TNPSC Thervupettagam

உலகெங்கிலும் விவசாயிகள் ஏன் போராடுகிறார்கள்

February 19 , 2024 189 days 181 0
  • உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட பங்களிப்பைக் கொண்டுள்ள விவசாய சமூகத்துக்கான பிரச்சினை என்பது இந்தியாவில் மட்டுமா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
  • பிரான்ஸ் தொடங்கி கிரீஸ் வரை போராட்டங்களை முன்னெடுத்து வரும் விவசாயிகள் தான் இதற்கு சான்று. விவசாய வருமானம் அதிகரிப்புக்கு உத்தரவாதம், அந்நிய நாடுகளின் போட்டியிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விவசாயிகள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர்.
  • இந்த நிலையில், விவசாய பணிகள் அமைவிடங்களைப் பொருத்து வறட்சி, வெள்ளம், சூறாவளி, வெப்ப அலைகள் உள்ளிட்ட ஒழுங்கற்ற வானிலைகளால் தற்போது அடிக்கடி பாதிப்புக்குள்ளாக தொடங்கியுள்ளது. இது காலநிலை மாற்றத்தின் விளைவு.
  • இதனால், பயிர் விளைச்சல், கால்நடை வளர்ப்பு பாதிப்புக்குள்ளாகி ஒட்டுமொத்த பண்ணை உற்பத்தி திறனும் குறைந்து போவது விவசாயிகளின் தற்போதைய போரட்டங்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக காரணங்களாக மாறி வருகின்றன.
  • ஒவ்வொரு நாட்டு விவசாயிகளின் பிரச்சினைகள் அவர்களின் போராட்டங்கள் குறித்து பார்க்கலாம்:

பிரான்ஸ்

  • பிரான்ஸ் விவசாயிகள் கடந்த ஜனவரி 29-ல் நம்மூர் விவசாயிகளைப் போன்றே டிராக்டர்களில் நீண்ட வரிசைகட்டி நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டனர். வேளாண் வருவாயை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், அந்நிய போட்டியிலிருந்து வேளாண் தொழிலை பாதுகாக்கவும் அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவர்களது குற்றச்சாட்டு.
  • இந்த நிலையில், பிரான்ஸ் அரசு விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற 400 மில்லியன் யூரோக்களை ஒதுக்கிய பிறகே பிப்.2-ல் சாலைகளில் இருந்த தடைகளை படிப்படியாக விவசாயிகள் விலக்கிக் கொண்டனர்.

இத்தாலி

  • வேளாண் துறைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாய கொள்கைகள் பாதகமாக இருப்பதாக தெரிவித்து தலைநகர் ரோமில் அங்குள்ள விவசாயிகள் ஒன்றிணைந்து பெரிய பேரணி நடத்தினர்.

ஜெர்மனி

  • வேளாண் மானியங்கள் குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2024 ஜனவரி 8-ல் நாடு தழுவிய போராட்டங்களை ஜெர்மனி விவசாயிகள் முன்னெடுத்தனர்.
  • குறிப்பாக, வேளாண் பணிகளுக்கான டீசல் மீதானவரிச் சலுகையை படிப்படியாக அகற்ற பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியான நிலையில் அது தங்களை திவால் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று விவசாயிகள் கூறினர். அரசுக்கும்-விவசாயிகளுக்கும் இடையிலான இந்த போராட்டம் சுமார் இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போலந்து

  • ஐரோப்பிய ஒன்றியத்தின் சுற்றுச்சூழல் கொள்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சாராத நாடுகளின் நியாயமற்ற போட்டியை கண்டித்து போலந்து விவசாயிகள் சாலைகளில் இறங்கி பிப்ரவரி முதல் போராட தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் சுமார் ஒரு மாத காலத்துக்கு வேலைநிறுத்தத்தை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஸ்பெயின்

  • வேளாண் நடவடிக்கைகளுக்கு அதிக வரி விதிப்பு, அரசின் உதவிகளைப் பெறுவதில் பல்வேறு தடை, கட்டுப்பாடுகளும் இருப்பதாக கூறி ஸ்பெயின் விவசாயிகள் பிப்.6-ல் நடத்திய நாடு தழுவிய போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த மாதம் முழுவதும் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு தெருவிலும் இறங்கி போரட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

பெல்ஜியம்

  • வேளாண் செலவுகள் அதிகரிப்பு, வரி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக அங்குள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டருடன் பிரஸ்ஸல்ஸ் நகருக்குள் நுழைந்து இம்மாதம் நாடாளுமன்றம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயத்தை ஸ்திரத்தன்மை கொண்டதாக மாற்ற அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் ஒரே கோஷமாக இருந்தது.

லிதுவேனியா

  • லிதுவேனியா அரசின் வேளாண் கொள்கைகளால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் தலைநகர் வில்னியஸை கடந்த ஜனவரியில் இரண்டு நாள் டிராக்டரில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ரஷ்ய உணவுப் பொருட்களின் ஏற்றுமதியால் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறி அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இதுதொடர்பாக பிரதமரை சந்தித்தும் விவசாயிகள் முறையிட்டனர்.

கிரீஸ்

  • எரிபொருட்கள் விலை உயர்வு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கங்களை சமாளிக்க அரசின் நடவடிக்கையை முடுக்கிவிட வலியுறுத்தி பிப்.2-ல் வடக்கு மற்றும் மத்திய கிரீஸ் பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளை வழங்க கிரீஸ் அரசு முன்வந்தது.

தீர்வு என்ன

  • பருவநிலை மாற்றத்தின் பாதிப்பு 21-ம் நூற்றாண்டில் தீவிரமாகியுள்ளது. இந்த மாற்றம் விவசாயிகளை பாதிக்காத அளவில் கொள்கைகளை உருவாக்க வேண்டியது ஆளும் அரசுகளின் தலையாய பொறுப்பாகும். விவசாய உள்கட்டமைப்புக்கான முதலீடுகளை அதிகரிப்பது, வேளாண் பணிகளில் நவீன தொழில்நுட்பம், உபகரணங்களை அறிமுகப்படுத்துவது, தரமான இடுபொருட்கள், சமமான சந்தை வாய்ப்புகள், நிலையான நீர்ப்பாசன வசதி கட்டமைப்பை உருவாக்கல், போதிய அளவிலான வேளாண் வருமானத்தை உறுதிப்படுத்துதல் ஆகியவை அத்தியாவசியமாகி உள்ளது.
  • உலக மக்கள் தொகையில் வேளாண் சமூகத்தினரின் பங்குதான் அதிகம். எனவே அவர்களின் வாழ்வாதார பிரச்சினைக்கு இது போன்ற நிரந்தர தீர்வுகளை உருவாக்குவது அவசியம் மட்டுமல்ல, கடமையும் கூட. பெருகி வரும் மக்கள் தொகையின் உணவு தேவையை ஈடு செய்ய வேளாண் உற்பத்தி பெருக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம். உழவன் பின்னால்தான் உலகம் என்ற அடிப்படை தத்துவத்தை அனைவரும் உணர்ந்தறிய வேண்டிய தருணம் இது.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories