TNPSC Thervupettagam

உரையாசிரியர் அயோத்திதாசர்

May 20 , 2024 236 days 238 0
  • திருக்குறளின் 55 அதிகாரங்களுக்கு அயோத்திதாச பண்டிதர் உரை எழுதியுள்ளார். ‘தமிழன்’ இதழில் தொடர்ந்து வெளிவந்த அவ்வுரை கிட்டத்தட்டப் பாதியளவு குறள்களோடு நின்றுவிடக் காரணம் அவரது அகாலமான இறப்புத்தான். முப்பாலுக்கும் உரையெழுதுவதே அவர் நோக்கமாக இருந்துள்ளது. மதம் சார்ந்த தத்துவ நோக்கில் திருக்குறளுக்கு உரை எழுத முயன்றோருக்குக் காமத்துப்பால் மட்டும் பிரச்சினையாக இருந்துள்ளது.
  • ஆனால், அயோத்திதாசருக்கு அப்படி இல்லை. ‘திரிக்குறளில் கடவுள் வாழ்த்தென்னும் புத்தரது சிறப்பு முதல் ஆயிரத்தி முன்னூற்றி முப்ப தருங் குறட்பாக்களைத் திரிபற வாசித்துணர்ந்தோனுக்கு வேறென்னூற்களும் வேண்டா…’ (அயோத்திதாசர் சிந்தனைகள் II, ப.568) என்று உரைத் தொடக்கத்தில் கூறியிருப்பதாலும் பௌத்தத்தின் திரிபீட வாக்கியங்களாகிய மூவருமொழிகளை விளக்கிக் கூறும் ‘திரிக்குறள்’ எனக் கொள்வதால் முப்பால் அமைப்பு அவரது உரைப்பார்வைக்கு முக்கியமானது என்பதாலும் காமத்துப்பாலுக்கும் உரை எழுதியிருப்பார் என்பது உறுதி.

கேள்விகளும் பதில்களும்

  • காமத்துப்பால் தொடர்பான கேள்வி அவரை நோக்கியும் வந்திருக்கிறது. அதற்குப் பலவிதமாகப் பதிலளிக்கிறார். ‘சிற்றின்ப மென்னும் காமிய நிலை சகல மக்களுக்கும் இயல்பில் தோன்றும் இன்பமென்னப்படும். அத்தகைய இன்ப நுகர்ச்சி சருவ மக்களுக்கிருந்தும் அதன் புலநிலையறியார்கள். புலன் தென்படலாம், பேரின்பம் பெற்ற தென்புலத்தோரே அவற்றை அறிவர்’ (மேற்படி, ப.545) என்றும் ‘காமத்தால் சிற்றின்பம் நுகர்ந்து சீர் கெடுவதினும் என்றுமழியா பேரின்பம் நுகர்ந்து நித்திய வாழ்வடைவதே அழகாதலின் சிற்றின்பத்தை செவ்விதில் விளக்கி பேரின்பம் அவாவும் போக்கில் (நாயனார் – திருவள்ளுவர்) விடுத்திருக்கின்றார்’ (மேற்படி) என்றும் விளக்குகிறார்.
  • மேலும் ‘உள்ளதை உண்மெய்க்குத்தாரமாய் விளக்குவதே புத்த தன்மமாகும். உள்ளது ஒன்றிருக்க இல்லாததைக் கூட்டிப் பொய்யை மெய் போல் பேசுவது அபுத்த தன்மமாகும்… உள்ளதை ஒளியாது விளக்கி மக்களைச் சீர்பெறச் செய்வது மதியூகிகளின் கடனாதலின், நாயனார் தான் இயற்றியுள்ள காமத்துப்பாலில் புருஷருக்குள்ள செயலையும் இஸ்திரீகளுக்குள்ள செயலையும் தெள்ளற விளக்கியிருக்கிறார்’ (மேற்படி, ப.545, 546) என்று தம் பார்வையைத் தெளிவுபடுத்தியுள்ளார். அனுபவத்தில் உள்ள ஒன்றைப் பேசாமல் மறைத்து வைப்பது புத்த தருமத்திற்கு எதிரானது, உலகத்தில் மனித குலத் தோற்றத்திற்கும் வாழ்வுக்கும் காமமே காரணமாக இருக்கும்போது அதைச் சிறப்பித்து எழுதுவதைத் தவறெனக் கூறுதல் காமத்தை உள்ளே ஒளித்து வைத்துக்கொண்டு வெளியில் தூற்றுவதாகும் என்றும் சொல்கிறார்.
  • காமத்தைச் சிற்றின்பம் என்று சொன்னாலும் அது ‘உள்ளது, உண்மெய், அனுபவம்’ என்கிறார். மக்களின் அனைத்துச் செயல்களையும் அளந்து கூறிய நாயனார் (திருவள்ளுவர்) அனுபவத்தில் இருக்கும் காமத்தை எப்படி விட முடியும்? அதையும் தெளிவுற விளக்கியிருக்கிறார். அது ‘இன்பத்தையும் துன்பத்தையும் விளக்கும் ஓர் போதனா நிலை’ என்கிறார். இவ்வாறு காமத்துப்பாலுக்கான நியாயத்தை விளக்கும் அயோத்திதாசர் அப்பகுதிக்கு எவ்வகையில் பொருள் விளக்கம் தந்திருப்பார் என்பதை இன்று கற்பனை செய்வது சிரமமாக உள்ளது. எழுதியிருந்தால் அது சுவையானதாக அமைந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

பின்பற்றிய வழிமுறைகள்

  • திருக்குறளுக்கு மட்டுமல்ல, ஔவையார் எழுதிய ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நறுந்தொகை ஆகிய மூன்று நூல்களுக்கும் அவர் உரை எழுதியுள்ளார். உரை எழுத அவர் இருமுறைகளைப் பின்பற்றியுள்ளார். முதலாவது தமிழ் உரை மரபு சார்ந்தது. மூலத்தில் உள்ளதை அப்படியே ஏற்றுக்கொண்டு அதற்குத் தம் பார்வையில் உரை கூறல் முறை அது. திருக்குறள் கடவுள் வாழ்த்தில் எந்தக் கடவுளின் நேரடிப் பெயரும் வரவில்லை. பகவன் என்னும் பொதுப்பெயரையும் மலர்மிசை ஏகினான், எண்குணத்தான், ஐந்தவித்தான், அறவாழி அந்தணன் முதலிய விளக்கப் பெயர்களையுமே திருக்குறள் குறிப்பிடுகிறது. அதை வாய்ப்பாகக் கொண்டு ஒவ்வொரு மதத்தவரும் தம் கடவுளாகக் கருதி உரை எழுதியுள்ளனர்.
  • முதற்குறளில் வரும் ‘பகவன்’ என்னும் சொல்லை அப்படியே உரையிலும் குறிப்பிடும் பழைய உரையாசிரியர்கள் கடவுள் வாழ்த்தின் பிற குறள்களுக்கு உரை கூறுகையில் தம் கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இரண்டாம் குறளில் வரும் ‘மலர்மிசை ஏகினான் நற்றாள்’ என்பதற்கு ‘சிவன் ஸ்ரீபாதம்’ எனப் பரிதியார் பொருள் தருகிறார். பிற குறள்களிலும் அவர் ‘சிவன்’ என நேரடியாகவே சொல்கிறார். நச்சர் என்னும் உரையாசிரியர் ‘இருள்சேர் இருவினையும்’ எனத் தொடங்கும் குறள் உரையில் ‘மெய்த்தன்மை வாய்ந்த சிவபிரான்’ என்கிறார். ‘எண்குணத்தான்’ என்பதற்குச் ‘சைவாகமத்துக் கூறப்பட்ட’ எண்குணங்களை எடுத்துக்காட்டிப் பரிமேலழகர் தம் சார்பைக் காட்டுகிறார்.
  • கடவுள் வாழ்த்தில் தம் சார்பை வெளிப்படுத்தாமல் பொதுவாகக் கடவுள் பெயரைக் குறிப்பிட்டு எழுதும் மணக்குடவர் உள்ளிட்ட பிற உரையாசிரியர்களும் வேறு இடங்களில் தம் மதச் சார்பைக் காட்டி விடுவதுண்டு. திருவள்ளுவரைச் சமணர்கள் ‘நாயனார்’ என்று அழைத்துத் தம்மவராகவே கொண்டமைக்குப் பல சான்றுகள் உள்ளன. அதனால்தான் திருக்குறள் சமணம் சார்ந்தது என்று கருதும் அறிஞர்கள் பலர். திருக்குறளுக்கு எழுதப்பட்ட ‘ஜைன உரை’ தஞ்சை சரஸ்வதி மகால் நூலக வெளியீடாக வந்துள்ளது. திருக்குறளுக்குப் பௌத்த நோக்கிலான பழைய உரையும் இருந்திருக்கலாம் என்பதற்குப் பரிமேலழகரே சான்றுகள் தருகிறார். ‘அறவாழி அந்தணன்’ என்னும் குறள் உரையில் ‘அறவாழி என்பதனைத் தருமசக்கரமாக்கி அதனையுடைய அந்தணனென்றுரைப்பாரும் உளர்’ என்பது அவர் கூற்று.

திருத்தங்கள்…

  • செய்யுள் சொற்களை உள்ளபடியே கொண்டு அதற்குத் தம் நோக்கில் உரை எழுதும் முறை இது. இக்காலத்திலும் இதற்குப் பல சான்றுகளைக் காட்ட முடியும். புலவர் குழந்தை எழுதிய திருக்குறள் உரை பெரியாரிய நோக்கிலானது. இருபதாம் நூற்றாண்டில் வெவ்வேறு மத நோக்கிலும் கொள்கை நோக்கிலும் எழுதிய உரைகள் உள்ளன. அவரவருக்கு உகந்த கருத்தை ஏற்றி உரை எழுதுவதற்கு மூலம் இடம் கொடுக்கிறது. அயோத்திதாசரும் பல குறள்களுக்கு அவ்வாறே தாம் கொண்ட மதமாகிய பௌத்த நோக்கில் உரை எழுதியுள்ளார். முதற்குறளில் வரும் ‘பகவன்’ என்னும் சொல்லுக்குப் ‘பகவனாகிய புத்தர்’ என்று தெளிவாகக் கூறியுள்ளார். வாலறிவன் – பாலதானத்தில் அறிவின் விருத்தி பெற்று நின்றவன், இறைவன் – வேந்தனாம் புத்தர், அறவாழி அந்தணன் – தருமச் சக்கரத்தோனாம் சாந்தரூபி என்றவாறு புத்தரை நேரடியாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறார். ‘விசும்புளார் கோமான்’ என்பதற்கு ‘வானுலகோர்க்கு அரசனாக விளங்கும் புத்தபிரான்’ என்று கூறுகிறார். இது உரை மரபிலிருந்து மாறுபடாத முறை.
  • அயோத்திதாசர் உரை எழுதக் கைக்கொண்ட இன்னொரு முறை, தம் கருத்துக்குத் தக்கவாறு மூலத்தைத் திருத்திப் பின் உரை எழுதுதல். ‘திருக்குறள்’ என்னும் நூற்பெயரையே ‘திரிக்குறள்’ எனத் திருத்துகிறார். குறள்களில் ‘மை’ வருமிடங்களில் எல்லாம் அதை ‘மெய்’ எனத் திருத்தியுள்ளார். ‘இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார் பெருமை பிறங்கிற் றுலகு’ (23) என்னும் குறளில் வரும் ‘இருமை, பெருமை’ ஆகியவற்றை ‘இருமெய், பெருமெய்’ என மாற்றுகின்றார். இருமை என்பது இரண்டு எனப் பொருள் தரும் சொல். அதை ‘இருமெய்’ என ஆக்கி ‘இருவகை யாக்கை’ என்கிறார் அயோத்திதாசர். ‘பெருமை’ என்பதற்குச் சிறப்பு, புகழ், பெருந்தன்மை என்றெல்லாம் பொருள் உண்டு. ‘பெருமெய்’ எனக் கொண்ட அயோத்திதாசர் ‘சிறப்பு மெய்’ என்று பொருள் தருகிறார். இங்கும் மெய் என்பதற்கு ‘யாக்கை’ என்றே பொருள் கொள்கிறார். இருவகை யாக்கை என்பது அழியும் உடல், அழியா உடல் என்பனவாகும். பெருமெய் – அழியா உடல்.
  • அதிகாரப் பெயர்களைத் திருத்துதல், குறள்களைத் திருத்துதல் ஆகியன செய்து பின் தம் கருத்துக்களை ஏற்றி உரை கூறுகிறார். இது உரை மரபுக்கு மாறானது. உரையாசிரியர்கள் எப்போதும் மூலநூல் பாடத்திற்கு முதன்மை தருபவர்கள். ஏடு பெயர்த்து எழுதுவோர் செய்யும் பிழைகளால் பாட வேறுபாடு ஏற்படுவதுண்டு. வெவ்வேறு சுவடிகளைக் கொண்டு அப்பிழைகளைக் களைந்து சரியான பாடம் கண்டு உரை எழுதுவர். பாடத் தீர்மானம் என்பது உரையாசிரியர்களுக்கு முக்கியமானது. மூல நூலாசிரியர் கருத்தோடு தாம் ஒப்பவில்லை என்றாலும் பாடத்தை மாற்றக் கூடாது என்பது அவர் எண்ணம். அவ்வாறு எவரேனும் மாற்றினால் அதை ஏற்றுக்கொள்வதில்லை. மாற்றியவருக்கு மதிப்பளிப்பதும் இல்லை.

மூலமும் திருத்தங்களும்

  • ‘பாடங்கள் மேலும் பெருகாமல், காலந்தோறும் புகாமல் உரையாசிரியர்கள் தடுத்துவிட்டனர். ஒரு பாடத்தை மூலத்தில் தழுவிக்கொண்டு உரை வரைவர். மாறுபாடங்கள் இருக்குமேல் உரையிடை காட்டுவர். நல்ல பாடங்களுக்கும் இது உரையென வரைவர். அல்ல பாடங்களாயின் இப்பாடம் சரியன்று என மறுத்து ஒதுக்குவர். இங்ஙனம் பாடம் ஓதுவாரும் உளர் என்று சிற்சில இடங்களில் சுட்டிச் செல்வர்’ (கம்பர், ப.26) என்று உரையாசிரியர் பாடம் கொள்ளுதலை வ.சுப.மாணிக்கம் விளக்குகிறார். இதில் கவனிக்க வேண்டியது ஏற்கெனவே உள்ள பாடங்களை அவர்கள் எவ்வாறு கையாண்டனர் என்பது மட்டுமல்ல, தாமாகப் புதிய பாடத்தை உருவாக்குதல் இல்லை என்பதைத்தான்.
  • தமது கருத்துக்கு முரணான கருத்தோ காலத்திற்கு முரணானதோ மூலநூலில் இருந்தாலும் உரையாசிரியர்கள் அவற்றைத் திருத்துவதில்லை. அவற்றுக்கு அமைதி காணும் வகையில் உரை எழுதுவர். ‘நூலாசிரியர்களிடம் அளவு கடந்த மதிப்பு வைத்திருந்த உரையாசிரியர்கள், தம் காலத்திற்கு முரணான கருத்துக்கள் மூல நூலில் இருப்பினும் அவற்றிற்கு அமைதி கூறினர். இன்னும் ஒருபடி மேலே சென்று தம் காலத்தில் நிலவி வந்த புதுக் கருத்துக்களையும் புதுமரபுகளையும் ‘மிகை’யினாலும் ‘உரையிற் கோடல்’ என்பதனாலும் தம் உரையில் சேர்த்து எழுதி நூலாசிரியர்களுக்குப் புகழ் தேடினர்; நூலாசிரியர் சொல்லாத கருத்து எதுவும் இல்லை என்று உணர்த்த முற்பட்டனர்’ (உரையாசிரியர்கள், ப.95) என்று மு.வை.அரவிந்தன் கூறுகிறார்.
  • மூலத்தில் எத்திருத்தமும் செய்யக் கூடாது என்பது மரபாகத் தொடர்ந்துவரும் விழுமியம். அது உரைமரபில் மிகச் செம்மையாகப் பின்பற்றப்பட்டது. ‘தக்கார் தகவிலர் என்ப தவரவர் எச்சத்தாற் காணப் படும்’ என்னும் குறளின் ஈற்றடியை ‘மக்களாற் காணப் படும்’ எனத் திருத்தி அச்சிட்டுவந்த ஆங்கிலேயர் ஒருவரைத் தியாகராச செட்டியார் விரட்டியடித்த சம்பவத்தை உ.வே.சாமிநாதையர் பதிவுசெய்துள்ளார். அந்தத் திருத்தப் பதிப்புப் பிரதிகள் அனைத்தையும் வாங்கிப் பாண்டித்துரை தேவர் தீயிட்டுக் கொளுத்தினார் என்னும் சம்பவமும் பதிவாகியுள்ளது.

பதிப்பாசிரியர்களும் திருத்தங்களும்

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய பழந்தமிழ் நூல் பதிப்பு வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் பதிப்பாசிரியர்கள் அனைவரும் ‘திருத்தம் செய்யக் கூடாது’ என்னும் விழுமியத்தை, உரை மரபை தவறாமல் பின்பற்றிவந்திருப்பதைக் காண முடிகிறது. கலித்தொகையைப் பதிப்பித்த சி.வை.தாமோதரம் பிள்ளை அந்நூல் செய்யுள்களில் ‘அல்குல்’ என்னும் சொல் வரும் பதினொரு இடங்களில் வேறொரு சொல்லைப் பெய்து பதிப்பித்தார். அச்சொல் பெண்ணுறுப்பைக் குறிப்பது என்பதால் கல்வி நிறுவனங்களில் பாடமாக வைக்கும்போது பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி அவ்வாறு செய்தார். ஆனால் தாம் திருத்தம் செய்த இடங்களைப் பட்டியலிட்டுக் காட்டினார். அதன் பதிப்புரையில் இதைப் பற்றி விரிவாகவும் எழுதினார்.
  • ‘…அச்சொரூபமாக எடுத்துப் பதிப்பிப்போர் ஓர் அட்சரமாவது மாற்றுதல் பெருந்தவறு…’ (தாமோதரம், ப.155) என்றும் ‘இவ்வாறு மாற்றியது குற்றமாயின் அதனை உலகம் மன்னிக்கும்படி பலமுறையும் பிரார்த்திக்கின்றேன்’ (ப.156) என்றும் அவரே தம் திருத்தத்தை வெளிப்படுத்தி மன்னிப்பும் கேட்டுள்ளார். உ.வே.சாமிநாதையரும் இம்மரபை வழுவாமல் பின்பற்றிய பதிப்பாசிரியர். ‘சீவக சிந்தாமணி’ முதல் பதிப்பு முன்னுரையில் ‘ஆயினும் புராதனமான தமிழ் நூல்களும் உரைகளும் பண்டை வடிவங் குன்றாதிருத்தல் வேண்டுமென்பதே எனது நோக்கமாதலின் பிரதிகளில் இல்லாதவற்றைக் கூட்டியும் உள்ளவற்றை மாற்றியும் குறைத்தும் மனம் போனவாறே அஞ்சாது பதிப்பித்தேனல்லேன். ஒருவகையாகப் பொருள் கொண்டு பிரதிகளில் இருந்தவாறே பதிப்பித்தேன். யானாக ஒன்றுஞ் செய்திலேன்’ (சாமிநாதம், ப.231) என்று குறிப்பிட்டு எழுதுகிறார்.
  • பின்னர் வந்த ச.வையாபுரிப் பிள்ளை உள்ளிட்ட பதிப்பாசிரியர்களும் இம்மரபை அப்படியே பின்பற்றியவர்கள். உரை மரபிலிருந்து பதிப்புக்கு மாறிய விழுமியம் இந்தத் ‘திருத்தாமை.’ மூலபாடத்திற்கு முதன்மை கொடுக்கும் இம்மரபை தம் உரைகளில் அயோத்திதாசர் கடைபிடிக்கவில்லை. உள்ளதை அவ்வாறே கொண்டு பெரும்பாலான குறள்களுக்கு உரை எழுதியுள்ளார் எனினும் பல குறள்களில் மாற்றமும் செய்துள்ளார். குறிப்பாக ‘மை – மெய்’ மாற்றம். மரபுப்படி பதவுரை, பொழிப்புரை, கருத்துரை, விரித்துரை என்னும் நான்கு வகை உரைகளை ஒவ்வொரு குறளுக்கும் எழுதியுள்ளார் அயோத்திதாசர். அவரது உரை பலவிடங்களில் மிக வேறுபட்டதாகவும் சுவையுடையதாகவும் விளங்குகிறது.
  • ‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ என்னும் குறளுக்கு ‘துறவுற்றோன் தக்கப்புறப்பட்ட பொருளொன்று உண்டென்று ஏனும் இல்லை என்றேனுங் கருதாது தானேதானாய் நிலைக்க வேண்டும் என்பது கருத்து’ எனப் பொருள் எழுதுகிறார். ‘எந்த எந்தப் பற்றுக்களை விடுகிறானோ அந்த அந்தப் பற்றினால் வரும் துன்பங்கள் அவனுக்கு இல்லை’ என்று வழக்கமாகக் கூறும் பொருளிலிருந்து மாறுபட்டுப் புத்தத் துறவிகளுக்கு உரிய ஒழுக்க நிலையிலிருந்து அயோத்திதாசர் இக்குறளுக்குப் பொருள் கூறுகிறார். இவ்வாறு பல சுவாரசியங்கள் கொண்டது அவர் உரை.
  • எனினும் மூலபாடத்தில் அவர் செய்துள்ள திருத்தங்கள் உரை மரபுக்கு ஏற்றவையல்ல. இக்காரணம் ஒன்றி பற்றியே அயோத்திதாசரை உரையாசிரியராகக் கருதி ஏற்றுத் தமிழ்ச் சமூகம் போற்றவில்லையோ?

நன்றி: அருஞ்சொல் (20 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories