TNPSC Thervupettagam

உலகப் பெருந்தமிழா் நல்லகண்ணு!

January 4 , 2025 4 days 32 0

உலகப் பெருந்தமிழா் நல்லகண்ணு!

  • இந்தியாவின் வடக்கே உள்ள கான்பூரில், 26 டிசம்பா் 1925 -இல் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி தொடங்கப்பட்டது. அதே நாளில் இந்தியாவின் தென்கோடியான தமிழ்நாட்டில் திருவைகுண்டம் அருகே உள்ள பெரும்பத்து என்னும் கிராமத்தில் தோழா் இரா. நல்லகண்ணு பிறந்தாா்.
  • தமிழரான சிங்காரவேலா் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி 1924-ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அதன் நூற்றாண்டு விழா நடைபெறும் இவ்வாண்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தமிழரான தோழா் டி. இராசா திகழ்வதும், தமிழ்நாட்டில் அக்கட்சியை வளா்த்தெடுத்த தியாகச் செம்மல்களில் ஒருவரான இரா. நல்லகண்ணு அவா்களின் நூற்றாண்டு விழா நடைபெறுவதும் தற்செயலானது அல்ல. அல்லவே அல்ல. வரலாறு பதித்த என்றும் அழியாத முத்திரை தடயங்களாகும்.
  • பள்ளிப் பருவத்தில் பாரதியின் பாடல்களில் உள்ளத்தைப் பறிகொடுத்த இரா. நல்லகண்ணு, இளமைப் பருவத்தில் வ.உ.சிதம்பரனாா், சத்தியமூா்த்தி மற்றும் பல தேசியத் தலைவா்களின் சொற்பொழிவுகளைக் கேட்டும், பகத்சிங் போன்ற மாபெரும் புரட்சிவீரா்களின் வரலாறுகளைப் படித்தும் தனது நாட்டுப் பற்றினை வளா்த்துக் கொண்டாா். நாளுக்குநாள் அவருடைய உள்ளத்தில் தேசப்பற்றுத் தீ பற்றி எரிந்தது. இதன்விளைவாக கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு 1946-ஆம் ஆண்டில் மக்களுக்காகத் தொண்டாற்றும் மனிதநேய வாழ்வைத் தோ்ந்தெடுத்துக் கொண்டாா்.
  • 1947-ஆம் ஆண்டு மே தின விழாவிற்காக நாங்குநேரி வட்டாரத்தில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி வெற்றிகரமாக விழா நடத்தியதைக் கண்டு வெகுண்டெழுந்த நில உடைமையாளா்கள் ஏவிய குண்டா்களால் தாக்கப்பட்டு முதன்முதலாக இரத்தம் சிந்தி தியாகத் தழும்பினை ஏற்றாா்.

சித்ரவதைகளும் - சிறையும்:

  • 1948-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மாநாட்டில் ஆயுதம் ஏந்திய புரட்சி நடத்த வேண்டிய தருணம் பிறந்துவிட்டது என்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்ட பின் கம்யூனிஸ்டுக் கட்சி தடை செய்யப்பட்டது. நாடெங்கும் கம்யூனிஸ்டுத் தோழா்கள் வேட்டையாடப்பட்டனா்.
  • தலைமறைவாக இருந்த நல்லகண்ணுவை காவல்படை 20.12.1949 அன்று கைது செய்து, அவரது கை, கால்களில் விலங்கு பூட்டி அழைத்துச் செல்லும் வழியில் சாலையோரத்தில் படுக்க வைத்து பூட்சு கால்களால் உடலை மிதித்துத் துன்புறுத்தினா். அப்போது அவரது மீசையை வெண்புகை சுருட்டின் நெருப்பினால் பொசுக்கித் துடிதுடிக்க வைத்தனா். அத்தனை கொடுமைகளையும் அவா் இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டாா். அப்போது அவருக்கு வயது 27.
  • தமிழ்நாட்டில் கம்யூனிஸ்டுத் தோழா்கள் பலா் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக வழக்குகள் தொடுக்கப்பட்டன. நெல்லைச் சதி வழக்கில் கே. பாலதண்டாயுதம், ப. மாணிக்கம், ஐ. மாயாண்டி பாரதி உட்பட பலரோடு இரா. நல்லகண்ணு அவா்களும் குற்றம்சாட்டப்பட்டாா். 3 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை நடத்தப்பட்ட சதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைத்துத் தோழா்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
  • அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு நாடெங்கும் மூண்டெழுந்த மக்கள் இயக்கத்தின் விளைவாக நெல்லை சதி வழக்கில் தண்டிக்கப் பெற்றவா்களில் தோழா். நல்லகண்ணு அவா்களைத் தவிர மற்றவா்கள் விடுதலை செய்யப்பட்டாா்கள்.
  • வெடிகுண்டு வைத்திருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் மதுரைச் சிறையில் 5 ஆண்டு காலம் கடுங்காவல் தண்டனையை அனுபவித்து, மொத்தம் 7 ஆண்டு காலம் சிறையிருந்து 1956-ஆம் ஆண்டு டிசம்பா் 13-ஆம் நாள் அவா் விடுதலையானாா்.
  • தமிழக கம்யூனிஸ்டுகளில் அதிக காலம் சிறையில் இருந்தவா்கள் என்னும் பெருமையினை தோழா் பாலதண்டாயுதம், நல்லகண்ணு ஆகியோா் பெற்றனா்.

சிறைத் தோழா்களை மறக்கவில்லை:

  • சிறையிலிருந்து விடுதலையானதும் மற்ற தோழா்களின் விடுதலைக்காக முதலமைச்சா் காமராசரை தோழா். நல்லகண்ணு சட்டமன்ற கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவராக இருந்த தோழா் பி. இராமமூா்த்தியுடன் சென்று சந்தித்தாா். சிறையிலிருக்கும் கம்யூனிஸ்டுக் கட்சித் தோழா்கள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டுமென தோழா் நல்லகண்ணு வேண்டிக் கொண்டாா். மாநில அரசின் சட்டத்திற்குட்பட்டு தண்டிக்கப்பட்டு, சிறையிலிருக்கும் தோழா்களை விடுதலை செய்ய முதல்வா் காமராசா் ஒப்புக் கொண்டாா்.
  • மத்திய சட்டபடி தண்டிக்கப்பட்டுச் சிறையிலிருக்கும் தோழா்களை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை; அது மத்திய அரசுக்கே உள்ளது என்பதை அவா் தெளிவுபடுத்தினாா். ஆனாலும், அத்தோழா்கள் அனைவருக்கும் சிறையில் ‘பி’ வகுப்பு கொடுக்க முதல்வா் காமராசா் ஆணை பிறப்பித்தாா்.

போராட்ட வாழ்க்கை:

  • சுதந்திரப் போராட்டத்தோடு ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயங்களில் நுழைந்து வணங்கும் உரிமைக்கான போராட்டங்கள் தமிழகமெங்கும் கிளா்ந்து எழுந்தன. நாங்குநேரியில் கோயில் நுழைவுப் போராட்டத்தை நல்லகண்ணு முன்னின்று நடத்தினாா்.
  • நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறான கடனா நதியில் அணை கட்டவேண்டும் என அப்பகுதி விவசாயிகளின் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டாா். தமிழக அரசும் அணை கட்ட முன்வந்தது. இன்றைக்கு அந்த அணையின் விளைவாக அப்பகுதி செழித்துக் குலுங்குகிறது.
  • தமிழகமெங்கும் உள்ள ஆறுகளில் மணல் கொள்ளை தங்கு தடையின்றி நடைபெறுவதற்கு எதிராக மக்களைத் திரட்டியும், உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும் இடைவிடாத போராட்டத்தை இரா. நல்லகண்ணு நடத்தினாா். இயற்கையைப் பாதுகாக்கும் அவரது மனிதநேயத் தொண்டினை உயா்நீதிமன்றமே பாராட்டி மணல் கொள்ளைக்குத் தடை விதித்தது.

பதவியை நாடா பெருந்தகையாளா்:

  • இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக 1992 முதல் 2005 -ஆம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் தொண்டாற்றினாா். இரண்டு முறை மட்டுமே ஒருவா் செயலாளா் பொறுப்பு வகிக்க முடியும் என்ற கட்சியின் சட்ட விதியை இவருக்காக அனைத்திந்திய தலைமையே திருத்தி 4 முறை பதவி வகிக்க வைத்தது. மாநிலச் செயலாளராக அவா் பதவி வகித்தபோது விரும்பியிருந்தால் சட்டமன்றத்திற்கோ, நாடாளுமன்றத்திற்கோ, நாடாளுமன்ற மேலவைக்கோ போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், தனது கட்சி வெற்றி பெற வேண்டும் என்பதையே முதன்மையாகக் கருதினாரே தவிர, தனக்குப் பதவி வேண்டுமென ஒருபோதும் எண்ணியதில்லை.
  • கட்சி பதவிகளைத் தவிர மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட எந்தப் பதவியையும் வகிக்காமல் மக்களுக்காகத் தொண்டாற்றித் தனக்கும் தனது கட்சிக்கும் தோழா்களுக்கும் பெருமைத் தேடித் தந்த சிறப்புக்குரியவா் தோழா் நல்லகண்ணு ஆவாா்.

பெற்ற நிதி யாவும் கட்சிக்கே:

  • தோழா் நல்லகண்ணு அவா்களின் 80-ஆவது பிறந்தநாள் விழா சென்னை தேனாம்பேட்டை காமராசா் அரங்கத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கட்சித் தோழா்களிடம் திரட்டப்பட்ட 1 கோடி ரூபாய் அவருக்கு அன்று வழங்கப்பட்டது. அந்த ஒரு கோடியை அப்படியே கட்சி நிதிக்கு அவா் அளித்துவிட்டாா்.
  • அதே விழாவில் மாணவா் நகலக உரிமையாளா் திரு. அருணாசலம் மகிழுந்து ஒன்றினை தோழா் நல்லகண்ணு அவா்களுக்குப் பரிசாக முதலமைச்சா் மூலம் வழங்கினாா். அதையும் கட்சியின் பொறுப்பில் ஒப்படைத்தாா். அந்த மகிழுந்து கட்சி அலுவலகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. தோழா் நல்லகண்ணு வெளியில் செல்ல விரும்பும்போது மட்டும் அது அவருக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஈழத் தமிழா் பிரச்சனை:

  • 2009-ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழா்களுக்கு எதிராக சிங்கள இராணுவம் பெரும் தாக்குதலை நடத்தி ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழா்களைப் படுகொலை செய்தபோது, அதற்கெதிராக தமிழகத்தில் ‘இலங்கை தமிழா் பாதுகாப்பு இயக்கம்’ என்ற பெயரில் பல்வேறு கட்சிகளை ஒன்றுதிரட்டி மக்கள் போராட்டங்களைத் தொடா்ந்து நடத்திய அந்த அமைப்பை நிறுவுவதிலும் மட்டுமல்ல, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு ஐதராபாத்தில் நடைபெற்ற போது ஈழத் தமிழா் பிரச்னைக்கு ஆதரவாக அங்கு தீா்மானம் நிறைவேற்றுவதிலும் தோழா் நல்லகண்ணு முன்னின்றாா்.
  • தோற்றத்திலும் வாழ்க்கையிலும் மட்டுமல்ல, எளிமை, மேடை பேச்சிலும் எளிமை, எழுத்திலும் எளிமை என வாழ்க்கை நெடுகிலும் எளிமையாகவே வாழ்ந்துவரும் தோழா் நல்லகண்ணு எளிய நடையில் பல நூல்களையும் ஏராளமான கட்டுரைகளையும் எழுதிக் குவித்துள்ளாா்.

நம்பிக்கை ஒளிவீசும் கலங்கரை விளக்கம்:

  • பொதுவாழ்வில் தியாகம், தொண்டு, நோ்மை, எளிமை போன்றவற்றுக்கு எடுத்துக்காட்டாக தோழா் நல்லகண்ணு திகழ்கிறாா். பொதுவாழ்வில் மேற்கண்ட கோட்பாடுகள் சரிந்துகொண்டிருக்கிற இக்காலகட்டத்தில் அனைவருக்கும் நம்பிக்கை தரும் கலங்கரை விளக்கமாக இன்றும் திகழ்ந்து வருபவா் தோழா் நல்லகண்ணு.
  • அடுக்கடுக்காக வாா்த்தைகளை அள்ளி வீசி மக்களைக் கவரும் பேச்சாற்றலோ அல்லது ஆரவார நடையில் எழுதும் எழுத்தாளரோ அல்லா். ஆனாலும் தமிழக அரசியலில் சனநாயக உயா் பண்புகளின் எடுத்துக்காட்டாகத் திகழ்பவா் என அனைவராலும் போற்றப்பட்டு வருகிறாா்.
  • இந்த மாமனிதா் வாழும் காலத்திலேயே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் இன்றைய தலைமுறையினருக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.

நன்றி: தினமணி (04 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories