- இந்தியாவில் தெரு நாய்களின் தொல்லை மக்களின் உயிரைப் பறிக்கும் அபாயகரமான நிலையை எட்டியிருக்கிறது. ராஜஸ்தானில் ஒரு மருத்துவமனையிலிருந்து பச்சிளம் குழந்தையைத் தெரு நாய்கள் தூக்கிச் சென்றுவிட்டதாகச் செய்திகள் வெளியாகின; தெலங்கானாவில் நான்கு வயது குழந்தையைத் தெரு நாய்கள் கடித்துக் குதறிக் கொன்ற காட்சிகள் சிசிடிவியில் பதிவாகின; சென்னையில் 55 வயது பெண்மணி ஒருவர், தன் மகனுடன் இருசக்கர வாகனத்தில் பின்இருக்கையில் அமர்ந்து சென்றபோது நாய் துரத்தியதில் கீழே விழுந்து தலையில் அடிபட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார்.
- ‘நாயால் மனிதர்கள் கடிபடுவது’ செய்தி ஆகாது என்பது இதழியலின் அடிப்படை பாடம்; ஆனால், அதுவே தலைப்புச் செய்தியாகும் அளவுக்கு இன்றைக்குப் பிரச்சினை மோசமடைந்திருப்பதைப் புறந்தள்ளிவிட முடியாது.
- இந்தியாவில் 1.5 கோடி தெரு நாய்கள் இருப்பதாகக் கால்நடைக் கணக்கெடுப்பு (2019) தெரிவிக்கிறது; இந்நிலையில், உலகின் ‘நாய்க்கடி-ரேபிஸ் தலைநகரம்’ என்கிற மோசமான பெருமையைப் பெற்ற நாடாகவும் இந்தியா இருக்கிறது.
- மத்திய-மாநில அரசுகள், நீதித் துறை, நகராட்சிகள், அரசு சாரா அமைப்புகள் எனப் பல தரப்பினரும் இப்பிரச்சினையை உணர்ந்து அங்கீகரித்திருந்தாலும், சிக்கல் நீடிக்கவே செய்கிறது.
- உலகின் பெரும்பாலான நாடுகள் தெரு விலங்குகளைக் கையாளுவதற்கான திட்டவட்டமான விதிகளை வகுத்திருக்கின்றன. பதிவுசெய்யப்பட்ட, கயிற்றில் கட்டப்பட்ட விலங்குகளுக்கு அவற்றின் காப்பாளர்களே பொறுப்பு; அப்படி இல்லாத தெரு நாய்கள் உள்ளிட்ட விலங்குகளிடமிருந்து மக்களைக் காக்கும் பொறுப்பு அரசிடம்தான் இருக்கிறது.
- சென்னையில் தெரு நாய்களைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள தலா 5 பணியாளர்களைக் கொண்ட 16 குழுக்கள் மூலம், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 297 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
- விலங்குகள் வதைத் தடுப்புச் (PCA) சட்டம், (மேம்படுத்தப்பட்டு வரும்) விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாடு (நாய்கள்) விதிகள் - 2001 ஆகியவை தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், மக்களின் பாதுகாப்பை மேம்படுத்த ஒன்றும் செய்யவில்லை.
- விலங்குகள் பிறப்புக் கட்டுப்பாட்டு விதிகள், 2022இல் முன்மொழியப்பட்டிருக்கும் வரைவு விதிகள், கருத்தடை-தடுப்பூசி செலுத்துவதில் நடைமுறை மாற்றங்களை மட்டுமே முன்வைக்கின்றன; மேலும், ‘குணப்படுத்த முடியாத நோய்வாய்ப்பட்ட, உயிருக்கு ஆபத்தான’ நாய்களை மட்டுமே கருணைக் கொலை செய்ய அனுமதிக்கிறது; இதைத்தான் தற்போதுள்ள விதிகளும் அனுமதிக்கின்றன.
- இந்த விதிகள் இரண்டுமே கவனிக்கப்படாத தெரு நாய்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், பிரச்சினையின் தீவிரத்தை அவை கணக்கில் கொள்ளவில்லை.
- எனினும், குப்பைத் தொட்டிகள் சீரான இடைவெளியில் காலிசெய்யப்படுவதை உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகள் உறுதிசெய்தல்; தெரு நாய்களுக்கு உணவளிப்போரைத் தண்டித்தல்; இறைச்சிக் கடைகள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவை உணவு, இறைச்சியைக் கொட்டுவதைத் தடுத்தல்; தெரு நாய்களைத் தத்தெடுக்க முன்வருவோரை அங்கீகரித்துப் பரிசுகளை அறிவித்தல் உள்ளிட்ட வழிமுறைகளையும் அரசு பரிசீலிக்க வேண்டும். தெரு நாய்களால் இன்னொரு உயிர் பலியாகிவிட அனுமதிக்கக் கூடாது!
நன்றி: தி இந்து (01 – 04 – 2023)