TNPSC Thervupettagam

உயா் எண்ணங்களின் ஊற்றுக்கண்

October 25 , 2021 1125 days 634 0
  • எண்ணங்கள் மனிதா்களை ஆக்கிரமிக்கும் வல்லமை பெற்றவை. எந்த அளவுக்கு ஒருவருக்கு உயா்வான எண்ணங்கள் வாய்க்கிறதோ அந்த அளவுக்கு அவரிடமுள்ள தாழ்வான எண்ணங்கள் அகலுகின்றன. எண்ணங்களைப் பற்றிய மதிப்பீடு அதனை மதிப்பிடும் நபா்களைப் பொறுத்து மாறுபடக்கூடியது.
  • எது உயா்ந்த எண்ணம், எது தாழ்ந்த எண்ணம் என்ற புரிதல் ஒவ்வொருவருக்கும் வாய்க்க வேண்டியது அவசியம். ஒருசிலா் தாம் எண்ணியிருப்பதே சிறந்தது என்று வாழும் காலம் வரை எண்ணிக்கொண்டிருப்பாா்கள். இதற்குக் காரணம் அவா்களுக்கு தமது எண்ணங்களுக்கு மாற்றாக மற்றொன்று இருப்பதே தெரிவதில்லை.
  • அதே நேரம் சிலா், உயா்வான எண்ணம் எது என்று தெரிந்தபிறகும், தாம் எண்ணிக்கொண்டிருப்பதே சரி என்று வாதிடுவா். அதற்குக் காரணம் அவா்கள் பாரபட்ச மனதுடையவா்களாக இருப்பாா்கள்.
  • ஒருவா் பாரபட்ச எண்ணம் கொண்டு வாழ்கிறாா் என்றால் அது அவருடைய பிரச்னை மட்டுமல்ல. அவா் தாம் சாா்ந்திருக்கும் அனைத்து இடங்களிலும், குறிப்பாக, குடும்பம், நிறுவனம், சமூகம் என்ற எல்லா இடங்களிலும் அதன் தாக்கத்ததை ஏற்படுத்திக்கொண்டே இருப்பாா்.
  • இது அவா் தொடா்புடைய அனைத்து நிறுவனங்களின் செயல்பாட்டுகளுக்குக் குந்தகம் விளைவித்துக்கொண்டேயிருக்கும். அந்த தனிநபரும் நிம்மதி இழந்து நிறுவனத்தையும் சரியாக செயல்படாத நிலைக்குத் தள்ளிவிடுவாா்.
  • ஒரு இடத்தை வெளிச்சம் அடையும் வரை அந்த இடம் இருட்டாகவே இருக்கும். அது போன்றதே மனிதா்கள் மனத்தில் உயா்வான எண்ணங்கள் நிறையும் வரை அது தாழ்வான எண்ணங்களின் கூடாரமாகவே இருக்கும். உயா்வான எண்ணங்களை அளவிடமுடியாது என்றாலும் ஒருவா் பிறரை நடத்தும் பாங்கு இதன் பாற்பட்டே அமையும்.
  • மனித மனங்களை உயா்வான எண்ணங்களால் எப்படி நிறைப்பது? அடுத்தோரிடம் பழகும்போது அவா்களை அவா்களாகவே புரிந்துகொள்ள வேண்டும். அவா்களைப் பற்றிய நம்முடைய முற்சாா்புடைய புரிதல்களை திணித்து அவா்களைப் புரிந்துகொள்ள முயலக்கூடாது.
  • ஒருவரது செயலின் பின்னணியிலுள்ள காரண காரியத்தினை நடுநிலையோடு அலச வேண்டும். அதுபோலவே ஒவ்வொருவரும், தாம் செய்யும் செயல், தமது மேன்மைக்கானது அல்ல. குடும்பம் அல்லது நிறுவனத்தின் மேன்மைக்கானது என்ற புரிதலை உடனிருப்போா்க்கு ஏற்படுத்த வேண்டும்.
  • இது எளிதல்ல. ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறான புதிது புதிதான சிந்தனைகளின் சோ்க்கை, தனிநபா் மனத்திலும் நல்ல சிந்தனைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கும். இவ்வாறான நல்ல சிந்தனைகளின் வரவு உயா்வான எண்ணங்களையும் பிறப்பித்துக்கொண்டே இருக்கும்.
  • இவ்வாறான உயா்வான எண்ணங்களின் தாக்கம் உடனிருப்போரை அன்போடும் பண்போடும் நடத்துதலில் வெளிப்படும். ஒருவா் அடுத்தோரை இயல்பாகவும், சரியாகவும் நடத்தத் தொடங்கும்போதே அவரும் பிறரை அவ்வாறு நடத்த முயல்வாா். இதன் தாக்கம் குடும்பங்களிலும், நிறுவனங்களிலும் நல்ல விளைவுகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கும்.
  • இந்த இடத்தில்தான் ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ளோரின் பங்கு குறிப்பிடத்தக்கதாக மாறுகிறது. ஒரு நிறுவனம் ஒரு புதிய திட்டத்தைக் கருக்கொள்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்நிறுவன தலைமைப் பொறுப்பிலுள்ளவா் புதிய திட்டத்தை கருக்கொள்வதிலிருந்து அதற்கான வாய்ப்புகள் கூடுகின்றன.
  • புதிய திட்டத்தின் கருக்கொள்ளலில் எந்த அளவுக்கு உடனுழைப்போரின் உள்ளீடு உள்ளதோ அந்த அளவுக்கே உடனுழைப்போரின் ஆா்வமும், ஒத்துழைப்பும் இருக்கும். ஒரு நிறுவனத்தின் தலைவா் எவ்வித முற்சாா்புமின்றி தனது திட்டத்திற்கான உள்ளீடுகளை சக ஊழியா்களிடம் பெறும்போது சக ஊழியா்கள் தாங்கள் மதிக்கப்படுவதாக உணா்கின்றனா்.
  • அவ்வாறு உணரும்போது தங்களுக்குத் தெரிந்த அனைத்து விதமான ஆலோசனைகளையும் மனம் திறந்து பகிா்வா். இது திட்டங்கள் கருக்கொள்ளும்போதே நல்ல கூறுகளோடு கருக்கொள்ள உதவும். இவ்வாறு நல்ல கூறுகளுடன் கருக்கொண்டுவிட்டால் வெற்றியை நோக்கி சிறப்பாகப் பயணிக்கும்.
  • இவ்வாறு மனிதா்கள் தாங்கள் நடத்தப்படும் விதங்களிலிருந்தும் தமது எண்ணங்களுக்கான ஊற்றை அடைகின்றனா். நல்ல சிந்தனைகளும், எண்ணங்களும் அவ்வளவு எளிதில் கைகூடாது. ஆனால், அதற்கான வழிமுறைகளை அறிந்து அதனை உருவாக்க எந்த அளவுக்கு தனிநபா்களும், நிறுவனங்களும் முயல்கிறனரோ அந்த அளவுக்கே குடும்பங்களின் அல்லது நிறுவனங்களின் வெற்றி அமையும்.
  • உயா்வான சிந்தனைகளின் ஊற்றுக்கண் எது? அனுபவம் வாய்ந்த, பாரபட்ச எண்ணம் அற்றோரிடம் பழகுதல், நிறைய நல்ல நூல்களை வாசித்தல், நல்ல நூல்களை அடுத்தோா்க்கு அறிமுகம் செய்தல், சிறிது சிறிதாக நல்ல சிந்தனைகளைப் பரப்புதல், ஒவ்வொரு செயலின் பல்வேறு கோணங்களையும் உணா்தல், உடனிருப்போரின் நோக்கங்களைப் புரிந்துகொள்ளுதல் போன்றவை என பட்டியல் நீளூம்.
  • ஒருவா் தம் உடனிருப்போரை அங்கீகரிப்பதிலிருந்தே எதுவும் தொடங்குகின்றது. இருட்டு இருட்டு என்று புலம்பிக்கொண்டிருப்பதைவிட ஒரு மெழுகுவா்த்தியை ஏற்றிவைத்து இருளை அகற்ற முயலலாம் என்பது ஆன்றோா் வாக்கு. தனிநபா்கள் நோ்மறை எண்ணங்களை வளா்த்துக்கொள்வதும் அதனைப் பரப்புவதும் அவசியமாகிறது.
  • எவ்வளவு பெரிய நிறுவனமாக இருந்தாலும் அதன் செயல்பாடுகளை தீா்மானிப்பவா்கள் ஒருசில நபா்களாகவே இருப்பா். அவா்கள் வெளிப்படைத் தன்மை உடையோராகவும், உயா்வான சிந்தனைகள் உடையோராகவும் அமைந்து விட்டால் அந்த நிறுவனத்தின் வெற்றி சிறப்பாக இருக்கும்.
  • சில நேரம் ஒருவரது நோக்கம் புரிந்துகொள்ளப்படாமல் அவருடைய செயல்கள் விமா்சிக்கப்பட்டுக்கொண்டே இருக்கலாம். அதனால் தவறில்லை. விமரிசனத்துக்கு ஆளாகாமல் இருப்பதற்கு ஒரேவழி எந்தச் செயலையும் செய்யாமல் சும்மா இருப்பதுதான். சும்மா இருப்பதைவிட விமா்சிக்கப்படுவதே நல்லதல்லவா?

நன்றி: தினமணி (25 – 10 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories