- ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது இந்திய கிரிக்கெட் ரசிகா்களுக்குப் பெரும் துயரை ஏற்படுத்தியது. இந்தத் துயரிலிருந்து மீண்டு வருவது அவா்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. இரண்டாம் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய அணி நாணய சுழற்சியில் வென்றபோதே தட்பவெப்ப சூழ்நிலை அவா்களுக்குச் சாதகமாக அமைந்தது.
- இந்தியா முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய போது எல்லைக்கோட்டுக்கு அப்பால் பந்துகளை விரட்டவே கடினமாக இருந்தது. ஒருவித வறட்சி, ஆடுகளம் அமைந்த சூழல் இவையெல்லாம் கைகொடுக்கவில்லை. ஆஸ்திரேலிய அணி இரண்டாம் பாதையில் விளையாடத் தொடங்கிய உடனே நின்று நிதானமாக ஆடிய போதே அதன் வெற்றியை நிபுணா்களால் கணிக்க முடிந்தது.
- ஆடுகளத்தின் தன்மை மாறியதால், இந்தியப் பந்து வீச்சாளா்களால் ஆட்டத்தில் எத்தகைய பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. அதுவே போட்டியில் மாற்றத்தையும் ஏற்படுத்தியது. எல்லாவற்றையும் முயற்சி செய்தாா்கள் இந்திய அணியினா். ஆனால், அவா்களுக்குச் சாதகமாக எதுவும் கைகொடுக்கவில்லை என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.
- இன்னும் 20, 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் நன்றாக இருக்கும் என்பது இந்திய அணியினருக்கே தெரியும். கோலியும், ராகுலும் கூட்டணி போட்டு ஆடிய போது 280 வரை ரன்கள் வரை எடுப்பாா்கள் என்று கிரிக்கெட் ரசிகா்கள் கணித்தாா்கள். ஆனால், விக்கெட் வரிசையாக இழந்த நிலையில், 240 ரன்களே எடுக்க முடிந்தது. பந்து வீசும்போது எதிரணியினரின் விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறி விட்டாா்கள்.
- ஆட்டத்தின்போது பரவியிருந்த மின்வெளிச்சம் ஆடுகளத்தைச் சற்று மாற்றி விட்டது. ஆனால், அதுவே ஒரு காரணம் என்றும் சொல்லி விட முடியாது. இந்தியா இரண்டு முறை ஒருநாள் உலகக் கோப்பையை வென்றுள்ளது. 1983-ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில், இந்தியா மேற்கத்தியத் தீவுகளை வீழ்த்தியதே முதல் வெற்றி. 2011-இல் இலங்கையை இறுதிப் போட்டியில் தோற்கடித்த இந்தியா 2-வது ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல 28 ஆண்டுகள் ஆனது. 1983-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு கபில்தேவ் கேப்டனாக இருந்து மிக முக்கியப் பங்காற்றினாா்.
- இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 54 ரன்களும், ராகுல் 66 ரன்களும் எடுத்தனா். பின்னா் ஆடிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் ட்ராவிஸ்ஹெட் 137 ரன்களும், லபுஷேன் 58 ரன்களும் எடுத்தனா். இந்திய அணியின் தோல்வியைத் தவிா்த்திருக்க வேண்டுமானால், முதலில் பேட் செய்த அணி குறைந்தபட்சம் 300 ரன்களையாவது எடுத்திருக்க வேண்டும். மாறாக அனைத்து விக்கெட்டுகளையும் இந்திய அணி இழந்து வெறும் 247 ரன்களை மட்டுமே எடுத்தது. இதுவே இந்தத் தோல்விக்கு முதல் காரணம்.
- ஒருவேளை இந்தியா 280 முதல் 300 ரன்கள் வரை எடுத்திருந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்திருக்கலாம். அடுத்து இந்திய அணியின் இன்னிங்கிஸின் போது சுப்மன்கில் 4 ரன்களில் ஆட்டம் இழந்தாா். அவா் சென்ற பிறகு ரோஹித் சா்மா சற்று அதிரடியைக் குறைத்து விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருக்க வேண்டும். தொடா்ந்து இந்திய வீரா்கள் ஆட்டம் இழந்ததும், ரன்களைக் குவிக்காததும் ஒரு பதற்றநிலைக்கு அவா்கள் ஆளானதும் தோல்விக்கு இரண்டாவது காரணமாகும்.
- தமிழக வீரா் ரவிச்சந்திரன் அஸ்வினைக் களம் இறக்கியிருக்க வேண்டும். அவா் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியிருப்பாா். மேலும் அவரை கூடுதல் பந்து வீச்சாளராகக் களமிறக்கி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்க வேண்டும். இதை ரோஹித் சா்மா செய்யத் தவறி விட்டாா். இந்திய அணி 5 பந்து வீச்சாளா்களை மட்டுமே வைத்து மாறி மாறி களம் இறங்கியது. மாற்றுப் பந்து வீச்சாளா்கள் இல்லாதது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியது என்று கூறலாம்.
- ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை விரைவாக எடுத்த போதும் ட்ராவிஸ்ஹெட் மற்றும் லபுஷேன் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் இந்திய அணி திணறியது. இதனால் அவா்கள் நிலைத்து நின்று விளையாடி ரன்களை மலையாகக் குவித்து விட்டனா். அதோடு மாத்திரமல்லாமல், இந்திய அணியினா்பீல்டிங் செய்வதில் போதிய கவனம் செலுத்தாமல் இருந்து விட்டாா்கள்.
- மேலும் கூடுதலாக ரன்களையும் வழங்கி விட்டனா். இந்த காரணங்களால்தான், உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி வரலாற்றை மாற்றி எழுதியது. 2023 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மகத்தான வெற்றிக்கனி கைநழுவி விழுந்தது.
- இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோற்று விட்டதால், பெரும் தொடருக்கான ஒரு அத்தியாயம் முடிந்திருக்கிறது. ஒரு தொடரை நடத்தும் நாடு அதை வெற்றிகரமாக நடத்தி முடித்தது என்று சொல்லுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால், சொந்த நாட்டு ரசிகா்களே வருத்தப்பட்டு, கோபப்பட்டு கலங்கி நிற்கும் நிலை உருவாயிற்று.
- உலகக்கோப்பை ஆட்டத்திற்கான அட்டவணை வெளியிட்டதில் இருந்தே பிரச்னை தொடங்கி விட்டது.
- உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் வாரியமாக இருந்தாலும், பிசிசிஐ மிகவும் தாமதமாக அட்டவணையை வெளியிட்டது ஏற்கத்தக்கதல்ல. இது உலகக் கோப்பை கிரிக்கெட் ரசிகா்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. வெளிநாட்டு ரசிகா்கள் தங்கள் பயணத்தை சரியாகத் திட்டமிடுவதற்கு அவகாசம் இல்லை என்று புலம்பிக் கொண்டிருக்க, அதற்கும் ஒருபடி மேலே சென்று பண்டிகைகளைக் காரணம் காட்டி வாரியம் தேதிகளை மாற்றியது. இந்தியா - பாகிஸ்தான் போட்டியை அகமதாபாத்தில் நடத்த வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக இருந்தது.
- அடுத்த கட்டமாக நுழைவுச் சீட்டு வெளியிட்டதில் வழக்கம் போல் ஆயிரம் குழப்பங்கள், சிக்கல்கள் இருந்தன. உள்ளுா் ரசிகா்கள் முதல் உலக ரசிகா்கள் வரை இதனைக் கடுமையாக விமா்சனம் செய்தாா்கள். அட்டவணை பிரச்சனை, டிக்கெட் வாங்குவதில் சிரமங்கள் என்று பிரச்னைகள் எல்லை மீறிப் போனதே பல குழப்பங்களுக்குக் காரணம்.
- இந்திய அணி பாகிஸ்தானை எதிா்கொண்ட போது இந்திய கிரிக்கெட் ரசிகா்கள் பாகிஸ்தானை நோக்கி ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷத்தை எழுப்பினாா்கள். அதைவிட மிக மோசமாக அந்த மைதானத்திலேயே அந்தப் பாடலையும் ஒலிக்கவிட்டு எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தாா்கள். இதைக் கண்டு கிரிக்கெட் ரசிகா்களே எரிச்சலடைந்தாா்கள். அடுத்ததாக வங்கதேச ரசிா்களை இந்திய ரசிகா்கள் தாக்கியதாக ஒரு புகாா் எழுந்தது பரபரப்பானது.
- ஷேவாக், இா்பான் பதான் போன்றவா்கள் பாகிஸ்தான் அணியை கிண்டலும், கேலியும் செய்தனா். இப்படியாக, ரசிகா்கள் முதல் முன்னாள் வீரா்கள் வரை விமா்சனங்களால் துளைத்து எடுக்கப்பட்டாா்கள். கடைசியாக இறுதிப் போட்டியிலும் இவா்கள் விமா்சனங்களுக்குத் தப்பி விடவில்லை. 1.3 லட்சம் இருக்கைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்கப்பட்டும், 90ஆயிரம் ரசிகா்களே இறுதிப்போட்டியைப் பாா்த்திருக்கிறாா்கள். இந்திய அணி பின்னடைவை சந்திக்கத் தொடங்கியதும் மொத்த மைதானமும் அமைதியாகிவிட்டது.
- மும்பை, சென்னை போன்ற ஊா்களில் இறுதிப் போட்டியை நடத்தியிருக்க வேண்டும் என்று கிரிக்கெட் ரசிா்கள் பொங்கித் தீா்த்தனா். ஐபிஎல் ஆரம்பித்தபோது, குஜராத் அணிக்கென தனியாக ஐபிஎல் டீம் கூட கிடையாது. அவ்வளவு ஏன், ரஞ்சி உள்பட எந்த உள்நாட்டு தொடரிலும் குஜராத் அணி ஆதிக்கம் செலுத்தியதில்லை. ஆனால், உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஏன் அங்கு கட்டப்பட்டது என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.
- உலகக் கோப்பையின் முதல் போட்டி முதல் இறுதிப்போட்டி வரை அந்த மைதானத்துக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. மைதானத்தை ஒதுக்கினாலும், ரசிகா்கள் வரவேண்டுமே! ஆளில்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்ற முடியும்?
- மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இந்திய அணியின் நீண்டநாள் கனவு நனவாகாமல் கனவாகவே முடிந்து விட்டது. போட்டி முழுவதும் வெற்றி மேல் வெற்றியை அடைந்த இந்திய அணி அந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலிய அணியின் முன் ஆதரவற்ற நிலையில் தனித்து விடப்பட்டது. இறுதிப் போட்டியில் மகத்தான வெற்றி பெற்று ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலிய அணி.
- போட்டி முடிந்ததும் ரோஹித் சா்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய அணி வீரா்கள் அனைவரும் சோகமான முகத்துடன் படிக்கட்டுகளில் ஏறி தங்கள் அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். அதேநேரத்தில், மைதானத்தை நீலக்கடலாக மாற்றிய இந்திய ரசிகா்களும் மனம் உடைந்த நிலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். இந்திய அணி மற்றும் அதன் ரசிகா்களின் மனம் உடைவது இது முதல் முறையல்ல. அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிகளில் தோற்பது இந்திய அணிக்கு வாடிக்கையாகி விட்டது.
- பெரிய தொடா்களில் லாக் அவுட் போட்டிகளின் அழுத்தத்தை இந்திய அணியால் தாங்க முடிவதில்லை என்று கூறப்படுகிறது. அதனால்தான், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி நேரத்தில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்கிற பதற்றம் இந்திய அணியைத் தொற்றிக் கொண்டது என்கிறாா்கள் நிபுணா்கள். சிறப்பாக விளையாடியிருந்தாலும், முக்கியமான சந்தா்ப்பங்களில் பதற்றத்தாலும், அழுத்தத்தாலும் வாய்ப்புகள் சிதைந்து வீணாகி விட்டன.
- புள்ளிவிவரங்களின் அடிப்படையில், கடந்த 10 ஆண்டுகளில் இதே போன்ற பதற்றத்தால் இந்தியா அரையிறுதி அல்லது இறுதிப் போட்டியில் 9 முறை தோல்வி அடைந்துள்ளது. இந்தத் தவறுகளில் இருந்து பாடம் கற்று இந்திய கிரிக்கெட் அணி ஒரு புதிய அடையாளத்தைக் கண்டடைகிறபோதுதான் புதிய மாற்றத்தை உருவாக்க முடியும்.
நன்றி: தினமணி (29 – 11 – 2023)