TNPSC Thervupettagam

உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ

December 28 , 2023 376 days 286 0
  • மகாகவி பாரதி மறைந்து ஒருநூற்றாண்டு முடிந்துவிட்டது.ஆனால், அவரது சொற்களோதினமும் புதிதாகப் பிறக்கின்றன; அன்றையநாளின் பொருத்தப்பாட்டுக்கு ஏற்பப் புதியபொருளில் ஒளிர்கின்றன - என்பதாக இக்கட்டுரையைத் தொடங்க நான் திட்டமிட்டிருக்கவில்லை. மாறாக, 2023இல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைப் பற்றிய சிறுஒப்பீட்டுடன்தான் தொடங்கியிருந்தேன். 2022ஆம் ஆண்டின்கற்றதும் பெற்றதும்தொடரில், அந்த ஆண்டின் தொழில்நுட்ப மேம்பாடு குறித்த ஒரு கட்டுரையில் மட்டுமே செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) ‘சாத்தியங்கள்பற்றிப் பேசப்பட்டிருந்தது. ஆனால், இந்த ஆண்டு (2023) ‘கற்றதும் பெற்றதும்தொடரில் வெளியான கட்டுரைகளில் பாதிக்கும் மேல், பல்வேறு துறைகளில் ஏஐ கொண்டுவந்திருக்கும் மாற்றங்கள்-விளைவுகளை அலசியிருக்கின்றன.
  • இதை எழுதிய நொடியில்தான், ‘கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் / அற்ப மாயைகளோ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?’ என்கிற பாரதியின் வரிகள் நினைவில் மின்னலாக வெட்டின. ‘நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவேஎனத் தொடங்கும் இப்பாடலுக்கு, ‘உலகத்தை நோக்கி வினவுதல்எனத் தலைப்பிட்டிருக்கிறார் பாரதி (‘பாடல் திரட்டுஎன்று பாரதியார் பெயர் சூட்டிய ஒரு திரட்டில் 29 பாடல்கள் இடம்பெற்றிருந்தன; அதில் ஒன்று இப்பாடல். பாரதியார் காலமான பிறகு பாரதியாரின் மனைவிபாரதி ஆச்ரமம்என்கிற பெயரில் தொடங்கி நடத்திய பதிப்பகத்தின் வழியாகச்சுதேச கீதங்கள்முதற்பாகம் (1922) என்ற தலைப்பில் வெளியிட்ட தொகுப்பில் இந்தப் பாடல் 90ஆவதாக இணைந்துள்ளது (.1065, தமிழ்ப் பல்கலைப் பதிப்பு); தகவல்: ஆய்வாளர் பழ.அதியமான்). செயற்கை நுண்ணறிவின் தவிர்க்க முடியாத செல்வாக்கு எல்லா துறைகளிலும் படர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில், நாம் கற்பதும், கேட்பதும், கருதுவதும் மெய்யா பொய்யா? அவற்றுக்கு ஆழ்ந்த பொருள் உண்டா? இந்தப் பின்னணியில், உலகத்தை நோக்கிய பாரதியின் கேள்விகளை நாம் சமகாலப்படுத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

பெருந்தரவும் ‘நம்பகத்தன்மை’யும்

  • உலகம் இன்று பெருந்தரவுகளால் (Big data) ஆளப்படுகிறது. அரசும் பெருநிறுவனங்களும் முழுவதுமாகப் பெருந்தரவுகளைச் சார்ந்தே இயங்கிவருகின்றன. 800 கோடி உலக மக்கள்தொகையை நிர்வகிக்கும்லட்சுமண ரேகையாகப் பெருந்தரவு உலகம் முழுவதும் நீள்கிறது. ஃபேஸ்புக், எக்ஸ் (டிவிட்டர்) உள்ளிட்ட சமூக ஊடகங்களின் அசாத்திய எழுச்சி, கடந்த தசாப்தத்தில் போலிச் செய்திகளின் கட்டுப்பாடற்ற பெருக்கத்துக்கு வழிவகுத்தது; பாரம்பரியச் செய்தி ஊடகங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்த அந்தப் போக்கு, இன்று ஏஐ சாத்தியப்படுத்தியுள்ள ஆழ்நிலைப் போலிகள் (deep fake) மூலம் தீவிரமடைந்துள்ளது. பெருந்தரவுகளைக் கொண்டு இயங்கும் ஏஐ தொழில்நுட்பம், மனிதகுலம் எதைக் கற்க, கேட்க, கருத வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் பரிணமித்திருக்கிறது.
  • மெரியம் வெப்ஸ்டர், ஆக்ஸ்போர்டு, காலின்ஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற ஆங்கில மொழி அகராதிகள், ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும்ஆண்டின் சொல்’- (Word of the Year) வெளியிட்டு வருகின்றன. அந்த ஆண்டில் மக்களிடம் அதிகம் புழங்கிய, பொதுவெளியில் அதிக தாக்கம் செலுத்திய சொல், ‘ஆண்டின் சொல்லாகத் தேர்வுசெய்யப்படுகிறது. ‘ஆண்டின் சொல்என்பது அந்த ஆண்டில், புதிதாக உருவாக்கப்பட்ட சொல்லாக இருக்க வேண்டும் என்றில்லை. அந்த ஆண்டின் போக்கில் மேலெழுந்த உரையாடலில் கவனம் பெற்றவை பெரும்பாலும்ஆண்டின் சொல்லாகத் தேர்வாகின்றன.
  • அந்த வகையில், ‘authenticity’ என்கிற சொல்லை,2023ஆம்ஆண்டின் சொல்லாக மெரியம் வெப்ஸ்டர் அகராதி அறிவித்துள்ளது. ‘நம்பத்தகுந்தது’, ‘உண்மையானது’, ‘போலி அல்லஉள்ளிட்ட அர்த்தங்களையும், ‘ஆளுமை, நோக்கம், பண்பு ஆகியவற்றுக்கு உண்மையாக இருக்கும் தன்மையையும் கொண்டிருக்கும் இச்சொல்லின் பயன்பாடு ஏஐ, அடையாளம் (identity), சமூக ஊடகம் உள்ளிட்ட தளங்களில் இந்த ஆண்டு சரமாரியாக உயர்ந்ததாக மெரியம் வெப்ஸ்டர் தெரிவித்துள்ளது.

தகவல் முதலாளித்துவமும் தேர்தல்களும்

  • மனித உறவுகள் தொடங்கி, அன்றாட நுகர்வு வரையிலான எல்லா இயக்கத்துக்குமான ஆதார இழையாகநம்பகத்தன்மைஇருந்துவருகிறது. கற்பது, கேட்பது, கருதுவது ஆகிய செயல்பாடுகளைஆழ்ந்த பொருளுள்ளதாகமாற்றும் அடிப்படையையும்நம்பகத்தன்மைகொண்டுள்ளது. இந்நிலையில், பெருங்கடலென அன்றாடம் நம்மை வந்துசேரும் தகவல்கள்/ தரவுகளின்நம்பகத்தன்மைஇன்று கேள்விக்குரியதாக மாறியிருக்கிறது. எனில், இந்த ஆண்டின் சொல்லாக, ‘authenticity’ தேர்வாகியிருப்பது தற்செயலானதா? தொழில்துறை முதலாளித்துவம் தகவல் முதலாளித்துவமாகப் பரிணமித்துள்ள இக்கால கட்டத்தில், டிஜிட்டல்மயமாக்கல் மூலம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தகவல் சுனாமி நம்மை வாரிச் சுருட்டத் தொடங்கியுள்ளது. தகவல்தொடர்பின் புதிய சாத்தியங்கள், அரசியல் உள்பட சமூக வாழ்வின் பல துறைகளைச் சீர்குலைக்கத் தொடங்கியுள்ளன.
  • வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை என்கிற நிலைக்குப் பிறகு, ஓர்உலகளாவியத் தேர்தல்’, 2024இல் நடைபெறவிருக்கிறது. மக்கள்தொகை அதிகமுள்ள அமெரிக்கா, வங்கதேசம், பிரேசில், இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ, பாகிஸ்தான், ரஷ்யா ஆகியவற்றுடன் 70க்கும் மேற்பட்ட நாடுகள், அடுத்த ஆண்டில் தேர்தலை எதிர்கொள்கின்றன. உலக மக்கள்தொகையில் பாதி, அதாவது 400 கோடிப் பேர் வாழும் இந்த நாடுகளில், சுமார் 200 கோடிப் பேர் வாக்களிக்க உள்ளனர். 21ஆம் நூற்றாண்டின் இயக்கத்தைத் தீர்மானிக்கப் போகும் இத்தேர்தல்கள், முதன்மையாகத் தொழில்நுட்பம் சார்ந்தவையாக இருக்கின்றன.
  • உள்நாட்டு மொத்த உற்பத்தி, பணவீக்கம், கோவிட்-19 தொடர்பான புள்ளிவிவரங்கள் எனப்பல்வேறு அம்சங்களில் தரவுகளைக் கையாள்வதற்காக அரசாங்கங்கள் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றன; இந்நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஆழ்நிலைப் போலிகள் உள்ளிட்ட ஏஐ தொழில்நுட்பங்களை எதிர்மறையாகப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தலும் பெருமளவு நிலவுவதாக அஞ்சப்படுகிறது. வன்முறையின் பயங்கரமான கருவிகளை அரசும் போராளிக் குழுக்கள்/ அமைப்புகளும் ஒரே நேரத்தில் கைகொள்ளக் கூடிய ஒரு நிலையை, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பார்த்துவருகிறோம்.

உலகத்தை நோக்கி வினவுதல்

  • நிற்பது, நடப்பது, பறப்பது - வானகம், இளவெயில், மரச்செறிவு ஆகியவை எல்லாம் கனவா, கானல்நீரா, காட்சிப்பிழையா, தோற்றமயக்கமா எனப் பாரதி வினவிச் சென்றார். சாட்ஜிபிடி போன்ற ஏஐ-யின் குழந்தைகள் சாத்தியப்படுத்தியிருக்கும் மாற்றங்கள், பாரதியின் கேள்விகளுக்கு இன்று புது அர்த்தம் கொடுத்திருக்கின்றன. உணவு, உடை என நுகர்வுப் பண்பாட்டில் நம்பகத்தன்மையை உறுதிசெய்யத் துடிக்கும் நாம், கருத்துகளின் நம்பகத்தன்மையைப் பொறுத்த வரை, ‘லட்சுமண ரேகையைத் தாண்டிவிடக் கூடிய அபாயத்துடன் ஒற்றைக் காலை அந்தரத்தில் நிறுத்தியிருக்கிறோம். அந்தக் காலை முன்னெடுத்து வைக்கப்போகிறோமா, இல்லை சுதாரித்துப் பின்வாங்கப் போகிறோமா?

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories