- ஓபன்ஹைமர் கடந்த 1904-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தார். இவரது குடும்பத்தினர் அமெரிக்காவில் வந்து குடியேறிய ஜெர்மன்-யூதர்கள். ஓபன்ஹைமரின் தாய் ஓவியர், தந்தை ஜவுளி இறக்குமதியாளர். பள்ளியில்படிக்கும் போதே மிகவும் திறமைசாலியாக விளங்கிய ஓபன்ஹைமர், பள்ளி இறுதியாண்டு படிப்பை முடிப்பதற்கு முன்பே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வேதியியல் பட்டப்படிப்பில் சேர்ந்து விட்டார்.
- காட்டின்ஜென் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றபின், கலிபோர்னியா தொழில்நுட்ப கழகத்தில் கடந்த 1927-ம் ஆண்டு தனது கூட்டு ஆய்வுப் பயிற்சியை தொடங்கினார். பின்னர் பெர்கிலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப் பட்டார். 1936-ம் ஆண்டு, இவர் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.
- கடந்த 1940-ல் கேத்தரீன் என்பவரை மணந்தார். (ஓபன்ஹைமர் படத்தில் இந்த கதாபாத்திரத்தில் எமலி பிளன்ட் நடித்துள்ளார்). இவர்களுக்கு பீட்டர் மற்றும் டோனி என்ற 2 குழந்தைகள்பிறந்தனர். பின்னர் ஜேன் டேட்லாக் என்ற பெண் விஞ்ஞானியுடன் காதல் ஏற்பட்டது. ஆனாலும் கடைசி வரை கேத்தரீனுடன் வாழ்ந்தார்.
மேன்ஹாட்டன் திட்டம்:
- கடந்த 1942-ம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி குழு தலைவராக, ஓபன்ஹைமர் படித்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் போராசிரியர் நியமிக்கப்பட்டார். அப்போது அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்துக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் ஃபிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் ஒப்புதல் அளித்திருந்தார். அணுகுண்டு தயாரிக்கும் திட்டத்தில் இணைய ஓபன்ஹைமரை அவரது முன்னாள் போராசிரியர் அழைத்தார். இத்திட்டத்தில் நியூட்ரான்களின் செயல்பாடுகளை கவனிப்பது ஓமன்ஹைமரின் பொறுப்பு. இந்த திட்டத்தை மேன்ஹாட்டன் என்ற பெயரில் அமெரிக்கா ரகசியமாக நடத்தியது.
- இதற்காக உருவாக்கப்பட்ட லாஸ் அலாமாஸ் சோதனைக் கூடத்தின் முதல்இயக்குனர் ஓபன்ஹைமர். அணுகுண்டு ஆராய்ச்சி பணிகள், மூலப் பொருட்கள் கொள்முதல் போன்ற பணிகளை மேன்ஹாட்டன் அலுவலகம் கவனித்தது. அணுகுண்டு சோதனையை நியூ மெக்சிகோவின் டென்னசே பகுதியில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. மான்ஹாட்டன் திட்டத்தை நியூ மெக்சிகோவின் பாலைவனப் பகுதிக்கு கொண்டு சென்றார் ஓபன்ஹைமர். பரிசோதனை முயற்சியாக தயாரிக்கப்பட்ட புளூடோனியம் குண்டுக்கு ‘தி கெட்ஜெட்’ என பெயரிடப்பட்டது. இதன் சோதனை 1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அன்று நியூ மெக்சிகோவின் அலமோகோர்டோ பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.
- இந்த குண்டு வெடித்ததை பார்த்த ஓபன்ஹைமருக்கு, பகவத் கீதையில் அவர் படித்த வாசகம்தான் நினைவுக்கு வந்தது. ‘‘இப்போது நான் உலகை அழிக்கும் எமனாகிவிட்டேன்’’ என்பதுதான் அந்த வாசகம். சம்ஸ்கிருதத்தில் புலமை பெற்றிருந்த ஓபன்ஹைமர் பகவத் கீதை நூலை தனது மேஜையில் எப்போதும் வைத்திருந்தார். அதில் ‘‘மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டாலும், மகாபாரத போரில் அர்ஜூனன் தனது கடமையை நிறைவேற்ற போரிட்டார்’’ என தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனால் ஓபன்ஹைமரும் அர்ஜூனனைப் போல் நாட்டுக்கு தனது கடமையை செய்தார்.
- ‘தி கெட்ஜெட்’ குண்டு பரிசோதனைக்குப் பின்பு ‘ஃபேட் பாய்’ மற்றும் ‘லிட்டில் பாய்’ என்ற இரு அணு குண்டுகள் உருவாக்கப்பட்டு ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்டன. இந்த குண்டுகள் ஜப்பானில் ஏராளமான மக்களை கொடூரமாக கொன்றது ஓபன்ஹைமரின் மனதை வெகுவாக பாதித்தது. அதன்பின் அரசுக்காக மேலும் அணு குண்டுகள் தயாரிக்க அவர் மறுத்து விட்டார். ‘வெடிகுண்டுகள் தயாரித்ததன் கையில் ரத்த கறை படிந்ததை போல் உணர்வதாக அப்போதைய அமெரிக்க அதிபர் ட்ரூமேனிடம் ராபர்ட் ஓபன்ஹைமர் கூறினார்.
- அதன்பின்பு அவருக்கு போருக்கு எதிரான எண்ணங்கள் வலுவடைந்தன. சோவியத் யூனியனுடன், அமெரிக்காவுக்கு இருந்த உறவு மோசமடைந்ததால், ஹைட்ரஜன் குண்டு தயாரிக்க அமெரிக்கா திட்டமிட்டது. இந்த நடவடிக்கை குறித்து வெளிப்படையாக விமர்சித்தார் ஓபன்ஹைமர்.
- அதன்பின் இவர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து நன்கொடைகளையும் வழங்கினார். ஆனால் அந்த கட்சியில் அவர் உறுப்பினராகவில்லை. அமெரிக்க அரசுடன் இவருக்கு முரண்பாடு அதிகரித்ததால், அமெரிக்க அணுசக்தி ஆணையத்துடன் ஓபன்ஹைமருக்கு இருந்த ஒப்பந்தம் ரத்தானது. கடந்த 1954-ம் ஆண்டு இவர் அணுசக்தி ஆணையத்தின் விசாரணையையும் சந்திக்க நேர்ந்து.
- குற்ற உணர்வுடன் கடந்த 1960-ம் ஆண்டு அவர் ஜப்பான் சென்று பொதுக் கூட்டங்களில் தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்தார். ஓபன்ஹைமரின் அணுகுண்டு கண்டுபிடிப்பு அமெரிக்கா, சோவியத் யூனியன் இடையே மிகப்பெரிய அணு ஆயுத போரை ஏற்படுத்தும்என அச்சம் உருவானது. ஆனால், அதை இரு நாடுகளும் ஒருவழியாக நிறுத்திக் கொண்டன. கடைசி காலத்தில் மிக வருத்தத்துடன் வாழ்க்கையை கழித்த ஓபன்ஹைமருக்க தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த 1967-ம் ஆண்டு இறந்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 07 – 2023)