TNPSC Thervupettagam

உயிர் காக்கும் பணியில் உயிரிழப்பு கூடாது

June 16 , 2023 388 days 260 0
  • தமிழ்நாட்டில் 48 மணி நேரத்தில் நான்கு மருத்துவர்கள் இதயம், நுரையீரல் செயலிழப்புக்கு உள்ளாகி பணியிடத்திலேயே உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. தீய பழக்கங்கள் இல்லாதவர்களாகவும் உடல்நலத்தைப் பேணியவர்களாகவும் அறியப்பட்ட இவர்கள் அகால மரணமடைந்திருப்பது, தமிழ்நாட்டில் மருத்துவர்களின் பணிச்சூழல் குறித்த கவனத்தை ஈர்த்துள்ளது.
  • உயிரிழந்தவர்களில் மூவர் அரசு மருத்துவமனைகளிலும் ஒருவர் தனியார் மருத்துவமனையிலும் பணியாற்றி வந்துள்ளனர். பணிச்சுமை சார்ந்த மன அழுத்தம்தான் இவர்களின் மரணத்துக்குக் காரணம் என்று அரசு மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அரசு மருத்துவர்களுக்குப் பணிச்சுமைப் பிரச்சினையே இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். மேலும், அரசு மருத்துவமனைகளில் நிலவும் 1,021 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
  • ஆனால், அரசு மருத்துவமனைகளுக்குச் செல்வோர் அங்கு மருத்துவர்களின் பணிச்சுமையைக் கண்கூடாகப் பார்க்க முடியும். பயிற்சி மருத்துவர்களோ வாரம் ஒருமுறை 36 மணி நேரம் தொடர்ச்சியாகப் பணியாற்றுவது, வார விடுமுறைகளையும் பிற விடுமுறைகளையும் துறக்க நேர்வது உள்ளிட்ட பல நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர்.
  • 2022 ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவப் பணியாளர்களின் பணி நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிப்பதற்கான அரசு உத்தரவை எதிர்த்து மருத்துவர்களும் மருத்துவ சங்கங்களும் போராட்டம் நடத்தின. அப்போது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் வரையறுக்கப்பட்ட பணி நேரத்தைக் காட்டிலும் 4-5 மணி நேரம் கூடுதலாகப் பணியாற்ற வேண்டிய நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தனர். பிற அரசு மருத்துவர்களின் நிலையும் கிட்டத்தட்ட இதுதான்.
  • மருத்துவப் பணிக்கான தேவை எப்போது வேண்டுமானாலும் எழலாம் என்னும் நிலையில், கால வரையறையைக் கறாராக நடைமுறைப்படுத்துவது எளிதானதல்ல. எனினும், அதைக் காரணம் காட்டி, மருத்துவர்களின் அடிப்படை உரிமைகளும் பணிசார்ந்த உரிமைகளும் மறுக்கப்பட்டு விடக் கூடாது. அரசு மருத்துவர்களின் பணி நேரமும் பணிச் சுமையும் குறைய வேண்டும் என்றால், காலிப் பணியிடங்களை நிரப்புவது மட்டும் போதாது. மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்பக் கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதும் அவசியம்.
  • அதிகப் பணி நேரத்தைத் தாண்டி சிறப்பு மருத்துவர்கள் எந்த நேரமும் நோயாளிகளின் அவசர சிகிச்சைத் தேவைகளுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. அறுவைசிகிச்சை நிபுணர்கள் நீண்ட நேர அறுவைசிகிச்சைகள் பலவற்றை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
  • இதுபோன்ற பணிகளால் ஏற்படும் மனஅழுத்தத்திலிருந்து மருத்துவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முன்னெடுப்பதும் அரசின் கடமை. தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவர்களுக்கான பணி நேர விதிமுறைகள் சட்டப்படி அமைந்திருப்பதையும் அவை முறையாகப் பின்பற்றப்படுவதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
  • அத்துடன் அதிகப் பணம், புகழை ஈட்டுவதற்காக நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றுவதும் இளம் மருத்துவர்கள் பலரின் மரணத்துக்கு வித்திடுவதாகத் தெரியவந்துள்ளது. மருத்துவர்கள் தம் உடல்நலனுக்கும் உளநலனுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். உயிர் காக்கும் பணியில் உள்ள மருத்துவர்கள் உயிரிழக்கும் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.

நன்றி: தி இந்து (16 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories