TNPSC Thervupettagam

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியால் இந்திய பொருளாதாரத்துக்கு என்ன பலன்

October 23 , 2023 446 days 320 0
  • கிரிக்கெட்டின் பிறப்பிடம் இங்கிலாந்தாக இருந்தாலும் அதைக்கொண்டாடும் ரசிகர் பெருங் கூட்டம் இருப்பது இந்தியாவில்தான். சினிமாவை விட கிரிக்கெட் விளையாட்டு இந்திய இளைஞர்களையும், பெரியவர்களையும் கட்டிப்போட்டுள்ளது என்றால் அது மிகையில்லை. தேசத்தை ஒருங்கிணைப்பதில் கிரிக்கெட் மிக முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற அனைத்து தரப்பு மக்களும் தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக பிரார்த்தனையில் ஈடுபடும் நிகழ்வுகளே அதற்கான சான்று.
  • அதேபோன்று, ஒரு நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதிலும் விளையாட்டு நிகழ்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில், கிரிக்கெட் போட்டிக்கு மிக முக்கியமான இடம் உண்டு.
  • கடந்த 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிகள் அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறப்பான பங்களிப்பை வழங்கின.
  • இந்த முறை இந்தியாவின் பொருளாதாரத்திலும் தற்போது நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை போட்டிகள் அதிகதாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே பொருளாதார நிபுணர்களின் ஆவலான எதிர்பார்ப்பு.
  • ஐசிசி ஆடவருக்கான உலக கோப்பை கிரிக்கெட் 2023 போட்டிகள் அக்டோபர் 5-ல் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 19-ம் தேதியுடன் இந்த கிரிக்கெட் போட்டி நிறைவு பெற உள்ளது. 10 நாடுகள் பங்கேற்பில் மொத்தம் 48 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
  • நாட்டின் பல்வேறு மாநிலங்களின் மைதானங்களில் நடைபெறும் இந்த கிரிக்கெட் போட்டிகளின் நேரடி மற்றும் மறைமுகமான தாக்கம் நாட்டின் ஜிடிபி மற்றும் நுகர்வுத் துறையில் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். குறிப்பாக இந்தப் போட்டிகள் வழியாக மட்டும் இந்தியாவில் ரூ.20 ஆயிரம் கோடி பணம் புழங்கும் என்று கூறுகின்றனர்.

பணம் புரளும் விளையாட்டு 

  • இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை கிரிக்கெட் நாடு தழுவிய அளவில் 10 நகரங்களின் மைதானங்களில் நடைபெறவுள்ளன. இந்த உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை மட்டும் ரூ.1,600 கோடி முதல் ரூ.2,200 கோடி வரை இருக்கும் என்கிறது மதிப்பீடு.
  • இந்த பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புவதற்காக டிவி உரிமங்களுக்கான செலவினம் ரூ.12,000 கோடி வரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. நடுவர்கள், வர்ணணையாளர்கள் உட்பட கிரிக்கெட் அணிகளுக்கான மொத்த பயண செலவு ரூ.250 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பலமடங்கு பெருகும் நுகர்வு

  • கிரிக்கெட் போட்டி எந்த நாட்டில் நடந்தாலும் அதைத் தவறவிடமால் நேரில் சென்று பார்ப்பது மேல்தட்டு ரசிகர்களின் வழக்கம். அந்த வகையில், இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு போட்டியையும் காண வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் ஓட்டல் செலவினம், உணவு, போக்குவரத்து மற்றும் ஷாப்பிங் செலவுகள் என பல்வேறு நடைமுறைகளைக் கணக்கிட்டால் வெளிநாட்டிலிருந்து வரும் ரசிகர்கள் ரூ.450 முதல் ரூ.600 கோடி வரை செலவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வெளிநாட்டினரைப் போலவே, உள்நாட்டில் பல்வேறு நகரங்களில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை பெரும்பாலான உள்ளூர் ரசிகர்கள் நேரில் சென்று கண்டுகளிப்பதை விரும்புகின்றனர். அப்படி அவர்கள் செல்லும்போது, ஓட்டல், பயணம், உணவு ஆகியவற்றுக்காக உள்ளூர் ரசிகர்கள் செலவிடும் தொகை ரூ.150 முதல் ரூ.200 கோடியை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.
  • கிரிக்கெட் போட்டியை நடத்துவது, வீரர்களுக்கான பாதுகாப்புக்கு ரூ.750-ரூ.1,000 கோடியும், விளையாட்டு தொடர்பான பொருட்கள், பரிசுகளை வாங்க ரூ.200 கோடி வரையும் செலவிடப்படும்.

ஆன்லைன் ஆர்டர்

  • விளையாட்டுப் போட்டிகளை நேரில் சென்று காண சில ஆயிரம் பேருக்கே வாய்ப்பு கிடைக்கிறது. அதேசமயம், லட்சக்கணக்கானோர் டிவி மூலமாகவே கிரிக்கெட் போட்டிகளை கண்டு ரசிக்கின்றனர். இது, ஸோமாட்டோ, ஸ்விக்கி போன்ற ஆன்லைன் உணவு நிறுவனங்களுக்கு ஜாக்பாட் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருகிறது.
  • வீட்டிலிருந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கும் பார்வையாளர்கள் செயலி மூலம் உணவு மற்றும் சிறுதீனிகளை ரூ.4,000-ரூ.5,000 கோடிக்கு ஆர்டர் செய்வார்கள். டிக்கெட் விற்பனை, ஓட்டல் உள்ளிட்டவற்றின் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதன் மூலமாக அரசுக்கு கிடைக்கும் வரி வசூல் கணிசமான அளவில் அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
  • இந்தியாவில் பண்டிகைகள் அதிகம் கொண்டாடப்படும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதால் சில்லறை விற்பனை துறையில் இது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஒட்டுமொத்த அளவில் இந்த ஐசிசி ஆடவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளால் இந்திய பொருளாதாரத்துக்கு ரூ.8,000 கோடிக்கும் அதிகமான அளவுக்கு ஆதாயம் கிடைக்கும் என்பது பொருளாதார வல்லுநர்களின் எதிர்பார்ப்பு.
  • கிரிக்கெட் சூதாட்டம்
  • கிரிக்கெட்டும், சூதாட்டமும் பிரிக்க முடியாத அளவுக்கு பின்னிப் பிணைந்துள்ளன. கிரிக்கெட் போட்டியை முன்வைத்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான சூதாட்டங்களால் தனி நபருக்கு மட்டுமின்றி அரசுக்கும் பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது. இதற்காக , உலக அளவில் சூதாட்ட தரகர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
  • அண்மையில் ‘திங் சேஞ்ச் ஃபோரம்’ (டிசிஎஃப்) நடத்திய ஆய்வில், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் பந்தய நடவடிக்கைகளால் அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு வரி இழப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் கட்டமைப்பு, ஸ்மார்ட்போனின் அசுர வளர்ச்சி, விளையாட்டு நிகழ்வுகளின் விரிவாக்கம் ஆகியவற்றால் சட்டவிரோதமான சூதாட்ட நடவடிக்கைகளும் வேகமெடுத்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
  • இந்தியாவிலிருந்து மட்டும் சட்டவிரோத சூதாட்ட சந்தைக்கு ஆண்டுக்கு ரூ.8.20 லட்சம் கோடி வருமானம் கிடைப்பதாக தெரியவந்துள்ளது. இந்தியாவில் பந்தய விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் சூழ்நிலையில் இத்தகைய பந்தயங்களால் மட்டும் அரசு ஆண்டுக்கு ரூ2.30லட்சம் கோடிக்கும் அதிகமாக வரி வருவாய் இழப்பு ஏற்படுவதை புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
  • சட்டவிரோத சூதாட்டங்களை ஒழுங்குமுறை படுத்தவும், கட்டுப்பாடுகளை விதிக்கவும் வழிவகை உள்ளது. இருப்பினும், சட்டவிரோத பந்தய நடவடிக்கைகளின் மோசடிக் கரங்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து செயல்படுவதால் இப்பிரச்சினையை கையாள்வதை மிகவும் சிக்கலானதாக மாற்றியுள்ளது.
  • ஹவாலா, கிரிப்டோகரன்சிகள் மற்றும் பிற சட்டவிரோத சேனல்கள் போன்ற வழிமுறைகள் மூலம் நிதி பரிமாற்றம் செய்யப்படுகிறது. இது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. இந்த பணம் வேறு சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்பதால் தேசிய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் ஆபத்தும் உள்ளது.
  • எனவே, சட்டவிரோத பந்தய நடவடிக்கை பணப்புழக்கத்தை கண்காணிப்பதற்காகவே சிறப்பு குழுவை உருவாக்குவதுடன், வெளிநாட்டு பந்தய நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்வதை கட்டாயமாக்கினால் வரி ஏய்ப்பு சூதாட்டங்களுக்கு ஓரளவு கடிவாளம் போட முடியும்.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories