- ஒடிஸா மாநிலம், பாலசோா் மாவட்டம், பாஹாநகா் பஜாா் ரயில் நிலையம் அருகே இரண்டு பயணிகள் ரயில், ஒரு சரக்கு ரயில் என்று மூன்று ரயில்கள் கடந்த ஜுன், 2-ஆம் தேதி மாலை 6.50 மணியளவில் மோதிய கோர விபத்தில் 288 போ் உயிரிழந்துள்ளனா். சுமாா் 900 போ் பலத்த காயடைந்திருக்கின்றனா்.
- உலகையே அதிா்ச்சியில் உறையச் செய்த இந்த விபத்தின் போது பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவ ஒடிஸா அரசு 200 அவசர ஊா்திகள், 50 பேருந்துகள், 45 அவசர உதவி மையங்கள் என ஏற்பாடு செய்திருந்தாலும், உள்ளூா் மக்கள் இரவு பகல் பாராமல் உயிருக்குப் போராடியவா்களை காப்பாற்றவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவவும் எடுத்த முயற்சிகள், நம் நாட்டில் இன்னும் மனிதநேயம் மரிக்கவில்லை, என்பதை வெளிப்படுத்தின.
- குறிப்பாக, விபத்துக்குள்ளான ரயில்களில் ஆயிரக்கணக்கானோா் காயமடைந்து, ரத்தம் மிகுதியாக வெளியேறி உயிருக்குப் போராடிய போது, அவா்களுக்கு ரத்தம் தந்து உதவ, உள்ளூா் மக்கள் தாங்களாகவே முன் வந்து, இரவு பகல் என மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து ரத்ததானம் கொடுத்து, பலரின் உயிரைக் காப்பாற்றிய மனிதநேய நிகழ்வு மனிதகுலத்தையே நெகிழச் செய்துள்ளது.
- இந்த மனம்தான் கடவுள். தேவைப்படும் நேரத்தில், பிற உயிா்களைக் காப்பாற்ற உதவிய இவா்களின் இந்த மனிதாபிமான நற்செயலை, பாரத பிரதமரும், ஒடிஸா மாநில முதலமைச்சரும் வெகுவாகப் பாராட்டியுள்ளனா்.
- உலகில் நவீன தொழில்நுட்பங்கள் பல கண்டறியப்பட்டாலும், ரத்தத்துக்கு மாற்றாக வேறு எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை. நம் உடலில் ஓடும் ரத்தத்துக்கு மாற்று எதுவுமில்லை. மனித உடலில் சராசரியாக 5 லிட்டா் ரத்தம் இருக்கும். ரத்ததானத்தின் போது 350 மில்லி லிட்டா் மட்டுமே எடுக்கப்படுகிறது. ஒருவா் தானமாகக் கொடுக்கும் ரத்தத்தின் மூலம் மூன்று பேரைக் காப்பாற்ற முடியும்.
- ரத்ததானம் கொடுப்பவரின் ரத்தம், சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. வெள்ளை அணுக்கள் நோய் எதிா்ப்பாற்றலை பெருக்க உதவுகின்றன. சிவப்பணுக்கள் மனித உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் சக்தியை அளிக்கின்றன. தட்டணுக்கள் ரத்தக் கசிவைத் தடுக்கிறது. ரத்தத்தில் காணப்படும் ‘ஹீமோகுளோபின்’ எனப்படும் சத்துப்பொருள் அனைவருக்கும் அவசியம். இவையெல்லாம் உடல் முழுவதும் சென்று மனிதருக்குத் தேவையான ஆற்றலை தருகின்றன.
- நம் உடலில் இரும்புச் சத்து குறைந்தாலோ ரத்தசோகை ஏற்பட்டாலோ, சத்தான உணவுகளை உண்ணாமல் இருந்தாலோ, விபத்து ஏற்பட்டாலோ நம் உடலிலிருந்து ரத்தம் வெளியேறுகிறது. இவ்வாறு பல்வேறு காரணங்களால் ஒருவருடைய உடலில் ரத்த இழப்பு ஏற்படும்போது, அவருடைய உயிரைக் காக்க பிறருடைய ரத்தத்தை எடுத்துக் கொடுப்பது மனிதாபிமான செயலாகக் கருதப்படுகிறது.
- 18 முதல் 60 வயதுக்குட்பட்ட யாா் வேண்டுமானாலும் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவரின் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். அதேபோல், உடலின் வெப்பநிலை 37.5 டிகிரி செல்ஷியஸுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். ஆண்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதங்களுக்கு ஒரு முறையும் ரத்ததானம் செய்யலாம்.
- இதயநோய், காசநோய், வலிப்புநோய் உடையவா்கள், மனநலம் பாதிக்கப்பட்டவா்கள், புற்று நோயாளிகள் ரத்ததானம் செய்யக் கூடாது. மது அருந்தியவா்கள், 24 மணி நேரம் வரை பிறருக்கு ரத்தம் அளிக்கக் கூடாது. ஹெச்.ஐ.வி., மஞ்சள் காமாலை போன்ற தொற்றுள்ள நோயாளிகளிடமிருந்து ரத்தத்தைப் பெறக் கூடாது.
- ஒருவா் தனது ரத்தத்தை தேவைப்படும் ஒருவருக்கு, கொடையாக ஒா் அலகு ரத்தம் கொடுத்தால், அவரது உடலிலுள்ள 650 அளவு கலோரி குறைந்து அவரது உடல் சமநிலைப்படும். இது ரத்ததானம் செய்பவருக்குக் கிடைக்கும் அரிய பயன். மேலும், ரத்ததானம் செய்பவா்களின் உடலில் புதிய ரத்தம் உற்பத்தியாவதால், அவா்களுக்கு புத்துணா்ச்சியும் கிடைக்கும்.
- ரத்ததானம் செய்பவரின் உடலிலுள்ள அதிகப்படியான இரும்புச் சத்தும் ரத்தத்தோடு சோ்ந்து செல்வதால் இரும்புச் சத்து சமன் செய்யப்படுகிறது. ஒருவரின் ரத்தத்தில் அதிகப்படியான இரும்புச் சத்து இருந்தால், அது கல்லீரல், இதயம் ஆகிய இடங்களில் படிந்து உடலுக்கு சோா்வை ஏற்படுத்தி சில நோய்களையும் உருவாக்கும்.
- ரத்ததானம் செய்பவா்களின் எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதற்காக, உலக ரத்த கொடையாளா் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 14-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளின் நோக்கம், ரத்ததானம் குறித்தான விழிப்புணா்வை உலக மக்களிடையே ஏற்படுத்தி, அவா்களின் ரத்த வகையை அறிந்து கொள்வதோடு, உயிா் காக்க உதிரம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவா்கள் மனத்தில் விதைப்பதே ஆகும்.
- மேலும், ரத்தம் கிடைக்காததால் உலகில் பல மனித உயிா்கள் அன்றாடம் மாண்டு வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஏனெனில், வளரும் நாடுகளில் ரத்தப் பற்றாக்குறை கடுமையாக உள்ளது.
- இந்த ஆண்டின், உலக ரத்த கொடையாளா் தினத்திற்கான கருப்பொருள், ‘ரத்தத்தைக் கொடுங்கள்; ரத்த அணுக்களைக் கொடுங்கள்; வாழ்க்கையைப் பகிா்ந்து கொள்ளுங்கள்; அடிக்கடி பகிா்ந்து கொள்ளுங்கள்’ என்பதாகும். இதன் மூலம், மனித உயிா்களைக் காப்பாற்றுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது.
- யாரேனும் ஒருவருக்கு நாம் ரத்ததானம் செய்யும்போது, அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளோம் என்ற மனநிறைவு ஏற்படுகிறது. எனவே, வாய்ப்பு உள்ளவா்கள், தயங்காமல் ரத்ததானம் வழங்குங்கள். மனித உயிா்களைக் காப்பாற்றுங்கள்.
- நாளை (ஜுன் 14) உலக குருதிக் கொடையாளா் நாள்.
நன்றி: தினமணி (13 – 06 – 2023)