டு மெய்யியலாளர்களால் முடியவில்லை, புதிதாக உருவாகும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவுமில்லை; பெரியார் அமல்படுத்த முடியாமல் தவறவிட்ட அவருடைய சமூக மறுசிந்தனைகளையும் செயல்படுத்தாமல் விட்டுவிட்டனர்.
- சமூகச் சீர்திருத்தச் சிந்தனைகளில் பெரியாருக்கும் அப்பால் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு திராவிட இயக்கப் பற்றாளர்கள் என் மீது சீறி விழுவார்கள். பெரியாரின் சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுக்காமல் விட்டுவிட்டோம், முக்கியமான தளங்களில் சாதிக்கத் தவறிவிட்டோம் என்பதில் அவர் ஏமாற்றமடைவார் என்றே என் உள்ளுணர்வு சொல்லுகிறது. அறிவார்ந்தவர்களுடைய இந்தத் தோல்விதான் தமிழ்நாட்டில் முடிவில்லாமல் தொடரும் சாதி மோதல்களுக்கு மேலும் ஒரு காரணம் என்று கருதுகிறேன்.
மாமன்னன்
- சமீபத்தி்ல் வெளியாகியுள்ள ‘மாமன்னன்’ திரைப்படத்தில், தமிழக இளைஞர் நலம் – விளையாட்டு வளர்ச்சித் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதல்வர் - பட்டியலின சட்டப்பேரவை உறுப்பினரின் மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தத் தொகுதியில் பல தலைமுறைகளாகத் தொடரும் சாதி மோதல்களைப் பற்றித்தான் திரைப்படக் கதை பின்னப்பட்டிருக்கிறது. கடந்தகாலத்தில் நடந்த சம்பவத்தில், பட்டியல் இனத்தைச் சேர்ந்த தன்னுடைய நண்பர்கள் கல்லால் அடித்துக் கொல்லப்பட, தான் மட்டும் தப்பித்தது தொடர்பாக ஏற்பட்ட கோபத்தால் தந்தையுடன் பேசுவதை மகன் நிறுத்திவிடுகிறார். அவர்கள் செய்த குற்றம் கோவில் குளத்தில் நீச்சலடித்ததுதான்!
- உயிரிழந்த இளைஞர்களுக்கு நியாயம் கிடைக்கச் செய்ய அரசியலரான தந்தையால் முடியவில்லை என்பதற்காகத் தந்தையை மன்னிக்காமல் இருக்கிறார் மகன். ஆதிக்கச் சாதியின் அரசியல் வலிமை காரணமாக எதிர்ப்பே இன்றி சரண் அடைந்துவிடுகிறார் தந்தை. ஆனால், திரைப்படம் இறுதியில் கதாநாயகனுக்கு வெற்றியாகவே முடிகிறது.
- உதயநிதி ஸ்டாலின் இந்தத் திரைப்படத்தில் வெறும் கதாபாத்திரமாக வந்துபோயிருப்பார் என்று நினைக்கவில்லை, வழக்கமான அரசியல் பாவனை என்றும் அதைக் கருதவில்லை. இப்படியொரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் சமூக தளத்தில் நாம் செய்யத் தவறியதை, ஒரு தோல்வியை ஒப்புக்கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். இந்தத் தலைமுறை இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்க்கப்போகிறது, சாதி வெறியுள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட வலிமையான எச்சரிக்கை விடுக்கப்படவிருக்கிறது என்று இனி பார்க்க வேண்டும்.
நன்றி : அருஞ்சொல் (29– 08 – 2023)