TNPSC Thervupettagam

உலுக்கும் படமும் உறைந்துவிட்ட வேதனைகளும்

August 31 , 2023 499 days 381 0
  • என் தாயை நான் பறிகொடுத்தது என் இரண்டரை வயதில். அடுத்த பிரசவத்தில் ஜன்னி கண்டு என் தாயும் அவர் சேயும் மரித்துப் போயிருந்தனர். உரிய மருத்துவ உதவிகிடைக்கத் தாமதமானதுதான் என் தாயின் மரணத்துக்கு முக்கியக் காரணம் என்று இளவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். அம்மாவைப் பெற்ற பாட்டியைத்தான், அம்மா என்று அவர் இறக்கும்வரையில் நானும் எனக்கு முன் பிறந்த இருவரும் அழைத்துக் கொண்டிருந்தோம்.
  • இராப் பொழுதுகளில் தனது மடியில் எங்களை உறங்கப்போட்டுக்கொண்டு கதைகள் சொல்கையில், அம்மா என்று அழைத்துவிட்டால் அவரால் தனது உள்ளம் நொறுங்குவதைத் தற்காத்துக்கொள்ள இயலாது. தனது மூத்த மகளைப் பறிகொடுத்த அவரது கண்ணீரும், கண்ணீர் வற்றிய வெற்றுப் பார்வைகளும், பெருமூச்சும் இன்னும் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன. அப்படியான ஒரு தாயின் முகத்தை அண்மையில் ஒரு புகைப்படத்தில் பார்த்ததில் இருந்து உள்ளம் படும்பாடு சொல்லி மாளாது.

வழங்கப்படாத நீதி

  • ஜனகவள்ளிக்கு அது இரண்டாவது பிரசவம். நர்ஸிங் படித்தவர். கணவர் பொறியியல் பட்டதாரி.விளிம்புநிலை குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்கள். தலைச்சன் குழந்தை பிறந்த அதே மாநகராட்சி மருத்துவமனையில், ஆசையோடு அந்தக் குடும்பம் அவரைச் சேர்த்திருந்தது. முக்கிய நேரத்தில் மருத்துவரோ விஷயம் அறிந்த மருத்துவ உதவியாளர்களோ யாருமற்ற சூழலில் அந்தக் கர்ப்பிணி உயிரிழந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் நேர்ந்த கொடுமை அது. பாதிக்கப்பட்டவர்கள் கதறி அழுதும் படியேறி இறங்கியும் இன்னும் அந்த இழப்புக்கு எந்த நீதியும் நியாயமும் வழங்கப்படவில்லை.
  • மாநகராட்சி ஆணையர் அளவில் உடனடி நடவடிக்கை உறுதி அளிக்கப்பட்டும் ஒன்றும் நகரவில்லை... ஆணையர்தான் நகர்ந்துபோனார், இடம்மாறுதலில். புதிய ஆணையரிடம் நீதிக்கான போராட்டம் தொடர்கிறது.

அதிகரிக்கும் வலி

  • பிரசவ நேரத்தில் கர்ப்பிணிகள் இறப்புவிகிதம் கடந்த 20 ஆண்டுகளில் 75% குறைந்துள்ளதுஎன்கின்றன புள்ளிவிவரங்கள். ஒரு லட்சம் பிரசவங்களில் 178 மரணங்கள் என்பது 2022இல் 97ஆகக் குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணிகளாகச் சொல்லப்படுவது, 20 ஆண்டுகளுக்கு முன்பு 40% பிரசவங்கள் மட்டுமே மருத்துவமனைகளில் நிகழ்ந்தவை. அடுத்த பத்தாண்டுகளில் அது 79%ஆகவும், இப்போது 89%ஆகவும் உயர்ந்திருப்பது. அடுத்தது, முன்பு 47% பெண்கள் 18 வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்கள், இப்போது இந்த விகிதம் 15%. மூன்றாவது கல்வியறிவு, முன்பு 55% ஆக இருந்தது இப்போது 81%.
  • வீட்டுப் பிரசவங்களில் எதிர்பாராத பிரச்சினைகளைக் கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும்போது, உரிய மருத்துவ உதவிஅவர்களுக்கு வாய்க்காது. என்னைப் போல் எண்ணற்றோர் தங்கள் தாயை இழந்த கதை அப்படித்தான். ஆனால், ஜனகவள்ளி சமுதாயக்கூட மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், உரிய மருத்துவ உதவி கிடைக்காமல் மரித்துப் போனதுதான் தாங்கமாட்டாத சோகத்தை ஏற்படுத்துகிறது.அதன் மீது விசாரணை நடத்தவோ, மேற் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவோ மாநகராட்சி காட்டும் அலட்சியத்தால் வலி இன்னும் அதிகரிக்கிறது.

நொறுங்கிப்போன பெருங்கனவு

  • அதே ஏப்ரல் மாதத்தில், ஒப்பந்ததாரர் உத்தரவில் மழைநீர் வடிகால் ஒழுங்கமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் கனகராஜ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த கொடுமைக்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லை. இந்த இரண்டு குடும்ப உறுப்பினர்களும், அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் நீதி கேட்டு நடத்திய முற்றுகைப் போராட்டத்தின் பதிவுகளில்தான் அந்த முதிய பெண்மணியின் ஒளிப் படத்தைப் பார்க்க நேர்ந்தது.
  • பிரசவ நேரத்தில் அநியாயமாக உயிரைப் பறிகொடுத்த ஜனகவள்ளியின் தாயார் அவர் என்பதைக் கேட்டறிந்தபோது வேதனை மேலிட்டது. செல்ல மகளின் அதிர்ச்சி மரணத்தைத் தாங்க முடியாது பரிதவிக்கும் முகம் அது. பெருங்கனவு நொறுங்கிப்போன அந்தத் தருணத்தை நினைக்கும்தோறும், அவர் துடிதுடித்தே போவார். அருமை மகள் தன்னிடம் ஒப்படைத்துப் போன குழந்தைக்காக, தான் உயிர் தரித்திருக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் நீடிக்கும் வாழ்க்கையில் அந்தக் குழந்தையைக் காணும்தோறும் மேலும் தத்தளிக்கவே செய்வார்.

வலி தரும் முகம்

  • பாதுகாப்பான பிரசவத்துக்குக்கூட எளிய மக்கள் தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அதைக் கேள்விக்கு உட்படுத்தும் உரிமையும் மறுக்கப்படுகிறது. போராட்டம் நடத்தியவர்களைப் பிடித்து ஒரு மண்டபத்தில் நாள் முழுக்கக் காவலில் வைத்து, அலைக்கழிக்கத் தெரியும் அதிகார முகத்துக்கு, பிரச்சினைகளின் மீது ஏன் கவனம் செலுத்த முடியவில்லை என்பதே ஜனநாயகம் படும்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
  • இன்னும் என்னென்னவோ விதங்களில் நீதி மறுக்கப்பட்ட எத்தனையோ பெண்களது பெருந்துயரம் எல்லாம் சேர்ந்து உறைந்த முகமாகத் தெரிந்தது அந்த ஒளிப் படம். சட்டமும் நீதியும் உள்ளபடியே எல்லாருக்கும் சமமானதுதானா என்ற கேள்வியும் கசப்பும் வெறுப்பும் சேர்த்துவைத்துச் செதுக்கிய முகமாகத் தென்பட்டது அது.
  • ஜனகவள்ளியினுடைய தாயார் பெயர் தெரியாது. ஆனால், கிட்டத்தட்ட அதே வயதில் தனது மூத்த மகளை இதேபோல் பறிகொடுத்த என் பாட்டியை நினைக்கும்போதெல்லாம் இந்த முகமும் எதிர்ப்படுவதை இனி தவிர்க்க முடியாதென்றே தோன்றுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (31– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories