TNPSC Thervupettagam

உபரிதான், அதனால் தவறில்லை!

August 31 , 2019 1957 days 1217 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை மத்திய அரசுக்கு வழங்குவது குறித்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவு, மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ரிசர்வ் வங்கியே திவாலாகிவிட்டது போலவும், மத்திய அரசு மிகப் பெரிய முறைகேடு செய்துவிட்டது போலவும் சிலர் இந்த முடிவை மிகைப்படுத்தி விமர்சிப்பது அரசியலே தவிர, நேர்மையான கண்ணோட்டமாகத் தெரியவில்லை.
    ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை அரசுக்கு  வழங்குவது என்கிற முடிவு ஒரு நாளில் எடுக்கப்பட்டதல்ல.
  • இந்த ஆலோசனை கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் எழுப்பப்பட்டு வந்திருக்கிறது. இதுபோல, ரிசர்வ் வங்கி உபரி நிதியை அரசுக்கு வழங்குவது என்பதும் புதிதொன்றுமல்ல. இதற்கு முன்னாலும் உபரி நிதி வழங்கப்பட்டிருக்கிறது. அதன் அளவு இப்போது மிக அதிகமாக இருக்கிறது என்பதுதான் வேறுபாடு. 
உபரி நிதி
  • கடந்த 2018 நவம்பர் 6-ஆம் தேதி மத்திய நிதியமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கியிடம் அதன் கைவசம் இருக்கும் உபரி நிதியில்  ரூ.3,60,000 கோடி கோரியிருப்பதாக தகவல் கசிந்து பொதுவெளியில் விவாதிக்கவும்பட்டது. ஒரு பகுதியைக் கோரியிருப்பதாக தகவல் வெளியானது. நிதியமைச்சகமோ, இந்திய ரிசர்வ் வங்கியோ அதை மறுக்கவும் இல்லை. அது குறித்து எந்தக் கருத்தையும் வெளிப்படுத்தவில்லை. மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உபரி நிதியைக் கோருவதற்கு வலுவான காரணங்கள் இருந்தன, இப்போதும் இருக்கின்றன. 
  • அன்றைய நிலையில், அதிக மதிப்புச் செலாவணி செல்லாததாக்கப்பட்டதில், ரூ.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.5 லட்சம் கோடி வரை கணக்கில் இல்லாத பணம் திரும்பி வராது என்கிற அரசின் எதிர்பார்ப்பு பொய்த்தது. அதேபோல, ஜிஎஸ்டி மூலம் மிகப் பெரிய அளவில் வரி வருவாய் அதிகரிக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நடைமுறை சாத்தியமாகவில்லை.
  • வங்கிகளின் வாராக் கடன் சுமை அதிகரித்திருப்பதால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கிக் கிடக்கின்றன. இவையெல்லாம்தான் இந்தியப் பொருளாதாரம் செயலிழந்து ஸ்தம்பித்திருப்பதற்கான காரணங்கள்.
  • ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை அரசுக்கு வழங்குவது என்கிற முடிவு தன்னிச்சையாக எடுக்கப்பட்டுவிடவில்லை.  ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை அரசுக்கு எந்த அளவுக்கு வழங்கலாம் என்பது குறித்து ஆராய, ரிசர்வ் வங்கியின் முன்னாள்ஆளுநர் பிமல் ஜலான் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அரசு எதிர்பார்த்தது போல ரூ.3,60,000 கோடி அளவில் ரிசர்வ் வங்கி உபரி நிதியை வழங்குவதை பிமல் ஜலான் குழு அனுமதிக்கவில்லை என்பதை விமர்சிப்போர் புரிந்துகொள்ள வேண்டும். 
பிமல் ஜலான் குழு
  • இருப்பு நிதியில் அரசு கை வைக்காமல், உபரி நிதியிலிருந்து மட்டுமே ஒரு பகுதியை மாற்றிக் கொடுப்பதற்கு பிமல் ஜலான் குழு பரிந்துரைத்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் மொத்த கையிருப்பில் 5.5% அவசரகாலக் கையிருப்பு (கன்டின்ஜன்சி ரிசர்வ்) தொடர்ந்தாக வேண்டும் என்பதையும் அந்தக் குழு உறுதிப்படுத்தியிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ரிசர்வ் வங்கியின் ஏனைய கையிருப்புகளில் காணப்படும் பற்றாக்குறைகளை, கையிருப்புகளை மறுமதிப்பீடு செய்வதன் மூலம் நியாயப்படுத்தக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. 
  • கடந்த நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் நிகர உபரி நிதியான ரூ.1,23,414 கோடி, அதற்கு முந்தைய நிதியாண்டைவிட இரு மடங்கு. உபரி நிதியின் திடீர் அதிகரிப்புக்கு என்ன காரணம் என்பது, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கை வெளிவரும்போதுதான் தெரியும். ரிசர்வ் வங்கி அதிகமான உபரி நிதியுடன் இருக்கிறது என்பதன் தெளிவுதான் மேலே தரப்பட்டிருக்கும் புள்ளிவிவரம்.
  • இந்தப் பின்னணியின் அடிப்படையில்தான், பிமல் ஜலான் குழு அரசுக்கு குறிப்பிட்ட அளவு உபரி நிதியை வழங்குவதற்குப் பரிந்துரைத்திருந்தது. பிமல் ஜலான் குழுவின் பரிந்துரையை ஏற்று ரூ.1,76,051 கோடி உபரி நிதியை அரசுக்கு வழங்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் கணிசமான அவசரகாலக் கையிருப்பிலிருந்து வழங்கப்படும் ரூ.52,637 கோடியும் இதில் அடங்கும். 
இந்தியப் பொருளாதாரம்
  • இந்தியப் பொருளாதாரம் மந்தகதியில் இயங்குகிறது என்பதும், உற்பத்தித் துறையில் மிகப் பெரிய பின்னடைவை எதிர்கொள்கிறோம் என்பதிலும் சந்தேகமில்லை. இந்த நிலைமை இப்படியே தொடர்ந்தால், மேலும் வேலைவாய்ப்பு இழப்பு  ஏற்பட்டு அதுவே சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாகக்கூட மாறலாம்.
  • உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கத்தால் ஏற்றுமதிகள் குறைந்திருப்பதும், உள்நாட்டில் பொருளாதார மந்தகதியால் மக்களின் வாங்கும் சக்தி இல்லாமல் இருப்பதும் பிரச்னையை மேலும் கடுமையாக்குகிறது. இப்படிப்பட்ட சூழலில் அரசு மெத்தனமாக இருந்துவிட முடியாது. பிரச்னையை எதிர்கொள்ளாமல் தள்ளிப்போடவும் முடியாது.
  • இந்திய ரிசர்வ் வங்கி என்பது, இந்திய அரசின் ஓர் அமைப்புதானே தவிர, அரசுக்கு அப்பாற்பட்ட அமைப்பு அல்ல. அரசின் செலாவணிக் கொள்கையை தீர்மானிப்பதற்காகவும், செலாவணிப் பரிமாற்றத்தை கண்காணிப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு.
  • இந்த நிலையில்,  இந்திய ரிசர்வ் வங்கியில் உபரியாக நிதியை வைத்துக்கொண்டு முடங்கிக் கிடக்கும் வங்கிகளை உயிர்ப்புடன்  செயல்பட வைக்காமல் அரசு வேடிக்கையா பார்க்க முடியும்? கையிருப்பை வைத்துக்கொண்டு வெளிநாடுகளில் வட்டிக்கா கடன் வாங்க முடியும்? 
  • பொருளாதாரக் கப்பல் தரை தட்டிவிடாமல் பாதுகாக்க எடுக்கப்பட்டிருக்கும் முடிவு. குற்றம், குறை கூறுவதற்கான நேரமல்ல இது! தேவைக்கு உதவாத செல்வம் இருந்தென்ன பயன்?

நன்றி: தினமணி(31-08-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories