TNPSC Thervupettagam

உலகக் கோப்பையில் சாதித்த இந்தியர்கள்

October 6 , 2023 463 days 361 0

சதங்களால் வந்த சாதனை

  • உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இதுவரை (1975 - 2019) 196 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. இதில் 32 சதங்கள் இந்தியர்களால் விளாசுப் பட்டுள்ளன.

முதல் சதம்

  • கபில் தேவ் (175* ஜிம்பாப்வேவுக்கு எதிராக 1983இல் விளாசியது)

அதிகம் சதம் விளாசியவர்கள்

  • சச்சின் டெண்டுல்கர் - 6 சதங்கள் (1996-2, 1999-1, 2003-1, 2011-2), ரோஹித் சர்மா - 6 சதங்கள் (2015 - 1, 2019 - 5)

ஒரே தொடரில் அதிக சதம் விளாசியவர்

  • ரோஹித் சர்மா (5 சதங்கள் - 2019இல்).
  • இந்தியர்கள் விளாசிய 32 சதங்களில் மூன்று சதங்கள் முக்கியமானவை. 1983இல் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தபோது, கபில்தேவ் ருத்ரதாண்டவம் ஆடி 175 ரன்களைக் குவித்தார்.
  • 1999இல் கென்யாவுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் விளாசிய 140 ரன்கள். தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து வெளியேறும் நிலையில் இந்தியா இருந்தது. எதிர்பாராதவிதமாக டெண்டுல்கரின் தந்தை மும்பையில் இறந்துவிட, இறுதிச் சடங்கில் பங்கேற்றுவிட்டு உலகக் கோப்பைத்தொடருக்காக இங்கிலாந்து திரும்பினார். அதன் பிறகு நடந்த போட்டியில்தான் சச்சின் 140 ரன்கள் குவித்தார்.
  • 1999இல் இலங்கைக்கு எதிராக டவுன்டனில் நடைபெற்ற சுற்றுப் போட்டியில் சவுரவ் கங்குலி விளாசிய 183 ரன்கள். உலகக் கோப்பையில் ஓர் இந்தியரின் அதிகபட்ச ஸ்கோர் இது.

ஆல்டைம் ஆல் ரவுண்டர்கள்

  • இந்திய அணி இரண்டு முறை உலகக் கோப்பையை வென்றிருக்கிறது. இதில் 1983 உலகக் கோப்பையில் இந்திய அணியில் 6 ஆல் ரவுண்டர்கள் இருந்தனர். உலகக் கோப்பையை வென்றதில் ஆல் ரவுண்டர்களான கபில்தேவ், மொஹிந்தர் அமர்நாத், ரோஜர் பின்னி போன்றோரின் பங்களிப்பு மகத்தானது.
  • இதில் மொஹிந்தர் அமர்நாத் அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் ஆட்டநாயகன் விருதுகளை வென்றார். 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங், யூசுப் பதான், ரவிச்சந்திரன் அஸ்வின் என 3 ஆல்ரவுண்டர்கள் இருந்தனர். இதில் யுவராஜ் சிங் கிங்காக மிளிர்ந்தார். உலகக் கோப்பைத் தொடர் நாயகன் விருதை யுவராஜ் வென்றார்.

மறக்க முடியாத தருணங்கள்

  •  1975இல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 174 பந்தில் 36 ரன்களை எடுத்தார் கவாஸ்கர்.
  • 1983 இறுதிப் போட்டியில் விவியன் ரிச்சர்ட்ஸ் தூக்கியடித்த பந்தை ரிவர்ஸ் திசையில் ஓடி பிடித்த கபில்தேவ்.
  • 1987, 1992இல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா இரண்டு முறை ஒரு ரன்னில் தோல்வியடைந்தது.
  • 1996 அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தாவில் ரசிகர்கள் செய்த கலவரம்.
  • 1999இல் சவுரவ் கங்குலியும் - ராகுல் டிராவிட்டும் இரண்டாவது விக்கெட்டுக்கு 318 ரன்களுக்கு அமைத்த பார்ட்னர்ஷிப்.
  • 2003இல் இந்தியா இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
  • 2007இல் கத்துக்குட்டி பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் இந்தியா அடைந்த தோல்வியால், தொடரிலிருந்து வெளியேறியது.
  • 2011இல் இறுதிப் போட்டியில் எம்.எஸ். தோனி கடைசியாக விளாசிய கிளாசிக் சிக்ஸர்.
  • 2019இல் ஒரே தொடரில் ரோஹித் சர்மா 5 சதங்களை விளாசி சாதனை படைத்தார்.

வயதும் சாதனையும்

  • 24: இந்தியா முதன் முறை உலகக் கோப்பை வென்றபோது கேப்டனாக இருந்த கபில்தேவின் வயது 24தான். இன்று வரை உலகக் கோப்பை வென்ற இளம் கேப்டன் என்ற பெருமை அவருக்குத் தொடர்கிறது.
  • 18: இந்தியாவுக்காக உலகக் கோப்பையில் மிகக் குறைந்த வயதில் விளையாடிய வீரர் சச்சின் டெண்டுல்கர். 1992 அறிமுக உலகக் கோப்பையில் அவருக்கு 18 வயது.

இரண்டிலும் முத்திரை

  • இந்தியா வென்ற இரண்டு உலகக் கோப்பைகளிலும் பங்காற்றியவர் தமிழகத்தைச் சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த். 1983இல் அணியில் ஓர் அங்கம். 2011இல் வென்ற இந்திய அணியைத் தேர்வு செய்த தேர்வுக் குழுத் தலைவர்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories