உலகளாவிய திறன் மையமாக உருவெடுக்கும் இந்தியா
- கடந்த சில தசாப்தங்களாக உலக கால் சென்டர்களின் மையமாக இந்தியா அறியப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில ஆண்டு களாக உலகளாவிய திறன்களுக்கான மையங்களை (Global Capability Centres-GCC) அமைக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவைத் தெரிவு செய்ய ஆரம்பித்திருக்கின்றன.
- ஓர் அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டு வரும் அழைப்புகளுக்கு பதில் அளிப்பது அல்லது புகார்களைக் கேட்டு அதை நிவர்த்தி செய்வது அல்லது பொருள்களையும், சேவைகளையும் சந்தைப்படுத்த வாடிக்கையாளர்களை அழைப்பது என்று இருந்த நிலை மாறி வருகிறது.
- இன்றைக்கு ஃபார்ச்சூன் 500 பட்டியலில் இருக்கும் நிறுவனங்களுக்குத் தேவையான மென்பொருளை வடிவமைப்பது அல்லது நியூயார்க்கில் இருக்கும் ஒரு சுகாதார நிலையத்துக்கான புத்தாக்க செயற்கை நுண்ணறிவு செயலிகளை/மாடல்களை உருவாக்குவது அல்லது பன்னாட்டு வங்கி ஒன்றுக்கு நிதி உத்திகளை உந்துவது போன்ற பல தரப்பட்ட வேலைகளைச் செய்யக்கூடிய மையங்களாக இந்த GCC-க்கள் உருவெடுத்து வருகின்றன.
- பன்னாட்டு நிறுவனங்களுக்கான back office இந்தியா என அழைக்கப்படுவதற்குப் பதிலாக உலகளாவிய தொழில் உத்திகள் மற்றும் புத்தாக்கத்துக்கான front office என அழைக்கப்படும் காலம் வெகு தூரம் இல்லை. அயலாக்க (outsourcing) மையமாக இருந்த இந்தியா, இன்றைக்கு திறன்களுக்கான மையமாக பரிணாம வளர்ச்சி அடைந்து வருவதை தொழில் ஆலோசனை நிறுவனமான PwC அறிக்கையொன்றில் அழகாக விளக்கியிருக்கிறது.
- 1985 – டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ் நிறுவனமானது பெங்களூருவில் அதனுடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தை அமைத்தது
- 1990-களில் – விமான சேவை நிறுவனங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் அவற்றுக்கான பின்னியக்கப் பணிகளைச் (back-end operations) செய்வதற்கான அலுவலகங்களை நிறுவின.
- 2000-களின் முந்தையப் பகுதி – தொழிலுக்கு ஆதரவான சேவைகள், தொழில்நுட்ப ஆதரவு சேவைகள், மற்றும் பின்னியக்கச் செயல்பாடுகளில் GCC கவனம் செலுத்தியது.
- 2000-களின் பிந்தையப் பகுதியிலிருந்து GCC ஆனது உலகளாவிய தயாரிப்பு வாழ்க்கைச் சுழற்சியின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான அனைத்துச் சேவைகளையும் செய்ய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இவை தனியர்வய (captive) மையங்கள் என அழைக்கப்பட்டன. அதன்பின், உலகளாவிய உள் மையங்கள் (Global In-House Centres – GIC) என அழைக்கப்பட்டு இப்போது உலகளாவிய திறன்களுக்கான மையங்கள் (GCC) என புதிய பெயர் சூட்டப்பட்டு சிறப்பாக இயங்க ஆரம்பித்திருக்கின்றன.
ரூ.5.5 லட்சம் கோடி:
- 2012-ம் ஆண்டில் 760 GCC-க்கள் இந்தியாவில் இயங்கி வந்தன. இதன் எண்ணிக்கை 2016-ம் ஆண்டு 1,000 என்கிற எண்ணிக்கையைத் தொட்டது. இன்றைக்கு இந்தியாவில் சுமார் 1,800-க்கும் மேற்பட்ட திறன் மையங்கள் இயங்கி வருகின்றன. சந்தை மதிப்பு ரூ.5.5 லட்சம் கோடியாக (64.4 பில்லியன் டாலர்) உள்ளது. இது 2030-ம் ஆண்டுவாக்கில் 2000-க்கும் அதிகமாக இருக்கும் எனவும், சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர் ஆக அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டிருக்கிறது.
19 லட்சம் ஊழியர்கள்:
- இந்தியாவில் இயங்கி வரும் GCC-க்களில் 65 சதவீத மையங்களுக்கு தலைமை அலுவலகங்கள் அமெரிக்காவில் இருக்கின்றன. இங்கு இயங்கி வரும் இந்த மையங்கள் வெறும் ஆதரவளிக்கும் மையங்கள் என்கிற நிலையிலிருந்து முன்னணி உலகளாவிய செயல்பாடுகளை வழங்கும் மையங்களாக மாறியிருக்கின்றன.
- இந்த மையங்களில் மட்டும் சுமார் 13 முதல் 19 லட்சம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இது 2030-ம் ஆண்டு 25 லட்சத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்தியாவில் இயங்கி வரும் GCC-க்கள் எல்லாம் ஒரு நகரம் என எடுத்துக்கொண்டால் அது வியன்னாவை விடப் பெரிதாகும்.
- இவை எவ்வாறு செயல்படுகிறது என நீங்கள் யோசிக்கக்கூடும். ஒரு பெரிய நிறுவனம் வேறொரு நாட்டில் அதனுடைய செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்புகிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் எல்லாவற்றையும் தாங்களே நிர்வகிப்பதற்கு பதிலாக, அவர்கள் ஒரு உலகளாவிய திறன் மையத்தை (GCC) அமைக்கின்றனர்.
- இது அவர்களுக்கான `one-stop’ தீர்வு மையமாக செயல்படும். செயல்பாடுகளைத் திட்டமிடுதல், திறமையானவர்களைப் பணியமர்த்துதல், அலுவலக இடத்தைக் கண்டறிதல் மற்றும் அனைத்து வேலைகளும் துல்லியமாக இயங்குவதை உறுதி செய்தல் ஆகிய அனைத்து வேலைகளையும் GCC தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ளும். இது ஒரு புதிய அலுவலகத்தை தொலைவில் இருக்கும் ஓர் இடத்தில் நிறுவுவது போல இருந்தாலும் நிலையான கட்டணத்துக்கு அனைத்து வேலைகளையும் அயலாக்கம் செய்து விடுவதாகும்.
இந்தியாவில் GCC ஏன்?
- GCC-க்களை அமைப்பதில் இந்தியா ஏன் விரும்பக் கூடிய இடமாக இருக்கிறது? இதற்கான காரணங்கள் திறமையும், செலவும் ஆகும். அமெரிக்கா அல்லது பிரிட்டன் போன்ற நாடுகளைக் காட்டிலும் குறைந்த செலவில் திறமையான பணியாளர்கள் இந்தியாவில் இருப்பதை நிறுவனங்கள் விரும்புகின்றன.
- சம்பளம், அலுவலக வாடகை மற்றும் எக்ஸ்சேஞ்ச் விகிதம் என அனைத்தும் மிகவும் மலிவாக இருக்கிறது. உதாரணத்துக்கு கோல்ட்மேன் சாக்ஸின் பெங்களூரு GCC-யை எடுத்துக் கொள்ளுங்கள். இது அதற்கான ஒரு ஆதரவு மையம் என்பதைவிட முக்கியமான உலகளாவிய மையமாகும். உலகளவில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட இடர் (ரிஸ்க்) மேலாண்மை அல்காரிதம்களை உருவாக்குகிறது.
- இந்தியாவில் இயங்கி வரும் GCC-களின் நோக்கம் பணத்தை சேமிப்பது மட்டுமல்ல. அவை AI, தரவு பகுப்பாய்வு, கிளவுட் கம்ப்யூட்டிங், R&D போன்ற துறைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான நிறுவனங்கள் 10/30/50 என்கிற அணுகுமுறையைப் பின்பற்றுகின்றன.
- அதாவது நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் 10% பேர் அதனுடைய GCC-ல் பணிபுரிபவர்களாகவும், மொத்தப் பணியாளர்களில் 30 % பேர் இந்த திறன் மையங்களில் வேலை செய்பவர்களாகவும், நிறுவனத்தின் புதிய, புத்தாக்கத் திறமைகளான AI, தரவுப் பகுப்பாய்வு ஆகியவற்றை உருவாக்குவதிலும், வடிவமைப்பதிலும் இந்த மையங்களின் பங்கு 50% இருக்கும்படியும் பார்த்துக் கொள்கின்றன.
மத்திய அரசு ஆதரவு:
- இவை தவிர, இந்திய அரசும் இந்த மையங்களை அமைக்க உதவி செய்து வருகிறது. உற்பத்தியோடு இணைந்த ஊக்கத்தொகை (PLI), தளர்த்தப்பட்ட அந்நிய நேரடி முதலீடு விதிகள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான முதலீடு, சீனா+1 உத்தி (அதாவது, சீனாவுக்கு மாற்றாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான இடம்).
- GCC-ஐ நிறுவுவதற்கு இந்த அளவுக்கு எளிதாக இதற்கு முன்பு எப்போதும் இருந்ததில்லை என இத்துறை சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். 2029-ம் ஆண்டுக்குள் கர்நாடகாவில் மட்டும் 1,000 GCCக்கள் இருக்க வேண்டும் என்கிற குறிக்கோளில் பல முயற்சிகளை அம்மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
- GCC-யால் ஏற்படும் பிரச்சினைகள்: பல சிறப்பான அம்சங்களை GCC கொண்டிருந்தாலும் அதனுடைய செயல்பாடு பின்வரும் சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. உலகப் பொருளாதாரம் மந்தமாகும் போது, இந்த GCC-க்களின் செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகும். 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது அயலாக்கத் துறை (BPO) பெருமளவில் பாதிப்புக்குள்ளானது.
- இதோடு, திறமையான பணியாளர்களை தக்கவைத்துக் கொள்வது மிகப் பெரிய சவாலாகும். ஏனெனில் அவர்களுக்கான தேவை எங்கும் இருக்கிறது. இதனால் அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் வகையில் GCC-க்கள் சம்பளமும் மற்ற பணியாளர் நல வசதிகளையும் வழங்க வேண்டும்.
நிலம் விலை உயரும்:
- GCC-க்களின் வளர்ச்சியால் ரியல் எஸ்டேட் விலை அதிகமாவதோடு பெருநகரங்களில் நெருக்கடியையும் ஏற்படுத்தும். உலக அளவில் அலுவலக இடத் தேவை அதிகமாக இருக்கும் 10 பெரு நகரங்களில் பெங்களூருவும், ஹைதராபாத்தும் இடம் பெற்றிருக்கின்றன. எனவே சில பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது ஜெய்ப்பூர், கோயம்புத்தூர், விசாகப்பட்டிணம் போன்ற நகரங்களின் மீது பார்வையை செலுத்த ஆரம்பித்திருக்கின்றன.
- இந்திய உள்நாட்டு உற்பத்தியில் இந்த GCC-க்களின் பங்கு 1 சதவீதத்துக்கு சற்று அதிகமாகும். இது ஒரு ஆரம்பம் தான் என பல ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இது இன்னும் அதிகரிக்க வேண்டுமெனில் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களின் கட்டுமான அமைப்புகளை மேம்படுத்தி GCC-க்கள் நிறுவுவதற்கான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதோடு புதிய யோசனைகளைக் கொண்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களோடு கைகோர்த்து செயல்படுவதும் அவசியமாகும்.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 12 – 2024)