TNPSC Thervupettagam

உலகம் 2023

December 31 , 2023 379 days 305 0

ஜனவரி

  • 1:: பிரேஸிலில் தீவிர வலதுசாரி தலைவரான ஜெயிர் பொல்சொனாரோவின் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, இடதுசாரி கட்சித் தலைவர் லூயிஸ் லூலா டாசில்வா புதிய அதிபராகப் பொறுப்பேற்றார்.
  • 19:: நியூஸிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டன் திடீரென அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். கருத்துக் கணிப்புகளில் அவரது தொழிலாளர் கட்சி பின்னடைவை சந்தித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
  • 25:: ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு சக்திவாய்ந்த பீரங்கிகளை அளிக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் அறிவித்தன.

பிப்ரவரி

  • 5:: தங்கள் நாட்டு வானில் பறந்துகொண்டிருந்த சீன உளவு பலூனை அமெரிக்கா சுட்டுவீழ்த்தியது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய பதற்றத்தை ஏற்படுத்தியது.
  • 6:: சிரியா எல்லையையொட்டிய துருக்கி பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாகப் பதிவான அந்த நிலநடுக்கம் மற்றும் 7.5 அலகுகளாகப் பதிவான அதன் பின்னதிர்வில் கட்டடங்கள் இடிந்து விழுந்து இரு நாடுகளிலும் 59 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.
  • 21:அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்பட்டிருந்த கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தமான "ஸ்டார்ட்'டிலிருந்து விலகுவதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்தார். அந்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி தங்களது அணு ஆயுதத் திறன் கொண்ட போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் விமானதளங்களில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உதவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

மார்ச்

  • 10:: பல ஆண்டுகள் நீடித்து வந்த பதற்றத்துக்குப் பிறகு, தங்களுக்கிடையே தூதரக உறவை மீண்டும் ஏற்படுத்திக்கொள்ள ஈரானும், சவூதி அரேபியாவும் சம்மதித்தன.
  • 17:: உக்ரைன் போரின்போது அந்த நாட்டு சிறுவர்களை வலுக்கட்டாயமாக ரஷியாவுக்குக் கடத்திய குற்றச்சாட்டின்பேரில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கு எதிராக தி ஹேக் நகரிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்தது. ஒரு நாட்டின் தலைவருக்கு எதிராக இத்தகைய கைது உத்தரவு பிறப்பிக்கப்படுவது மிகவும் அரிதானது ஆகும்.
  • 28:: ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் முன்னாள் ஜனநாயக ஆட்சித் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி கலைக்கப்பட்டது. அந்த நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் ராணுவ ஆதரவு பெற்ற கட்சிகளுக்கு எதிராக மிகப் பெரிய வெற்றியை அந்தக் கட்சி கண்டு வந்தது.

ஏப்ரல்

  • 16:: வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப் படைக்கும் இடையே மோதல் தொடங்கியது. இதில் இதுவரை 10,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மே

  • 5:: கரோனா நோய் பரவல் இன சர்வதேச மருத்துவ அவசரநிலை இல்லை என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ஜூன்

  • 9:: பெலாரஸில் தங்களது அணு ஆயுதங்களைக் கொண்டு சென்று வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ரஷியா அறிவித்தது. சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு ரஷியாவின் அணு ஆயுதங்கள் இன்னொரு நாட்டில் வைக்கப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.
  • 14:: அளவுக்கு அதிகமாக சுமார் 700 பேர் ஏற்றிச் செல்லப்பட்ட அகதிகள் படகு கிரீஸ் அருகே கடலுக்குள் மூழ்கியது. இதில் சுமார் 600 பேர் உயிரிழந்தனர்; அவர்களில் 209 பேர் பாகிஸ்தானியர்கள்.
  • 18:: வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அடியில் விழுந்து கிடக்கும் டைட்டானிக் கப்பலைப் பார்வையிடுவதற்காக 5 பேருடன் கடலுக்குள் இறங்கிய தனியாருக்குச் சொந்தமான "டைட்டன்' நீர்மூழ்கி மாயமானது. பல நாள்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு அது கடலுக்குள் இறங்கிய சில மணி நேரத்தில் உள்வெடிப்புக்குள்ளாகி சிதறியதும், அதிலிருந்த 5 பேரும் உயிரிழந்ததும் பின்னர் தெரியவந்தது.
  • 24:: உக்ரைனில் ரஷியாவுக்கு ஆதரவாக போரிட்டு வந்த யெவ்கெனி ப்ரிகோஷின் தலைமையிலான வாக்னர் குழு, ரஷிய ராணுவ தலைமைக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியை அறிவித்தது. உக்ரைனிலிருந்து மாஸ்கோ நோக்கி முன்னேறிய அந்தப் படையினர், ஆயுதக் கிளர்ச்சியை பாதியில் கைவிட்டுத் திரும்பினர்.

ஆகஸ்ட்

  • 20:: நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரஷியாவால் அனுப்பப்பட்ட லூனா-23 ஆய்வுக் கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியது.
  • 23:: சுமார் 1 மாதத்துக்கு முன்னர் ரஷிய ராணுவத் தலைமைக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் மற்றும் அந்தப் படையின் முக்கிய தளபதிகள் மர்மமான முறையில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தனர்.

அக்டோபர்

  • 7:: காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்திய ஹமாஸ் படையினர் அந்த நாட்டுக்குள் தரை, கடல், வான் வழியாக நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவர்களைப் படுகொலை செய்தனர்; சுமார் 240 பேரை பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றனர். அதையடுத்து ஹமாஸ் அமைப்பை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸா பகுதியை முற்றுகையிட்டு வான்வழியாகவும், தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

நவம்பர்

  • 22:: இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்குப் பதிலாக அந்த நாட்டிலிருந்து கடத்திவரப்பட்ட பிணைக் கைதிகள் சிலரை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பதற்காக காஸாவில் தற்காலிக சண்டை நிறுத்தம் மேற்கொள்ள இரு தரப்பிலும் ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும், 7 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததும் காஸாவில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது.

டிசம்பர்

  • 22:: காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்தது.

நன்றி: தினமணி (31 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories