TNPSC Thervupettagam

உலகின் குக் பிரபலங்கள்!

October 11 , 2024 97 days 130 0

உலகின் குக் பிரபலங்கள்!

  • இன்றைய ‘ஸூமர்ஸ்’ (Gen z) யுகத்தில், இருக்கும் திறனைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் திறமை பெற்றிருக்க வேண்டும். இதற்காகப் பெரிய மெனக்கெடல்கள் தேவையில்லை. ஒரே ஒரு தத்துவத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டால் மட்டும் போதும். அது, ‘நாம என்ன செஞ்சாலும் இந்த உலகம் திரும்பிப் பார்க்கணும்’ என்கிற நடிகர் வடிவேலுவின் டயலாக்தான். இந்தத் தத்துவத்தைத் தாரக மந்திரமாக ஏற்றுக்கொண்டவர்களே சமூக வலைதளங்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சமையல் சார்ந்த துறையில் குதித்து, தங்களுடைய தனித்த அடையாளத்தின் மூலமாக உலக அளவில் பிரபலங்களாக மாறியவர்களைப் பார்ப்போம்.

சால்ட் பே:

  • இவருடைய பெயரிலேயே ‘சால்ட்’ இருப்பதாலோ என்னவோ, இவர் உலக அளவில் அறியப்படும் செஃப் ஆக அசத்திக்கொண்டிருக்கிறார். சால்ட் பிறந்து வளர்ந்தது எல்லாமே துருக்கியில்தான். இயற்பெயர் நுஸ்ரத் கோச்சே. சமையல் கலைஞராகவும் உணவகத்தின் உரிமையாளராகவும் அறியப்படும் சால்ட் பே, அவருடைய வித்தியாசமான உடல் மொழியின் மூலம் உலக அளவில் ஏராளமானோரைக் கவர்ந்திருக்கிறார். உணவில் உப்பைப் போடும்போது, காணொளிகளில் கண்களைக் குத்துவது போல் நம்மை நோக்கி வருவது, கத்தியைச் சுற்றிவிடுவது, பழத்தை வெட்டுவது போல இறைச்சியை விதவிதமாக வெட்டுவது என சால்ட் பேவின் சமைக்கும் ஸ்டைல் விசித்திரங்கள் நிறைந்தவை.
  • இவற்றையெல்லாம் காணொளிகளாக்கி யூடியூபிலும் பதிவேற்றிவருகிறார். இதன்மூலம் அவருக்கு உலக அளவில் ரசிகர்கள் உண்டு. இந்தப் பிரபலத்தால் அமெரிக்கா, இங்கிலாந்து, கத்தார், சௌதி அரேபியா எனப் பல்வேறு நாடுகளில் உணவகங்களைத் திறந்திருக்கிறார். சால்ட் பேவுக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவுக்கு அவருக்கு எதிரான விமர்சனங்களும் உண்டு. ஆனால், எதுவாக இருந்தாலும் சமைக்கும்போது உப்பை ஸ்டைலாகத் தூக்கிப் போடுவதைப் போல விமர்சனங்களையும் தூக்கிப் போட்டுவிட்டுத் தன் வேலையைப் பார்க்கிறார் இவர்.

சீசியன் புராக்:

  • துருக்கியைச் சேர்ந்த சமையல் கலைஞர். காய்கறிகளைநேரடியாகப் பார்க்காமலேயே அவற்றை நறுக்குவதில் கிங் என்று இணையவாசிகள் அவரை வர்ணிக்கின்றனர். உணவைச் சமைத்துவிட்டு கேமராவை நோக்கும் புராக் சிரிக்கும் சிரிப்புக்கென்றே சமூக வலைதளங்களில் தனி ரசிகர்கள் உண்டு. 29 வயதான புராக், அரபிப் பாரம்பரிய உணவு வகைகளைச் சமைப்பதில் கெட்டிக்காரர். அதனால் துருக்கி முழுவதுமே ஏராளமான உணவகங்களைத் திறந்துள்ளார். தங்களுக்குக் கிடைக்கும் புகழைக் கொண்டு பிறருக்கு உதவுபவர்கள் சிலரே. அதிலும் புராக் தனி ஒருவர்தான். போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளான குழந்தைகளின் பசியைப் போக்க உணவு வகைகள், நிவாரணங்களை வழங்கித் தன்னுடைய ஃபாலோயர்ஸ் மத்தியில் உயர்ந்து நிற்கிறார்.

டோலி சாய்வாலா:

  • மகாராஷ்டிரத்தில் நாக்பூரைச் சேர்ந்தவர் டோலி சாய்வாலா. சாலையோரத்தில் தேநீர்க் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தேநீர் தயாரிக்கும்போது டிரெண்டிங்கான ஆடைகள் அணிவதுதான் டோலியின் தனி அடையாளம். நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால், தேநீர் தயாரிக்கும்போது ரஜினியின் உடல்மொழியை அப்படியே பிரதிபலிக்கிறார் டோலி. இதைப் பார்க்கவே அவருடைய கடையில் கூட்டம் அள்ளுமாம். ‘ஏக் சாய் பிளீஸ்’ என மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், டோலி தயாரித்த தேநீரை வாங்கியது, அவரை உலகெங்கிலும் கொண்டுபோய்ச் சேர்த்தது. சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் நிகழ்ச்சிகளில் விருந்தினராகப் பங்கேற்கும் டோலி, காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டு வருகிறார்.

ரெனாட் அதுல்லா:

  • காஸா போர் நடக்கும் பகுதியில் வசிக்கும் மக்களுக்குப் பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறார் 10 வயதான ரெனாட் அதுல்லா. போருக்கு இடையே சிக்கியவர்கள், அங்கு கிடைக்கும் சொற்பமான பொருள்களைக் கொண்டு உணவை எப்படித் தயாரிப்பது என்பது போன்ற காணொளிகளை இன்ஸ்டாவில் ரெனாட் பதிவிட்டு வருகிறார். அந்தக் காணொளிகள் லட்சக்கணக்கில் பார்க்கப்படுவதன் மூலம் ரெனாட் டிரெண்டிங்கில் இருந்துவருகிறார். நெருக்கடி காலத்தில் வீட்டுக்குள் முடங்கிவிடாமல் தனக்குள் இருக்கு திறமையை வெளிப்படுத்திய ரெனாட் பலருக்கும் முன்னுதாரணமாகியுள்ளார். ‘செஃப் ரெனாட்’ எனத் தன்னை அழைத்துகொள்ளும் அவர், போர் முடிந்த பிறகு சொந்தமாக உணவகம் ஒன்றைத் தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories