TNPSC Thervupettagam

உயிர் காக்கும் ரத்த தானம்

September 1 , 2024 135 days 167 0

உயிர் காக்கும் ரத்த தானம்

  • அடுத்தவர்களுக்குத் தானமாகக் கொடுப்பதற்குத் தன்னிடம் எதுவுமே இல்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆரோக்கியமாக உள்ளவர்கள் அனைவரிடத்திலும் ரத்தம் இருக்கிறது. இந்த ரத்தம், தேவைப்படுபவர்களுக்கு வழங்கக்கூடிய ஒரு பரிசுப் பொருள். எனவேதான் ‘தானத்தில் சிறந்தது ரத்த தானம்’ என்கிறோம். ஒவ்வொரு முறை தானமாகக் கொடுக்கப்படும் ரத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றுகிறது.
  • நாட்டில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் ரத்தத்துக்காகக் காத்திருக்கிறார்கள். வருடத்துக்கு நான்கு கோடி பாட்டில் ரத்தம் தேவை. கிடைப்பதோ 40 லட்சம் பாட்டில்கள். என்னதான் பொதுமக்களுக்கு ரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு கொடுத்தாலும், ரத்தத்தைத் தானமாகக் கொடுப்பதற்குப் பலருக்கும் தயக்கம் இருக்கவே செய்கிறது.

ரத்தம் ஓர் அறிமுகம்!

  • ரத்தம் என்பது ஒரு திரவ உறுப்பு. நம் உடலில் சராசரியாக ஐந்து லிட்டர் ரத்தம் இருக்கிறது. அதில் ‘பிளாஸ்மா’ 55%. இதுதான் திரவமாக இருக்கிறது. மீதி 45% ரத்த அணுக்களாக இருக்கிறது. பிளாஸ்மாவில் 90% தண்ணீர் உள்ளது. ஆக்ஸிஜன், கார்பன்-டை-ஆக்ஸைடு, உணவுச்சத்துகள், தாதுக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்புப் புரதங்கள், ஹார்மோன்கள், உடல் கழிவுகள் போன்றவை பிளாஸ்மாவில் மிதந்துகொண்டிருக்கும் மற்ற பொருள்கள்.
  • சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள் என ரத்த அணுக்கள் மூன்று வகைப்படும். ரத்த வெள்ளையணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகின்றன. தட்டணுக்கள் ரத்தம் உறைதலுக்கு உதவுகின்றன. 18 வயதைக் கடந்த ஆண்களின் ரத்தத்தில் ஒரு கன மி.மீ.க்கு சுமார் 52 லட்சம் சிவப்பணுக்கள் இருக்கும். இது பெண்களுக்கு 45 லட்சம். சிவப்பணுக்கள்தான் ரத்தத்துக்குச் சிவப்பு நிறத்தைத் தருகின்றன. இன்னும் குறிப்பாகச் சொன்னால், இவற்றில் இருக்கும் ‘ஹீமோகுளோபின்’ எனும் இரும்பு மிகுந்த புரதப்பொருள் சிவப்பாக இருப்பதால்தான், ரத்தமும் சிவப்பாக இருக்கிறது.
  • உடல் பாகங்களுக்குத் தேவைப்படும் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்வதும், நுரையீரல் வழியாக கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியேற்ற உதவுவதும் ஹீமோகுளோபின் செய்யும் முக்கியமான வேலைகள். சாதாரணமாக ஒருவருக்கு இதன் அளவு 100 மில்லி ரத்தத்தில் 15 கிராம் வரை இருக்க வேண்டும்.

யாருக்கு ரத்தம் தேவை?

  • நம் நாட்டைப் பொறுத்தவரை சாலை விபத்துகளில் அடிபட்டு ரத்தம் இழப்பவர்கள் அதிகம். இயற்கைப் பேரழிவுகளாலும் விபத்து ஏற்பட்டு ரத்தமிழந்து ரத்தம் செலுத்தப்பட வேண்டிய அவசியம் வரலாம். அடுத்து, ரத்தசோகை, கருச்சிதைவு, கருக்கலைப்பு, சிசேரியன் அறுவைச் சிகிச்சை, முறையற்ற மாதவிலக்கு போன்ற காரணங்களால் பெண்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. பிரசவத்தின்போது சில பெண்களுக்கு ரத்தம் தேவைப்படும்.
  • தலசீமியா மற்றும் அரிவாள் செல் ரத்தசோகை நோயுள்ள குழந்தைகளுக்கு ரத்தம் தேவைப்படும். ஆண், பெண் இருபாலருக்கும் சாதாரண வயிற்று அறுவைச் சிகிச்சையிலிருந்து ‘இதய பை-பாஸ்’ சிகிச்சை உள்ளிட்ட இதயநோய்க்கான பல அறுவைச் சிகிச்சைகள், உறுப்பு மாற்றுச் சிகிச்சைகள் போன்ற பெரிய அறுவைச் சிகிச்சைகள் வரை பலதரப்பட்ட சிகிச்சைகளுக்கும், ரத்த வாந்தி எடுப்பவர்களுக்கும் ரத்தம் தேவைப்படுவது உண்டு.
  • டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரத்தத் தட்டணுக்கள் குறைந்துவிடும். அப்போது இவர்களுக்கு ரத்தத் தட்டணுக்கள் செலுத்த வேண்டி வரும். ரத்தப் புற்றுநோய், ஹீமோபிலியா நோய் உள்ளவர்களுக்கும், கடுமையான தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கும் ரத்தம், பிளாஸ்மா அல்லது ரத்தத்தில் தயாரிக்கப்பட்ட ரத்தப் பொருள்கள் (Blood products) தேவைப்படும்.

யார் ரத்த தானம் செய்யலாம்?

  • 18 வயது முதல் 65 வயது வரை ஆரோக்கியமாக உள்ள எல்லோரும் ரத்த தானம் செய்யலாம். ரத்தம் உருவாகின்ற எலும்பு மஜ்ஜையின் தரம் இந்த வயதுக்கு மேல் குறைந்துவிடும் என்பதால், 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் ரத்த தானம் பெறுவதில்லை. நீரிழிவு உள்ளவர்களும் ரத்த தானம் செய்யலாம். தானம் கொடுப்பவரின் உடல் எடை 45 கிலோவுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். அவருடைய ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 100 மிலி ரத்தத்தில் 12.5 கிராமுக்குக் குறையக் கூடாது. ரத்த அழுத்தம் 120/80 லிருந்து 140/90 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும். நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 100க்கு மேல் இருக்கக் கூடாது. உடல் வெப்பம் சரியாக இருக்க வேண்டும்.

யார் ரத்த தானம் செய்யக் கூடாது?

  • 18 வயதுக்கு உள்பட்டவர்கள், கர்ப்பிணிகள், தாய்ப்பால் ஊட்டும் பெண்கள், மாதவிலக்கு நேரத்தில் உள்ள பெண்கள், எய்ட்ஸ், சிபிலிஸ் போன்ற பால்வினை நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது. இதயநோய், சிறுநீரக நோய், வலிப்பு நோய், புற்றுநோய், ரத்தக்கசிவு நோய்கள், மனக்கோளாறுகள், கடுமையான ஆஸ்துமா ஆகியவற்றுக்கு சிகிச்சை பெறுகிறவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது.
  • பெரிய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள் 6 மாதங்களுக்கு உள்ளாகவும், சிறிய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள் 3 மாதங்களுக்கு உள்ளாகவும் ரத்த தானம் செய்யக் கூடாது. மலேரியா காய்ச்சல் வந்தவர்கள், அம்மை நோய் வந்தவர்கள் 6 மாதம் வரையிலும், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு வருடத்துக்குள்ளும் ரத்த தானம் செய்ய அனுமதியில்லை.
  • காசநோய் உள்ளிட்ட தொற்றுநோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் ரத்த தானம் செய்யக் கூடாது. மூன்று மாதங்களுக்குள் ஏற்கெனவே ரத்த தானம் செய்திருந்தாலும் ரத்த தானம் செய்யக் கூடாது. 24 மணி நேரத்துக்குள் மது அருந்தி உள்ளவர்களும் ரத்த தானம் செய்யக் கூடாது.

எவ்வளவு ரத்தம் எடுக்கப்படும்?

  • தானமாகத் தருபவரிடம் அவரின் உடல் எடையைப் பொறுத்து, 250 மிலி முதல் 300 மிலி வரை ரத்தம் பெறப்படும். ரத்தம் சேகரிக்கப்படும் பையில் 60 மி.லி. அளவுக்கு சோடியம் சிட்ரேட் மற்றும் குளுக்கோஸ் திரவம் CPDA (citrate-phosphate-dextrose-adenine) அல்லது SAGM (saline-adenine-glucose-mannitol) இருக்கும். சோடியம் சிட்ரேட் ரத்தம் உறைவதைத் தடுத்துவிடும். குளுக்கோஸ் ரத்த அணுக்களுக்கு உணவாகிவிடும். ஒருமுறை தானமாகப் பெற்ற ரத்தத்தைக் குளிர்சாதனப்பெட்டியில் 6 டிகிரி செல்சியஸ் குளிர்ச்சியில் வைத்து 21லிருந்து 42 நாட்கள் வரை பாதுகாக்கலாம். தட்டணுக்களை 5 நாட்களுக்குப் பாதுகாக்கலாம். பிளாஸ்மாவைப் பொடியாக்கி உறையவைத்து, ஓராண்டுக்குள் பயன்படுத்தலாம்.
  • ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி, மஞ்சள் காமாலைக்கான (Hepatitis B, Hepatitis C), ஆன்டிஜன் மற்றும் ஆன்டிபாடி, சிபிலிஸ் (Syphilis) எனும் பால்வினை நோய்க்கான அடையாளம், எய்ட்ஸ் நோயை உருவாக்கும் ஹெச்ஐவி (HIV-type 1, type 2) கிருமிக்கான ஆன்டிபாடி, மலேரியா கிருமிகள் போன்றவை அதில் இல்லை என்று உறுதிசெய்த பிறகே மற்றவர்களுக்குப் பயன்படுத்தப்படும். ரத்த தானம் செய்வதால் அந்த நபருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இரைக்கிற கிணற்றில் தண்ணீர் ஊறுவதைப்போல் இரண்டு வாரத்தில் இந்த அளவு ரத்தம் மறுபடியும் உற்பத்தியாகிவிடும். ஒருவரிடமிருந்து பெறப்பட்ட ரத்தத்தை 42 நாட்களுக்குப் பாதுகாக்க முடியும். ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒருமுறையும் பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் ரத்த தானம் செய்யலாம்.

அணுக்கள் தானம் தெரியுமா?

  • முன்பெல்லாம் மொத்த ரத்தத்தையும் பெற்று அடுத்தவர்களுக்குக் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது. இப்போது அப்படியில்லை. ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் குறைபாடு எது எனத் துல்லியமாகத் தெரிந்து, அதற்கேற்ப ரத்தம் வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஹீமோகுளோபின் குறைந்தவர்களுக்கு, சிவப்பணுக்களை மட்டுமே பிரித்தெடுத்து வழங்கப்படுகிறது. தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அவற்றை மட்டுமே வழங்குகிறார்கள். தீக்காயம் பட்டவர்களுக்கு பிளாஸ்மா மட்டுமே தேவைப்படும். அப்போது அவர்களுக்கு பிளாஸ்மா மட்டுமே வழங்கப்படும். இப்படி ரத்த அணுக்களைப் பிரித்துக் கொடுப்பதற்கு ‘செல் செப்பரேட்டர்’ என்ற கருவி இப்போது வந்திருக்கிறது.

ரத்த தானம் செய்ய எவ்வளவு நேரம் ஆகும்?

  • ஒரு பாட்டில் ரத்தத்தைச் சேகரிக்க 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். முழு செயல்முறையும் ஒரு மணிநேரத்தில் முடிந்துவிடும்.

‘ரத்த வங்கி’யின் பணி

  • ஒருவர் தானம் செய்யும் ரத்தத்தைச் சேகரித்து, அணுக்களைப் பகுத்துப் பதப்படுத்தி, சேமித்து, தேவைப்படுபவர்களுக்கு வழங்கும் நிறுவனம், ரத்த வங்கி (Blood bank). கொடையாளரின் ரத்த வகையும் அதைப் பெறுகிறவரின் ரத்த வகையும் ஒன்று போலிருக்கிறதா, அந்த ரத்தம் புதியவருக்குப் பொருந்துகிறதா எனப் ‘பொருத்தம்’ (Cross matching) பார்த்து, ஒப்புதல் கொடுக்க வேண்டியது ரத்த வங்கியின் முக்கியப் பணி. அதன் பிறகே ரத்தம் செலுத்தப்பட வேண்டும். பிளாஸ்மா கொடுப்பதற்கு இப்படிப் பொருத்தம் பார்க்கத் தேவையில்லை.

ரத்தம் கொடுப்பவர் கவனிக்க!

  • ரத்தம் கொடுக்கும் முன்…
  • வெறும் வயிற்றில் ரத்த தானம் செய்யக்கூடாது.
  • தேவைக்குப் பழச்சாறு, தண்ணீர், குளுக்கோஸ் அருந்திக்கொள்ள வேண்டும்.
  • கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிட்ட பின் ரத்த தானம் செய்யக் கூடாது.
  • மது அருந்திவிட்டும் ரத்த தானம் செய்யக் கூடாது.
  • ரத்தம் கொடுப்பதற்கு முன்பு காபி அருந்த வேண்டாம்.
  • தானிய உணவுகள் சாப்பிட்டுக்கொள்வது நல்லது.
  • முட்டை சாப்பிட்டுக்கொள்ளலாம்.
  • ரத்தம் கொடுத்த பிறகு…   
  • ரத்தம் கொடுத்தவுடன் வெளியில் செல்லக் கூடாது.
  • 20 நிமிடங்களுக்கு ஓய்வு எடுத்த பிறகு வெளியில் செல்லலாம்.
  • அப்போதுகூடத் தனியாக வாகனத்தை ஓட்டிச்செல்லக் கூடாது.
  • ரத்தம் கொடுத்த பிறகு குளுக்கோஸ், பழச்சாறு குடித்துக்கொள்ளுங்கள். உடல் சோர்வு குறையும்.
  • பால், முட்டை, இறைச்சி போன்ற புரதம் மிகுந்த உணவுகளை அடுத்த வேளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • ரத்தம் கொடுத்த பிறகு மெல்லோட்டம் போன்ற கடுமையான உடற்பயிற்சிகளை உடனே மேற்கொள்ள வேண்டாம். விளையாடவோ, நடனப் பயிற்சி போன்றவற்றுக்கோ உடனே செல்ல வேண்டாம். மறுநாள் செல்லலாம்.
  • ஜிம் போன்ற உடற்பயிற்சிகளுக்கும் மறுநாள் செல்லுங்கள்.

ரத்தம் பெற்றுக் கொள்பவர் கவனிக்க!

  • ரத்தத்தில் ஏ, பி, ஏபி, ஓ எனும் நான்கு வகைகள் மிக முக்கியமானவை. ஆர்ஹெச் பாசிட்டிவ், ஆர்ஹெச் நெகட்டிவ் எனவும் வகைப்பாடு உண்டு. ஒவ்வொருவரும் தங்கள் ரத்தவகையைத் தெரிந்திருக்க வேண்டும். காரணம், பெரும்பாலும் அவசரமாகவே ரத்தம் தேவைப்படும். ரத்தவகையை மாற்றிச் செலுத்திவிடக் கூடாது. அதற்குத்தான் ரத்தவகையைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.
  • ரத்தம் செலுத்திய பிறகு குளிர் காய்ச்சல் வரலாம். உடலில் அரிப்பு, தடிப்புகள் ஏற்படலாம். அரிதாக சிலருக்கு அதிர்ச்சி நிலை உருவாகி உயிருக்கு ஆபத்து நெருங்கலாம். எனவே, தகுதி வாய்ந்த மருத்துவரிடம் சென்று முறைப்படி பரிசோதித்துக்கொண்ட பிறகு ரத்தம் செலுத்திக்கொள்ள வேண்டியது முக்கியம். அப்போதுதான் இந்தப் பக்கவிளைவுகளைச் சமாளிக்கலாம். உயிர் ஆபத்துகளைத் தவிர்க்கலாம்.

நன்றி பாராட்டுங்கள்!

  • உலகில் ஒன்பது கோடியே 20 லட்சம் பேர் ஆண்டுதோறும் ரத்த தானம் செய்கின்றனர். தானமாகப் பெறப்படும் ரத்தத்தைச் சிவப்பணுக்கள், தட்டணுக்கள், பிளாஸ்மா எனப் பிரித்து, மூன்று பேருக்குத் தருகிறார்கள். எனவே, ஒருவர் தரும் ரத்தம் மொத்தம் மூன்று உயிர்களைக் காப்பாற்றுகிறது. உலகில் 62 நாடுகள் தங்களுக்குத் தேவையான அளவு ரத்தத்தை ரத்ததானம் மூலம் பெற்றுக்கொள்கின்றன. 73 நாடுகளுக்கு ரத்தம் தேவைப்படும் நிலைமையில்தான் உள்ளன. அவற்றில் இந்தியாவும் ஒன்று. ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இனிமேலாவது, ரத்த தானம் செய்து, மற்றவர்களின் வாழ்வுக்கும் வழி கொடுப்போம்.
  • பிறர் செய்த தானத்தின் மூலம் ரத்தம் பெற்றதால் உயிர் காப்பாற்றவர்களின் வரலாறுகளைக் கூறி, ரத்த தானம் வழங்க மற்றவர்களை – முக்கியமாக, இளைஞர்களை ஊக்கப்படுத்தவும், அதன் வழியாகச் சமூக உறவுகள் மேம்படவும், வளமான சமூக ஒற்றுமைக்குப் பாதை போடவும் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.
  • அடுத்தவர்களின் துன்பத்தை நினைத்து சில துளிகள் கண்ணீர் சிந்துவதைவிட, பாதிக்கப்பட்டவர்களுக்காக பல துளிகள் ரத்தத்தைத் தானமாக கொடுப்பதுதான் உயிரையே மீட்டுத் தரும் உன்னதமான சேவை! ரத்த தானம் செய்த காரணத்தால் மூன்று உயிர்களைக் காப்பாற்றிய அந்த நல்ல உள்ளங்களை நேரிலோ, தொலைபேசியிலோ அழைத்து நன்றி பாராட்டுங்கள். அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். அவர்களின் சேவை மனப்பான்மையும் தொடரும்.

நன்றி: அருஞ்சொல் (01 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories