TNPSC Thervupettagam

உப்பைக் குறைக்கும் கொள்கை: இந்தியாவின் வழி சரியா

April 13 , 2023 647 days 407 0
  • மக்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்பின் அளவில் 30%ஐ, 2025ஆம் ஆண்டுக்குள் குறைக்க, உலக நாடுகள் நடவடிக்கை எடுக்கும்படி உலக சுகாதார நிறுவனம் ஓர் உணவுக் கொள்கையை 2013இல் கொண்டுவந்தது. அந்தக் கொள்கையை உலக நாடுகள் எப்படிப் பின்பற்றுகின்றன என்பதைக் கடந்த ஆண்டில் அவதானித்து, அண்மையில் ஓர் அறிக்கையை (Global report on sodium intake reduction) அது வெளியிட்டுள்ளது.
  • உலகில் மொத்தம் ஒன்பது நாடுகள் மட்டுமே இந்த உணவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவும், 73% நாடுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதால், இதற்கான காலக்கெடுவை 2030ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட யோசிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உயிர்களைக் காக்க உதவும் இந்த இன்றியமையாத கொள்கையைப் பின்பற்றுவதில் இந்தியாவும் பின்தங்கியுள்ளது என்பது கவலைக்குரியது.

உப்புக் குறைப்பின் அவசியம்:

  • உயர் ரத்த அழுத்தம் ஏற்படப் பலதரப்பட்ட காரணங்கள் இருந்தபோதிலும், மிகை உப்புப் பயன்பாடு அனைவருக்குமான பொதுவான காரணமாகக் கருதப்படுகிறது. இயல்பான ரத்த அழுத்தம் இருப்பவர்களைவிட, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம்.
  • ஒருவர் ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவாகவே சமையல் உப்பை (சோடியம் குளோரைடு) பயன்படுத்த வேண்டும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அப்படியானால், 2 கிராமுக்கும் குறைவாகவே சோடியம் அந்த நபருக்குக் கிடைக்கும். அதன் மூலம், 4 மி.மீ. அளவுக்கு ரத்த அழுத்தம் அவருக்குக் குறையும். ஆனால், இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் சராசரியாக ஒரு நாளைக்கு 10 கிராமுக்கும் அதிகமாக உப்பைப் பயன்படுத்துவது நடைமுறை.

மறந்துபோகும் மறைமுக உப்பு:

  •  உப்புப் பயன்பாடு என்றதும் நமக்குத் தெரிவது வீட்டுச் சமையல் உப்பு மட்டும்தான். அதனால்தான், உயர் ரத்த அழுத்தத்துக்காகச் சிகிச்சைக்குச் செல்லும்போது, ‘உப்பைக் குறைக்க வேண்டும்’ என்று மருத்துவர்கள் சொன்னால், ‘வீட்டில் உப்பைக் குறைத்துத்தான் சாப்பிடுகிறோம்’ என்றே அநேகரும் பதில் சொல்வார்கள். அவர்கள் மறந்துபோவது மறைமுக உப்பை.
  • அது என்ன மறைமுக உப்பு? வீட்டில் அல்லாமல் வெளியில் வாங்கிச் சாப்பிடும் சக்கை உணவு வகைகள் (Junk foods) அனைத்திலும் உப்பு அதிகமாக இருக்கிறது. ‘ஊடுகொழுப்பு’ (Transfat) உள்ள தின்பண்டங்களில் அதீதமாக உப்பு பயன்படுத்தப்படுகிறது. துரித உணவு வகைகளிலும், பதப்படுத்தப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட எல்லா உடனடி உணவுகளிலும் உப்பு கூடுதலாகவே இருக்கிறது. சுவை கூட்டும் ‘அஜினோமோட்டோ’விலும் உப்பு இருக்கிறது.
  • ஊறுகாய், அப்பளம், வடாம், கருவாடு, பாப்கார்ன், சிப்ஸ் போன்றவற்றில் உப்பு இருப்பது பலருக்குத் தெரியும். இனிப்பு உணவு வகைகளிலும் உப்பு இருக்கும் விஷயம் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஐஸ்கிரீம், கேக், சாக்லேட், பிஸ்கட், சாஸ், மென்பானங்கள் என இந்தப் பட்டியல் மிகப் பெரியது.
  • பானங்களில் சோடாவிலும் சூப்பிலும் மட்டுமல்ல, கோலா பானங்களிலும் இன்ஸ்டன்ட் காபியிலும்கூட உப்பு இருக்கிறது. அதனால்தான் உலக சுகாதார நிறுவனம் கவலைப்படுகிறது. உணவில் உப்பைக் குறைத்து ரத்த அழுத்தம் கூடாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமென அந்நிறுவனம் அறிவுறுத்துகிறது.

உயர் ரத்த அழுத்தம்:

  • உயர் ரத்த அழுத்தம் காரணமாக இதயநோய், பக்கவாதம், சிறுநீரக நோய், நீரிழிவு, பார்வை பாதிப்பு உள்ளிட்ட பலதரப்பட்ட தொற்றா நோய்கள் வருவதை மருத்துவ உலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இடத்தில், உலக சுகாதார நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கையைக் கவனிக்க வேண்டும்.
  • ‘இந்தியாவில் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் 22 கோடிப் பேர்; இவர்களில் 12% பேர் மட்டுமே தங்கள் ரத்த அழுத்த அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்; மற்றவர்கள் கட்டுப்பாடில்லாத ரத்த அழுத்தம் காரணமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு இடமளிப்பவர்களாக இருக்கின்றனர். இன்னொன்று, நாட்டில் 49.2% ஆண்களும், 38.5% பெண்களும் கூடிய விரைவில் உயர் ரத்த அழுத்தம் வர சாத்தியம் உள்ளவர்களாகவும் (Pre-hypertensive) இருக்கின்றனர்’ என்று கவலை தெரிவிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
  • மேலும், ‘உயர் ரத்த அழுத்தம் காரணமாக இந்தியாவில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 25 ஆண்டுகளில் 31% அதிகரித்திருக்கிறது. தினமும் 2.5 கிராம் உப்பைக் குறைத்துக்கொள்வதன் வழியாக 5 மி.மீ. ரத்த அழுத்தம் குறையும். அதன் பலனாக, 22% பக்கவாத நோயாளிகளையும் 12% மாரடைப்பு நோயாளிகளையும் குறைத்துவிடலாம்.
  • அதேநேரம், உப்பைக் குறைக்காவிட்டால் ஒரு மதிப்பீட்டின்படி, இந்தியா 2012–2030ஆம் ஆண்டுகளுக்குள் இதயநோய் தொடர்பான சிகிச்சைகளுக்கு மட்டும் 2 லட்சம் கோடி டாலர்களுக்கும் அதிகமாகச் செலவழிக்க வேண்டியிருக்கும். மேலும், உப்புப் பயன்பாடு குறைப்புக் கொள்கை மூலம் 2030க்குள் உலகம் முழுவதும் ஒரு கோடி மக்களை இறப்பிலிருந்து காப்பாற்ற முடியும்’ என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

பிற நாடுகளின் செயல்பாடுகள்:

  • உலக சுகாதார நிறுவனத்தின் இந்த அறைகூவலின்படி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் சோடியத்தின் அளவை நைஜீரியாவும் சவுதி அரேபியாவும் கட்டுப்படுத்தியுள்ளன. சோடியம் மிகுந்த உணவு வகைகளை ஊடகங்களில் விளம்பரம் செய்ய பிரேசில் கட்டுப்பாடு விதித்துள்ளது.
  • சிலி, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உணவுப்பொருள் தொடர்பான பாக்கெட்டுகளின் வெளிப்புறத்தில் ‘சோடியம் குறைந்தது’, ‘சோடியம் மிகுந்தது’ எனத் தனித்தனி வண்ணங்களில் நுகர்வோருக்குத் தெரியும் விதமாகப் பெரிதாக அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • சீஷெல்ஸ் நாட்டுப் பள்ளிகளில் சோடியம் குறைந்த உணவு வகைகளை வழங்கத் தனித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியில் சோடியம் மிகுந்த மென்பானங்களுக்கும் நொறுவைகளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. உணவு விடுதிகளில் சோடியம் குறைந்த மாற்று உணவு வகைகளும் கிடைக்க சீனா ஏற்பாடு செய்துள்ளது.

தேவை நவீனத் திட்டங்கள்:

  • இந்தியாவில் இந்த உணவுக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குச் ‘சரியாகச் சாப்பிடுவோம் இந்திய இயக்கம்’ (Eat right India) திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு - தர நிர்ணய ஆணையம் (FSSAI) 2018இல் கொண்டுவந்தது. சேவை அமைப்புகள் மூலம் நுகர்வோருக்குக் கையேடுகளைக் கொடுத்து, அவர்களாகவே சோடியம் குறைந்த உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வழிகாட்டும் திட்டம் இது.
  • அடுத்தது, ‘இன்று முதல் சற்றே குறைவாக’ (Aaj Se Thoda Kam) எனும் பெயரில் பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மூலம் காணொளி வாயிலாக நுகர்வோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றது. இந்த இரண்டுமே தோல்வியடைந்த திட்டங்கள்.
  • ஆகவே, வெளிநாடுகளில் உள்ளதுபோல் மேம்பட்ட திட்டங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம். முக்கியமாக, மத்திய-மாநில அரசுகளுடன் நுகர்வோர், தொழிலதிபர்கள், ஊட்டச்சத்து வல்லுநர்கள், கல்வியாளர்கள் இணைந்து மாற்றுத் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.
  • சோடியம் குறைந்த புதிய உப்பைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளை அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அப்போதுதான் பள்ளிக் குழந்தைகள் முதல் பெரியோர் வரை, படித்தோர் முதல் பாமரர் வரை அனைவருக்கும் சோடியம் உப்பு குறித்த புரிதல் மேம்படும். அதன் பலனாக, உப்பு தொடர்பான இந்த உணவுக் கொள்கை இந்தியாவிலும் வெற்றி பெறும்.

நன்றி: தி இந்து (13 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories