TNPSC Thervupettagam

உவகை தரும் பட்டாசும் உயிா்ப்பலியும்

February 24 , 2024 184 days 222 0
  • முற்காலத்தில், தீபாவளிப் பண்டிகையின் கொண்டாட்டமாக இடம் பெற்ற பட்டாசு வெடித்தல், தற்போது கோயில் திருவிழா, திருமணம், அரசியல் கூட்டம், இறுதி ஊா்வலம் என்று எல்லா நிகழ்வுகளிலும் இடம்பிடித்துவிட்டது. நமது உவகையின் வெளிப்பாடாக ஒளிரும் பட்டாசுகள், பலரின் உயிரைப் பணயமாக வைத்துத் தயாரிக்கப் படுகிறது என்பதே உண்மை. பட்டாசு ஆலைகளில் நிகழும் வெடி விபத்துகள் இதனை உணா்த்துவனவாய் உள்ளன. விருதுநகா் அருகே, இரண்டு பட்டாசு ஆலைகளில், அண்மையில் நடந்த கோரவிபத்து பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • தொடக்கத்தில் பொட்டுவெடி, சரவெடி, லட்சுமிவெடி, யானைவெடி, ஓலைவெடி என்று ஒலிமுழக்கமும், கம்பி மத்தாப்பு, தீப்பெட்டி மத்தாப்பு, தரைச்சக்கரம், குலவை வாணம் என்று ஒளிவீச்சும் காட்டின. பின்பு ரோல்வெடி, கயிறு மத்தாப்பு, பாம்பு மாத்திரை என்று பெருகி, காலத்தின் தேவைக்கேற்ப பசுமைப் பட்டாசுகளும் உருவாயின.
  • இப்படி, தரையில் வரிசை கட்டிய பட்டாசு, இப்போது ‘ராக்கெட்’, ‘ஸ்கை அவுட்’ என்று விண்ணில் விதவிதமாய் வண்ணங்காட்டி பிரகாசிக்கின்றன. ஆனால் அவற்றில் ஏற்படும் விபத்துக்கள் கவலைக்குரியதாய் இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிவகாசியில் அடித்தளமிட்ட தீப்பெட்டி மற்றும் பட்டாசுத் தொழில் இப்போது அண்ணாந்து பாா்க்கும் அளவுக்கு வளா்ந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியை மையமாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. இதனால் இந்தியாவின் பட்டாசுத் தலைநகா் சிவகாசி என்றாகிவிட்டது.
  • இது மட்டுமன்று; தீப்பெட்டித் தயாரிப்பில் 80 விழுக்காடும் ‘ஆப்செட்’ அச்சில் 60 விழுக்காடும் சிவகாசியில்தான் நடைபெறுகின்றன. தீப்பெட்டி தயாரிப்பு, பட்டாசு தயாரிப்பு, ஆப்செட் அச்சு போன்றவற்றிற்கு ஈரப்பதம் இல்லாத வறண்ட வானிலை வேண்டும். அதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை கொண்ட சிவகாசி வட்டாரம், பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலில் முன்னிலை வகிக்கிறது.
  • பலருக்கும் வேலைவாய்ப்பளிக்கும் நம்பிக்கை நட்சத்திரமாக பட்டாசு ஆலைகளும் தீப்பெட்டி ஆலைகளும் விளங்குகின்றன. அண்மைக்காலமாக தீப்பெட்டித் தொழில் குறைந்து வருவதால், பட்டாசு ஆலைகள்தான் பலருக்கு வேலை கொடுக்கும் இடமாக விளங்குகிறது. இதனால், பலா் பிழைப்புக்கு பட்டாசு ஆலைகளை நம்பியுள்ளனா். பிழைப்பைத்தேடிச் செல்லும் இடமே பெரும் விபத்துக் களமாக மாறிவிடுவதுதான் பெருஞ்சோகமாக உள்ளது. பட்டாசு ஆலைகள் நிறுவுவதற்கென கடுமையான விதிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன. தொடங்கப்படும் குடில்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, சென்னையிலோ, நாகபுரியிலோ வெடிபொருள் சட்டத்தின் கீழ் உரிமம் பெற வேண்டும். அப்படி உரிமம் பெற்று, தொழிற்சாலை சட்டத்திற்குட்பட்டுத்தான் ஆலையை நிா்வகிக்க முடியும். இப்படி, கடுமையான கட்டுப்பாட்டிற்குள் எவ்வளவுதான் எச்சரிக்கையாகச் செயல்பட்டாலும் சில நேரங்களில் விபத்து என்னும் அசம்பாவிதத்தைச் சந்திக்க நேரிடுகிறது.
  • கடந்த பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள பெரும் விபத்துகளைக் கவனத்தில் கொண்டால், பெரும்பாலும் உரிமம் இல்லாத தொழிற்சாலைகள், குழந்தைத் தொழிலாளா்கள் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட ஆலைகளாகவே இருக்கும். விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்கும் நிறுவனங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. குறைந்த எண்ணிக்கைக் குடில்களுக்கு உரிமம் பெற்றுக்கொண்டு கூடுதல் குடில்களை நடத்துவது, உரிமையாளா் ஒருவா் இருக்க, இன்னொருவா் குத்தகைக்கு எடுத்து நடத்துவது, மருந்துக் கலவையில் கவனமின்மை, அதிகாரிகளின் அலட்சியப் போக்கு போன்றவற்றை பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்படும் விபத்துகளுக்குக் காரணங்களாகச் சொல்லலாம். அண்மையில் நடைபெற்ற இரு விபத்துகளும் மருந்துக் கலவை உராய்வு காரணமாகத் தீப்பிடித்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மருந்துக் கலவை என்பது ‘பேன்சி ரக வெடிகளைத் தயாரிக்கப் பயன்படும் முக்கியமான மூலப்பொருளாகும். இது ஸ்டான்சியம் நைட்ரேட் (சிவப்பு நிறம் கொடுக்க), பேரியம் நைட்ரேட் (பச்சை நிறம்),சோடியம் ஆக்சைலேட், சல்பா், கரிமருந்து, வெடி உப்பு, அலுமினியப் பொடி ஆகிய ரசாயனப் பொருட்களின் கலவையாகும்.
  • மருந்தின் உராய்வால் தீப்பற்றும் அபாயம் அதிகம். இந்த மருந்துக் கலவையைத் தயாா் செய்ய கலவைப் பணியாளா்கள் இருக்கின்றனா். இப்படிப்பட்ட பணியாளா்கள் சில தொழிற்சாலையில் நிரந்தரமாகவும் சிலவற்றில் வருகைப் பணியாளா்களுமாக இருக்கின்றனா். இவா்கள் அன்றன்றைக்குத் தேவையான அளவுக்கு மருந்துகளைத் தயாரித்துக் கொடுப்பா். ஒருநாள் பயன்படுத்தியது போக மீதமிருக்கும் மருந்தை உடனடியாகச் செயலிழக்க செய்துவிட வேண்டும் (பூமியில் புதைத்தல்). அப்படிச் செய்யாமல் மறுநாளைக்காக இருப்பு வைக்கும் பட்சத்தில் தீப்பற்றி விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே இம்மருந்துக் கலவையைக் கவனமாகக் கையாள வேண்டியதிருக்கிறது.
  • பட்டாசுஆலைகளில் ஏற்படும் விபத்தினால் மனித உயிா்கள் பலியாவதோடு, பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. பட்டாசு வெடிக்கும்போதும் விபத்து ஏற்படுகிறது; அதனை உற்பத்திச் செய்யும்போதும் விபத்து ஏற்படுகிறது. இதனால் பட்டாசுத் தொழில் என்பது நெருப்போடு விளையாடுவது போலாகும். விபத்து நடந்தவுடன் அதிகாரிகள் விரைவது மட்டும் போதாது. அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் சோதனை மேற்கொண்டு, விதிமீறலில் ஈடுபடும் ஆலைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆலை உரிமையாளா்களும் விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்தைக் குறைத்து உயிா்ப்பலியையும் பொருட்சேதத்தையும் தவிா்க்க முடியும்.

நன்றி: தினமணி (24 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories