TNPSC Thervupettagam

உழவர் உதவி மையம் தேவை

February 23 , 2024 185 days 150 0
  • பருவகால மாற்றங்கள் உலக அளவில் உணவு உற்பத்தி, விநியோகம் இவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் கடினமாக உழைத்து விளைவித்த பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பது அவர்கள் விவசாயத்தை ஆர்வமுடன் தொடர்வதற்கு வழிவகுக்கும்.
  • குறைந்தபட்ச ஆதார விலை என்பது எளிய தீர்வாக தோன்றுவதால் அதற்கு விவசாயிகளிடம் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால், அரசு தயங்குவதற்கு முக்கியக் காரணம் அதிக நிதிச் சுமையும் நடைமுறைச் சிக்கல்களும்.
  • விவசாயிகளுக்கான தேவை குறைந்தபட்ச ஆதார விலையா, நிகர லாபமா என்றால் நிச்சயம் நிகர லாபம் என்பதாகத்தான் இருக்கும். கிராம நீராதாரங்களை மேம்படுத்துவது, மகசூலை அதிகரிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுவது, உற்பத்திச் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள், நல்ல விலை போன்றவை விவசாயிகளின் நிகர லாபத்தை அதிகரிக்கும்.
  • அரசுகள் அந்த இலக்குடன்தான் செயல்பட்டு வருகின்றன. இருந்தபோதும் விவசாயிகள் பிரச்னைகள் ஏதாவது ஒரு வடிவில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதற்கான முக்கியக் காரணிகள், தேவைக்கேற்ற உற்பத்தி என்பதில் விவசாயிகளுக்கு வழிகாட்டும் அமைப்பு இல்லாதிருந்தல், விவசாயிகள் பயிர் செய்யும் பயிர் ரகம் குறித்த தகவல்களை அன்றன்று இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை இல்லாதிருத்தல் ஆகியவையே.
  • தேவைக்கேற்ற உற்பத்தி இருக்கும்போது சந்தையே உரிய விலையை விவசாயிகளுக்கு வழங்குவதைப் பார்க்கிறோம். அதிக உற்பத்தியின்போது விலை வீழ்ச்சியடைவதையும், உற்பத்தி குறையும்போது விலை ஏற்றம் பெறுவதையும் பார்க்கிறோம்.
  • எனவே, விவசாயப் பிரச்சனைகளுக்கான அடிப்படைத் தீர்வு, விவசாயிகள் தங்கள் நிலத்தின் தன்மைக்கேற்ற பயிர் ரகங்களைத் தேர்வு செய்யும் வழிமுறையை உருவாக்குவதில்தான் உள்ளது.
  • தற்போதைய கட்டமைப்பு ஒன்றிய உதவி வேளாண் அலுவலர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கிராமங்களை நிர்வகிப்பதாக உள்ளது. விவசாயம் என்பது பருவநிலை சார்ந்த தொழிலாக இருப்பதால் விவசாயிகளின் தேவைகள் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டியவையாக உள்ளன. தற்போதைய கட்டமைப்பால் அதைச் சமாளிக்க முடியவில்லை.
  • இது விளைபொருள் தரம், மகசூல் போன்றவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்பாதிப்பு குறு, சிறு விவசாயிகளிடம் அதிகமாக உள்ளது. சுமார் 75 சதவீதத்துக்கு மேல் குறு, சிறு விவசாயிகள் உள்ள நாடாக இருப்பதால் பிரச்னை பெரிதாகிறது.
  • விவசாய விளைபொருள் தரம் பார்த்து, பரிசோதித்து வாங்கும் தன்மையுடையதாக இருப்பதால் அரசின் இணையதள சந்தைகளை பெரும்பாலான விவசாயிகள் (குறிப்பாக குறு, சிறு விவசாயிகள்) சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இடைத்தரகர்கள் கொண்ட அமைப்பு தற்போதைய சூழலில் தவிர்க்க முடியாததாகிறது.
  • இந்நிலையில் பஞ்சாயத்துதோறும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப உழவர் உதவி மையம் அமைத்தல் அவசியமாகிறது. இது அரசு தனியார் இணைந்து செயல்படும் திட்டம். கட்டமைப்பு அரசுடையது (அலுவலகம், கணினி, புரொஜக்டர், போன்றவை). தனியார் அமைப்பு, மைய மேலாளர், உதவியாளர் என இருவரை பணிக்கு அமர்த்தி, ஊதியம் வழங்கி, அரசு வழிகாட்டுதல்படி, திட்டமிடுதலில் இருந்து விற்பனை செய்யும் வரையிலான சேவைகளை விவசாயிகளுக்கு வழங்கும்.
  • விவசாயிகள் பயிர் செய்யத் தொடங்கியுள்ள பயிர் ரகம் குறித்த தகவல்களை அன்றன்று இணையதள தகவல்களாக கிராம அளவில் பதிவு செய்தல், தினமும் தட்ப வெப்ப நிலை, மழை அளவு தகவல்களைப் பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு அரசு அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும்.
  • இம்மையத்தில் பணிபுரிபவர்கள் விவசாயிகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், விவசாயிகளின் விளைபொருள்களை தரம் வாரியாக ஒன்று சேர்த்து வாங்குபவர்களுக்கு (அரசு, மண்டிகள், தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள்) கொடுக்க முடியும். விளைபொருளின் விற்கும், வாங்கும் விலைகளை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியும்.
  • திட்டமிடுதல் முதல் உற்பத்தி வரை வழிநடத்திய அமைப்பே சந்தைப்படுத்துதலிலும் ஈடுபடும்போது வாங்குபவர்களின் நம்பிக்கை பன்மடங்கு அதிகரிக்கும். மேலும், அவர்களுக்கு, தங்கள் பணம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது என்கிற திருப்தியும் கிடைக்கும்.
  • விவசாய இடுபொருள், விளைபொருள் விற்பனை, விளம்பரங்கள், இணையவழி சேவைகள் போன்ற வழிகளில் அரசு நிர்ணயிக்கும் கட்டணங்கள்படி தனியார் அமைப்பு வருமானம் ஈட்டிக் கொள்ளும்.
  • இம்மையத்தில் பணிபுரியும் பணியாளர்களை உள்ளூரிலிருந்து அல்லாமல் பக்கத்து ஊர்களில் இருந்து தேர்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அனைத்து விவசாயிகளும் எவ்வித தயக்கமுமின்றி தங்கள் ஊரில் உள்ள மையங்களுக்குச் சென்று சேவைகளைப் பெற முடியும்.
  • மையம் விவசாயிகளுக்கு வசதியாக காலை, மாலை நேரங்களில் செயல்பட வேண்டும். விவசாயம் தொடர்புடைய செயலி, இணையதளம், எண்ம பணப் பரிவர்த்தனை போன்றவற்றை எளிய விவசாயிகூட இந்த மையத்தின் துணையுடன் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
  • இத்திட்டத்தின் பணியாளர்களுக்கு அந்தந்தப் பகுதியிலுள்ள தனியார் அமைப்பு ஊதியம் வழங்குவதால், அந்தந்தப் பகுதியில் விளையும் பொருள்கள் அக்கறையுடன் விற்பனை செய்யப்படும்.
  • மையப் பணியாளர்கள் திறம்பட செயல்படாத நிலையில், அவர்களை நீக்கவும், தனியார் அமைப்பு சரியாக செயல்படாத நிலையில் அந்த நிறுவனத்துக்கான உரிமத்தை ரத்து செய்யவும் அரசால் முடியும். அரசு - தனியார் இணைந்து செயல்படும் அணுகுமுறையில் இந்தத் திட்டம் சிறந்த பலனைத் தருவதோடு, முன்னுதாரணத் திட்டமாகவும் அமையும்.

நன்றி: தினமணி (23 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories