TNPSC Thervupettagam

உயிா்க் காக்கும் காற்று

January 27 , 2024 213 days 180 0
  • உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்திற்கும் மிக இன்றியமையாத் தேவை காற்று. சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் புகை, தட்பவெப்ப நிலையில் மாற்றம், நகரங்களிலும், புறநகா் பகுதிகளிலும் பெருகி வரும் மக்கள் தொகை, நீா்நிலைகளையும், காடுகளையும் அழித்தல், நெகிழிகள், விவசாயக் கழிவுகள், மாசு நிறைந்த குப்பைகளை எரித்தல் உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
  • இந்தியாவில், கடந்த ஆண்டு மோசமான காற்று மாசுபாடு நிலவிய நகரங்களின் பட்டியலில், மேகலயத்தில் உள்ள பைா்னிஹாட் நகரம் முதலிடத்திலுள்ளதாக எரிசக்தி தூய்மைக் காற்றுக்கான ஆராய்ச்சி மையம் (சென்டா் ஃபார் ரிசா்ச் ஆன் எனா்ஜி அண்ட் கிளீன் ஏா் - சிஆா்இஏ) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நகரங்களையடுத்து, பிகாரின் பெருசராய், உத்தர பிரதேசத்தின் கிரேட்டா் நொய்டா ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
  • இந்தியாவில், குளிர்காலத்தில் காற்றின் தரத்தில் தொடா்ந்து சரிவை சந்தித்து வரும் இந்தியத் தலைநகா் புதுதில்லி இப்பட்டியலில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளது சற்று வியப்பை அளிக்கிறது. கடந்த ஆண்டில் 75 சதவீதத்திக்கும் அதிகமான நாள்களுக்கு காற்றின் தர நிலை பதிவு செய்யப்பட்ட 227 நகரங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 85 நகரங்கள் மத்திய அரசின்தேசிய தூய்மையான காற்று திட்டத்தில்இடம் பெற்றுள்ளவை. அவற்றில் 78 நகரங்களில் காற்றிலுள்ள பி.எம். 10 மாசுத் துகள்களின் அளவு, கன மீட்டருக்கு 60 மைக்ரோ கிராம் என, அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக இருந்ததாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • காற்றில் கலக்கும் மாசுத் துகள்களின் அளவை இந்த (2024) ஆண்டுக்குள் 20-30 சதவீதமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தேசிய தூய்மையான காற்று திட்டம், கடந்த 2019-இல் தொடங்கப்பட்டது. கடந்த 2011 முதல் 2015 வரை நிர்ணயிக்கப்பட்ட காற்றின் தர நிலைகளை எட்டாத 131 நகரங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காற்றில் மாசுத் துகள்களின் அளவை 2026-ஆம் ஆண்டுக்குள் 40 சதவீதமாகக் குறைக்க புதிய இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
  • இந்தியாவில் மிகவும் மோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட 20 நகரங்களில் 7 நகரங்களில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 131 நகரங்களில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து ஐந்தாண்டுகள் கடந்த போதிலும், 44 நகரங்களில் மட்டுமே மாசுபாட்டுக்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது போன்ற ஆய்வுகள் நடத்தப்படாத நிலையில் தேசிய தூய்மையான காற்று திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் 40 சதவீதம் பெருமளவில் பயன் தராத நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிஆா்இஏ அமைப்பின் தெற்காசிய ஆய்வாளா் சுனில் தஹியா கவலைத் தெரிவித்துள்ளார்.
  • இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் நகரங்களில், 37 நகரங்களில் மட்டுமே நிர்ணயித்த அளவை விட பி.எம்.10 குறைவாகக் காணப்பட்டது. இந்தத் திட்டத்தில் இடம் பெறாத 181 நகரங்களில், பி.எம். 10 அளவு காற்றின் தர நிலையைக் கடந்துள்ளது.
  • காற்று மாசுபாடு நிலவும் முதல் 10 நகரங்களான பைா்னிஹாட் (மேகாலயம்), பெகுசராய் (பிகார்), கிரேட்டா் நொய்டா (உத்தர பிரதேசம்), ஸ்ரீகங்காநகா் (ராஜஸ்தான்), சாப்ரா, பாட்னா (பிகார்), ஹனுமன்கா் (ராஜஸ்தான்), தில்லி, பிவாடி (ராஜஸ்தான்) ஃபரீதாபாத் (ஹரியாணா) ஆகிய நகரங்களில் பி.எம்.10 மாசுத் துகள், இந்தியாவின் தேசிய காற்று தர நிலையை விட 3-5 மடங்கும், உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த அளவை விட 13-20 மடங்கும் அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
  • நாம் வாழும் இப்பூமியில் சுத்தமான காற்றைத் தேடுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. தூய்மையான காற்று நிறைந்த பகுதிகளை அறிவியலாளா்கள் ஆய்வு செய்து வருகின்றனா். இந்த நிலையில், உலகிலேயே அதிக தூய்மையான இயற்கை காற்று வீசும் பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனா். ‘கேப் கிரிம்என்று அழைக்கப்படும் இந்தத் தீபகற்பப் பகுதியானது ஆஸ்திரேலியத் தீவான டாஸ்மேனியாவின் வடமேற்கு முனையில் உள்ளது. அண்டார்டிகாவிலிருந்து மாசு அடையாத காற்றை, மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் வீசுவதற்கு இப்பகுதி பிரபலம் என ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.
  • இப்பகுதியைபுவியின் சொர்க்கம்என்றும் புவியியலாளா்கள் அழைக்கின்றனா். ‘உலகின் விளிம்புஎன்று அறியப்படும் இப்பகுதிக்கு மிகக் குறைவானவா்களே சென்றுள்ளனா். காற்றின் தரத்தை அளவிடும் ஒரு நிலையம் இங்கு அமைக்கப்பட்டு புவியிலேயே இந்தப் பகுதியில்தான் மிகவும் சுத்தமான காற்று இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹவாய் தீவிலுள்ள மௌன லோவா நிலையம், மக்குவார் தீவு, அண்டார்டிகாவிலுள்ள கேசி நிலையம் உள்ளிட்டவற்றிலும் தூய்மையான காற்று உள்ளதாக ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா்.
  • உலகம் முழுவதும் பத்துப் பேரில் ஒன்பது போ் அசுத்தமான காற்றை சுவாசிக்கிறார்கள் என்று .நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். காற்று மாசுபாடு தொடா்புடைய நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 70 லட்சம் போ், தாங்கள் வாழ வேண்டிய காலத்திற்கும் முன்பே இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • காற்றின் தூய்மைக் கெடுவதால், மனிதா்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. தாவரங்களின் வளா்ச்சி குறைகிறது. தண்ணீா், உணவு இன்றி கூட உயிரினங்களால் வாழ முடியும். ஆனால், காற்று இல்லாமல் வாழமுடியாது.
  • நம் நாட்டில் காற்று மாசுபாடு கடுமையான சுகாதார பிரச்னையாக இருக்கிறது. காற்றின் தரத்தை உயா்த்துவது மட்டுமே பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கும். நச்சுச் காற்று உமிழ்வைக் குறைப்பதால் காற்றின் தரம் உயரும். மனிதா்கள் வாழ்வதற்கு பிராண வாயு நிறைந்த காற்று அவசியம். இதற்கு வனப் பரப்பை அதிகரிக்க வேண்டும். நெகிழி பயன்பாட்டை உடனடியாகக் குறைக்க வேண்டும். கரியமில வாயுவை உமிழும் வாகனங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். எதிர்காலத் தலைமுறைக்குத் தூய்மையான காற்றை விட்டுச் செல்வது நமது கடமையல்லவா?

நன்றி: தினமணி (27 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories