- அலைபேசிச் செயலிகள் வழியாக அவசரத் தேவைக்குக் கடன் வாங்கி, கடனை முழுமையாகப் பெற முடியாமல், அதிக வட்டி கட்டி, கடனை அடைக்கவும் முடியாமல் பலர் அவஸ்தைப்படும் செய்திகளைத் தொடர்ந்து பார்க்கிறோம். கடன் செயலிநிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபடுவதுடன், கடன் வாங்கியவர்களை மிக மோசமாக அவமதிப்பதையும் பார்க்க முடிகிறது. இதனால் பலர் அவமானத்துக்கு அஞ்சி உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடியில், அவசரத் தேவையில் இருக்கின்ற நபர்கள், ஆபத்து புரியாமல் இதுபோன்ற செயலிகளைத் தரவிறக்கம் செய்துகொள்கின்றனர். இந்தச் செயலிகள் நம்முடைய பெயர், அலைபேசி எண் தொடங்கி, வங்கிக் கணக்கு விவரங்கள் வரை ஒன்றுவிடாமல் சேகரித்து வைத்துக்கொள்கின்றன. அதன் பின்னர் கடன் செயலிகள் தங்கள் சூழ்ச்சி வலைகளைப் பின்னத் தொடங்குகின்றன.
- சென்னையைச் சேர்ந்த இளைஞரின் கதை இது. கடன் வழங்கும் செயலியின் மூலமாக ரூ.30,000 கடன் வாங்க அவர்முயன்றார். கடைசியில், ரூ.70 ஆயிரம்திருப்பிச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார். செயலி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள், அலைபேசியில் அவரைப் பல முறை அழைத்து தகாதவார்த்தைகளால் திட்டியதால் அவர் தற்கொலை செய்துகொண்டார். பலர்வெளியில் சொல்ல முடியாத அவமானத்துடன் வாழ்ந்துவருகின்றனர். என்னதான் தீர்வு? காவல் துறையில் புகார் அளித்தாலும் பெரும்பாலும் தீர்வு கிடைப்பதில்லை.
- கடன் செயலிகள் பெரும்பாலும் மோசடியானவை என்பதால், குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகு பிளே ஸ்டோரில் (Play store) இருப்பதில்லை. செயலிகள் புற்றீசல்போலப் பெருகுவது, நாளுக்குநாள் மாறிக்கொண்டே இருப்பது போன்ற காரணங்களால் குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடிவதில்லை. முதலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இணையதளம் வழியாக இறக்குமதி ஆகின்ற கடன் செயலிகளை அரசு அடையாளம் காண வேண்டும். அவை பரப்புகின்ற பொய்யான தகவல்களையும் செயல்களையும் அடையாளம் கண்டு தடுக்க வேண்டும். இந்த முறைகேடுகளைத் தடுக்க, தொழில்நுட்பம் சார்ந்த அறிஞர் குழுவை உருவாக்க வேண்டும்.
- தனிநபர்கள் இவ்விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கடன் வாங்குவதற்கு எத்தனையோ வங்கிகள் இருக்கின்றன. முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றைத் தவிர நம்பகமான, உதவக்கூடிய உறவினர்கள், நண்பர்கள் இருந்தால் அவசரத் தேவைக்குக் அவர்களிடம் கடன் பெறலாம். ஆனால் அதுவும்கூட தனிநபர்கள் வட்டித் தொழில் செய்வதை ஊக்குவிப்பதாகிவிடக் கூடாது. இவற்றை எல்லாம் தாண்டி கண்ணுக்குத் தெரியாத நபர்கள் எங்கிருந்தோ வெளியிடும் கவர்ச்சிகரமான அறிவிப்புகளைக் கண்டு ஏமாறுவதைத் தவிர்க்க வேண்டும். இந்த நவீன டிஜிட்டல் உலகத்திலே அலைபேசியைச் சரியாகப் பயன்படுத்தினால், அது நமக்கு வரமாக அமையும். தவறினால், அது சாபமாக மாறிவிடும் என்பதை ஒவ்வொரு நாளும் உணர்ந்து செயல்பட வேண்டும். எல்லாவற்றையும் தாண்டி, தவிர்க்கவே முடியாத சூழலில் மட்டும்தான் கடன் வாங்க வேண்டும் என்கிற வைராக்கியம் வேண்டும். நாம் உறுதியாக, விழிப்புணர்வுடன் இருந்தால் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது!
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 11 – 2023)