TNPSC Thervupettagam

உள்ளாட்சியும் அதிகாரப் பரவலும்...

January 23 , 2020 1820 days 1415 0
  • ஜனநாயகம் என்னும் பெரும் விருட்சத்தின் வேர்களாக உள்ளாட்சி அமைப்புகள் விளங்குகின்றன என்று கூறுவது பொருத்தமானது.
  • நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது, இந்திய அரசியலமைப்பு  என்பது மத்திய - மாநில அரசுகள் என்ற இரு பெரும் அடுக்குகளின்  அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டிருந்தது. கிராமம் சார்ந்த பஞ்சாயத்து ஆட்சி  அமைப்புகள் இருந்தன என்றாலும், அவற்றுக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லாதிருந்தது. எனவேதான், பல மாநிலங்களில், உள்ளாட்சித் தேர்தல்கள் சரிவர நடத்தப்படாமல் இருந்தன.  

அதிகாரம்

  • ஜனநாயகத்தில் உண்மையான  அதிகாரம் மக்களிடமே  இருக்க வேண்டும் என்றும், ஆட்சி அமைப்பு என்பது மக்களிடம் மிக நெருங்கியிருக்க வேண்டும் என்ற பெருநோக்கோடு, 1990-களில் அரசியல் சாசனம் திருத்தப்பட்டது.
    அரசியல் சாசன 73-ஆம் திருத்தத்தின்படி, இந்திய அரசியலமைப்பு மூன்று அடுக்குகளாக மாற்றப்பட்டு,  அரசியல் சாசன அந்தஸ்தையும் அங்கீகாரத்தையும் உள்ளாட்சிகள் பெற்றன. சாமானிய மனிதனைச் சென்றடையும் வகையில் அதிகாரப்  பரவல் உறுதி செய்யப்பட்டது. விவசாயம், கால்நடை, மீன்வளம், சமூகக் காடுகள், குடிநீர், கிராம சாலைகள் உள்ளிட்ட 29 முக்கியத் துறைகள் சார்ந்த அதிகாரங்கள் பஞ்சாயத்துகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. இந்தத் துறை சார்ந்த அதிகாரிகளும் பஞ்சாயத்து அமைப்புகளின் கீழ் கொடுவரப்பட வேண்டும் என்றெல்லாம் திட்டமிடப்பட்டது.
  • மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான தேவைகள் அவர்களாலேயே திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்படுவதற்கான அமைப்பாக பஞ்சாயத்து அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டன.

நிதி ஆதாரங்கள்

  • அவற்றுக்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்வதற்காக, மாநில நிதி ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் என்றும், அவற்றின் மூலம் போதுமான நிதி பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்றும் சட்டமியற்றப்பட்டது. வரி விதிப்பு, வசூல், திட்டமிடுதல், செயல்படுத்துதல் என்ற எல்லா தளங்களிலும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டது. மக்கள் அதிகாரம் மிக்கவர்களாக உயர்த்தப்பட்டனர்.
    இதன்மூலம், மக்களுக்கும்,  மத்திய-மாநில அரசுகளுக்கும் இடையிலான  வலுவான பிணைப்புச் சங்கிலி வளையமாகச் செயல்படும்  வாய்ப்பு ஊராட்சி அமைப்புகளுக்கு ஏற்படுத்தப்பட்டது.

இட ஒதுக்கீடு

  • மக்களில் சரிபாதி உள்ள  பெண்கள், கணிசமான அளவில் உள்ள தாழ்த்தப்பட்ட  பிரிவினர் ஆகியோரை வலுப்பெறச் செய்ய, அவர்களுக்கு தேர்தலில் கணிசமான இட  ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. நிர்வாக எந்திரம், தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகளின் அதிகார வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது.
    இவ்வாறு, திட்டம் - நிதி - செயல்படுத்துதல் என்ற எல்லாத் தளங்களிலும் வலுவான அமைப்பாக உருவாக்கப்பட்டது. உயரிய நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பு, அவ்விதம் செயல்பட்டால் பொது மக்கள், குறிப்பாக கிராமம் சார்ந்த மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகள் பெருமளவு பூர்த்தி செய்யப்படும் நிலையில் இருந்திருப்பர்.
  • இந்த அமைப்பின் மிக முக்கியமான அம்சம் எதுவெனில், மக்கள் பங்கு பெரும் கிராம சபை கூட்டங்கள் ஆகும். இதன் மூலம், மக்கள் தங்களது தேவைகளை வலியுறுத்தவும், திட்டமிடுதலில் பங்கேற்கவும், செயல்பாடுகளைக் கண்காணிக்கவும், நிதி செலவினங்களைக் கண்காணிப்பது  எனப் பல வகைகளால் பெரும் அதிகாரம்  பெற்றவர்களாக  மாறுகிறார்கள். உண்மையான அதிகாரம் மக்களைச் சென்றடைவது நிகழ்கிறது.
  • நேரடித் தேர்தல், குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல், தேர்தலைத் திட்டமிட - நடத்த - கண்காணிக்க அதிகாரம் பெற்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பெரும் பண பலம் மிக்க தொழில் நிறுவனங்களும், உள்ளாட்சியின் அனுமதியுடன்தான் சில செயல்களை நடைமுறைப்படுத்த முடியும் என்ற அளவிற்கு வலிமை பெற்ற அங்கமாக உள்ளாட்சிகள் உயர்த்தப்பட்டன. இவை, ஏட்டளவில் வலிமை மிக்க - சிறந்த அமைப்பாக இருப்பினும், செயலளவில் நிலை வேறாக உள்ளது என்பதே நிதர்சனம்.

நிர்வாகம்

  • பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படும் சாமானிய மக்கள், நிர்வாகத்தை  நிர்வகிக்க  போதிய அனுபவம் அற்றவர்களாக இருப்பது, விஸ்வரூபம் எடுத்து நிற்கும் நிர்வாகம்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுப்பது,  சாமானிய மனிதனின் புரிதலுக்கு அப்பாற்பட்ட சட்டங்கள் - அவற்றின் ஷரத்துக்கள் போன்றவை, மிகவும் நல்ல நோக்கம் கொண்ட பிரதிநிதிகளைக்கூட செயலற்றவர்களாக மாற்றிவிடும் தன்மை பெற்றவையாகும். இவை தவிர, பொது வாழ்வு என்பதே தனி மனித வளத்தினைப் பெருக்கிக்கொள்ள மட்டுமே என்ற துர்நோக்கம் பெருகியமையும் பெரும் இடர்ப்பாடாக அமைகிறது.
  • இந்த நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்களுக்குரிய அதிகாரங்கள் குறித்த புரிதலைப் பெறவும், அவர்கள் நிர்வாகத்தைக் கையாள்வது குறித்த புரிதலையும் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு,  நாட்டின் அனைத்துத் தரப்பினருக்கும் உள்ளது. 

அரசு சாரா அமைப்புகள்

  • மேலும், அரசு சாரா அமைப்புகள் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி, பிரதிநிதிகள் இணக்கமாகச் செயல்பட்டு அவர்களின் செயல்திறன் அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
  • உள்ளாட்சித் தேர்தலில் பணம் வெள்ளமாக ஓடியது என்ற செய்திகள் நம்பிக்கையைச்  சிதைப்பதாக அமைகின்றன.  தேர்தல் சார்ந்த ஜனநாயகம் என்பதே, நமக்கு 100 ஆண்டுகள் பின்னணி கொண்டதுதான்; பஞ்சாயத்து அமைப்புகள் குறித்த புதிய நடைமுறை இன்னமும் ஐம்பது ஆண்டுகள்கூட எட்டவில்லை; எனவே, வருங்காலம் மேலும் சிறப்பாக அமையும் என நம்புவோம்.

நன்றி: தினமணி (23-01-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories