- வகுப்பறை எப்போதும் குழுவாகவே செயல்படுகிறது. இந்த உண்மையை அறியாத ஆசிரியர் வகுப்பறையை அணுகும்போது அவர் முற்றிலும் தனிமைப் படுத்தப்படுகிறார். - ஆண்டன் மகரன்கோ உலகை நிர்வகிக்கும் பொறுப்பை 10 நாட்களுக்குக் குழந்தைகளிடம் ஒப்படைத்துப் பாருங்கள் என ஆண்டன் மகரன்கோ எழுதியதை வாசித்துவிட்டு பலமாக சிரித்தாராம் அப்போதைய ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின்.
- உக்ரைனில் பிறந்து ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு சோவியத் யூனியன் உருவானபோது நாட்டின் ஒட்டு மொத்த கல்விக் கோட்பாட்டை நிறுவி நடைமுறைப்படுத்திய பெருமைக்குரியவர் ஆண்டன் மகரன்கோ. அவரது ‘சோவியத் கல்வி பள்ளியின் பிரச்சினைகள்’ நூலின் மறுபதிப்பு சமீபத்தில் வெளிவந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.
உலகை ஒப்படையுங்கள்:
- மிகக் குறுகிய காலத்தில் சோவியத் ரஷ்யாவில் 100 சதவீத எழுத்தறிவைச் சாதித்துக் காட்டிய அவருடைய திட்டங்கள் ஒருபுறம். குழுவாக கற்றல் எனும் அவருடைய உலகளாவிய கல்வி கோட்பாடு மறுபுறம். இவை இரண்டுக்காகவும் எப்போதும் அவர் நினைவுகூரப்படுவார். குழந்தைகள் ஏதும் தெரியாதவர்களாக கல்விமுறை மதிப்பீடு செய்வதாக இந்தப் புத்தகம் குற்றம் சாட்டுகிறது.
- ஒரு சந்ததியின் கூட்டுக்கல்வி ஈடுபாடு மற்றும் உழைப்பைவிட சமூகத்தின் கல்விமுறை ஒருபோதும் உயர்ந்ததல்ல என்பதை அவருடைய குழு கோட்பாடு பலமுறை நிரூபித்துள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் அவர் குழந்தைகளிடம் இந்த உலகை நிர்வகிக்கும் பொறுப்பை 10 நாட்களுக்குக் கொடுத்துப் பாருங்கள் என்று சவால் விட்டார்.
- இதுபோன்ற ஒரு அனுபவத்தைச் சமீபத்தில் நான் பெற்றேன். இரண்டாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை படித்துவரும் குழந்தைகளின் ஒரு சிறு கூட்டத்தைக் கூட்டினேன். அவர்களிடம், “உங்கள் கையில் சட்டமியற்றும், தண்டனை தரும் ஆட்சி அதிகாரம் தரப்பட்டால் நீங்கள் என்ன மாதிரி தண்டனை வழங்குவீர்கள்?” எனக் கேட்டேன். துரிதமாக அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தண்டனைகள் வழங்கத் தொடங்கினார்கள்.
அதிசய தண்டனைகள்:
- பேருந்துகளில் குழந்தைகளுக்கு ஜன்னலோர இருக்கையை வழங்காத பெரியவர்களுக்கு, பேருந்திலிருந்து இறங்கி ஊர்வரை நடந்தே செல்லும் தண்டனையை முதலில் உறுதி செய்தார்கள். உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு எப்போதும், “இதைச் செய் இதைச் செய்யாதே” என்று அறிவுரை வழங்குபவர்களுக்கு ஒரு வாரம் பேசாமல் இருப்பதற்கு வாயைத் துணியால் கட்டிவிடும் தண்டனை.
- தண்ணீர் குடித்துவிட்டு குழாயை மூடாமல் சென்று விடுபவர்களுக்கு அந்த இடத்திலேயே மூன்று நாட்களுக்கு நின்றபடி வேறு யார் யார் குழாயை மூடாமல் போகிறார்களோ அப்போதெல்லாம் குழாயை மூடும் தண்டனை..இப்படியாக நீண்டது எங்களுடைய உரையாடல். அதிகமாக வீட்டுப் பாடம் தரும் ஆசிரியரை என்ன செய்யலாம் என்கிற கேள்வி வந்தது. அதற்கு, வீட்டுப் பாடம் எழுதி முடிக்கும்வரை அந்த ஆசிரியரைக் கட்டாய விடுப்பில் அனுப்பி விடலாம் என்று ஒரு வினோத தண்டனையை அவர்கள் முன்மொழிந்தார்கள்.
- இருப்பதிலேயே உயர்ந்தபட்ச தண்டனை என்பது அந்தக் குழந்தைகள் உலகில் என்னவாக இருக்க முடியும் என யோசித்தேன். குழந்தைகளிடையே சாதி பாகுபாடு பார்க்கும் பெரியவர்களுக்கு அவர்கள் வழங்கிய தண்டனை என்னை அசர வைத்தது. சாதிப் பாகுபாடு பார்க்கும் பெரியவர்களுக்கு முதலிலிருந்து பள்ளிக்கூடத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை கட்டாயக் கல்வி என்று குழு அறிவித்தது.
- ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு ஆண்டுகள் படிக்கச் சொல்லுங்கள், அப்போதுதான் அந்த வலி தெரியும் என்றும், இவங்களுக்கெல்லாம் ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி வைத்து சித்திரவதை செய்யுங்கள் என்றும் குரல்கள் எழுந்தன. இந்தக் குழந்தைகள் ஆகப்பெரிய தண்டனையாகக் கருதுவது பள்ளிக் கூடத்துக்கு வருவதுதான் என்பதை உணர்ந்தபோது வியர்த்தது. குழந்தைகளின் பிஞ்சு இதயங்களில் மரண தண்டனை என்பதே இல்லை. உண்மைதான் ஆண்டன் மகரன்கோ சொல்வதுபோல, இந்த உலகை நிர்வகிக்கும் பொறுப்பை 10 நாட்களுக்கு அமைதியாகக் குழந்தைகள் கையில் ஒப்படைத்துவிடலாம் போலத்தான் தெரிகிறது.
நன்றி: இந்து தமிழ் திசை (16 – 02 – 2025)