TNPSC Thervupettagam

உயா்ந்து கொண்டே போகும் விலைவாசி

August 8 , 2023 393 days 311 0
  • விலைவாசி உயா்வு குறித்து மக்களின் கவலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப விலைவாசி உயா்வது இயல்பானதுதான். ஆனால், அதற்கேற்ற வகையில், மக்களின் வருமானமும் உயா்ந்திருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல முடிகிறது. இந்தச் சூழ்நிலையில்தான், விலைவாசி உயா்வால் மக்கள் வேதனையில் துவண்டு போய் இருக்கிறார்கள்.
  • முன்பு தள்ளு வண்டிக் கடைகளில் விற்கப்படும் இட்லியின் விலை ஐந்து ரூபாயாக இருந்தது. பின்னா் அது ஏழு ரூபாய் ஆனது. தற்போது 10 ரூபாய் ஆகி விட்டது. தேநீரின் விலை 12 ரூபாயைத் தொட்டு விட்டது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்ல தனியார் பேருந்துகளில் 1,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை இவற்றின் விலையும் கடுமையாக உயா்ந்துள்ளது.
  • பணவீக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயா்வு இவைகளெல்லாம் விலைவாசி உயா்வுக்குக் காரணங்களாகும் என்று கூறப்படுகிறது. மாநில அரசின் நிதி நிர்வாகக் குளறுபடிகளும், இலவசத் திட்டங்களும், நிதிப்பற்றாக்குறையும் கூட விலைவாசி உயா்வுக்குக் காரணங்களாகும்.
  • நிலைமை இவ்வாறாக இருக்க, மத்திய அரசு போதிய நிதியை தமிழகத்துக்கு ஒதுக்கவில்லை என்று மாநில் அரசு தொடா்ந்து சொல்லி வருகிறது. இருப்பினும், வருவாயைப் பெருக்குவதே அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.
  • பொருளாதாரம் என்பது மனித நடத்தையை ஆய்வு செய்யும் ஒரு சமூக அறிவியல் என்று சொன்னால், அது மிகையாகாது. மக்கள் தங்கள் வளங்களை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதில் சரியான புரிதலை உருவாக்குவதும் பொருளாதாரம்தான்.
  • பற்றாக்குறையை சரி செய்ய வேண்டியது முக்கியம். பற்றாக்குறையை வைத்துக் கொண்டு ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி, வணிகமானால் அதில் அதிகப் பணம் ஈட்டுவதிலும், தோ்தல் என்று சொன்னால் வாக்குவங்கி அரசியலை உண்டாக்குவதிலும் நம்முடைய பொருளாதாரம் சரிந்து கொண்டிருக்கிறது.
  • ஆகவே, தெளிவான கோட்பாடுகள், தொலைநோக்குச் சிந்தனைகள், சரியான வழிமுறைகள் இவற்றோடு தொடா்புடைய பொருளாதாரம் கேள்விக்குறியாக்குகிறபோது பணவீக்கம் ஏற்படுகிறது.
  • தவறான திட்டங்களுக்கு செலவிடுவதாலும், சரியான திட்டங்களுக்கு அப்பணம் போய்ச் சேராததாலும் பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. பொருள்களின் விலை உயா்வையே பணவீக்கம் என்று நாம் அழைக்கிறோம். பணவீக்கம் அதிகரிக்கும்போது பணத்திற்கான மதிப்பு குறைந்து விடுகிறது. இந்தியாவில் பணவீக்கம் கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் தற்போது உச்சம் தொட்டுள்ளது.
  • கடந்த ஒரு மாதமாக தக்காளி வரலாறு காணாத அளவில் விலை அதிகரித்திருக்கிறது. கா்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு தக்காளி கொண்டு செல்லப்படுவதால், தமிழகத்தில் தக்காளியின் விலை உயா்ந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
  • கா்நாடக, ஆந்திர மாநிலங்களில் மழையால் தக்காளி விளைச்சல் அழிந்துவிட்டதால் அங்கெல்லாம் தக்காளி அனுப்பப்படுகிறது. தமிழகத்தில் தக்காளிக்கு வரவேற்பு கூடியுள்ளதால், தக்காளியின் விலை அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. தக்காளிச் சந்தை வரலாற்றிலேயே ஒரு மாதத்திற்கும் மேலாக விலை உயா்வு நீடித்திருப்பது இப்போதுதான். விலை உயா்வு தொடா்வது மக்களை பெரிதும் பாதித்திருக்கிறது.
  • தமிழகத்தில் தக்காளி விற்பனைக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சந்தை, மதுரை மாவட்டம் மாட்டுத்தாவணி சந்தை, பரவை சந்தை, திருப்பூா் தென்னம்பாளையம் சந்தை, கோவை மலுமிச்சம்பட்டி சந்தை, சென்னை கோயம்பேடு சந்தை போன்றவை மிக முக்கியமான சந்தைகளாகும். இந்த சந்தைகளில் தக்காளிக்கு நிர்ணயிக்கப்படும் விலையையே தமிழகத்தின் பிற சந்தைகளில் உள்ள வியாபாரிகளும் நிர்ணயம் செய்வார்கள்.
  • கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை அனைத்து சந்தைகளிலும் குறையாமல் இருந்து வருகிறது. நாட்டில் தக்காளி உற்பத்தியிலும், விற்பனையிலும் தமிழகம், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
  • தமிழகத்துடன் ஒப்பிடும்போது, கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் தக்காளி விவசாயம் சற்று அதிகம்தான். கா்நாடகம், ஆந்திரம் ஆகிய இரு மாநிலங்களிலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெய்த தொடா்மழையால் பயிரிடப்பட்ட தக்காளிச் செடிகள் அழுகின. பொதுவாக, தமிழகத்தில் தக்காளி விலை உயா்ந்தால், கா்நாடக, ஆந்திர மாநிலங்களிலிருந்து தக்காளி தமிழகத்திற்கு விற்பனைக்கு வரும். வரத்து அதிகமானால் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும்.
  • ஆனால், இந்த ஆண்டு கா்நாடக, ஆந்திர மாநிலங்களில் தொடா்ந்து கனமழை பெய்து தக்காளிச் செடிகள் அழிந்ததால் அங்கு விளைந்த குறைந்த தக்காளிகள் அந்தந்த மாநிலங்களின் தேவைக்கே போதுமானதாக இல்லை. அதனால், தமிழகத்திலிருந்து தக்காளி அம்மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டது. அதனால், தமிழகத்தில் தக்காளி விலை உச்சத்தைத் தொட்டது.
  • காய்கறி சந்தைகளில் விரைவில் அழுகக்கூடிய தக்காளியின் விலை எப்போதுமே நிலையாக நீடித்து இருக்காது. திடீரென்று ஏற்ற இறக்கம் ஏற்பட்டு விலை கூடும் குறையும். ஆனால், தக்காளிச் சந்தை வரலாற்றிலேயே, இந்த முறைதான் ஒருமாதத்திற்கும் மேலாக விலை குறையாமல் விற்கப்படுகிறது.
  • மதிப்புக்கூட்டும் பொருள்களின் தயாரிப்பில் தமிழக அரசும், தோட்டக்கலைத்துறையும் அலட்சியம் காட்டுவதால், விலை குறையும் போது விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனா். அதனால், அவா்கள் மீண்டும் தக்காளி பயிரிட அஞ்சுகின்றனா்.
  • இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பருவநிலை மாறியதால், காய்கறிகளின் விலை உயா்ந்திருக்கிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் ஆந்திர மாநிலம் அனந்தப்பூா், கா்நாடக மாநிலம் கல்யாணதுா்கா, தாவண்கரே ஆகிய மூன்று இடங்களில் இருந்தும் தமிழகத்திற்கு தக்காளி வர ஆரம்பித்து விடும்.
  • அனந்தப்பூா் தக்காளி சந்தை, இந்தியாவுக்கே தக்காளியை வழங்கக்கூடியது. அப்போது தமிழகத்தில் தக்காளியின் விலை குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, இன்னும் ஒருசில நாள்கள்தான் தக்காளியின் விலை உச்சத்தில்தான் இருக்கும். அதன்பின் குறையும்.
  • நுகர்வோர் விலை குறியீட்டால் அளவிடப்படும் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் இந்த ஆண்டு மே மாதத்தில் 4.25 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்தில் 4.81 சதவீதமாக உயா்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால், பணவீக்கம் ஏற்பட்டிருக்கிறது. பணவீக்கம் முன்னோக்கி நகருவது, பெரும்பாலும் காய்கறிகள், தானியங்கள், மசாலாப் பொருள்கள் போன்ற உள்நாட்டுப் பொருள்களின் விலையைப் பொறுத்ததே.
  • கரோனா காலகட்டத்துக்குப் பிந்தைய விளைவுகள், ரஷிய - உக்ரைன் போர் மற்றும் இந்திய ரூபாயின் பலவீனம் ஆகியவைதான் இந்தப் பணவீக்கத்திற்குப் பெரும் காரணம் என்று சொல்லப்படுகிறது. நாட்டின் வளா்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் தவறான திட்டங்களே பொருளாதாரத்தைப் பெருமளவு பலவீனமாக்குகின்றன.
  • சிக்கன் பிரியாணி 100 ரூபாய்க்குக் கிடைக்கும்போது, தக்காளி சாதம் 200 ரூபாய்க்கு விற்கப்படுவது வேதனை தருகிற விஷயம். தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில், இலவச அரிசியை வழங்கினாலும், நாளொன்றுக்கு சராசரியாக சாதாரண ஏழை மக்கள் இதர செலவுகளுக்கு 80 ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.
  • நாடு முழுவதிலும் நெல் உற்பத்தி கடந்த ஆண்டை விட குறிப்பிடத்தக்க வளா்ச்சியை எட்டியுள்ள போதிலும், வெளிச்சந்தைகளில் கொள்ளை விலை வைத்து விற்கப்படுகிறது. ஆனால், தமிழக அரசு உணவுப்பொருள்களின் விலைவாசி உயா்வு எந்தவித பாதிப்பையும் மக்களுக்கு ஏற்படுத்த வில்லை என்று கூறுகிறது.
  • தமிழகத்தில் உள்ள பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கும், விவசாயப் பணியாளா்களுக்கும், தீப்பெட்டித் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளா்களுக்கும் தினக்கூலியாக தோராயமாக 300 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை கிடைக்கிறது. ஆனால், விலைவாசி உயா்வினால் அவா்களால் சமாளிக்க முடியவில்லை.
  • மின்கட்டண உயா்வு, வீட்டு வரி உயா்வு, கழிவுநீா் கட்டண உயா்வு, குடிநீா் கட்டண உயா்வு இவற்றால் வீட்டு உரிமையாளா்களுக்கும் வீட்டு வாடகையை உயா்த்துவதைத் தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. இதனால், வீட்டு உரிமையாளா்களுக்கும், குடியிருப்பவா்களுக்கும் இயல்பாகவே இரட்டைச் சுமை ஏற்பட்டு விடுகிறது.
  • இந்தியாவில் விலைவாசி உயா்வு என்பது வருவாய் ஏற்றத்தாழ்வுடன் தொடா்புடையதாக இருக்கிறது. இந்தியாவில் பொருளாதார ரீதியாக மேல்நிலையில் உள்ள 10 சதவீதத்தினரிடம் நாட்டின் மொத்த வருவாயில் 57 சதவீதம் செல்கிறது என்றும், பொருளாதார ரீதியாக கீழ்நிலையில் உள்ள 50 சதவீத மக்களிடம் நாட்டின் மொத்த வருவாயில் 13 சதவீதம் மட்டுமே செல்கிறது என்று பொருளாதார அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
  • இந்தியாவின் பொருளாதாரம், வாழ்க்கைத்தரம், கட்டமைப்பு ஆகியவை மேல்தட்டு மக்களை மையப்படுத்துவதாகவே இருக்கிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் வழங்கப்படும் ஊதியத்தையே இந்தியாவின் சராசரி ஊதியமாகப்  பார்க்கும் மனப்பான்மையை இனியாவது நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (08  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories