TNPSC Thervupettagam

உலக வர்த்தகத்தை அச்சுறுத்தும் அமெரிக்காவின் காப்பு வரி

November 4 , 2024 21 days 87 0

உலக வர்த்தகத்தை அச்சுறுத்தும் அமெரிக்காவின் காப்பு வரி

  • அமெரிக்காவில் நாளை அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகக் கட்சி சார்பில் கமலா ஹாரிஸும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர். தேர்தல் பரப்புரையில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் மீது காப்பு வரி விதிப்பது தொடர்பான டொனால்ட் ட்ரம்பின் அறிவிப்புகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 2017 -2021ஆட்சிக் காலகட்டத்தில் ட்ரம்ப் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பல்வேறு பொருட்களுக்கான காப்பு வரியை அதிகரித்தார். இந்நிலையில், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன் என்று கூறி இருக்கிறார்.

ஏன் காப்பு வரி?

  • அரசின் வருவாயை பெருக்குதல் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இறக்குமதியாகும் பொருள்களால் ஏற்படும் போட்டியிலிருந்து உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கில் காப்பு வரிகள் விதிக்கப்படுகின்றன. இத்தகைய பொருளாதாரக் கொள்கையை பாதுகாப்புவாதம் என்று அழைக்கிறார்கள். இதனால், இறக்குமதியாகும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். மக்கள் உள்நாட்டு பொருட்களை அதிக அளவில் வாங்குவார்கள். உள்நாட்டு தொழிற்சாலைகள் வளரும் வேலை வாய்ப்பு பெருகும் என்பதே இறக்குமதி வரிகளின் பின்னணி. ஆனால் தற்போதைய உற்பத்தி முறைகள் ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் நிலையில் இறக்குமதி வரி அதிகரிப்பால் சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

இந்தியா மீது காப்பு வரி:

  • அமெரிக்க சந்தையை கைப்பற்றும் நோக்கில் நியாயமற்ற வர்த்தக கொள்கைகளை பின்பற்றுவதாக சீனா, மெக்ஸிகோ, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீது கமத்தப்படும் குற்றச்சாட்டுகளே ட்ரம்பின் பாதுகாப்புவாத கொள்கைக்கு அடிப்படையாக உள்ளன.
  • சீனா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் டாலருக்கு பதிலாக மாற்றுக் கரன்சியை பயன்படுத்தும் முயற்சிகளில் இறங்கி உள்ள நிலையில் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளில் டாலரை பயன்படுத்துவதை தவிர்க்கும் நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது 100 சதவீத காப்பு வரி விதிக்கப் போவதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
  • “இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் மோட்டார் பைக்குகளுக்கு நாம் வரி விதிப்பதில்லை. ஆனால் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளை நாம் தயாரித்து இந்தியாவுக்கு அனுப்பினால் அதன் மீது 100 சதவீத வரி விதிக்கிறார்கள். நான் திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கப் பொருள்கள் மீது எந்த அளவுக்கு வரிகள் விதிக்கப்படுகிறதோ அதே அளவு பரஸ்பர காப்பு வரிகள் இந்திய பொருள்கள் மீது விதிக்கப்படும்” என்றார். காப்பு வரிகளை துஷ்பிரயோகம் செய்யும் நாடு என்றும் காப்பு வரிகளின் அரசன் இந்தியா என்றும் அவர் குறிப்பிட்டார்.
  • கமலா ஹாரிஸ் தனது பிரச்சாரத்தின் போது ட்ரம்பின் சதவீத கூடுதல் காப்பு வரிகள் ஒரு சாதாரண குடும்பத்துக்கு ஒரு வருடத்துக்கு கூடுதலாக 4,000 டாலர் செலவுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டு இருக்கிறார். எனினும் பைடன் ஹாரிஸ் நிர்வாகமும் சீனப் பொருள்களின் மீது ட்ரம்ப் விதித்த 360 மில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதி வரிகளை நீடிக்கவே செய்தது. மேலும் 100% இறக்குமதி வரியை சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மின் வாகனங்கள் மீது விதித்தது.

காப்பு வரியும் அமெரிக்காவும்:

  • 1930-ல் அமெரிக்காவின் ஸ்மூட்- ஹவ்லே சட்டம் 20,000 பொருட்கள் மீது வரி விதிக்க அனுமதித்ததன் காரணமாக மிகப்பெரிய வர்த்தக போர் ஏற்பட்டு உலக வணிகம் குறைந்து உலகப் பொருளாதாரப் பெருமந்தத்தை தீவிரப்படுத்தியது.
  • 2002-ல் ஜார்ஜ் டபிள்யூ புஷ் இரும்பு எஃகு இறக்குமதிகளின் மீது விதித்த வரிகளின் காரணமாக அமெரிக்காவின் ஜிடிபி 30.4 மில்லியன் டாலர்கள் குறைந்தது என்று அமெரிக்காவின் பன்னாட்டு வணிக கமிஷன் கூறுகிறது. மேலும் இரண்டு லட்சம் வேலை வாய்ப்புகளை இதன் விளைவாக அமெரிக்கா இழந்தது என்றும் கச்சா இரும்பு உற்பத்தி துறையில் மட்டும் 13 ஆயிரம் பேர் வேலை இழந்ததாகவும் மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 2018-ம் ஆண்டு அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தும் நோக்கில் ட்ரம்ப் விதித்த வரிகளினால் வேலைவாய்ப்பின் அள்வு குறையவும் இல்லை, கூடவும் இல்லை என உலக வங்கி, ஹார்வர்டு பல்கலைக்கழகம் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்டவற்றின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • சீனா போன்ற நாடுகள் விதித்த காப்பு வரிகளினால் அமெரிக்க விவசாயிகளுக்குதான் அதிக பாதிப்பு ஏற்பட்டதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
  • ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பொருளாதார அறிஞர்களிடம் நடத்திய கணக்கெடுப்பில் அவர்களில் 80% பேர் அலுமினிய மற்றும் இரும்பு எஃகு பொருட்கள் இறக்குமதி மீது விதிக்கப்படும் காப்பு வரிகளினால் எந்தவித பலனையும் அமெரிக்க பொருளாதாரம் பெறப்போவதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

உலக வர்த்தகத்தில் தாக்கம்:

  • தங்கள் ஏற்றுமதியின் மீது ட்ரம்ப் விதித்த வரிகளுக்கு எதிர்வினையாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் சாக்லேட்டிலிருந்து ஹார்லி டேவிட்சன் மோட்டார் வாகனங்கள் வரை அனைத்து மீதும் ஐரோப்பிய யூனியன் வரிகளை விதித்தது. அதேபோல சீனாவும் அமெரிக்காவின் சோயா பீன்ஸ்களுக்கும் பன்றி இறைச்சிக்கும் அதிக அளவு இறக்குமதி வரி விதித்து அமெரிக்க விவசாயிகளை நஷ்டத்துக்கு உள்ளாக்கியது. சீனா அமெரிக்க வர்த்தகப் போர் ஏற்பட்டால் வரக்கூடிய வருடங்களில் உலகப் பொருளாதார வளர்ச்சியின் வேகம் 2.9சதவீதத்திலிருந்து 2.2 சதவீதமாக குறையும் என்றும் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த சிறிய நாடுகள் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளது எனவும் கூறப்படுகிறது.

தடையற்ற வர்த்தக உறவு அவசியம்:

  • உலக வர்த்தக அமைப்பு அளித்துள்ள விதிவிலக்கின் படி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிற வகையில் நெருக்கடிகள் அமைந்தால் வர்த்தக தடைகளை மேற்கொள்ளலாம். அமெரிக்க சட்டமும் தேசிய பாதுகாப்பு கருதி இறக்குமதிகள் மீது தடை விதிக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. ட்ரம்ப் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்துகிறார். இந்த சட்ட அனுமதியை உலக வர்த்தக அமைப்பில் பிற நாடுகள் எதிர்க்கவும் முடியும். அமெரிக்கா செய்வது போல் பிற நாடுகளும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது பாதுகாப்பை காரணம் காட்டி தடை விதிக்கலாம்.
  • ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் உலக வர்த்தக அமைப்பு, காப்பு வரிகளை விதிக்க வேண்டிய அவசர சூழ்நிலை ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் தனக்கே உண்டு என்றும் பொருளாதார, அரசியல் வேறுபாடுகளை மட்டுமே அவசர சூழ்நிலையை தீர்மானிப்பதற்கு காரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் உலக வர்த்தக அமைப்பு கூறியது கவனிக்கத்தக்கது. சராசரி வரி விகிதத்தை ஒதுக்கி விட்டு சில பொருட்களின் மீது அதிகமாக வரி விதிப்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் வணிகக் கொள்கையை எடை போடக் கூடாது.
  • தனது நாட்டுப் பொருள்களுக்கு வரி விதிக்கக் கூடாது என ட்ரம்ப் விரும்பினால் இந்தியாவுடன் தடையற்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா முன்வர வேண்டும். இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம் தொடர்பான வெளிப்படையான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட வேண்டும் . அமெரிக்காவில் அமையவிருக்கும் புதிய அரசு இதில் கவனம் செலுத்துவது அவசியம்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories