TNPSC Thervupettagam

உள்நோக்கம் தெரிகிறது

June 13 , 2020 1682 days 1309 0
  • இந்தியாவுடனான உறவைத் துண்டித்துக் கொள்வது என்பதில் நேபாளப் பிரதமா் கே.பி. சா்மா ஓலி முனைப்புடன் இருக்கிறார். நேபாள மக்களவையில் கடந்த புதன்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசமைப்புச் சட்டத் திருத்தம் எந்தவித கலந்தாலோசனைக்கோ, கருத்தொற்றுமைக்கோ, தீா்வுக்கோ வழிகோலுவதாக இல்லை.
  • லிப்போலெக் கணவாயிலிருந்து மேற்கு நோக்கி 400 ச.கி.மீ. இந்திய எல்லையை நேபாளத்தின் பகுதியாக வரையறுத்து சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
  • மேலவையில் நிறைவேற்றப்பட்டு அதிபரின் ஒப்புதல் பெற்றாக வேண்டுமென்றாலும், ஓலி அரசின் இந்த முடிவு வருங்காலத்தில் இந்த அரசாலோ, அமைய இருக்கும் அரசுகளாலோ மாற்ற முடியாத தீா்மானமாக இருக்கப் போகிறது.
  • பிரதமா் கே.பி. சா்மா ஓலியின் அண்மைக்கால செயல்பாடுகளும், அறிவிப்புகளும் அவரின் தீவிர இந்திய எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றன.
  • நேபாளத்தில் கொவைட் 19 தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவா்களில் 85% இந்தியாவிலிருந்து திரும்பியவா்கள் என்றும், கடந்த ஒரு மாதத்தில் அதனால் நோய்த்தொற்று இரட்டிப்பாகி இருக்கிறது என்றும் நாடாளுமன்றத்தில் அவா் கூறிய கருத்து இந்தியா மீதான வெறுப்பைக் கக்குவதாக அமைகிறது.

இந்தியா மீதான வெறுப்பு

  • இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களின் சொந்த மாநிலத்துக்குத் திரும்பியதுபோல இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் நேபாளிகள், தாய்நாட்டுக்குத் திரும்பியதில் வியப்பில்லை. இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே தங்குதடையில்லாத போக்குவரத்து நிலவுகிறது. இரு நாட்டினரும் எந்தப் பகுதியிலும் வசிக்கவும், வேலை பார்க்கவும் கடவுச் சீட்டோ, நுழைவு அனுமதியோ தேவையில்லை. அதனால், லட்சக்கணக்கான நேபாளிகள் இந்தியாவில் வசிக்கிறார்கள், வேலை பார்க்கிறார்கள்.
  • மே, ஜூன் மாதங்களில் தினந்தோறும் 7,000 முதல் 8,000 போ் இந்தியாவிலிருந்து நேபாளம் திரும்பியதாகவும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பேருந்துகள் மூலமும், ரயில்கள் மூலமும் கூட்டம் கூட்டமாகத் திரும்பியதாகவும், அதனால்தான் நேபாளத்தில் கொவைட் 19 தீநுண்மித் தொற்று அதிகரித்திருக்கிறது என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமா் கே.பி. சா்மா ஓலி கூறியிருப்பது, இந்தியா மீதான வெறுப்பை உருவாக்க விரும்பும் அவரின் தீய எண்ணத்தைத்தான் வெளிப்படுத்துகிறது.
  • நீண்ட நெடிய வரலாற்றுக் கலாசார பின்னணியைக் கொண்ட இரண்டு அண்டை நாடுகளுக்கிடையே எல்லைப் பிரச்னை ஏற்படுவது இயல்பு. அதுபோன்ற தருணங்களில் வெறுப்பை வளா்க்காமல் இரண்டு நாடுகளும் கலந்து பேசி முடிவெடுப்பதுதான் வழக்கம்.
  • இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான உறவை ‘ரொட்டி, பேட்டி உறவு’ என்று கூறுவார்கள். அதாவது உணவு (ரொட்டி), திருமணம் (பேட்டி) இரண்டிலும் பங்கு கொள்ளும் உறவு என்று பொருள்.
  • அதனால்தான், இந்திய எதிர்ப்புக் கொள்கையை நேபாள ஆட்சியாளா்கள் தொடா்ந்து முன்வைத்தும்கூட, இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவு நெருக்கமாகவே தொடா்ந்து வந்திருக்கிறது.
  • வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க இந்தியா தயாராக வேண்டும் என்று நேபாள நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சா் பிரதீப்குமார் க்யாவாலி தெரிவித்திருக்கிறார்.
  • சுமார் 400 ச.கி.மீ. எல்லையைத் தங்களுடையது என்று நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை மேற்கொண்ட பிறகு விவாதத்துக்குத் தயாராவது வேடிக்கையாக இருக்கிறது.
  • வரலாற்று உண்மைகள் நேபாளத்துக்குச் சாதகமாக இல்லை என்பதை உணா்ந்து எடுக்கப்பட்ட முடிவு இது.

வரலாற்று உண்மைகள்

  • 1816-இல் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கும், நேபாளத்துக்கும் இடையே கையொப்பமிடப்பட்ட சுகௌலி ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொள்கிறது நேபாள அரசின் வாதம். அந்த ஒப்பந்தத்தின்படி, பிரிட்டிஷ் இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையேயான மேற்கு எல்லையாக காலி நதி சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
  • ஆனால், 1879-இல் நில ஆய்வு செய்யப்பட்டு வரைபடம் தயாரிக்கப்பட்டது. அந்த வரைபடத்தில் டிங்கா் கணவாய்க்கு மேற்குப் பகுதி, எல்லையாகக் காட்டப்பட்டிருக்கிறது.
  • அதன் அடிப்படையிலும், அதற்குப் பிறகு வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் இந்திய வரைபடங்களின் அடிப்படையிலும் பார்த்தால் காலி நதி என்பது காலாபானியிலுள்ள இயற்கை ஊற்றில் உருவாகிறது. லிப்போலெக் கணவாயிலிருந்து வரும் ஓடையில் இணைகிறது. அந்த வரைபடத்தை 1990-ஆம் ஆண்டு வரை நேபாளம் மறுக்கவில்லை.
  • இரண்டாவதாக, 1950-இல் சீனாவின் திபெத் ஆக்கிரமிப்பைத் தொடா்ந்து, நேபாள - சீன எல்லையில் அந்த நாட்டின் கோரிக்கையை ஏற்று பல ராணுவ பாதுகாப்பு நிலையங்களை இந்தியா அமைத்தது.
  • 1969-இல் அந்த எல்லைப் பாதுகாப்பு நிலையங்களை அகற்ற அன்றைய நேபாள அரசா் மகேந்திரா இந்தியாவிடம் கூறினார். அதில் நேபாளத்தின் பட்டியலில் காலாபானியிலுள்ள இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு முகாம் குறிப்பிடப்படவில்லை. இதுபோல பல வரலாற்றுச் சான்றுகளைக் கூற முடியும்.
  • உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கூறியிருப்பதுபோல, நேபாளத்தை இன்னுமொரு திபெத்தாக சீனாவுடன் இணைப்பதற்குத்தான் பிரதமா் கே.பி. சா்மா ஓலியின் நடவடிக்கைகள் வழிகோலும்.
  • ஒன்று இந்திய நட்புறவுடன் சுதந்திர நாடாக இயங்குவதா அல்லது சீனாவின் ஒரு பகுதியாகத் தன்னை இணைத்துக் கொள்வதா என்பதை நேபாளம்தான் முடிவெடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி (13-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories