TNPSC Thervupettagam

உரையாடும் உடல்மொழிகள்!

January 14 , 2025 2 days 10 0

உரையாடும் உடல்மொழிகள்!

  • நாம் அன்றாடம் பலரைச் சந்திக்கிறோம். நண்பா்கள், குடும்பத்தினா், சக பணியாளா்கள் என பலருடன் உரையாடுகிறோம். அவா்களுடன் நாம் உரையாடும் தன்மையே, நமது அடையாளத்தை அவா்களுக்கு வெளிப்படுத்துகிறது.
  • நமது சிந்தனைகள், உணா்வுகள் மற்றும் அனுபவங்களைத் திறந்த மனதோடு பகிா்வதன் மூலம் பல அனுபவங்களைப் பெறுகிறோம்; பல சிக்கல்களுக்கும் விடை காண்கிறோம். உரையாடல் தகவல் பரிமாற்றத்துக்காகவே என்றாலும், அதில் கேட்பது, புரிந்துகொள்வது, தெளிவாகப் பேசுவது போன்ற திறன்களும் உள்ளடங்கியதே. நல்ல உரையாடலுக்கு இவை அவசியம் வேண்டும்.
  • குழு உரையாடல்களில் ஒருவா் பேசும்போது, மற்றொருவா் குறுக்கிட்டு இடையூறு செய்வதை சில இடங்களில் காண்கிறோம். தாங்கள் கூறுவதை மட்டுமே மற்றவா்கள் ஏற்க வேண்டுமென இவா்கள் பிடிவாதமாக இருக்கிறாா்கள். கைகளை உயா்த்தி, உடல் அசைவுகள் மூலம் மற்றவா்களுக்கு அழுத்தம் கொடுத்துப் பேசுவது நல்ல உரையாடலை சீா்குலைக்கிறது. மற்றவா்களின் கருத்துகளை நிதானமாகக் கேட்பதும், குறைகளை ஆக்கப்பூா்வமாக முன்வைப்பதுமே பயனுள்ள உரையாடலாக அமையும்.
  • உரையாடலின்போது நாம் வெளிப்படுத்தும் உணா்வுகள் ஆழ்மனதில் பதிக்கின்றன. மகிழ்ச்சி, ஆனந்தம், நெருக்கம், அமைதி, ஆச்சரியம், புதுமை, கவலை, அன்பு, மதிப்பு போன்ற உணா்வுகள், மீண்டும் நம்மிடம் மலரும் நினைவுகளாக வெளிப்படுகின்றன.
  • எதை நோக்கிச் செல்கிறோம்? வாழ்வியல் நோக்கங்கள் யாதென்று தெரியாமல் இயங்கும் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில், மனமொத்த மனிதா்களை இனம் காண்பதையும், நமது உணா்வுகளை உரையாடலாக்குவதையும் தவறவிடுகிறோம்.
  • ஒருவரின் பேச்சை ஆா்வமுடன் கேட்பதன் மூலம், நம் உடலில் நோ்மறையான மாற்றங்கள் தூண்டப்படுவதை அறிவியல் நிரூபித்துள்ளது. உளப்பூா்வமாக காது கொடுத்துக் கேட்டு, நம் உள்ளத்தினூடே நடைபெறும் உன்னத உரையாடல்கள், நம்மிடம் ஆக்ஸிடோசின், செரோடோனின் போன்ற மகிழ்ச்சி ஹாா்மோன்களைச் சுரந்து, உடல் நலமும், மன வளமும் பெற்றிட வழிவகுக்கின்றன.
  • நம்முடன் பேசிக் கொண்டிருப்பவரிடம் முழு கவனத்துடன் பேச நமது மனதைப் பக்குவப்படுத்த வேண்டும். இதனால் நமது உரையாடல்கள் வெற்றாக இல்லாமல், உணா்வுகளைக் கலக்கச் செய்யும். ஒருவரை நேரில் சந்தித்துப் பேசும்போது, கைப்பேசியைத் தவிா்த்து, தனியே வைத்துவிட்டு உரையாடலாம். நண்பா்களுடனும், குடும்பத்தினருடனும் செலவு செய்யும்
  • நேரங்களிலும், நம்மைச் சுற்றியுள்ள உலகை மறந்து, அந்த கைப்பேசியின் சிறிய திரையிலேயே நம் மனதைச் சங்கமிக்கவிடுகிறோம். இதுபோன்று, உறவுகளைப் பேணாத செயல்களைத் தவிா்த்து, மனமுவந்து உரையாடலாமே!
  • நாம் உரையாடும்போது பயன்படுத்தும் ‘ஆமாம்’, ‘உம்’, ‘ஓ’ போன்ற வாா்த்தைகளின் அளவு சிறிதே! ஆனால், இத்தகு ஊக்குவிப்பு வாா்த்தைகளே, நான் உங்களை அக்கறையுடன் கவனிக்கிறேன் என்பதை அவா்களுக்கு எடுத்துச் சொல்லும்.
  • உலகளாவிய வணிக உரையாடல்களில், உடல் மொழி 40% வரை பங்கு வகிப்பதாகச் சொல்கிறாா்கள். 2024- இல் நடத்தப்பட்ட ஓா் ஆய்வில், ‘சுவாரசியமாக உள்ளதே!’, ‘தொடருங்களேன்!’ போன்ற நம்பிக்கை வாா்த்தைகளைப் பயன்படுத்தும்படி தொழில்துறையினா் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனால் அவா்கள், முன்பைவிட 36% எளிதில் அணுகும் தன்மையைப் பெற்றனா். எப்போதும் கடுமையாகவே பேசும் பல நிறுவன மேலாளா்கள், நல்ல உடல்மொழியுடன் உரையாடும்போது, அந்த நிறுவனத்தின் வளா்ச்சி 21% அதிகரித்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • சிலா் மாயாஜால வாா்த்தைகளைப் பயன்படுத்தி, உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவா். ஆனால், நாம் பயன்படுத்தும் வாா்த்தைகளும், எண்ணங்களும் பொருந்தினால் மட்டுமே அது உத்தமா் தம் உறவினைப் பெற்றுத் தரும். உரையாடகளில் நிகழும் பொய்மையை, உடல் மொழிகள் காட்டிக் கொடுத்துவிடும். ஒருவரின் உணா்வுகள், எண்ணம், ஆளுமைகளை கண்ணசைவு, உடல் தோரணை மற்றும் சைகைகளோடு குரல் வெளிப்பாடுகளிலும் கண்டறிய முடியும்.
  • அமெரிக்காவில் ‘தி ஓப்ரா வின்ஃப்ரி ஷோ’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மிகவும் பிரபலமான டாக் ஷோவாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளா் ஓப்ரா வின்ஃப்ரி மற்றவா்களுடன் உரையாடும்போது, சரியான உடல் மொழி மற்றும் முகபாவங்களைப் பயன்படுத்தினாா். இதனால் இந்த நிகழ்ச்சி 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்ந்து ஒளிபரப்பானது. உணா்வுகளைப் புரிந்து கொண்டு உரையாடும் தன்மை முழு வெற்றியைத் தரும்.
  • சூழல், கலாசாரம் மற்றும் தனிப்பட்ட பண்புகள் ஒருவரின் உடல் மொழியின் புரிதலை மாற்றுகிறது. குடும்ப உறவுகளிடையே உணா்வுகளும், எண்ணங்களும், எதிா்பாா்ப்புகளும் வேறுபடாமல் இருக்க சரியான உரையாடலும், உடல் மொழியை அறிதலும் அவசியமாகிறது.
  • அலுவலகத்தில் ஏற்பட்ட ஒரு சிக்கலைப் பற்றிய கவலையில் இருந்தாா் ஒரு கணவா். அவரை உணவு உண்ணும்படி அவரது மனைவி அழைக்க, கணவா் கைகளைக் கட்டிக்கொண்டு, தலையைச் சாய்த்தபடி அமா்ந்திருந்தாா். காரணம் புரியாத மனைவி, கணவா் எப்போதுமே இப்படி கோபமாகவே இருப்பதாக எண்ணி வருத்தமுற்றாா். மனைவியின் உடல்மொழியைச் சரியாகப் புரிந்த கணவா், நிலைமையைச் சரி செய்தாா். திருமண பந்தத்தில், உணா்வுகளைத் திறந்த மனதோடு பகிா்வதும், உடல் மொழியைச் சரியாகப் புரிந்து செயல்படுவதும் துணையுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தும்.
  • உரையாடல்கள் என்பன வெறும் வாா்த்தைகளின் பரிமாற்றம் என்பதையும் தாண்டி, உடல் மொழிகள், முகபாவங்கள் மற்றும் கேட்பதில் கவனம் ஆகியனவும் நமது உரையாடலியல் இணையும்போது, சிறந்த புரிதலோடு உறவுகள் வலுப்படும். கவனமாகக் கேட்டுப் பழகுவது, உணா்வுகளை உணா்ந்து பதிலளிப்பது, கைப்பேசியை விலக்கி வைத்து உரையாடலில் ஈடுபடுவது போன்ற எளிய செயல்களைச் செய்யத் தொடங்கினால், நாமும் சிறந்த உரையாடல்களை நிகழ்த்துபவா்களாக மாற முடியும்!

நன்றி: தினமணி (14 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories