TNPSC Thervupettagam

உயர் கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார் குழுக்கள் அவசியம்

April 17 , 2023 640 days 359 0
  • உயர் கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் மாணவிகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், பாலியல் குற்றங்களைப் பதிவு செய்வதற்கான உள்ளகப் புகார் குழுக்கள் பெரும்பாலான உயர் கல்வி நிறுவனங்களில் அமைக்கப்படவில்லை எனத் தெரியவந்திருக்கிறது.
  • நாட்டையே உலுக்கிய நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட வர்மா குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ‘பல்கலைக்கழக மானியக் குழு (உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் - பயிலும் மாணவிகளின் மீதான பாலியல் வன்முறையைத் தடைசெய்தல், தடுத்தல், குறைதீர்த்தல்) ஒழுங்குமுறை 2015’ சட்டம் உருவாக்கப்பட்டது.
  • இந்தச் சட்டத்தின்படி பல்கலைக்கழக மானியக் குழுவின் (யூஜிசி) கீழ் வரும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் பல்கலைக்கழகங்களும் இந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். எவையெல்லாம் பாலியல் சீண்டல்கள், புகார் அளிப்பது எப்படி, நடவடிக்கைகள் என்னென்ன என்பன போன்றவை குறித்தும் அதில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பாலியல் புகார்களைப் பதிவுசெய்யும் வகையில் ‘உள்ளகப் புகார் குழு’ ஒன்றை அமைக்க வேண்டும் என்பது கட்டாயம்.
  • பெண் பணியாளர்களுக்கும் மாணவியருக்கும் இந்தப் புகார் குழு குறித்தும் அதன் நடைமுறைகள் குறித்தும் கல்வி நிறுவனங்கள் அறிவிக்க வேண்டும். இது தொடர்பான விழிப்புணர்வுப் பயிலரங்குகளையும் நடத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் எத்தனை புகார்கள் பதிவாயின, அவற்றின்மீதுஎன்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்த ஆண்டறிக்கையைப் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், அது பெயரளவுக்குக்கூட நடப்பதில்லை என்பதைத்தான் யூஜிசி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • மொத்தமுள்ள 945 உயர் கல்வி நிறுவனங்களில், 188 மட்டுமே 2018–19 ஆண்டுக்கான அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளன. இவற்றில் 29 கல்வி நிறுவனங்களில் உள்ளகப் புகார் குழு அமைக்கப்படவே இல்லை. தங்களிடம் பணிபுரியும், பயிலும் பெண்களின் பாதுகாப்பில் உயர் கல்வி நிறுவனங்கள் காட்டும் அக்கறை எத்தகையது என்பதையே இது காட்டுகிறது. உள்ளகப் புகார் குழுக்களையே அமைக்காத நிறுவனங்கள், எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களை மட்டும் கரிசனத்துடன் நடத்திவிடுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
  • புகாருக்கு உள்ளாகும் உயர் கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை புகார் சொல்லும் மாணவியரைப் புறக்கணிப்பது, மறைமுகமாக மிரட்டுவது, பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்குவது என மோசமாக நடந்துகொள்கின்றன. இது பாதிக்கப்பட்டவர்களைச் சோர்வுறச் செய்கிறது. பாலியல் புகார் குழு குறித்த அறியாமை, புகார்மீது நடவடிக்கையின்மை போன்றவையும் மாணவியருக்குப் பின்னடைவாக அமைகின்றன. இவற்றைக் கண்காணிக்க எந்தவொரு அமைப்பும் இல்லாதது இன்னொரு பிரச்சினை.
  • இந்தச் சூழலில், உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவியர் - பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யாத கல்வி நிறுவனங்களின் உரிமத்தை ரத்துசெய்வது, குற்றம் நிரூபிக்கப்பட்டோர் பணிப் பறிப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை யூஜிசி எடுக்க வேண்டும். பெண்களின் உயர் கல்விக் கனவு தடைபடாமல் காக்க அது முக்கியமான அஸ்திரமாக அமையும்!

நன்றி: தி இந்து (17 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories