- உலக வெப்பமயமாதல் பற்றியும், பருவநிலை மாறுதல்கள் பற்றியும் சர்வதேச அளவில் கூடிக் கூடிப் பேசிக்கொண்டே இருக்கிறோம். சுற்றுச்சூழல் மீதான விழிப்புணர்வு மட்டுமல்ல, பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் உடனடித் தேவை. கரிப்புகை வெளியீட்டையும் பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும்.
- அனைத்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால், பெருங்கடல்களின் நீர்மட்டம் 2100-க்குள் மேலும் 40 செமீ உயரும். இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டினால் 80 செமீ வரை நீர்மட்டம் அதிகரிக்கும்.
- 1900-களிலிருந்து கடல் நீர்மட்டம் சராசரியாக16 செமீ உயர்ந்துள்ளது. பனி உறைந்து காணப்படும் கிரீன்லாந்து, அன்டார்டிகா பகுதிகளில் பனி அதிகமாக உருகத் தொடங்கிவிட்டதால் கடல் நீர்மட்டம் ஆண்டுதோறும் 1.8 மிமீ உயர்ந்துவருகிறது. இப்போது பனி உருகும் வேகமும், கடல் நீர்மட்டம் உயரும் அளவும் வேகம் பெற்றுள்ளது.
அதிர்ச்சியளிக்கும் ஐபிசிசி அறிக்கைகள்
- பருவநிலை மாறுதல்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் என்பவை அச்சுறுத்தும் எச்சரிக்கைகள் அல்ல; கண் முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் நடைமுறை உண்மைகள். பெருங்கடல்கள், துருவப் பகுதிகளின் பனிமண்டலங்கள், மிக உயர்ந்த மலையின் பனிபடர்ந்த போர்வைகள் போன்றவை புவி வெப்பமடைவதால் உருவாகும் வெப்பத்தின் விளைவுகளால் பாதிப்படையத் தொடங்கிவிட்டன. அனைத்துப் பெருங்கடல்களும் சூடேறிவருகின்றன, புவியின் பனிப் பாறைகள் நொறுங்கிவருகின்றன.
- பருவநிலை மாறுதல் பற்றி ஆராய ஐக்கிய நாடுகள் சபை அமைத்த அரசுகளுக்கு இடையிலான குழு (ஐபிசிசி) உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் உதவியுடன் பருவநிலைத் தரவுகளைத் திரட்டி, தொடர்ந்து ஆராய்ந்துவருகிறது. 1990 தொடங்கி இதுவரை 5 ஒட்டுமொத்தமான அறிக்கைகளைத் தயாரித்தது. இப்போது ஆறாவது அறிக்கையைத் தயாரித்துக்கொண்டிருக்கிறது.
- கடந்த ஆண்டு 3 விஷயங்கள் குறித்து அறிக்கைகளைத் தயாரித்தது ஐபிசிசி. முதலாவது அறிக்கை, புவியின் வெப்பநிலை இப்போது இருப்பதைவிட 1.5 டிகிரி செல்சியஸ் உயர்ந்ததை எச்சரித்ததோடு, பேரழிவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தது. இரண்டாவது அறிக்கை, நிலங்கள் மீதும் வனங்கள் மீதும் புவி வெப்ப அதிகரிப்பு ஏற்படுத்திய பாதகங்களையும், ஏற்படுத்தவிருக்கும் சேதங்களையும் விவரித்தது. இப்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது அறிக்கை, பெருங்கடல்களும் பனிப் போர்வைகள், பனி முகடுகளும் எப்படி இதைத் தாங்குகின்றன என்பதை விவரித்தது.
இந்த வேகம் போதாது
- இந்த அறிக்கைகள் அனைத்துமே எதிர்காலத்தில் புவி கடுமையான சோதனைகளைத் தாங்க வேண்டியிருக்கும் என்பதையே உணர்த்துகின்றன. காரணம், புவி வெப்பநிலையை 2 டிகிரியோ, 1.5 டிகிரியோ குறைப்பது அப்படியொன்றும் சுலபமான செயல் அல்ல. 2050-க்குள் எல்லா நாடுகளும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை முழுதாக இல்லாமல் செய்தால்தான் 1.5 டிகிரி அளவுக்குக் குறைக்க முடியும். ஆனால், சமீபத்திய ஆய்வுகளோ புவி மேலும் 3.5 டிகிரி வெப்ப அதிகரிப்பை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று எச்சரிக்கின்றன.
- உலக நாடுகளின் தலைவர்கள் பருவநிலை மாறுதல் தொடர்பாக ஆலோசனை நடத்த 2015-ல் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கூடினார்கள். தொழில் புரட்சி தொடங்குவதற்கு முன்னால் இருந்த புவி வெப்பநிலையை மீண்டும் ஏற்படுத்தினால் மட்டுமே உலகைக் காப்பாற்ற முடியும் என்று ஒப்புக்கொண்டார்கள். சராசரியாக ஆண்டுக்கு 2 டிகிரி செல்சியஸ் வெப்பத்தைக் குறைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். குறைந்தபட்சம் 1.5 டிகிரி செல்சியஸாவது குறைக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.
- 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டும் என்றாலே, அனல் மின் நிலையங்கள் உட்பட பல்வேறு தொழில் உற்பத்தியைக் குறைத்தாக வேண்டும். அது அந்தந்த நாடுகளின் பொருளாதார உற்பத்தியைக் கணிசமாகக் குறைத்துவிடும்.
- அப்பிரச்சினைக்கு மாற்றுத் தீர்வுகளைக் கண்டாக வேண்டும். இருந்தாலும், மக்களிடம் விளக்கி அவர்களுடைய ஒத்துழைப்புடன் புவி வெப்பத்தைக் குறைத்தால்தான் உலகுக்கு நேரவிருக்கும் கடுமையான விளைவுகளைத் தடுக்க முடியும் என்று ஒப்புக்கொண்டார்கள்.
- ஆனால், இதற்கிடையில் வெப்பம் சராசரியை விட ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டது. ஆர்க்டிக் போன்ற துருவப் பகுதிகளில் 4 டிகிரி வரையிலும்கூட அதிகரித்திருக்கிறது. பனிப் பிரதேசங்களும் பெருங்கடல்களும் பருவநிலை மாறுதலால் பாதிக்கப்பட்டு, தோற்ற மாறுதல்களை அடைந்துவருகின்றன.
பேரழிவின் பிடியில்
- துருவப் பகுதிகளிலும் உயரமான மலைகளிலும் உள்ள பனிப்பாறைகள் உருகி நீராகப் பெருகுகின்றன. வெப்பமண்டல நாடுகளில் கடலில் பலத்த புயல்கள் உருவாகின்றன. கடல் சூடாகிக் கொதிக்கும்போது வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகரித்து வலுவான சூறாவளிகள் தோன்றி பெருமழையாகப் பெய்கிறது.
- மனிதர்களால் உணரப்படாத பல மாற்றங்களும் கடல்பரப்பில் ஏற்படுகின்றன. கடலின் மேற்பரப்பு நீர் கொதி நீரானதும் அதன் அடர்த்தி குறைகிறது. அது கடலின் கீழ்மட்டத்தில் உள்ள உயிர்ச் சத்துகள் நிறைந்த குளிர் நீருடன் கலக்காமல் பிரிகிறது.
- எனவே, மேற்பரப்பு நீர் அப்படியே தேக்கமடைகிறது. அதில் ஆக்சிஜன் குறைவாக இருப்பதால் கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் உயிர்வாழ முடியாமல் தவிக்கின்றன.
- உலகின் பவளப் பாறைகளில் 30% நெருக்கடியில் சிக்கிவிட்டன. எஞ்சியவற்றில் 60% அழியும் நிலைக்குச் சென்றுவிட்டன. 2100-க்குள் கடலடி பவளப் பாறைகளில் 70% முதல் 90% வரையில் அழிந்துவிடும். புவி வெப்பமடைவது 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால் இவற்றின் அழிவு 99% வரை உயர்ந்துவிடும்.
- இந்தப் பவளப் பாறைகளின் அடியில்தான் சிறு மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகள் இனப்பெருக்கம் செய்கின்றன. அவற்றையே உண்கின்றன. இந்தப் பவளப் பாறைகள் கடலில் உள்ள உயிரினங்களை மட்டுமல்ல;
- கடலோரம் வசிக்கும் மக்களையும் புயல், சூறாவளி காலங்களில் கடல் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தி கரையில் அதிக சேதம் ஏற்படாமலும் காக்கின்றன. கடலில் பவளப் பாறைகளில் பிறக்கும் மீன்கள் மனிதர்களுக்கு உணவாகின்றன. கடலின் மீன்பாடு பவளப் பாறைகள் இல்லாவிட்டால் வற்றிவிடும்.
- இந்நிலை நீடித்தால், இந்நூற்றாண்டின் இறுதியில் கடலிலிருந்து கிடைக்கும் மீன்பாடு அளவு மேலும் 20% குறைந்துவிடும். இப்போது டூனா போன்ற மீன்கள் கடல்பரப்பில் கிடைப்பது அரிதாகிக்கொண்டிருக்கிறது.
- கடலில் இருக்கும் மீன்களை ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்கள் உதவியுடன் பெரிய வலைகளைக் கொண்டு பிடிப்பது அதிகரிப்பதால், கடலில் மீன்களின் இருப்பு வேகமாகக் குறைந்துகொண்டிருக்கிறது. கடல் சூடேறுவது அவற்றை மேலும் வற்றவே செய்யும்.
என்ன செய்ய வேண்டும்?
- 1970-கள் முதலே பசுங்குடில் வாயு வெளியேற்றங்களின் 90% அளவைப் பெருங்கடல்கள்தான் தாங்கிவருகின்றன. பருவநிலை மாறுதலின் தீய விளைவுகள் நிலப்பகுதிகளில் வாழ்வோரைப் பாதித்துவிடாமல், பெருங்கடல்களும் பனிப் பிரதேசங்களும் காத்துவருகின்றன.
- இவை இரண்டும் இல்லாவிட்டால் புவியின் சராசரி வெப்பநிலை இப்போது உள்ளதைவிட மேலும் 1 டிகிரி செல்சியஸ் கூடியிருக்கும்.
- “ஐபிசிசியின் அறிக்கையானது உலக நாடுகள் அனைத்தும் உரிய நேரத்தில், ஒருங்கிணைந்து, நீண்டகாலத் தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறது.
- உலகின் சுற்றுச்சூழல், வன உயிரினங்கள், நம்முடைய குழந்தைகளுக்கு நாம் விட்டுச் செல்லக்கூடிய இந்த உலகம் ஆகியவற்றின் நிலைமை மேம்படுவதற்காகவே இதைச் செய்தாக வேண்டும்” என்கிறார் ஐபிசிசி அமைப்பின் துணைத் தலைவர் கோ பேரட்.
- வெப்பநிலையைக் குறைக்க உலக நாடுகள் அனைத்தும் ஒரே சமயத்தில் தீவிரமாக நடவடிக்கை எடுத்தால்தான் விளைவுகளைத் தடுக்க முடியும். பேரழிவுகளைக் குறைக்க முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (15-10-2019)