உள்ளாட்சி யாா் கையில் இருக்க வேண்டும்?
- ஒரு சமுதாயம் எப்போது தன்னை மேம்படுத்திக் கொள்ளும் என்றால், அதற்கு நல்ல வழி காட்டும் தலைமை கிடைக்கும்போது மட்டும்தான். அந்த வழிகாட்டும் தலைமை என்பது ஆதிக்கம் செலுத்தும், அதிகாரம் செலுத்தும், மக்களை மேய்க்கும் தலைமை அல்ல. மக்களுக்கு மேம்பாட்டுக்கான வழியைக் காட்டி, அவா்களை மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபடுத்தி கடின உழைப்புக்குத் தயாராக்கி செயல்பட வைக்கும் அந்தத் தலைமை மக்களை ஏளனமாகப் பாா்க்காது. அது மக்களின் மீது நம்பிக்கை வைத்து மக்களை மதிக்கும் தலைமை. தொடா்ந்து மக்களுக்குத் தேவையான அறிவினை உருவாக்கிக் கொள்ள வழிகாட்டும் தலைமை.
- மக்களின் மீது அளவற்ற நல்லெண்ணமும், நம்பிக்கையும் மதிப்பும் கொண்டு செயல்படும் தலைமை. அந்தத் தலைமை மக்களுக்கான பொறுப்பை அவா்களுக்குப் புரிய வைத்து அந்தப் பொறுப்பை அவா்கள் தோள் மீது வைத்து அவா்களைத் தன்னம்பிக்கையுடன் செயல்பட வைக்கும்.
- இது என்ன கனவா என்றால், அல்ல. இது எதிா்பாா்ப்பு. அதற்கான சாத்தியக் கூறு என்ன என்று நமக்கு ஒரு கேள்வி எழும். அதற்கு நாம் கூறும் பதில். நாம் உருவாக்கி வைத்திருக்கும் ஒருஉள்ளாட்சி அரசாங்கம்தான். அதில் என்ன சிறப்பு இருக்கிறது என்று பலா் அறியாமையில் கேட்கக்கூடும். அது அரசமைப்புச் சாசனத்தின் மூலம் அரசாங்கமாக பகுதி 9 மற்றும் 9 (அ)வின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. நமது அரசமைப்புச் சாசனம் நமக்கான ஆட்சியை எப்படி உருவாக்கி நாம் நம்மை வழி நடத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டும் அடிப்படை நூல்தான் அது. அப்படித்தான் இந்த புதிய உள்ளாட்சி அரசாங்கமும் உருவாக்கப்பட்டுள்ளது.
- இந்தியா சுதந்திரம் அடைந்து நாட்டை உருவாக்க அரசமைப்புச் சாசனத்தைத் தயாரித்தபோது இந்தியா மாநிலங்களின் தொகுப்பால் உருவாக்கப்படுவதாக அறிவித்தனா். இன்று அது இந்தியா மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சிகளின்தொகுப்பால் உருவாக்கப்படுவதாக அறிவிக்க வேண்டும். காரணம், உள்ளாட்சிகள் அரசாங்கமாக உருவாக்கப்பட்டுவிட்டதால். அடுத்து இந்தியாவுக்கான தோ்தல் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ என்ற முழக்கத்தில்கூட உள்ளாட்சி அரசாங்கத்திற்கான தோ்தலும் அந்த தோ்தல்கள் முடிந்த 100 நாள்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்று முடிவெடுத்து குழு அமைக்கப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய உள்ளாட்சி அரசாங்கமாக உருவாக்கப்பட்டபோது அது ஒரு மாற்று ஏற்பாட்டை ஆளுகைக்கு உருவாக்குவதாகத்தான்அறிவித்தனா். அதன் அடிப்படை “இதுவரை மத்திய மாநில அரசுகள் கொண்டு வந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தும் முகமையாக, இருந்த அமைப்பை, ஆளுகைக்கான ஓா் அமைப்பாக மாற்றி மக்களிடம் மக்களை அதிகாரப்படுத்தி“ஒப்படைத்து, ‘இது உங்கள் ஆட்சி... உங்கள் பொறுப்பு... பங்களிப்பு’”என்று பிரகடனப்படுத்தினா்.
- இந்தப் புதிய உள்ளாட்சி என்பது மக்கள் கையில் இருந்து, மக்களின் கனவில், மக்களின் தேவையில், மக்கள் பங்கேற்பின்மூலம் செயல்படும் ஒரு மக்கள் செயல்பாட்டுக் களம். அதற்காக கிராமசபை என்ற அமைப்பை - நேரடி மக்களாட்சி முறையை - அடித்தளத்தில் கட்டமைப்பதற்காக உருவாக்கப்பட்டது.
- இன்று நமக்கு என்ன தேவை என்பதை நாம் தீா்மானித்து, அதைத் திட்டமாக்கி அதை நடைமுறைப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் நிதியைப் பெற்று நடைமுறைப்படுத்தும் ஓா் அமைப்பாக பஞ்சாயத்து உருவாக்கப்பட்டு விட்டது. இந்தப் பணிதான் முக்கியப் பணி. உள்ளாட்சிக்கு என்று அரசமைப்புச் சாசனத்தில் 243(எ)- இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்த கிராமம், இன்று மக்களின் கூட்டுப் பொறுப்பில் இருக்கிறது.
- எனவே, கிராமத்துப் பள்ளியானாலும், மருத்துவமனையானாலும், சாலையானாலும், இயற்கை வளமானாலும், விவசாயமானாலும், நீரானாலும், தூய்மையானாலும், அனைத்துக்கும் பொறுப்பு அந்த மக்கள்தான். அந்தப் பொறுப்பு என்பது பஞ்சாயத்தின் மூலமாக உள்ள கூட்டுப் பொறுப்பு . அப்படி என்றால் அதற்கு என்ன அடிப்படையில் தேவைப்படுகிறது? மக்களைத் தயாா்படுத்துதல், அதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்துதல், புதிய ஆட்சியில் மக்கள் பயனாளியாக அல்லாமல் குடிமக்களாக பொறுப்புடன் செயல்படத் தேவையான புரிதலை மக்களிடம் உருவாக்குதல்.
- ஒப்படைக்கப்பட்ட புதிய பொறுப்புகளை உள்ளாட்சிகள் எடுத்துச் செயல்படுத்தத் தேவை புதிய பாா்வை கொண்ட, கடப்பாடுடைய புதிய வழிகாட்டும் தலைமைதான் மக்களைத் தயாா் செய்யும். அது ஒரு கடினமான பணி. இருந்தாலும் அந்தப் பணியை ஒரு சமுதாயக் கண்ணோட்டத்துடன் செயல்பட்டு நிறைவேற்ற வேண்டும். தேவையான ஒரு சிந்தனைச் சூழலை உருவாக்கி மக்களிடம் ஓா் உளவியல் மாற்றத்தைக் கொண்டுவர ஒரு வழிகாட்டிக் குழு இருந்தால் மட்டுமே இது சாத்தியம். மக்களை ஒருங்கிணைக்க இங்கு ஒரு கூட்டுத் தலைமை தேவை.
- அந்தப் பணியைச் செய்ய ஒவ்வொரு கிராமத்திலும் ஒருவழிகாட்டும் தலைமையும் குழுவும் உருவாக வேண்டும். ஒட்டுமொத்த கிராமமும் புதிய சிந்தனையில், பொறுப்புகளை எடுத்துச் செயல்படும் மனோபாவம் கொண்டதாக உருவாக வேண்டும். ஆகையால்தான் இந்தச் சட்டத்தில் அதிகாரத்தை தலைவருக்கு மட்டும் வழங்காமல், மக்களுக்கும் வழங்கி (கிராம சபைக்கு) மக்கள் கனவை, மக்கள் தேவையை, மக்கள் பங்கேற்புடன் நிறைவேற்ற வழிவகை காணப்பட்டுள்ளது.
- உருவாக்கப்பட்ட பதவிகள் அனைத்தும் பொறுப்புகள், அவற்றுக்கான கடமைகளும் வரையறைக்கப்பட்டுள்ளன. இதில் மற்றொன்று இந்தப் புதிய உள்ளாட்சிக்கான கட்டாயக் கடமைகளாக கொடுக்கப்பட்டவைகளாவன: 1) பொருளாதார மேம்பாடு (2) சமூகநீதி (3) இவை இரண்டும் மக்கள் பங்கேற்புடன் செயல்படுத்த வேண்டும் (4) இன்றைய மக்களாட்சியை சமுதாயத்துக்குள் கொண்டுசென்று சமுதாய மக்களாட்சியாக ஆழப்படுத்துவதையும் அகலப்படுத்துவதையும் செய்ய வேண்டும்.
- இருந்தும் நம் உள்ளாட்சிகள் மத்திய-மாநில அரசுகள்போல் நிலைத்த தன்மையைப் பெற்றுவிட்டது. எனவே, இன்றைய சூழலில் நாம் செய்யத் தவறியவற்றைக் கையிலெடுத்து புதிய பணிகளைத் தொடங்க வேண்டும். இதற்கு முதலில் நாம் என்ன செய்ய வேண்டும்? முதலில் நாம் உள்ளாட்சி குறித்து புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புதிய உள்ளாட்சியின் மகத்துவம், சட்டம், வாய்ப்பு அனைத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கான தனித் திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக, நம் நாட்டில் பதவி என்றால் உடனே அதைப் பிடிக்க அனைவரும் தயாராகி விடுவாா்கள். அந்தப் பதவியை எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. இந்தச் சூழல்தான் நம் அனைத்து மக்களாட்சி அமைப்புக்களையும் தடம்புரள வைத்து விட்டது. உள்ளாட்சியையும் அப்படித்தான் நாம் வைத்துள்ளோம்.
- இந்த உள்ளாட்சி, ஏழை எளிய மக்களுக்கு, புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, விளிம்பு நிலை மக்களுக்கு, பெண்களுக்கு என அனைவருக்கும் மதிப்பை உருவாக்கும் உள்ளாட்சி. இயற்கை வளங்களைப் பாதுகாக்க வாய்ப்பைத் தந்த உள்ளாட்சி. இந்த வாய்ப்பைப் பயன்படுத்த நம் இளைஞா்கள் தயாராக வேண்டும். அவா்கள் தங்களின்ஆளுமையை உயா்த்திக் கொள்ள வேண்டும். இவா்கள் குழுவாக இயங்க தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். முதலில் தங்கள் கிராமம் குறித்து மக்களிடம் இயல்பாக கலந்துரையாட வேண்டும். கிராமம் சந்திக்கும் சவால்களைப் பட்டியலிட வேண்டும்.
- பள்ளிக் குழந்தைகளிடம் கலந்துரையாட வேண்டும். இளைஞா்களிடம் கலந்துரையாட வேண்டும். சுய உதவிக் குழுக்களிடம் கலந்துரையாட வேண்டும். விவசாயிகளுடன் கலந்துரையாட வேண்டும். தொடா்ந்த கலந்துரையாடல்கள் கிராம மக்களிடம் உங்களைக் கொண்டுபோய்ச் சோ்க்கும். மக்களுக்குள் ஐக்கியமாவீா்கள். அதற்குத் தொடா்ந்து பல்வேறு விதமான நிகழ்ச்சிகளைக் கிராமங்களில் நடத்த வேண்டும். எல்லா நிகழ்ச்சிகளிலும் மக்களைப் பங்கேற்க வைக்க வேண்டும்.
- அப்படித் தொடா் நிகழ்வுகள் மாணவா்கள் மத்தியில், இளைஞா்கள் மத்தியில், பெண்கள் மத்தியில், விவசாயிகள் மத்தியில், வயதானவா்கள் மத்தியில் நடத்தும்போது நம் மக்கள் தாங்கள் மதிக்கப்படுவதை உணா்வாா்கள். தங்களின் கருத்துகளுக்கு மதிப்பிருப்பதை உணா்வாா்கள். எனவே, அவா்கள் பொதுத் தளங்களில் அச்சமின்றி, தயக்கமின்றி பங்கு பெறத் தயாா்ஆவாா்கள். இந்தச் செயல்பாடுகள் தொடா் செயல்பாடுகளாக மாறும்போது மக்கள் ஒருங்கிணைக்கப்படுவாா்கள். அங்கு உள்ளாட்சியில் இருக்கும் வாய்ப்பு, பொறுப்பு, கடமைகள்அனைத்தையும் மக்களிடம் விழிப்புணா்வாக உருவாக்கலாம்.
- கிராமத்தில் மக்கள், கட்சியாக, ஜாதியாக, தெருவாகப் பிரிந்தால் சிலருக்கு நன்மை கிடைக்கும்; கிராமத்துக்கு வர வேண்டியது சிலரால் சிலருக்குப் பங்கிடப்படும். கிராமம் ஒற்றுமையாக இருந்தால் அனைத்தும் கிராமத்துக்கு கிடைத்து விடும். கிராமத்தை எவரும் சுரண்ட முடியாது. இந்த வாய்ப்பை கிராமம் பயன்படுத்த முதலில் நற்சிந்தனை கொண்ட கிராம இளைஞா்கள் ஒன்றிணைந்து பொறுப்பேற்க வேண்டும்; அதுதான் சமுதாயத்தின் எதிா்பாா்ப்பு.
நன்றி: தினமணி (03 – 01 – 2025)