TNPSC Thervupettagam

உலக அமைதிக்கு வழிசமைக்கும் பேரிலக்கியம் திருக்குறள் நேர்காணல் ச.பார்த்தசாரதி, என்.வி.கே.அஷ்ரப், ராஜேந்திரன்

March 24 , 2024 301 days 454 0
  • திருக்குறள் மொழிபெயர்ப்பு என்பது ஒரு தனித் துறையாகப் பயிலப்பட வேண்டிய அளவுக்கு அதன் எல்லை விரிந்துகொண்டே செல்கிறது. திருக்குறள் மொழிபெயர்ப்புகளை ஆவணப்படுத்தும் பணியில் 2018லிருந்து ஒரு குழு ஈடுபட்டுவருகிறது. ‘வலைத்தமிழ்.காம்நிறுவனர் .பார்த்தசாரதி, அமெரிக்காவைச் சேர்ந்த திருக்குறள் ஆர்வலர் இளங்கோ தங்கவேல், கானுயிர் மருத்துவர் என்.வி.கே.அஷ்ரப், ‘வள்ளுவர் குரல் குடும்பம்ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஐஆர்எஸ், செந்தில்குமார் துரைசாமி, அஜய்குமார் செல்வன் முதலானவர்கள் அடங்கிய அக்குழு, ‘Thirukkural Translations in World Languages’ என்கிற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதுகுறித்து பார்த்தசாரதி, அஷ்ரப், ராஜேந்திரன் ஆகியோரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:

திருக்குறள் மொழிபெயர்ப்புகளைத் தொகுக்கும் எண்ணம் எப்படித் தோன்றியது

  • திருக்குறள் மொழிபெயர்ப்புகளுக்கான நூல்பட்டியல் வெளிவருவது புதிதல்ல. 1964இல் இருந்தே இப்பணிகள் நடைபெற்றுவந்துள்ளன. ஆனால், விரிவான அளவில் வெளியாவது இதுதான் முதல் முறை. இந்நூல் எத்தனை மொழிகளுக்குச் சென்றுள்ளது என்பது குறித்து நம்மிடம் தோராயமான தகவல்களே உள்ளன. பைபிளுக்கு அடுத்தபடியாக அதிகளவில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் எனவும் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்துள்ளதாகவும் பலர் நம்புகின்றனர். இப்படிப் பொத்தாம்பொதுவாகக் கூறுவது, மொழியின் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது. எனவே, திருக்குறள் மொழிபெயர்ப்புகள் குறித்துத் துல்லியமாகப் பதிவுசெய்ய வேண்டும் என நினைத்தோம்.

இந்தத் திட்டம் எப்படிச் செயல்படுத்தப்பட்டது

  • திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை அடையாளம் கண்டு, அதற்கென ஐந்தாண்டுத் திட்டம் வகுத்து, உரியவர்களை ஒருங்கிணைத்து, அனைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்த்து முடித்து, அனைவருக்கும் கிடைக்கச் செய்வதுதான் எங்களது நோக்கம். அச்சில் இல்லாமல் போன மொழிபெயர்ப்புகளை அடையாளம் கண்டு, உரிய வழிமுறைகளைப் பின்பற்றி அச்சிட்டு வழங்குவதும், அனைத்து நாடுகளில் உள்ள மொழிபெயர்ப்புகளையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யவும் தேவையான வேலைகளைச் செய்கிறோம். மக்கள் பிற மொழியினரைச் சந்திக்கும்போது, அவர்கள் மொழியில் வெளியான திருக்குறளைப் பரிசளிப்பது, ஒரு பண்பாட்டு நடவடிக்கையாக மாறுவதற்கு விரும்புகிறோம். இது அதிகாரிகள், ஆட்சியாளர்கள், தூதரகங்கள் இடையேயும் நிலைபெறச் செய்ய முயல்கிறோம்.

மொழிபெயர்ப்புகளை ஆவணப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் என்ன

  • தனிப்பட்ட நபர்கள் தம் சொந்தப் பணத்தில் திருக்குறளை மொழிபெயர்க்கும் முயற்சிகள்தாம் அதிகம். எனினும், தங்களது நூலைப் பலருக்குக் கொண்டுசேர்க்க அவர்களால் இயலாது. நூல் அவர்களிடமே தேக்கமடைந்துவிடும். இந்த மொழிபெயர்ப்பு குறித்த செய்தியை அறிவது, தொடர்ச்சியான தேடலில் ஈடுபட்டால்தான் சாத்தியம். அது குறித்த விரிவான தகவல்களைப் பெறுவதும் கடினமான வேலைதான். ஒரு புத்தகத்தைத் தேடிப்பெற ஆறு மாதங்கள்கூட ஆகலாம்.
  • எடுத்துக்காட்டாக, தந்தை மொழிபெயர்த்திருப்பார்; பிற்காலத்தில் மகனிடம்கூடப் பிரதி இருக்காது. பிஜி தீவில் பேசப்படும் மொழியில் வெளிவந்த திருக்குறள் நூலை, அங்குள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி பெற்றுத் தந்தார்.

திருக்குறளின் வீச்சு குறித்து நீங்கள் அறிந்துகொண்ட புதிய செய்திகள் என்ன

  • இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சந்தாலி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். சந்தாலி மொழியில்கூடத் திருக்குறள் பெயர்க்கப்பட்டுள்ளது எனக் கேள்விப்பட்டு அதைத் தேடினோம். அதற்காகப் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இறுதியில், தஞ்சாவூரைச் சேர்ந்தநெருஞ்சிஎன்கிற இலக்கிய இயக்கம்தான் அதை வெளியிட்டுள்ளது என்பது தெரியவந்தது. அருள்தம்பி வி.ரிச்சர்டு என்பவர் அதை மொழிபெயர்த்துள்ளார்.
  • மாஸ்கோ லெனின் நூலகத்தில் திருக்குறள் குறித்து 1,000 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணம் ஒன்று கிடைத்தது. ரஷ்யாசோவியத் யூனியன்ஆக இருந்தபோது, அங்கு திருக்குறளுக்கும், ஜெயகாந்தன் கதைகளுக்கும் தனி வாசகர் கூட்டம் இருந்துள்ளதை நாங்கள் அறிந்துகொண்டோம். லியோ டால்ஸ்டாய் காலத்திலேயே ரஷ்யர்களுக்குத் திருக்குறள் அறிமுகமாகிவிட்டது எனினும், 1970களில் தமிழகத்தின் பொதுவுடைமை இயக்கத்தினர் மூலம் இத்தகைய செழுமையான இலக்கியப் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தென்மேற்குப் பசிபிக் கடல் பகுதியான பபூவா நியு கினி நாட்டில் பேசப்படும் டாக் பிஸின் என்கிற மொழியில்கூடத் திருக்குறள் வெளிவந்துள்ளது. தமிழகச் சுகாதாரத் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடியின்தந்தை, திருக்குறளைப் பஞ்சாபியில் பெயர்த்துள்ளார்.
  • தமிழ் தனித்துவம் வாய்ந்த சொற்களைக் கொண்டது. திருக்குறளில் உள்ள அத்தகைய சொற்கள், மொழிபெயர்ப்புகளில் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன?
  • உதாரணமாக, அறம் என்ற சொல்லுக்கு இணையான சொல், பிற மொழிகளில் இல்லை. திருக்குறளில்தீஎன்னும் சொல், ‘நெருப்புஎன்னும் பொருளில் மட்டுமே அணுகப்படவில்லை. ‘கலோரிஎன்னும் பொருளில்கூடப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சொற்களுக்கு, அதன் பொருளை அப்படியே கூறுவதுதான்மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருக்கும் ஒரே வழி. குறள்பாக்கள் சரியான பொருளில் அந்தந்த மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளனவா என அறிந்துகொள்ளத் திறனாய்வையும் இனிமேல் செய்யவுள்ளோம்.

எத்தனை மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளீர்கள்

  • இதுவரை 58 மொழிகளில் திருக்குறள் பெயர்க்கப்பட்டுள்ளது. அவற்றில் இந்திய மொழிகள் 29. வெளிநாட்டு மொழிகள் 29. முதலில் மலையாளத்தில்தான் (1595ஆம் ஆண்டு) பெயர்க்கப்பட்டுள்ளது. அப்போது அது அச்சில் ஏறவில்லை; எழுதி மட்டும் வைக்கப்பட்டது. அடுத்ததாக, லத்தீன் மொழியில் திருக்குறள் வெளியானது. மலையாளத்தில் மட்டுமே 27 மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன.
  • யுனெஸ்கோ போன்ற அமைப்புகளுக்குத் திருக்குறளைக் கொண்டுசெல்ல வேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள். அதன் முக்கியத்துவத்தைக் கூறுங்கள்.
  • தனிமனித மனத்தில் அமைதியை உருவாக்கும் நூல், திருக்குறள். பண்பாட்டு நடவடிக்கைகளால் பல நாடுகளுடன் யுனெஸ்கோ உறவாடுகிறது. தனிமனிதனின் அமைதியே, உலக அமைதிக்கு வழிவகுக்கிறது என்பது அதன் அடிப்படைக் கொள்கை. எனவே, யுனெஸ்கோ மூலம் உலக இலக்கியமாகக் கொண்டுசெல்லப்படுவதற்குத் திருக்குறள் பொருத்தமானது. அதிலுள்ள கருத்துகளால் உலகளவில் மனிதர்களிடையே முரண்பாடுகள் மறையும் சூழல் ஏற்படுவது நல்லதுதானே? ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பின்னர்தான், இந்நூல் தமிழகத்தைக் கடந்து கவனம் பெற்றது.

‘Thirukkural Tranlations in World Languages' நூலுக்கு வரவேற்பு எப்படி உள்ளது

  • நாங்கள் பல ஆண்டுகளாக ஆவணப்படுத்தி வரும் செய்திகளை ஒரே நூலில் அடக்குவது பெரிய சவாலாக இருந்தது. .நா. உறுப்பு நாடுகள், உறுப்பு அல்லாத நாடுகள் ஆகியவற்றில் எங்கெல்லாம் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்பு வந்த மொழிகள் எவை, ஒரு மொழிபெயர்ப்புகூட வராத மொழிகள் எவை என்பது உள்ளிட்ட விவரங்கள் இதில் உள்ளன. நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் .அருள், “இது பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளால் செய்யப்பட வேண்டிய அளவுக்கு மிகப் பெரிய பணிஎனப் பாராட்டினார். திருக்குறள் என்னென்ன மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளதோ, அம்மொழிகள் பேசுவோரின் பிள்ளைகள்தாம் மொழிபெயர்ப்புகளின் தரத்தை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories