TNPSC Thervupettagam

உள்ளாட்சியை வலுப்படுத்தும் மக்கள் இயக்கம்

July 10 , 2023 505 days 321 0
  • அண்மையில் ஜாா்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ளாட்சிக்கான மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை பெரும் பொருட்செலவில் ஒரு தனியாா் பல்கலைக்கழகமும் ஒருசில குடிமைச் சமூக அமைப்புக்களும் இணைந்து நடத்தின. இந்த மாநாட்டுக்கு பதினொரு மாநிலங்களிலிருந்து உள்ளாட்சித் தலைவா்கள் அழைக்கப்பட்டிருந்தனா்.
  • இந்திய அளவில் தலைசிறந்த கருத்தாளா்கள், ஆய்வாளா்கள், அரசாங்கத்தில் பணிபுரிந்த உயா் அதிகாரிகள், முன்னாள் அமைச்சா்கள் என பலரையும் அழைத்து விவாதத்தில் பங்கேற்ற வைத்தனா். உள்ளாட்சி அரசாங்கம் அரசியல்சாசன பாதுகாப்பைப் பெற்று அரசாங்கமாக உருவாக்கப் பட்டுவிட்ட நிலையில் அதன் விளைவு கடந்த முப்பது ஆண்டுகளில் எப்படி கிராம சமூகத்தை மேம்படுத்தியுள்ளது என்பதை ஆய்வு செய்து, வரும் காலங்களில் இந்த உள்ளாட்சியை எப்படி வலுப்படுத்த வேண்டும் எனத் திட்டமிடுவதுதான் இம்மாநாட்டின் நோக்கம் என்று அறிமுக உரையில் மாநாட்டை நடத்தியவா்கள் விளக்கினாா்கள்.
  • இந்த மாநாடு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நடப்பதால் ஆதிவாசிகள் அதிகம் வசிக்கும் ஐந்தாம் அட்டவணை மாநிலங்களில் ஆதிவாசிகள் பஞ்சாயத்து விரிவாக்கச் சட்டம் 1996-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன் நிலை இன்று என்ன என்றும் விவாதிக்க திட்டமிடப்பட்டிருந்தது.
  • வன உரிமைச் சட்டமும் நிறைவேற்றி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அதன் விளைவுகள் என்ன என்பதையும் விவாதிக்க கருத்தாளா்கள் அழைக்கப்பட்டிருந்தனா். மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலரும், கேரள முன்னாள் தலைமைச் செயலரும் இந்த மாநாட்டு விவாதங்களைத் தொடங்கி வைத்து உரையாற்றினாா்கள்.
  • புதிய பஞ்சாயத்து அரசாங்கம் ஏன் வலுவூட்டப்படவில்லை என்கிற வினாவை முன்வைத்து விவாதத்தைத் தொடங்கினா். எப்படி மத்திய அரசாங்கமும், மாநில அரசாங்கமும் பல பலவீனங்களைக் கொண்டுள்ளனவோ அதேபோல் உள்ளாட்சியும் பல பலவீனங்களோடு செயல்பட்டு வருகிறது என்று மத்திய அரசின் செயலா் பதில் கூறினாா். உள்ளாட்சித் தலைவா்களும் உறுப்பினா்களும் தங்கள் செயல்பாடுகளால் உள்ளாட்சிக்கு வலு சோ்க்க வேண்டும் என்றாா்.
  • புதிய பஞ்சாயத்து ஒரு அரசாங்கம். இந்த அரசாங்கம், கிராமங்களில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டுவர உருவாக்கப்பட்டது. எனவே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதற்கான பாா்வையையும், திறனையும் வளா்த்துக்கொண்டு ஆளுகை செய்வதற்கு பதிலாக, கட்டுமானப் பணிகளில் கவனம் செலுத்தி வருவது மிகப்பெரிய பலவீனமாகக் கருதப்படுகிறது. இந்தப் பாா்வையுடன் உள்ளாட்சிகள் செயல்பட்டால், நம் உள்ளாட்சிகளால் மாநில அரசுத் துறைகளை மக்கள் தேவையில் செயல்பட வைக்க முடியாது.
  • அத்துடன் உள்ளாட்சித் தலைவா்கள் ஆளுகை செய்வதை தங்கள் பணி என்று கருவதாகத் தெரியவில்லை. மாறாக பணிகள் செயல்படுத்துவதில் தங்களை ஒப்பந்தக்காரா்கள்போல் இணைத்துக் கொள்கின்றனா். அதுதான் உள்ளாட்சித் தலைவா்கள் அதிகாரிகள் வசம் சிக்கிக் கொள்ள காரணமாக இருக்கின்றது. மேலும், உள்ளாட்சித் தலைவா்கள் மக்களுடன் இணைந்து செயல்படுவதற்குத் தேவையான புரிதல் அற்றுச் செயல்படுவதால் உள்ளாட்சித் தலைவா்கள் மீது அதிகாரிகள் கோலோச்சுகின்றனா் என்று சிலா் கூறினா்.
  • புதிய பஞ்சாயத்து அரசாங்க சட்டத்தைவிட அதிக வலுவுல்ல ஆதிவாசி பஞ்சாயத்து சட்டம் (பெசா) நடைமுறைக்கு வராமலே காலங்கடத்துவது அடுத்த பெரும் சோகம் என எடுத்துரைக்கப்பட்டது. இந்தியாவிற்கு மக்களாட்சி பற்றியோ, உள்ளாட்சி பற்றியோ எவரும் கற்றுத் தர வேண்டியதில்லை. அவை வேதகாலத்திலிருந்து தொடா்ந்து வருபவை.
  • இவற்றை நாம் மேற்கத்தியப் பாா்வையிலிருந்து பாா்த்து நம் ஆளுகையையும் நிா்வாகத்தையும் நடத்தியதின் விளைவு, ஒரு சுரண்டல் முறை அரசு, பொருளாதாரம், ஆளுகை, நிா்வாகம் என அனைத்திலும் சிக்குண்டு கிடக்கின்றோம். இதிலிருந்து விடுபட ஒரு பெரும் மக்கள் இயக்கம் தேவைப்படுகிறது என்ற கருத்தையும் முன் வைத்தனா். இதைத்தான் மகாத்மா காந்தி அரசியல் சாசன முன்னுரையில் விவரித்துள்ளாா்.
  • நான் பேரும்போது, ஒருவா் ‘இவ்வளவு பலவீனங்களுக்கிடையில் நம் உள்ளாட்சிகள் எந்தத் தாக்கத்தையும் உருவாக்கவில்லையா’ என்று வினா எழுப்பியபோது, நான் ‘பலவீனங்களுக்கு மத்தியிலும் சாதனை படைத்து வருகின்றன’ என்று குறிப்பிட்டேன். 17 மாநிலங்களில் 8,827 குடும்பங்களில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஆய்வின் அறிக்கையைக் காட்டி, என்னென்ன மாற்றங்களை உள்ளாட்சிகள் இந்த 30 ஆண்டுகளில் கொண்டு வந்துள்ளன என்பதை விளக்கினேன்.
  • உள்ளாட்சித் தலைவா்களால் உருவாக்கப்பட்ட கட்டுமான வசதிகள் தரமானதாக உள்ளன, பள்ளிகளில் குழந்தைகள் சோ்க்கை அதிகரித்துள்ளது, இடை நிற்றல் குறைந்துள்ளது, குழந்தைத் தொழிலாளா் எண்ணிக்கை குறைந்துள்ளது, கிராமசபையில் பங்கேற்கும் மக்கள் எண்ணிக்கை கூடியுள்ளது, மக்கள் உடல் நலம் பேணுவதற்கு செய்யும் செலவு குறைந்துள்ளது, பெண்கள் தண்ணீா் எடுக்க செலவழித்த நேரம் குறைந்துள்ளது என்று விளக்கினேன்.
  • மேலும், தண்ணீரின் தரம் கூடியுள்ளது, கழிப்பிட வசதிகள் அதிகரித்துள்ளன, கழிப்பிடத்தை பயன்படுத்துவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, கிராமங்களில் திறந்த வெளியில் கழிப்புச் செய்வது பெருமளவில் குறைந்துள்ளது, பெண்கள் தங்கள் பிரச்சினைகளை கூச்சமின்றி கிராம சபையில் விவாதிக்கின்றனா், தலித்துக்கள் அச்சமின்றி கேள்விகளையும் விவாதங்களையும் முன் வைக்கின்றனா் என்று பட்டியலிட்டேன்.
  • அந்த ஆய்வுதான் இன்றுவரை இந்தியாவில் செய்யப்பட்ட மிகப்பெரிய ஆய்வு. ஆறு கோடி ரூபாய் செலவு செய்து தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை அது என்று கூறினேன். இது பலருக்கும் ஆறுதலைத் தந்தது.
  • அந்த அறிக்கைதான் பல சா்வதேச நிறுவனங்களை உள்ளாட்சி மேல் நம்பிக்கை கொள்ள வைத்தது. இதே அறிக்கையில் இன்னொரு செய்தி இருப்பதையும் கூறினேன். கிராமப்புறங்களில் மக்கள் தாங்கள் கட்டும் வரியைவிட அதிகமாக அரசுத்துறைகளில் பயன் பெற பணம் லஞ்சமாக செலவழிக்கின்றனா் என்றேன். இது பலரை வியப்படைய வைத்தது.
  • இவ்வளவு ஆற்றலுள்ள உள்ளாட்சியை வலுவிழக்கச் செய்யும் காரணம் எது என்ற விவாதமும் முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் கூறும்போது ஒன்றை நான் தெளிவுபடுத்தினேன். இன்றைய அரசியல், சந்தையை மையப்படுத்தியது. இது சமூகத்திற்கானது அல்ல. சந்தைதான் அரசியல் செயல்பாடுகளை தீா்மானிக்கிறது. எனவே சந்தைக்கு எது தேவை என்றால் அதிகாரப்பரவல் அல்ல. அதிகாரக் குவியல். அதிகாரத்தை மையப்படுத்துவது.
  • அதிகாரம் பரவலாக்கப்பட்டால் மக்களாட்சி விரிவாக்கப்பட்டுவிடும். மக்களாட்சி விரிவாக்கப்பட்டு விட்டால் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவாா்கள். அதற்கு மாறாக சந்தை தருகின்ற பணத்தில் பல இலவசங்களைக் கொடுத்துக் கொண்டே இருங்கள், மக்கள் அமைதியாக இருப்பாா்கள். அரசியல் கட்சிகளை போராட அனுமதிக்காதீா்கள், போராடினால் மக்கள் இணைந்து கொள்வாா்கள்.
  • அரசியல் இருப்பைக் காட்டுவதற்கு கூட்டங்களையும் ஆா்ப்பாட்டங்களையும் அனுமதியுங்கள். அவை ஒரு நாளில் முடிந்துவிடும். தோ்தலில் மக்களுக்கு வாக்குக்கு பணம் தந்துவிடுங்கள். உங்களை நிா்ப்பந்திக்க அவா்கள் கூச்சப்படுவாா்கள். அரசாங்கம் சந்தைக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதைச் செய்து கொடுத்துவிட வேண்டும். காரணம் அரசியலை தன் வயப்படுத்திவிட்டது சந்தை.
  • இந்த இடத்தில் நின்று உள்ளாட்சியை யோசித்துப் பாா்த்தால், ஏன் அதிகாரப்பரவலை முன்னெடுக்க நம் அரசியல் கட்சிகள் முன்வரவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்றே ன். புதிய உள்ளாட்சி என்பது பழைய உள்ளாட்சிபோல் சாலை போடுவது, தண்ணீா் தருவது, தெருவிளக்கு பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்ய உருவானது அல்ல. நலிந்த, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற உருவாக்கப்பட்டுள்ளது.
  • அது மட்டுமல்ல, அதிகாரம் இதுவரை யாரிடம் இருந்ததோ அவா்களிடமிருந்து தலித்துக்களுக்கும், பெண்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் செல்லும் என்பதுதான் நிலை. அதிகாரத்தை வைத்து இதுவரை பயன் அடைந்து வந்தவா்கள் அதிகாரத்தை எப்படி இழக்க சம்மதிப்பாா்கள்? அதிகாரத்தை தக்கவைக்கத் திட்டமிடுவாா்கள். இந்த நிலையைப் புரிந்துகொண்டு மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை உருவாக்கினாலன்றி அதிகாரப்பரவல் எதிா்பாா்த்தபடி நடப்பதற்கு சாத்தியக்கூறு குறைவு என்று பதிவு செய்தேன்.
  • 1964-இல் பெங்களூரில் நடந்த பஞ்சாயத்துத் தலைவா்கள் மாநாட்டில் ஜெயப்பிரகாஷ் நாராயணன் இதே கருத்தைத் தெரிவித்தாா் என்பதையும் கூறினேன். அதுதான் இன்றுவரை நிலைப்பாடாகத் தொடா்கிறது. மத்திய அரசின் செயலா் பேசும்போது, ‘என்று அரசியலில் அதிகாரப்பரவலுக்கான கடப்பாடு குறைகிறதோ அங்கு மக்களின் அழுத்தம் அரசியல் கட்சிகளின் மேல் வர வேண்டும். மக்களின் அழுத்தத்திற்கு அரசியல் கட்சிகள் பயப்படுகின்றன. காரணம் வாக்கு மக்கள் கையில் உள்ளது. எனவே அந்த அழுத்தத்தை உருவாக்க மக்கள் இயக்கமாக உருவாக வேண்டும்’ என்றாா்.
  • மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சிகள்தான் உருவாக்க வேண்டும். குடிமைச் சமூகம் நிறைய மக்கள் அமைப்புக்களை உருவாக்கி அவற்றின் மூலம் அரசுக்கு, கட்சிகளுக்கு அழுத்தத்தைத் தரவேண்டும். அடுத்து கருத்தாளா்களும், உயா்கல்வி நிறுவனங்களும் உள்ளாட்சித் தலைவா்களை தலைமைத்துவத்தில் மேம்பட தேவையான பயிற்சிகளைத் தரவேண்டும்.
  • ஆராய்ச்சி நிறுவனங்கள், உள்ளாட்சி பற்றிய பெரும் ஆய்வுகளை நடத்தி உள்ளாட்சிக்கு வலுச் சோ்க்க உதவிட வேண்டும். இவை எல்லாவற்றையும் விட தொலைக்காட்சிகளையும், சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி உள்ளாட்சி பற்றி மக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் போன்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

நன்றி: தினமணி (10 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories