TNPSC Thervupettagam

உயர் கல்விக்கு வெளிநாடு எதற்கு?

September 3 , 2019 1966 days 1105 0
  • இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய இந்தியாவில் கல்வி கற்பது என்ற முக்கியமான  திட்டத்தை பலரும் மறந்து விட்டோம்.  அதாவது, பல நாடுகளின் மாணவர்களை இந்தியாவின் கல்லூரிகளில் உயர் கல்வி கற்க வரச்செய்ய வேண்டும் என்பதே அந்தத் திட்டம்.
    இன்றைய கணக்கீட்டின்படி, உலகின் எல்லா நாடுகளையும் சேர்ந்த மாணவர்களில் 46 லட்சம் பேர் வெளிநாடுகளில் கல்வி கற்பவர்கள்.  வெளிநாட்டு மாணவர்களை தங்கள் நாட்டுக்கு கல்வி கற்க வரச் செய்வது ஒரு முக்கியமான வர்த்தக அம்சமும் ஆகும்.  எனவேதான் பல முன்னேறிய நாடுகளும் தங்கள் நாட்டிற்கு மாணவர்கள் வந்து கல்வி கற்க வேண்டும் எனத் திட்டமிட்டு விளம்பரமும் செய்கிறார்கள்.
    ஒரு நாட்டுக்கு வெளிநாட்டு மாணவர்கள் நிறைய பேர்  வந்து கல்வி கற்றால், அந்த நாட்டுக்கு வருமானம் கிடைக்கிறது. மேலும், அந்நாட்டில் கல்வி கற்ற மாணவர்கள் அங்கேயே வேலைக்குச் சேர்ந்தால் அதனால் உண்டாகும் பொருளாதார வளர்ச்சியால் நன்மை கிடைக்கிறது.
 அமெரிக்காவில்…..
  • தற்போது அமெரிக்காவில் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் உயர் கல்வி கற்கிறார்கள்.  இங்கிலாந்தில் 5 லட்சம் பேர், சீனாவில் 5 லட்சம் பேர், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, ரஷியா, ஜெர்மனியில் தலா 2.5 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் உயர் கல்வி கற்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 45,000 வெளிநாட்டு மாணவர்களே உயர் கல்வி நிலையங்களில் படிக்கின்றனர். இது, உலகின் எல்லா நாடுகளிலும், கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையான 46 லட்சத்தில் ஒரு சதவீதமே! ஆனால், தற்போது சுமார் 6.5 லட்சம் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர் கல்வி கற்கிறார்கள்.  
  • அமெரிக்காவில் உயர் கல்வி கற்கும் மாணவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் இந்தியர்களே.  இவர்களில் பலருக்கு நம் நாட்டில் இயங்கும் அதிகத் தரம் வாய்ந்த உயர் கல்வி நிலையங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். ஆகியவற்றில் இடம் கிடைக்காத காரணத்தால் அமெரிக்காவுக்குச் சென்று உயர் கல்வி பயிலலாம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், அவற்றில் சேரத்  தகுதியுடைய பலரும் அமெரிக்காவுக்குச் சென்று உயர் கல்வி கற்கிறார்கள் என்பது உண்மை நிலவரம்.
  • இந்தியாவில் படியுங்கள் என மத்திய அரசு திட்டமிடுவது, இது போன்ற தகுதிமிக்க மாணவர்களை இந்தியாவிலேயே கற்கச் செய்ய வேண்டும் என்பதற்காகவே எனக் கருதப்படுகிறது. வெளிநாட்டு மாணவர்களையும், நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ள இந்திய மாணவர்களையும் கவரும் வகையில் நமது உயர் கல்வி நிலையங்களைச்  சீரமைக்க வேண்டும்.  அவற்றுக்கு அடிப்படை கட்டட வசதிகள், ஆய்வு நிலையங்கள், சுற்றுச்சூழ்நிலைகள், தங்கும் விடுதிகள் ஆகியவை உடனடியாக அமைக்கப்பட வேண்டும். 
  • இவற்றை நம் கல்வி நிலையங்களில் செய்து முடிக்காத நிலையிலும், 30 ஆசிய, ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் சில நாடுகளிலிருந்து மாணவர்கள் நம் நாட்டுக்கு வந்து உயர்கல்வி கற்கிறார்கள்.  அதன் காரணம், அவர்களது நாட்டை விடவும் நம் நாட்டில் சிறந்த உயர்கல்வி நிலையங்கள் உள்ளன என்பதுதான்.
  • நம் நாட்டின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்., இ.ஆர்., சில பல்கலைக்கழகங்கள், குறிப்பிட்ட சில பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகள் வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்துள்ளன.  இவற்றில் ஓர்  ஆண்டுக்கு  சுமார் 30,000 வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்து படிக்கிறார்கள்.  இந்த ஆண்டு 70,000 வெளிநாட்டு மாணவர்கள் நமது உயர் கல்வி நிலையங்களில் பயில விண்ணப்பித்துள்ளனர்.  இந்த விண்ணப்பங்கள் 190 நாடுகளிலிருந்து பெறப்பட்டவை.
உயர் கல்வியின் வளர்ச்சி
  • இந்த எண்ணிக்கையை வைத்து நமது உயர் கல்வியின் வளர்ச்சியை நாம் பாராட்டிவிட முடியாது. இந்த வெளிநாட்டு மாணவர்கள் எந்த நாடுகளிலிருந்து விண்ணப்பிக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.நேபாளம், பூடான், ஈரான், எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், சூடான், இராக், இலங்கை ஆகிய நாட்டின் மாணவர்களே நம் நாட்டில் உயர் கல்வி பயில அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர்.  அவர்கள் நாட்டில் கல்வித் தரமற்றது என்பதும், அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி நிலையங்கள் கிடையாது என்பதும் காரணம். மேல்நாடுகளில் உயர் கல்வி கற்கத் தேவையான தகுதியும், பண வசதியும் இந்த மாணவர்களுக்கு கிடையாது.  
  • நமது புதிய இந்தியாவில் படியுங்கள் என்ற திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்த மாணவர்களில் அதிகமானவர்கள், எத்தியோப்பியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், நேபாளம்,  வங்கதேசம், கென்யா, தான்சானியா, ருவாண்டா, கானா, உகாண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
  • வெளிநாடுகளுக்கு உயர் கல்வி கற்கச் செல்லும் இந்திய மாணவர்கள் மிகவும் தரமானவர்கள் என்ற எண்ணம் எல்லா நாடுகளிலும் உண்டு.  அமெரிக்காவில் கல்வி கற்று தேறிய இந்திய மாணவர்களைப் பற்றி பெருமையுடன் விவரிப்பவர்கள் கூறுவது கவனிக்கத்தக்கது.  உலகிலேயே தலைசிறந்த எம்.பி.ஏ. கல்லூரியான ஹார்வர்ட் பிஸினஸ் ஸ்கூலின் தலைமைப் பொறுப்பான டீன் பணியில் இருப்பவர் ஓர் இந்தியரே.  அதுபோலவே, ஹார்வர்ட் கல்லூரியின் டீன் பணியிலும் ஓர் இந்தியர் உள்ளார். பல புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் பேராசிரியர் பணிகளில் இருப்பவர்களும் இந்தியர்களே. 
குடியுரிமை
  • முதன்முதலாக மனிதன் நிலவில் இறங்கும் பணியைச் செய்த அமெரிக்க விண்வெளி அமைப்பில் நான்கு விண்வெளி பொறியாளர்கள் தலைமை தாங்கி திட்டத்தை வழி நடத்தினர்.  அவர்கள் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும். அதில் ஒரு ஆணும், மற்றொரு பெண்ணும் இந்திய நாட்டிலிருந்து அமெரிக்கா சென்று உயர் கல்வி கற்று அங்கேயே குடியுரிமை பெற்று வாழ்ந்தவர்கள். 
  • வெளிநாட்டிற்கு கல்வி கற்கச் செல்லும் இந்தியர்களை நம் நாட்டிலேயே உயர் கல்வி கற்கச் செய்யும் வகையில் மத்திய அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. நமது ஐ.ஐ.டி.-க்களில் 40 வெளிநாட்டு பேராசிரியர்கள் பணி செய்கிறார்கள்.  இது நமது நாட்டின் 5,400 ஐ.ஐ.டி. ஆசிரியர்களில் 1 சதவீதமே. நமது அரசின் திட்டப்படி 20 சதவீத  வெளிநாட்டுப் பேராசிரியர்கள் இங்கே வந்து பணிபுரிய வேண்டும். இதை நிறைவேற்ற அதிக சம்பளம் மற்றும் வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.  
  • இதற்காக அதிக நிதியை ஐ.ஐ.எம். மற்றும் ஐ.ஐ.டி. கல்வி கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
  • வெளிநாட்டின் உயர் கல்வி நிலையங்களில் பேராசிரியர்களாக பணிபுரிபவர்கள் இரண்டு வகையானவர்கள்.  முதலாவது வகை, மிகவும் சிறப்பாகப் பணிபுரிந்து, பெயரெடுத்து தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட மூத்த பேராசிரியர்கள். அடுத்தது, திறமையுடன் கல்வி கற்று ஆராய்ச்சி செய்து பி.எச்டி. பட்டம் 
    பெற்று உயர் கல்வி நிலையங்களில் பணியில் சேர்ந்துள்ள இளம் வயது ஆசிரியர்கள்.
     இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த இளம் ஆசிரியர்களே நமது நாட்டுக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் எனவும், அவர்கள்  நமது உயர் கல்வி நிலையங்களில் சேர்ந்து பணி செய்தால் நமது கல்வி நிலையங்களுக்கு நாம் திட்டமிட்டுள்ள பலன்கள் கிடைக்காது என்றும் கருதுகின்றனர்.  எனினும், இவர்களைச் சேர்த்துக்  கொண்டால், நவீன கல்வி ஆராய்ச்சிகளும், மாணவர்களுக்கு கற்பிக்கும் நடைமுறைகளும் நமது கல்வி நிலையங்களில் உருவாகி, இங்கே பணி புரியும் மற்ற பேராசிரியர்களுக்கும் அந்த குணாதிசயங்கள் உருவாகும் எனப் பல கல்வியாளர்கள் வாதிடுகின்றனர். இதை மத்திய அரசு நடைமுறைப்படுத்துமா என்பதைக் கவனிக்க வேண்டும்.  
  • அமெரிக்காவில் ஒரு சிறந்த பேராசிரியருக்கு ஆண்டுச்  சம்பளம் சராசரி ரூ. 89 லட்சத்து 70 ஆயிரம்.  தலைமை நிலைமையில் உள்ள டீன் மற்றும் துறைத் தலைவருக்கு சராசரி ரூ.1 கோடியே 38 லட்சம்; இந்தியாவில் ஒரு தரமான ஐ.ஐ.டி. கல்லூரி பேராசிரியர் பெறும் ஆண்டுச்  சம்பளம் ரூ.26 லட்சத்து 40 ஆயிரம்; சீனாவும் தனது உயர் கல்வியை வளர்க்க வெளிநாட்டுப் பேராசிரியர்களை ஈர்க்கும் முயற்சியில் உள்ளது;  அங்கு வழங்கப்படும் சராசரி ஆண்டுச் சம்பளம் ரூ.69 லட்சம். நமது நாட்டுக்கு சிறந்த ஆசிரியர்கள் எப்படி வருவார்கள் என்ற கேள்வி எழுகிறது.
  • 2017-ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர்கள் 1 லட்சத்து 86 ஆயிரம் பேர். 2010-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் படித்த இந்திய மாணவர்கள் 19,205 பேர்.  ஆஸ்திரேலியாவில் 2014-இல் உயர்கல்வி கற்ற இந்திய மாணவர்கள் 34,100 பேர், ஜெர்மனியில் 11,000 பேர்  எனக் கணக்கிடப்பட்டுள்ளது.  இது போன்ற மாணவர்கள் அதிகமானோரை ஈர்க்க இந்த நாடுகள் பலதரப்பட்ட சலுகைகளை வழங்கி, அவர்களுக்கு உதவும் வகையில் கல்வியின் தரத்தை மேம்படுத்துகின்றன.
வெளிநாடுகளில் கல்வி
  • இது போல நமது மாணவர்கள்  வெளிநாடுகளில் கல்வி கற்று தங்கள் அறிவை வளர்த்துக்  கொண்டு இந்தியாவிற்கு திரும்பி வந்து பணியில் சேர்ந்தால் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.  ஆனால், அப்படிச்  செய்யாமல் வெளி நாடுகளில் சென்று உயர் கல்வி கற்று வேறு பல செழிப்பான நாடுகளில் பணியில் சேர்ந்து நிறைய சம்பாதிக்கவும், குடும்பத்துடன் குடியேறி தங்கள் வாழ்க்கையை உயர் நிலைக்குக் கொண்டு செல்லவுமே இவர்கள் விரும்புகிறார்கள்.
  • இவை எல்லாவற்றையும் கணக்கில் எடுத்து மத்திய அரசு திட்டமிட வேண்டும்.  அதை விடவும் நமது கல்வி நிலையங்களை கண்டிப்பான முறையில் கண்காணித்து முன்னேற்ற வேண்டும்.

நன்றி: தினமணி(03-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories