TNPSC Thervupettagam

உயர் நீதிமன்றத்தில் ஒலிக்க வேண்டும் தமிழ்

November 27 , 2023 411 days 301 0
  • சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்காடு மொழியாகத் தமிழ் கொண்டுவரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட காலமாக நீடிக்கிறது. ‘உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்குரைஞர் செயல்பாட்டுக் குழு’ என்கிற குழுவின் சார்பில் 24.11.2023 அன்று நாள் முழுவதும் வழக்கறிஞர்களின் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. அடுத்த கட்டமாக, டிசம்பர் 1 அன்று தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது. முன்னதாக, அக்டோபர் 13 அன்று தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் அரங்கத்தில், இதுதொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கருத்தரங்கம் நடத்தித் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பின்னணி என்ன

  • 1862இல் ‘மெட்ராஸ் ஹைகோர்ட்’ தொடங்கப்பட்டது. கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த நீதிமன்ற வளாகத்துக்குள் கடந்த 161 ஆண்டுகளாகத் தமிழ் நுழையவே முடியவில்லை. 85 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்க நாடாக இருந்தது இந்தியா. கடந்த 75 ஆண்டு காலச் சுதந்திர இந்தியாவில் உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படவில்லை; தீர்ப்புகளும் தமிழில் வழங்கப்படுவதில்லை. மெட்ராஸ் ஹைகோர்ட் என்பது தமிழ்நாடு உயர் நீதிமன்றம் எனப் பெயர் மாற்றமும் செய்யப்படவில்லை. அரசமைப்புச் சட்டப் பிரிவு 348 (2) இன்படி, குடியரசுத் தலைவரின் முன் இசைவுடன், ஒரு மாநிலத்தின் ஆளுநர் இந்தி அல்லது அந்தந்த மாநில அலுவல் மொழியை ஆங்கிலத்துடன் சேர்த்துக் கூடுதல் உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்க வழிவகை செய்கிறது. இதன் அடிப்படையில், 2006ஆம் ஆண்டு மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவது குறித்து உயர் நீதிமன்றத்திடம் கருத்து கேட்டது.
  • உயர் நீதிமன்ற நீதிபதிகள் முழு அவையும் கூடி விவாதித்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கிட கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டு, அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்பாடு செய்திட வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றி, மாநில அரசுக்கு 29.11.2006 அன்று அனுப்பினர். உயர் நீதிமன்றத்தில் அலுவல் மொழியாகத் தமிழைப் பயன்படுத்துவதற்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்குவதற்கான நிதியையும் அன்றைய மாநில அரசு உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்தது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 06.12.2006 அன்று தமிழை சென்னை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க ஒப்புதல் வழங்கக்கூடிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது; ஆளுநர் மூலமாகக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் கோரிக்கை மீது கருத்து கேட்பதற்காக மத்திய அரசு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அதை அனுப்பி வைத்தது.

ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம்

  • இதைப் போலவே மேற்கு வங்கம், குஜராத், சத்தீஸ்கர், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகளும் தங்கள் மாநில மொழியை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்கிட மத்திய அரசுக்குத் தீர்மானம் அனுப்பியிருந்தன. இதுதொடர்பான எல்லாத் தீர்மானங்களையும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிவைத்தது. மாநிலங்களின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இது குறித்து உண்மை நிலை அறிய, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்கள் மனு செய்தபோது, உச்ச நீதிமன்றப் பதிவாளர் தகவல் தர மறுத்துவிட்டார். இது உணர்வுபூர்வமான மொழிப் பிரச்சினை என்பதால், சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என உச்ச நீதிமன்றப் பதிவாளர் பதில் உரைத்ததைத் தகவல் அறியும் ஆணையமும் சரி எனக் கூறிவிட்டது.
  • ஆனால், அரசமைப்புச் சட்டக்கூறு 348(2) இன்படி அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த 18 நாள்களிலேயே 1950 பிப்ரவரி 14 அன்று ராஜஸ்தான் மாநில ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, இந்தியை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக்கினார். அரசமைப்புச் சட்டக்கூறு 344(4)இன் கீழ் அமைக்கப்பட்ட ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மத்திய அரசு அலுவல் மொழிச் சட்டம், 1963இல் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தின் பிரிவு 7, குடியரசுத் தலைவரின் முன் இசைவுடன் ஒரு மாநிலத்தின் ஆளுநர் இந்தியிலும் அந்தந்த மாநில அலுவல் மொழியிலும் உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதற்கு வழிவகை செய்கிறது. இச்சட்டமும் நடைமுறைக்கு வந்தது. அதன் பிறகு, 1969இல் உத்தரப் பிரதேசத்திலும், 1971இல் மத்தியப் பிரதேசத்திலும், 1972இல் பிஹாரிலும் உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக இந்தி ஆக்கப்பட்டது. 1976இல் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்தியில் மனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டது.

தொடர் முயற்சிகள்

  • அரசமைப்புச் சட்டக்கூறு 344 (4)இன்படி, மாநில அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை உச்ச நீதிமன்றத்திடம் கருத்து கேட்பதற்கு மத்திய அரசு அனுப்பத் தேவையில்லை. அரசமைப்புச் சட்டப்படி, மாநில அரசு அனுப்பிய தீர்மானத்தைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கோரி அவருக்கு அனுப்ப வேண்டும். அன்றைய சென்னை மாகாண சட்டமன்றத்தில்கூட ஆங்கிலமே அலுவல் மொழியாக இருந்தது. 1952 சட்டமன்றத் தேர்தல் முடிந்து உருவான சட்டமன்றத்தில்தான் முதன்முதலாக உறுப்பினர்கள் தமிழில் பேசினார்கள். மொழிவழி மாநிலம் அமைந்த பிறகு, சென்னை மாகாணத்துக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டுவதற்காக நெடிய போராட்டம் நடைபெற்றது.
  • சங்கரலிங்கனார் இக்கோரிக்கைக்காகக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி உயிர்த் தியாகம் செய்தார். நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பி.ராமமூர்த்தி ‘தமிழ்நாடு’என்று பெயர் சூட்ட வேண்டுமென்று தீர்மானத்தை அளித்தார். அத்தீர்மானத்தை முன்மொழிந்து கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் பூபேஷ் குப்தா வலியுறுத்திப் பேசினார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்த திமுக தலைவர் அண்ணா, பூபேஷ் குப்தாவின் முன்மொழிவை ஆதரித்தார். ஆனாலும், அன்றைய மத்திய அரசு ஏற்கவில்லை.
  • 1967இல் அண்ணா தலைமையில் அமைந்த திமுக அரசு, சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழை ஆட்சி மொழியாக்கிட தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழை நிர்வாக மொழியாக, நீதிமன்ற மொழியாக, கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாக ஆக்குவது என்று முடிவானது. என்.சங்கரய்யா, ஏ.பாலசுப்ரமணியம், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் களும் ஆதரித்தனர். தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வளவுக்குப் பிறகும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாகவில்லை.

அவலம் தீரட்டும்

  • சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தமிழ்நாட்டுக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்துக்குத் தமிழை அலுவல் மொழியாக்கிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகத் தமிழ் ஆவது என்பது, தமிழ் பேசும் மக்களின் கோரிக்கையாகும். உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முன்வைக்கும் வாதங்களையும் நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகளையும் தங்களின் தாய்மொழியில் பெறுவது தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமை. மொழி என்பது ஒரு மக்களுடைய பண்பாட்டுக் கூறுகளில் முதன்மையானது.
  • இந்நிலையில், தமிழை உயர் நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக மாற்றக் கோரும் தீர்மானத்தை, சட்டமன்றத்தில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு அனுப்ப வேண்டும். நவம்பர் 26 இந்திய அரசமைப்பு நாள்; அரசமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 73 ஆண்டுகளாகின்றன. சென்னை உயர் நீதிமன்றத் தில் இனியாவது தமிழ் அலுவல் மொழி ஆக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 11 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories